முதல் காதல் - Page 24
- Details
- Category: புதினம்
- Published Date
- Written by சுரா
- Hits: 6368
அதுதான் என்னை அழுத்தி பாடாய்ப்படுத்திக் கொண்டிருந்தது. ஆனால், அதை எதுவுமே செய்ய முடியவில்லை. அவளுடைய பாதையில் குறுக்கிடக்கூடாது என்று நான் முயற்சி செய்தேன்.
அவளை தூரத்திலிருந்து நான் கவனித்துக் கொண்டிருந்தேன்.
அவ்வளவுதான். அந்த விஷயத்தில் நான் எப்போதும் வெற்றிபெற்றேன் என்று கூறுவதற்கில்லை.
முன்பு மாதிரியே, புரிந்து கொள்ள முடியாத ஏதோவொன்று அவளுக்கு நடந்திருக்கிறது. அவளுடைய முகம் மிகவும் வித்தியாசமாக இருந்தது. அவளே முற்றிலும் மாறிவிட்டவளைப்போல இருந்தாள். ஒரு வெப்பம் நிறைந்த சாயங்கால வேளையில் அவளிடம் உண்டாகிவிட்டிருக்கும் மாற்றங்களைப் பார்த்து நான் குறிப்பிட்டுக் கூறும் அளவிற்கு அதிர்ச்சியடைந்து நின்றுவிட்டேன். நான் பரந்து கிடந்த ஒரு புதருக்குக் கீழே அமைக்கப்பட்டிருந்த ஒரு தாழ்வான தோட்டத்து பெஞ்சில் உட்கார்ந்திருந்தேன். எனக்கு அந்த மூலையை மிகவும் பிடிக்கும். அங்கிருந்து நான் ஜினைடாவின் அறையின் சாளரத்தைப் பார்க்க முடியும். நான் அங்கு அமர்ந்திருந்தேன். என் தலைக்கு மேலே ஒரு சிறிய பறவை இருண்டு கிடந்த இலைகளுக்கு மத்தியில் அமர்ந்து சிறகுகளை அடித்துக் கொண்டிருந்தது. ஒரு சாம்பல் நிறப் பூனை தன்னுடைய உடலை நீட்டி நிமிர வைத்துக் கொண்டு மிடுக்காக தோட்டத்தில் நடந்து கொண்டிருந்தது. வண்டுகள் நிறைய காற்றில் பறந்து கொண்டிருந்தன. அப்போது சரியான வெளிச்சம் இல்லாமலிருந்தாலும், அவை தெளிவாகத் தெரிந்தன. நான் அங்கு அமர்ந்து கொண்டு சாளரத்தையே பார்த்துக்கொண்டிருந்தேன். அது திறக்கப்படுமா என்பதை எதிர்பார்த்தவாறு நான் அமர்ந்திருந்தேன். அது திறந்தது. அதில் ஜினைடா தெரிந்தாள்.
அவள் வெள்ளை நிறத்தில் ஆடை அணிந்திருந்தாள். அவளே... அவளுடைய முகம், தோள்கள், கைகள் எல்லாமே வெளிறிப்போயும் வெள்ளை நிறத்திலும் இருந்தன. அவள் அதே இடத்தில் எந்தவித அசைவும் இல்லாமல் நீண்ட நேரம் இருந்தாள். தன்னுடைய அழகான புருவங்களுக்குக் கீழே பளபளத்துக் கொண்டிருந்த கண்களால் அவள் தனக்கு முன்னால் இருப்பவற்றைப் பார்த்துக் கொண்டிருந்தாள். நான் இந்த மாதிரி இதற்கு முன்பு அவளைப் பார்த்ததே இல்லை. பிறகு அவள் தன்னுடைய கைகளை இறுகக் கட்டிக் கொண்டாள். அவற்றை அவள் தன் உதடுகளுக்கும், நெற்றிக்கும் கொண்டு சென்றாள். தொடர்ந்து அவள் தன் விரல்களைப் பிடித்து இழுத்தாள். அவள் தன் கூந்தலை செவிகளுக்குப் பின்னால் இருக்குமாறு செய்து, அதை தடவி விட்டாள். பிறகு ஏதோ தீர்மானத்துடன் தன் தலையை ஆட்டினாள். தொடர்ந்து சாளரத்தை மூடினாள்.
மூன்று நாட்களுக்குப் பிறகு அவள் என்னை தோட்டத்தில் சந்தித்தாள். நான் அங்கிருந்து நகரத் தொடங்கினேன். ஆனால், அவள் என்னை நிற்கச் சொன்னாள்.
"உன்னுடைய கையை என்னிடம் தா.” அவள் பழைய பாசத்துடன் என்னிடம் சொன்னாள்: "நாம் இருவரும் உரையாடி எவ்வளவோ நாட்களாகி விட்டன.”
நான் அவளையே ஓரக்கண்ணால் பார்த்தேன். அவளுடைய கண்கள் ஒரு மென்மையான விளக்கைப்போல் பிரகாசித்துக் கொண்டிருந்தன. அவளுடைய முகம் பனிப் படலத்திற்கு நடுவில் இருப்பதைப்போல புன்னகைத்துக் கொண்டிருந்தது.
"நீ நலமாக இல்லையா?” நான் அவளிடம் கேட்டேன்.
"இல்லை... இப்போது எல்லாம் சரியாகி விட்டது.” அவள் சொன்னாள். அவள் ஒரு சிறிய ரோஜா மலரைக் கையில் எடுத்துக் கொண்டே சொன்னாள்: "நான் கொஞ்சம் களைத்துப்போய் இருக்கிறேன். அதுகூட விரைவில் சரியாகிவிடும்.”
"நீ எப்போதும் இருப்பதைப்போல மீண்டும் இருப்பாயா?” நான் கேட்டேன்.
ஜினைடா அந்த ரோஜா மலரை தன் முகத்தின் அருகில் கொண்டுபோய் வைத்தாள். அந்த மலரின் பிரகாசமான இதழ்கள் அவளுடைய கன்னங்களில் உண்டாக்கிய பிரதிபலிப்பை நான் மனதில் கற்பனை செய்து பார்த்தேன். "ஏன்? மாறிவிட்டேனா?”
அவள் என்னைப் பார்த்து கேட்டாள்.
"ஆமாம்... நீ மாறிவிட்டாய்...” நான் தாழ்ந்த குரலில் பதில் சொன்னேன்.
"நான் உன்னிடம் மிகவும் சாதாரணமாக நடந்து கொண்டேன். எனக்கு தெரியும்.” ஜினைடா கூற ஆரம்பித்தாள். "ஆனால், நீ அதில் கவனம் செலுத்தக்கூடாது. என்னால் எதுவும் செய்ய முடியவில்லை. வா. அதைப் பற்றி ஏன் பேசுகிறாய்?”
"நான் உன்னைக் காதலிப்பதை நீ விரும்பவில்லை. அதுதான் விஷயமே...” நான் கவலையுடன் உரத்த குரலில் கத்தினேன். தவிர்க்க முடியாத ஒரு மனக்குமுறலாக அது இருந்தது.
"இல்லை... என்னைக் காதலி. ஆனால், நீ செய்ததைப்போல வேண்டாம்.”
"பிறகு எப்படி?”
"நாம் நண்பர்களாக இருப்போம். இப்போது வா!” ஜினைடா எனக்கு ரோஜா மலரை முகர்ந்து பார்ப்பதற்காகத் தந்தாள். "இங்கே பார்... உனக்கே தெரியும்... நான் உன்னைவிட மிகவும் மூத்தவள். உண்மையிலேயே பார்க்கப்போனால், நான் உன் அத்தையாக இருக்கலாம். ம்... உன் அத்தையாக அல்ல... உன்னுடைய ஒரு மூத்த சகோதரி... நீ...”
"நீ என்னை ஒரு குழந்தையாக நினைத்துக் கொண்டிருக்கிறாய்.” நான் இடையில் புகுந்து சொன்னேன்.
"இருக்கட்டும்... ஆமாம்... ஒரு குழந்தையாகத்தான். ஆனால், என் அன்பிற்குரியவனே! நல்ல புத்திசாலித்தனமான குழந்தையாக... நான் மிகுந்த அன்பு வைத்திருக்கும் குழந்தையாக... உனக்கு ஒரு விஷயம் தெரியுமா? இன்றிலிருந்து நான் உன்னை எனது மெய்க்காப்பாளனாக நியமிக்கிறேன். மெய்க்காப்பாளர்கள் எப்போதும் தான் பாதுகாக்க வேண்டிய பெண்ணின் அருகிலேயே இருக்க வேண்டும் என்பதை நீ மறந்து விடாதே, இந்த புதிய பதவிக்கான அடையாளம் இது!” அவள் கூறிக்கொண்டே கையிலிருந்த ரோஜா மலரை என்னுடைய சட்டையின் பொத்தான் துளையில் சொருகினாள். "என் அன்பிற்கான அடையாளம்!”
"நான் உன் அன்பிற்கான அடையாளத்தை ஒருமுறை பெற்றிருக்கிறேன்!”
"ஆ...!” ஜினைடா கூறிக்கொண்டே என்னை ஓரக்கண்களால் பார்த்தாள். "இவனுக்கு என்ன ஞாபக சக்தி! சரி... நான் இப்போது தயாராக இருக்கிறேன்...” என்னை நோக்கி குனிந்து கொண்டே, என் நெற்றியில் அவள் ஒரு புனிதமான இனிய முத்தத்தைப் பதித்தாள்.
நான் அவளையே பார்த்துக் கொண்டிருந்தேன். அவள் திரும்பியவாறு கூறினாள். "என்னை பின்பற்றி வா, என் நண்பனே!” அவள் அந்த கட்டடத்திற்குள் நுழைந்தாள். நான் அவளைப் பின்பற்றி நடந்தேன். எல்லாமே வினோதமானவையாக எனக்கு இருந்தன. "இந்த அருமையான.. அறிவாளித்தனமான பெண்...” நான் மனதிற்குள் நினைத்தேன். "எனக்கு எப்போதும் தெரிந்த ஜினைடாவாக இருப்பாளா?”
அவளுடைய நடை மிகவும் அமைதியானதாகவும், அவளுடைய முழு உடலமைப்பு வசீகரத்தன்மை கொண்டதாகவும் பேரழகு படைத்ததாகவும் இருப்பதை நான் நினைத்துப் பார்த்தேன்...
கருணை கிடைக்க வேண்டும்! எந்த அளவிற்கு புத்துணர்ச்சி கலந்த வேகத்துடன் காதல் எனக்குள் எரிந்து கொண்டிருந்தது தெரியுமா?