மோகத்தீ - Page 11
- Details
- Category: புதினம்
- Published Date
- Written by சுரா
- Hits: 7121
பூச்சிகளும் பாம்புகளும் வசிக்கும் அந்த புற்புதருக்குள் ராமுண்ணி என்ன செய்து கொண்டிருக்கிறார்? அவரின் ஒவ்வொரு நடவடிக்கையும் அச்சு வாத்தியாரை ஆச்சரியத்திற்குள்ளாக்கின.
புற்களுக்கருகில் ராமுண்ணியின் டயர் செருப்புகளில் ஒன்று நீரில் விழுந்து கிடந்தது. அச்சு வாத்தியாருக்கு அந்தச் செருப்பை அடையாளம் கண்டுபிடிக்க அதிக நேரம் ஆகவில்லை. அந்த ஊரிலேயே மீத்தலேடத்து ராமுண்ணி மட்டும்தான் செருப்புகள் அணியக்கூடிய ஒரே மனிதர். புற்களை கைகளால் நீக்கியவாறு அச்சு வாத்தியார் உள்ளே நுழைந்தார். வாய்க்கால் கரையோரம் புற்களின் மறைவில் யாரையோ எதிர்பார்த்திருப்பதைப் போல ராமுண்ணி உட்கார்ந்திருந்தார். அச்சு வாத்தியாரின் கால்கள் நீரில் பட்டு ஓசை உண்டாக்கிய பிறகும் ராமுண்ணி அதைக் கவனிக்காமல் உட்கார்ந்திருந்தார். அவர் வாய்க்காலில் ஓடிக்கொண்டிருந்த தெளிந்த நீரைப் பார்த்தவாறு எந்தவித அசைவுமில்லாமல் அமர்ந்திருந்தார். சாறுபிழிந்த மூலிகை இலைகளும் ஒரு காலியான எண்ணெய் புட்டியும் ஒரு கல்லின் மீது இருந்தன. துணி சலவை செய்த சோப்பின் வாசனை அந்த இடத்தில் தங்கியிருந்தது. மீத்தலேடத்து ராமுண்ணிக்கு இப்படி அந்த இடத்தில் வந்து இருக்கவேண்டிய அவசியமென்ன என்பதை அச்சு வாத்தியார் நினைத்துப் பார்த்தார்.
திடீரென்று அச்சு வாத்தியாருக்கு சுயநினைவு வந்தது. ஊரிலுள்ள குழந்தைகளுக்கு எழுத்துக்கள் சொல்லித்தரும் ஆசிரியர் தான் என்பதை அவர் நினைத்துப் பார்த்தார். பெண்கள் குளிக்கக் கூடிய வாய்க்காலுக்கருகில் புற்களுக்கு மத்தியில் ஒளிந்து கொண்டிருக்கும் தன்னை யாராவது பார்க்க நேர்ந்தால் அவர்கள் என்ன நினைப்பார்கள்? யோசித்துப் பார்த்த அச்சு வாத்தியார் அதிர்ச்சிக்குள்ளானார். அவர் ஓசையெதுவும் உண்டாக்காமல் மெதுவாகத் திரும்ப நடந்து புற்களைவிட்டு வெளியே வந்தார். நான்கு திசைகளிலும் பார்த்து யாரும் தன்னை கவனிக்கவில்லை என்பதை உறுதிப்படுத்துக் கொண்டார். அதற்குப் பிறகு முழுமையான நிம்மதியுடன் அவர் திரும்ப நடந்தார்- மீத்தலேடத்து ராமுண்ணியை அங்கேயே விட்டு விட்டுத்தான்.
இரண்டு நாட்கள் சென்ற பிறகு ராமுண்ணியின் மனைவி சரோஜினி அச்சு வாத்தியாரைப் பார்ப்பதற்காக வந்தாள். அவன் கண்களில் அழுததற்கான அடையாளம் தெரிந்தது. எல்லா விஷயங்களையும் அச்சு வாத்தியார் பொறுமையுடன் கேட்டார். யாரோ ஒரு பெண் இடுப்பில் கட்டி நடந்த கொடியை ராமுண்ணி மடியில் வைத்துக்கொண்டு நடந்து திரிகிறார் என்பதை அறிந்த அவருக்கு மிகவும் வெட்கமாக இருந்தது. சரோஜினி முகத்தைப் பார்ப்பதற்குக்கூட அவருக்கு என்னவோபோல் இருந்தது.
“என்னையும் என் பிள்ளைகளையும் தெருவுல நிற்க வைக்கப் பாக்குற அவளோட ரெண்டு கண்களையும் நான் பிடுங்காம விட மாட்டேன்...”
“அமைதியா இரு. எல்லாத்துக்கும் ஒரு முடிவு இல்லாமலா இருக்கும்.”
“யார் அவள்னு எனக்குத் தெரியணும், அச்சு வாத்தியாரே...”
“நாம அதைக் கண்டுபிடிப்போம்.”
என்னவோ முணுமுணுத்தவாறு அழுதுகொண்டே அவள் திரும்பிப் போனாள். அச்சு வாத்தியாருக்கு எல்லா விஷயங்களும் நன்கு புரிந்தன. அந்த இடுப்புக் கொடிதான் எல்லா பிரச்சினைகளுக்கும் மூல காரணம். அது யாருடைய இடுப்புக் கொடி என்பதைத்தான் அவர் நன்கு அறிவாரே!
நீலகண்டனைப் பார்த்து விஷயத்தைச் சொல்லவேண்டும் என்றுதான் அவர் முதலில் நினைத்தார். ஆனால், நீலகண்டனால் அதைப் பொறுத்துக் கொள்ள முடியுமா? ராமுண்ணி அவனுக்கு எவ்வளவோ உதவிகள் செய்திருக்கிறார். தன்னுடைய உதவியாளராக அவனை அவர் ஆக்கினார். எண்ணெய் மில்லின் மேற்பார்வைப் பொறுப்பு அவனுடையதுதான். இருந்தாலும் நீலகண்டனால் இந்த விஷயத்தை ஏற்றுக்கொள்ள முடியுமா? தன்னுடைய சொந்த மனைவியின் இடுப்பிலிருந்து கழற்றிய கொடியை வேறொரு ஆள் மடியில் வைத்துக்கொண்டு நடந்து திரிவது, அந்த இடுப்புக் கொடி மயக்கத்திலேயே சதா நேரமும் இருப்பது... நீலகண்டன் என்றல்ல; வேறு யாராக இருந்தாலும் இப்படிப்பட்ட ஒரு செயலைப் பார்த்து வெறுமனே நின்றிருக்க மாட்டார்கள். அதனால் வேண்டாம்... நீலகண்டனுக்கு இந்த விஷயம் இப்போது தெரியாமல் இருப்பதே நல்லது என்று நினைத்தார் அச்சு வாத்தியார்.
ஆனால் அன்றே அவர் சாவித்திரியைப் போய்ப் பார்த்தார். படிகளில் ஏறி வந்துகொண்டிருக்கும் அச்சு வாத்தியாரைப் பார்த்து சாவித்திரி மிகவும் ஆச்சரியப்பட்டாள். இதென்ன கதை என்று அவள் நினைத்தாள். சமீபகாலமாக ஊரிலுள்ள முக்கிய மனிதர்கள் அடிக்கொரு தரம் தன்னுடைய வீட்டைத்தேடி வருவதற்கான காரணம் என்னவாக இருக்கும் என்று அவள் ஆராய முற்பட்டாள். வழியில் பார்த்தால் ‘என்ன சாவித்திரி?’ என்று குசலம் விசாரிக்கும் பழக்கம் கூட இல்லாத, கண்டால் முகத்தைக்கூடப் பார்க்க நினைக்காத அச்சு வாத்தியார் இதோ தன்னுடைய வீட்டு வாசலில் வந்து நின்றிருக்கிறார் என்பதை நினைக்கும்போது அவளால் ஆச்சரியப்படாமல் இருக்க முடியவில்லை.
“நீலகண்டன் இங்கே இருக்கானா?”
“இல்ல... மில்லுல இருக்காரு...”
அச்சு வாத்தியாருக்கு இப்போதுதான் நிம்மதியாக இருந்தது. நீலகண்டன் அங்கு இருந்தானேயானால், எதுவுமே பேசாமல் திரும்பிச் செல்ல வேண்டும் என்று முடிவெடுத்திருந்தார் அவர்.
“மில்லுக்கு போனா பார்க்கலாம்.”
“நான் நீலகண்டனைப் பார்க்க வரல. உன்னைப் பார்க்கத்தான் வந்தேன்.”
“அதைக் கேட்டு சாவித்திரியின் முகத்தில் ஒருவித கலவரம் படர்ந்தது. அவள் தன்னுடைய ஈரக் கைகளைக் கட்டியிருந்த முண்டில் துடைத்தாள். ப்ளவ்ஸுக்கும் முண்டுக்கும் இடையில் தெரிந்த அவளின் வெண்மையான வயிற்றுப் பகுதியைப் பார்த்து அச்சு வாத்தியார் முகத்தைத் திருப்பிக் கொண்டார். அவளின் இரு கைகளிலும் கறுப்பு நிறத்தில் கண்ணாடி வளையல்கள் இருந்தன. அச்சு வாத்தியார் தன்னுடைய சட்டைப் பைக்குள்ளிருந்து பணத்தை வெளியே எடுத்தார். பத்து ரூபாய், ஐந்து ரூபாய், இரண்டு ரூபாய் என்று பல நோட்டுகள்...
“இந்தா... இதுல ஐந்நூறு ரூபாய் இருக்கு...”
“இது எதுக்கு?”
“நீ முதல்ல இதை வாங்கு...”
எதையுமே புரிந்து கொள்ள முடியவில்லையென்றாலும், அச்சு வாத்தியார் நீட்டிய பணத்தை சாவித்திரி வாங்கிக் கொண்டாள். பணத்தைப் பார்த்தால் யார்தான் வாங்காமல் இருப்பார்கள்?
“நீ இதைக் கொண்டுபோய் கொடுத்து உன்னோட இடுப்புக்கொடியைத் திரும்ப வாங்கு.”
“அதை ராமுண்ணி அய்யாவுக்கு ஏற்கனவே விற்றாச்சே! தங்கத்துக்கான விலையையும் தட்டானோட வேலைக்கான கூலியையும் அவர் ஏற்கனவே தந்துட்டாரே!”
இந்த விஷயம் அச்சு வாத்தியாருக்குத் தெரியாது. அவர் தலையைச் சொறிந்து கொண்டார். ராமுண்ணியின் வாழ்க்கையில் நடக்கும் எந்த விஷயமும் இப்போது தனக்கு தெரியவில்லை என்பதை அவர் நினைத்துப் பார்த்தார். அச்சு வாத்தியார் ராமுண்ணிக்கு இப்போது வேற்று ஆளாகிப் போனார்!
“என்ன வாத்தியாரே, ஒண்ணுமே பேசாம இருக்கீங்க...”
“பேசுறதுக்கு என்ன இருக்கு சாவித்திரி?”
“இடுப்புக் கொடியைத் திரும்ப வாங்கணும்னு நீங்க ஏன் சொன்னீங்க?”
அவர் அதற்குப் பதிலெதுவும் கூறாமல் தலையைக் குனிந்தவாறு திண்ணைமீது அமர்ந்திருந்தார்.