நிர்வாணத் தம்புரான் - Page 11
- Details
- Category: புதினம்
- Published Date
- Written by சுரா
- Hits: 6447
இப்போதுள்ள சூழ்நிலையில் கண்பார்வை தெரியாத அந்த ஆளுக்கு முன்னால் மட்டுமே எந்தவித கூச்சமும் இல்லாமல் தம்புரானால் போய் நிற்கமுடியும். கண் பார்வையற்ற அந்த மனிதருக்கு என்ன தெரியப் போகிறது? பூசாரியின் தோளில் போட்டிருக்கும் துணி போதும். அதை எடுத்து இடுப்பில் சுற்றிக்கொண்டு இருளோடு இருளாய்க் கலந்து மாளிகைக்கு ஓடிவிடலாம். முழங்கால் வரை மட்டுமே வரும் துணியைச் சுற்றிக்கொண்டு பொதுப் பாதையில் நடப்பது என்பது தம்புரானின் அந்தஸ்துக்கு ஏற்றதாக இல்லாமல் இருக்கலாம். ஆனால், துணியே உடம்பில் இல்லாமல் நிர்வாணமாக இருப்பதைவிட, அது எவ்வளவோ நல்லதாயிற்றே!
பாதையிலோ, வயல்பக்கத்திலிருந்தோ ஏதாவது நிழல் தெரிந்தால், தம்புரான் ஆர்வத்துடன் யார் வருவது என்று தலையைத் தூக்கிப் பார்ப்பார். ஒருமுறை அவரின் மருமகன் வாசுதேவன் அவருக்கு முன்னால் பாதையில் நடந்து போய்க் கொண்டிருந்தான்.
அவனை அழைத்து ஒரு துணியை எடுத்து குழிக்குள் போடச் சொன்னால் என்ன என்று யோசித்தார். ஆனால், அடுத்த நிமிடம் தன் எண்ணத்தை அவர் மாற்றிக்கொண்டார். "டேய் வாசு..." என்று தம்புரான் அழைத்தால், பயந்துபோய் மூத்திரம் பெய்யக்கூடிய மனிதன் அவன். தம்புரானைக் கண்டால் அவனுக்கு அவ்வளவு பயம்! அப்படிப்பட்ட மருமகன் முன்னால் உடம்பில் துணியே இல்லாமல் தம்புரான் நின்றுகொண்டிருப்பது என்பது...! வாசுதேவன் கடந்து செல்லும் வரை, குழியின் ஓரத்தில் இருந்த ஆமணக்குச் செடிக்குப் பின்னால் தன்னை மறைத்தவாறு நின்றிருந்தார் தம்புரான். பலரும் பாதையில் வருவதும் போவதுமாக இருந்தார்கள். குஞ்ஞன் பூசாரியை மட்டும் காணவே காணோம். இருளில் கண்பார்வை தெரியாத ஒரு மனிதர் தட்டுத் தடுமாறி திருவிழா பார்க்க வருவாரா என்ன? அப்படி நினைத்துப் பார்ப்பதே முட்டாள்தனமாக இல்லையா? பரிதாபச் சூழ்நிலையில் மாட்டிக்கொண்ட தம்புரானுக்கு அறிவுப்பூர்வமாக சிந்திக்கும் ஆற்றல் இல்லாமல் போய்விட்டதுதான் விந்தையிலும் விந்தை.
நள்ளிரவு நட்சத்திரம் வானத்தில் தோன்றிய நேரத்தில், தம்புரான் ஒரு முடிவுக்கு வந்தார். தூரத்தில் ஊருக்குள் இருந்து மேள தாள ஒலிகள் கேட்டாலும், கிட்டத்தட்ட பாதையில் ஆள் நடமாட்டம் இல்லை என்கிற அளவிற்கு முழுமையாக நின்று போயிருந்தது.
அவ்வப்போது வேண்டுமானால் யாராவது ஒரு கல்லிசேரிக்காரன் பாதை தவறிய பயணியைப்போல அந்தப் பாதையில் தென்படலாம். பொழுது புலர இன்னும் அதிக நேரம் இல்லை. தம்புரான், தலையை உயர்த்திச் சுற்றிலும் பார்த்தார். தூரத்தில் தென்னந்தோப்பைத் தாண்டி ஒரு சிறு வெளிச்சம் தோன்றி மறைந்தது.
தம்புரானுக்கு மின்விளக்குகள் எரிந்துகொண்டிருக்கும் பொது வழியில் நடந்துசெல்ல தைரியம் இல்லை. ஆரானின் வயல் வழியே நடந்து, குறுக்குப் பாதைகளில் நடந்துதான் தான் செல்லவேண்டும் என்று அவர் தீர்மானித்தார். கடவுளை மனதிற்குள் நினைத்த வாறு, பெற்றோர்களை பயபக்தியுடன் தொழுதவாறு, மெல்ல குழியில் எழுந்து நின்றார் தம்புரான். இன்னொரு முறை நான்கு பக்கங்களிலும் பார்வையை ஓட்டினார். யாரும் வரவில்லை என்று மனதில் தெளிவாகப் பட்டவுடன் குழியை விட்டு வெளியே வந்தார்.
குழியைவிட்டு வெளியே வந்த தம்புரானின் நிர்வாண உடம்பு நிலவொளியில் பட்டுப் பிரகாசித்தது. அவர் அடுத்த நிமிடம் குழிக்கு வடக்குப் பக்கத்தில் இருந்த வறண்டு போயிருந்த குளத்தில் இறங்கி நடந்தார். எங்கோ இருந்த ஒரு நாய், "ஊ" என்று ஊளையிட்டது. குளத்தைத் தாண்டி பள்ளிக்கூட ஆசிரியர் சோயிக்குருப்பின் வீடு. அங்கே வெளிச்சம் எதுவும் இல்லை. அங்கிருந்த ஒரு மேட்டின் மேல் ஏறி வயலில் கால் வைத்தார் தம்புரான். வறண்டு போயிருந்த மண்கட்டிகள் அவருக்குப் பின்னால் "பொத் பொத்" என்று விழுந்தன. வயலில் கால்வைத்த தம்புரான் அங்கிருந்த புளிய மரத்திற்குப் பின்னால் மறைந்து கொண்டார். சோயி வாத்தியாரின் பரந்து கிடக்கும் நிலத்தைத் தாண்டி இருளோடு இருளாய் சங்கமமாகி அப்பு மாராரின் வீட்டுக்குப் பின்னால் இருக்கும் குறுக்குப் பாதையில் இறங்கி நடக்கத் தீர்மானித்தார் தம்புரான். அவர் திட்டம் போட்டபடி நடந்துவிட்டால், ஆபத்தான இந்தப் பயணத்தின் முதல்கட்ட வெற்றியை அவர் அடைந்த மாதிரி.
இரண்டடி முன்னால் நடந்திருப்பார். மேற்குப் பக்கத்தில் தீப்பந்தங்கள் ஒளிர்வது தெரிந்தது. மரத்திற்குப் பின்னால் போய் தன்னை மறைத்துக் கொண்ட தம்புரான் அது என்ன வெளிச்சம் என்று கூர்மையாகப் பார்த்தார். ஊருக்குள் இருந்து வரும் அவர்கள் பாதை வழியே போவதாக இருந்தால், அவருக்கு ஒரு பிரச்சினையும் இல்லை.
ஆனால், பந்தம் ஏந்திக் கொண்டிருந்தவர்கள் பாதையைவிட்டு, வடக்குப் பக்கமாய்த் திரும்பியபோது, தம்புரானின் கை கால்கள் நடுங்க ஆரம்பித்தன. பெண்கள், ஆண்கள், குழந்தைகள் அடங்கிய அந்தப் பெரிய கூட்டத்தில் இருந்த பெரும்பாலானவர்கள் கைகளில் தீப்பந்தங்கள் இருந்தன. அவர்கள் பாண்டியாற்றுக்காரர்கள் என்பதை தம்புரான் புரிந்துகொண்டார். தண்ணீர் இல்லாமல் வற்றிப் போய்க் கிடக்கும் குளத்தைத்தாண்டி, வயல்வழியே வடக்கு நோக்கி நடந்தால் சீக்கிரம் பாண்டியாற்றை அடைந்துவிடலாம். பந்தங்களின் வெளிச்சம் அவரை மிகவும் நெருங்கி வந்தது. குழந்தைகளும், பெண்களும் "சலசல" என்று பேசிக் கொண்டே வந்தனர்.
சில அடிகள் பின்னால் நடந்துசென்று வயதாகிப் போய் நின்றிருந்த புளிய மரத்திற்குப் பின்னால் மறைந்து நின்று கொண்டால் தம்புரானை யாரும் பார்க்க மாட்டார்கள். ஆனால் வெளிச்சத்தையும், மக்களின் பேச்சொலியையும் கேட்ட சோயி வாத்தியார் தூக்கம் கலைந்து எழுந்து வந்து தன் வீட்டின் முன்னால் இருந்த விளக்கைப் போட்டதுதான் தம்புரானுக்குப் பெரிய தடைக்கல்லாகி விட்டது. அவர் எப்படிப் பார்த்தாலும் தப்பிக்க வழியே இல்லை என்றாகிவிட்டது. அவரின் கண்கள் இருண்டன. "கடவுளே, ஏன் என்னை இப்படிச் சோதனை செய்றே?" என்று மனதிற்குள் அழுதார் தம்புரான்.
என்ன செய்வது என்று தெரியாமல் தவித்துக்கொண்டிருந்த தம்புரான் மீண்டும் திரும்பி, குளத்திற்குள் இறங்க முடிவெடுத்தார். மேட்டில் கை வைத்து இறங்கியபோது, தடுமாறி தன்னுடைய நிர்வாண உடம்புடன் வற்றிப்போன குளத்தில் விழுந்தார் அவர்.
அடுத்த நிமிடம்- பதறிப்போய் எழுந்து தான் ஏற்கெனவே ஒளிந்திருந்த குழியை நோக்கி ஓடினார். அப்படி ஓடும்போது, ஒரு இடத்தில் தடுமாறிக் கீழே விழுந்தார் தம்புரான். சிறிது தூரத்தில் நாய் ஒன்று பலமாகக் குரைத்தது. குழிக்குள் மீண்டும் இறங்கிய தம்புரான் இருளோடு இருளாய்க் கலந்து, மேல்மூச்சு கீழ்மூச்சு விட்டார்.
தீப்பந்தங்களின் வெளிச்சம் குழிக்கு மேலே கடந்துபோனது. குழந்தைகளும், பெண்களும் என்னென்னவோ மகிழ்ச்சியுடன் பேசியவாறு நடந்து போயினர். குளக்கரைப் பக்கம் வந்து நின்ற ஒரு சொறி நாய் நீண்ட நேரம் குரைத்துக்கொண்டே இருந்தது.