
தனக்குள் இருக்கும் மனித குணத்தின் பெரும்பகுதி இல்லாமல் போய்விட்டதைப் போல அவன் மரத்துப்போய் அதே இடத்தில் நின்றிருந்தான். அவலட்சணமான தோற்றத்துடன் அவன் மெதுவாக நகர்ந்தான். எனினும், தனக்குக் கிடைத்த அடி, உதைகளைப் பற்றிய சிந்தனை அவனைப் பாடாய்ப்படுத்தியது. அறையில் இருக்கும்போது, பிறகும் அடியும் உதைகளும் கிடைக்கும் என்ற அச்சம் உண்டானதைப் பற்றி அவன் நினைத்துப் பார்த்த போது, அந்த இதயம் சூடாகிவிட்டது. அவன் ஒரு வெறுப்பின் எல்லையில் போய் நின்றான். சற்று வாய் விட்டு அழ வேண்டும் போல அவனுக்குத் தோன்றியது. பாதி திறந்த வாயுடன் ஒரு முட்டாளைப்போல அவன் தோன்றினான். தனக்குள் ஒரு வெறுமை தன்மை வந்து நிறைவதைப்போல அவன் உணர்ந்தான். வேதனையுடன் அவன் தன்னுடைய வேலையில் தட்டுத்தடுமாறி செயல்பட்டுக் கொண்டிருந்தான். அவன் மிகவும் சிரமப்பட்டு தன்னிடமிருந்து இல்லாமல் போன சக்தியைத் திரும்பவும் அடைவதற்கு முயற்சித்துக் கொண்டிருந்தான். அவன் மிகவும் களைத்துப் போய்விட்டிருந்தான். இறுதியில் அவன் படுக்கையில் போய் படுத்துத் தூங்க ஆரம்பித்தான். தூக்கத்திற்கென்றே இருந்த ஒரு உயிரற்ற இரவு அவனுக்காக பாயை விரித்துப் போட்டது. கவலைகள் நிறைந்த சிந்தனைகளுக்கு மத்தியில் களைப்பு நுழைந்து வந்தது.
காலையில் செய்வதற்கு ஏராளமான வேலைகள் இருந்தன. ஆனால், ப்யூகில் ஊதப்படுவதற்கு முன்பே, அவன் தூக்கத்திலிருந்து கண்விழித்து எழுந்தான். மார்பில் வேதனை, தொண்டை வறட்சி, தாங்க முடியாத சிரமங்கள்- எல்லாம் சேர்ந்து அவனுடைய கண்களை நிராசை கலந்த ஒரு பரிதாப நிலைக்குக் கொண்டு சென்றன. சிந்தனைகளின் தேவையே இல்லாமல் விஷயங்கள் அவனுக்கு நன்கு புரிந்தன. ஊர் சுற்றக்கூடிய நேரம் வந்துவிட்டது என்று அவனுக்குத் தோன்றியது. அறையில் இருட்டின் இறுதி அடையாளங்களும் காணாமல் போயின. இனி தன்னுடைய கட்டுப் பாட்டில் இல்லாத இந்த உடலையும் இழுத்துக்கொண்டு வெளியே சென்றால் போதும். மிகவும் இளைஞனான அவனுக்கு மிகவும் குறைந்த அளவிலேயே பிரச்சினைகளைச் சந்திக்க வேண்டிய சூழ்நிலைகள் வந்தன. அது அவனிடம் பதைபதைப்பை உண்டாக்கியது. இரவு நேரம் வந்தால் நன்றாக இருக்கும் என்று அவன் ஆசைப்பட்டான். அப்படியென்றால் தான் இருட்டைத் தழுவிக்கொண்டு அசையாமல் படுத்திருக்கலாமே! ஆனால், பகல் வெளிச்சம் உள்ளே நுழைந்து வருவதை எதனாலும் தடுக்க முடியாதே! எழுந்து சென்று கேப்டனுக்கு காப்பி தயார் பண்ணித் தருவதையோ, குதிரையை அலங்கரிப்பதையோ தடுப்பதற்கு எதனாலும் முடியாது. எனினும், இவையெல்லாம் சிரமம் நிறைந்த விஷயங்கள்தான் என்று அவன் நினைத்தான். அதேபோல அவை எதுவும் தன்னை சுதந்திரமான மனிதனாகவும் ஆக்கப் போவதில்லை... தான் எழுந்து சென்று கேப்டனுக்குக் காப்பி தரவேண்டும்... தான் எந்த அளவுக்கு விருப்பமில்லாத மனிதனாக இருந்தாலும் தவிர்க்க முடியாத விஷயங்கள் என்பது ஒரு உண்மையாக நிலை பெற்று நின்று கொண்டுதான் இருக்கிறது.
இறுதியில் கட்டுப்படுத்த முடியாத ஒரு விஷயம் என்பதைப் போல, ஒரு நீண்ட பெருமூச்சை விட்டவாறு அவன் எழுந்தான். எனினும், தன்னுடைய மன வலிமையைக் கொண்டு ஒவ்வொரு அசைவுகளையும் அவற்றுக்குப் பின்னாலிருந்து அவன் பலம் செலுத்தி இயக்க வேண்டியதிருந்தது. தான் செயலற்றவன் என்பதையும் அனாதை என்பதையும் திகைத்துப் போய் நிற்பவன் என்பதையும் அவன் உணர்ந்திருந்தான். தவிர்க்கமுடியாத வேதனையுடன் அவன் கட்டிலை இறுகப் பற்றிக் கொண்டான். தொடைகளைப் பார்த்த அவனால், கறுத்து தடித்த காயங்களை சதைப் பகுதியில் காண முடிந்தது. தான் சுய உணர்வு இல்லாதவனாக ஆவதற்கு தன்னுடைய விரல்களில் ஒன்றை அங்கு அழுத்தினால் போதும் என்பதையும் அவன் உறுதியாகத் தெரிந்து வைத்திருந்தான். ஆனால், அப்படி ஆவதற்கு அவன் விரும்பவில்லை. வேறு யாருக்கும் தெரியக் கூடாது என்றும் அவன் விரும்பினான். எந்தச் சமயத்திலும் யாருக்கும் தெரிந்துவிடக் கூடாது. இந்த விஷயம் தனக்கும் கேப்டனுக்கும் இடையே மட்டுமே இருக்கக் கூடிய ஒன்று. இந்த உலகத்தில் இப்போது மொத்தத்தில் இருப்பதே இரண்டு பேர்தான்- தானும் கேப்டனும்.
மெதுவாக, மிகவும் மெதுவாக அவன் எழுந்து ஆடைகளை எடுத்து அணிந்து நடப்பதற்கு வலிய முயற்சித்தான். தன்னுடைய கையில் இருக்கும் ஆடைகளைத் தவிர, வேறு எதுவும் தேவையில்லை. எனினும், அவன் எப்படியோ வேலைகளைச் செய்ய ஆரம்பித்தான். அந்த வேதனைகள்தான் அவனுடைய கட்டுப்பாடுகளை மீண்டும் உயிருடன் கொண்டு வந்தன. மேலும் துன்பங்கள் நிறைந்த பகுதி இனிமேலும் இருக்கின்றன. அவன் ட்ரேயைக் கையில் எடுத்துக்கொண்டு கேப்டனின் அறைக்குச் சென்றான். வெளிறிப்போய், முகத்தை உயர்த்திக் கொண்டு அதிகாரி நாற்காலிக்கு முன்னால் உட்கார்ந்திருந்தார். மேலதிகாரியை வணங்கும்போது ஆர்டர்லி தனக்கு உயிரே இல்லாமல் போய் விட்டதைப்போல உணர்ந்தான். தன்னுடைய சுய உணர்வற்ற தன்மைக்கு அடிபணிந்து, ஒரு நிமிடம் அவன் நின்றான். தொடர்ந்து தன்னுடைய பலத்தை மீண்டும் பெற்று, தன்னுடைய கட்டுப்பாட்டில் இருக்கும்படி அனைத்தையும் கொண்டு வந்தான். அதே நேரத்தில் கேப்டன் ஒரு உண்மையற்ற நிலைக்குள்ளும் தெளிவற்ற தன்மைக்குள்ளும் போய் அடங்கிக் கொண்டார். இளைஞனான ராணுவ வீரனின் இதயம் வேகமாக அடிக்கத் துவங்கியது. அவன் இந்தச் சூழ்நிலைக்குள்ளேயே சுற்றிக் கொண்டிருந்தான். அதாவது- கேப்டன் என்ற ஒருவர் இல்லவே இல்லை என்பது மாதிரி. அதைத் தொடர்ந்து தான் மட்டுமே இருப்பதற்கு பலம் கொடுப்பதற்கான ஒரு சிந்தனையும் உதயமானது. ஆனால், காப்பி பாத்திரத்தை எடுக்கும்போது, நடுங்கிக் கொண்டிருந்த கேப்டனின் கையைப் பார்த்ததும், எல்லாமே நொறுங்கி சாம்பலாகி விட்டதைப்போல அவனுக்குத் தோன்றியது. அந்த நிமிடமே பல நூறு துண்டுகளாக தான் நொறுங்கி விழுவதைப்போல உணர்ந்து அவன் அங்கிருந்து நகர்ந்தான். கேப்டன் குதிரையின்மீது ஏறி உட்கார்ந்து கட்டளைகளைப் பிறப்பித்தார். அப்போது வேதனையிலிருந்து உண்டான நோய்த் தன்மையுடன் ரைஃபிலுடனும் தொங்கு பையுடனும் நின்று கொண்டிருந்த அவனுக்கு தான் எல்லாவற்றுக்கும் எதிராக கண்களை மூடிக் கொள்ள வேண்டும் என்ற எண்ணம் உண்டானது. வறண்டு போன தொண்டைக்குள்ளிருந்து வெளியே வந்த ஆழமான ஒரு மனநிலை மட்டுமே மொத்தத்தில் ஒரே ஒரு விருப்பத்தை அவனிடம் உண்டாகும்படி செய்தது- தான் தப்பித்துவிட வேண்டும் என்ற விருப்பம்.
You can use your Facebook account to sign into our site.
fb iconLog in with Facebook