நிர்வாணத் தம்புரான் - Page 9
- Details
- Category: புதினம்
- Published Date
- Written by சுரா
- Hits: 6444
4
தெற்குப்பக்கம் ஓடிக்கொண்டிருந்த ஆற்றுநீர் அந்தி வெயிலில் மின்னிக்கொண்டிருந்தது. பகல் முழுவதும் காய்ந்து கொண்டிருந்த சூரியன், நேரம் செல்லச் செல்ல மலைக்குப் பின்னால் தன் முகத்தை மறைத்துக் கொண்டிருந்தான். இன்னும் சிறிது நேரத்தில் கல்லிசேரி இருளில் மூழ்கிவிடும். அதோடு எல்லா நடமாட்டங்களும் நின்று போகும்.
சந்தர்ப்ப சூழ்நிலையால் பிரச்சினையில் சிக்கிக்கொண்ட தம்புரான் சிறகொடிந்த பறவையைப்போல குழிக்குள் கூனிக் குறுகிப் போய்க்கிடந்தார். உடம்பில் ஒரு பொட்டுத் துணிகூட இல்லாமல் அவர் எப்படி வீட்டுக்குப் போவார்? சிறு பூச்சிகள் அவரைக் கடித்ததால் அவர் உடம்பில் அரிப்பு ஏற்பட்டது. மனதில் இனம் புரியாத ஒரு படபடப்பும், விரக்தியும் உண்டானது. குழிக்குள் அவர் ஒளிந்து கொண்டிருக்கும் இரண்டாவது இரவு இது.
எந்தவித கவலையும் இல்லாமல் ராஜபோக வாழ்க்கை வாழ்ந்த தம்புரானால் உணவு இல்லாமல், உறக்கம் இல்லாமல் அந்தக் குழிக்குள் இருக்க முடியவில்லை. எப்படியாவது இன்று இரவு குழியை விட்டு வெளியே வந்து மாளிகைக்கு ஓடிச்சென்றுவிட வேண்டும் என்ற முடிவில் இருந்தார் தம்புரான். அதற்குக் கடவுள் நிச்சயம் ஒரு வழியைக் காட்டுவார் என்ற நம்பிக்கையில் இருந்தார் அவர். தம்புரான் வானத்தை நோக்கிக் கைகளைக் குவித்து கண்களால் மேலே பார்த்தார். கடவுளைத் தேடி அலையும் ஒரு அப்பாவி மனிதனின் பிரார்த்தனைக்கு பதில் சொல்கிற மாதிரி தூரத்தில் ஒரு வாணம், ஆகாயத்தில் தோன்றி மறைந்தது.
தம்புரான் இருள் கவியும் நேரத்தை எதிர்பார்த்துக் காத்திருந்தார். இந்தக் குழியை விட்டு வெளியே வருவது என்றால் இருட்டின் உதவி கட்டாயம் தேவை ஆயிற்றே!
பகல் முழுவதும் எப்படிக் கழிந்தது என்பதை நினைத்துப் பார்த்தபோது தம்புரானுக்கு மயக்கம் வருவதுபோல் இருந்தது. உஷ்ணமும், வியர்வையும், பசியும், தாகமும்... இவை எல்லாவற்றையும்விட அவமானம். தம்புரானுக்குச் சுய உணர்வையே இழந்து விட்டதுபோல் இருந்தது.
மதிய நேரத்திலேயே குழியிருந்த இடத்திலோ அதைச் சுற்றியுள்ள பகுதியிலோ ஆள் நடமாட்டமே இல்லை என்றாகிவிட்டது. முதல்நாள் பகலில் யாரும் சாமி ஆடுவதில்லை. அதனால், பொதுவாகவே ஆள் நடமாட்டம் குறைவாகத்தான் இருக்கும். வெறுமனே அமைதியாகக் கிடந்த கிராமத்துப் பாதையைப் பார்த்ததும் தம்புரானுக்கு ஒருவித ஆசை உண்டானது. காட்டுக் கொடிகளைக் கைகளால் நீக்கி தலையை உயர்த்திச் சுற்றிலும் பார்த்தார். பார்வைபோன இடத்தில் எல்லாம் யாருமே இல்லை. ஊரே பகல் நேர உஷ்ணத்தில் தளர்ந்துபோய்க் கிடந்தது.
மனதில் கடவுளின் பெயரை உச்சரித்துக்கொண்டே தம்புரான் குழியின் பக்கவாட்டுச் சுவரைப்பிடித்து மேலே ஏறினார்.
அவரின் நிலையைப் பார்த்து தொட்டாசிணுங்கிச் செடிகள் வெட்கத்தால் கண்களை மூடிக்கொண்டன. ஏதோ ஒரு செடி பட்டு கால்கள் எரிந்தன. குழியை விட்டு வெளியே வந்த தம்புரான் ஒரு மரத்தின் பின்னால் தன்னை மறைத்துக்கொண்டு நின்றார். நாலா பக்கங்களிலும் கண்களை ஓட்டினார். எந்தப் பக்கமும் யாரும் இருப்பதாகத் தெரியவில்லை. உச்சி வெயிலின் கடுமை தாங்க முடியாமல் துவண்டு போன காகங்கள் கரையும் சத்தம் மட்டும் காதில் விழுந்தது.
மீண்டும் வானத்தை நோக்கி கைகூப்பிப் பிரார்த்தித்த தம்புரான் மரத்தின் மறைவை விட்டு வெளியே வந்து இரண்டு எட்டு முன்னால் வைத்து நடந்தார். சுத்தமான மஞ்சள் வெயில் அவரின் உடல்மேல் விழுந்தது. தம்புரான் உண்மையிலேயே நடுங்கிப் போனார். கல்லிசேரியின் தம்புரான் உடம்பில் துணியே இல்லாமல் வெட்ட வெளியில் நின்று கொண்டிருக்கிறார். அந்த நடுக்கமே அவரிடம் ஒரு தளர்ச்சியை உண்டாக்கியது. இளம்பிள்ளைவாதம் வந்ததைப்போல அவரின் கால்கள் துவண்டன.
தம்புரான் மீண்டும் தொட்டாசிணுங்கியும், கொடிகளும் வளர்ந்து கிடக்கும் குழிக்குள் இறங்கி ஒளிந்துகொண்டார்.
பகல் நேரத்தில் உடம்பில் துணி இல்லாமல் வீடு போய்ச் சேர்வது என்பது நடக்கக்கூடிய காரியம் இல்லை என்பது தம்புரானுக்கு நன்றாகவே புரிந்தது. தன் சொந்த ஊரில்- அந்த ஊருக்குச் சொந்தமான தம்புரான் கட்டிய துணி இல்லாமல் வெளியே நடந்துபோவது என்பது உலகத்தில் எங்காவது நடந்திருக்கிறதா என்ன? அதைவிட பேசாமல் உயிரை விட்டுவிடலாம். குஞ்ஞி கிருஷ்ணன் தம்புரான் சாதாரணமாகவே கௌரவத்திற்கும் அந்தஸ்திற்கும் உயிரைவிட அதிக மதிப்பு கொடுக்கக்கூடியவர். கல்லிசேரியின் மானம் போகக்கூடிய ஒரு செயலை யாரும் செய்யக்கூடாது என்று மக்களை ஒவ்வொரு நேரமும் கூறி நல்வழிப்படுத்தி வைத்திருந்தார் அவர். மானம் போகக்கூடிய ஒரு செயலை அவர் எந்தக் காலத்திலும் ஒப்புக்கொண்டதும் இல்லை. அதற்குத் துணை நின்றதும் இல்லை.
இருள் இப்போது முழுமையாக ஆக்கிரமித்து விட்டிருந்தது. இனி முழுக்க முழுக்க தம்புரான் இருட்டில் இருக்க வேண்டியதுதான். வெளிச்சத்திற்கு அவர் எங்கே போவார்?
தூரத்தில் இருளில் கலந்திருந்த தென்னை மரங்களுக்கு மத்தியில் ஒரு வெளிச்சம் தெரிந்தது. அந்த வெளிச்சத்தைப் பார்த்து, சொல்லப்போனால்- தம்புரான் பயந்தார். மின்சாரம் தடையாகி கல்லிசேரி இருட்டில் மூழ்கிக் கிடக்காதா என்று மனப்பூர்வமாகப் பிரியப்பட்டார் அவர். இனி அவரைப் பொறுத்தவரை இருட்டு மட்டுமே சாட்சி.
எல்லா விஷயங்களுக்கும் ஆரம்பம் இந்த மின்சாரம்தான். மின்சாரம் இல்லாமல் போனதால்தானே காற்றாடி நின்றது!
அதனால்தானே மாளிகையைவிட்டு காற்று வாங்க அவர் வெளியே வந்ததும், சாலியத்திப் பெண்ணின் மாயாஜாலத்தில் அவர் மயங்கிப் போனதும் நடந்தது!
அப்போது நாட்டுப் பாதையில் ஆங்காங்கே அமைக்கப்பட்டிருந்த மின்விளக்குகள் எரிந்தன. தம்புரான் ஒளிந்திருந்த குழி வரை விளக்கு வெளிச்சம் விழுந்தது. மறைந்திருக்கின்ற ஒரு திருடன்மேல் டார்ச் விளக்கு பட்டதுபோல் தம்புரான் நடுங்கி சுருங்கிப்போய் உட்கார்ந்திருந்தார்.
யாரைக் குற்றம் சொல்வது? ஆயிலக்கரையிலும் பாணியாற்றிலும் இப்போதுகூட மின்சாரம் கிடையாது. மேக்குன்னு பாலத்தின்மேல் வெளிச்சம் வீசிக்கொண்டிருப்பது, அதன் இரு முனைகளிலும் வைக்கப்பட்டிருக்கும் மண்ணெண்ணெய் விளக்குகள்தாம். மற்ற ஊர்களுக்கு மின்சார வசதி இன்னும் வராமல் இருக்கின்ற சூழ்நிலையில், கல்லிசேரிக்கு மின்சாரம் வந்ததற்குக் காரணமே தம்புரானின் தீவிர முயற்சிதான் என்பது எல்லாருக்கும் தெரிந்த ஒரு விஷயம். தம்புரான் மின்சாரத்தை மனதிற்குள் திட்டினார். எல்லா நாகரிக வளர்ச்சியும் ஒருவிதத்தில் மனிதனுக்குத் துரோகமே செய்கிறது என்ற எண்ணம் மேலும் அவர் மனதில் பலமானது. ஊர் மக்களின் நன்மைக்காக அவர் செய்த ஒரு நல்ல காரியம் தன்னுடைய மானம் போகக்கூடிய ஒரு நிகழ்ச்சிக்கு உதவியாக இருக்கும் என்று அவர் நினைத்துப் பார்த்தாரா என்ன?
ராமன் செட்டிமீது சொல்லப்போனால் தம்புரானுக்கு அடக்க முடியாத அளவிற்குக் கோபம் உண்டானது. பட்டணத்துக்கு வியாபார விஷயமாகப் போன அந்த ஆள் நேரம் கெட்ட நேரத்தில் எதற்கு அவசரமாக ஊர் திரும்ப வேண்டும்?