ராணுவ அதிகாரி - Page 14
- Details
- Category: புதினம்
- Published Date
- Written by சுரா
- Hits: 6352
மிகவும் அருகிலிருந்த- அழகாகவும் சாம்பல் நிறத்திலும் தோன்றிய மலைப்பகுதிக்குப் பின்னால் பொன்னொளியில் குளித்து வெளிறிப் போன மலைத்தொடர்கள் பனியால் மூடப்பட்டு மிகவும் சுத்தமான மென்மையான பொன்னைப்போல காட்சி அளித்தன. முற்றிலும் அசைவே இல்லாமல் வானத்தின் தாதுவில் கழுவப்பட்டு சுத்தமாகி இருப்பதைப்போல அவை இருந்தன. தங்களுடைய பேரமைதியில் அவை பிரகாசத்தைப் பரவச் செய்து கொண்டிருந்தன. சந்தோஷத்துடன் அவன் அங்கே நின்று கொண்டு அதைப் பார்த்தான். பொன் நிறம் கலந்த பிரகாசமான பனியின் ஒளியைப்போல, தனக்குள் இருக்கும் தாகம் தன்னைக் கடுமையாக பாதித்துவிட்டிருப்பதாக அவனுக்குத் தோன்றியது. ஒரு மரத்தில் சாய்ந்து நின்று கொண்டு அவன் அவை ஒவ்வொன்றையும் கண்களை விரித்து வைத்துக் கொண்டு பார்த்துக் கொண்டிருந்தான். அதைத் தொடர்ந்து அனைத்தும் வெறுமைக்குள் போய் மறைந்தன.
இரவில் இடி, மின்னல் ஆகியவற்றின் பிரகாசத்தின் மூலம், ஆகாயத்திற்கு நிரந்தரமாக ஒரு அருமையான நிறம் கிடைத்தது.
அவன் மீண்டும் நடக்க ஆரம்பித்திருக்க வேண்டும். பல நிமிடங்கள் இந்த உலகம் அவனைச் சுற்றி நின்று கொண்டிருந்தது. வயலில் பச்சை நிறத்தில் ஒரு பிரகாசமும், இருட்டில் நின்று கொண்டிருந்த மரங்களும், வெளுத்த ஆகாயத்தில் கறுத்த மேகக் கூட்டங்கள் ஒன்று சேர்ந்தும்... தொடர்ந்து ஒரு திரையைப்போல இருள் இரவை முழுவதுமாக வளைத்தது. இருள் சூழ்ந்த ஒரு உலகம்- அந்த இருட்டிலிருந்து வெளியே பாய்ந்து வருவதற்கு அதற்கு முடியவில்லை. கறுத்த மேகக் கூட்டங்கள் பூமியை நோக்கி இறங்கி வருவதற்கு தயார் நிலையில், தலைக்கு மேலே திரண்டு நின்றிருந்தன. பரிசுத்தமான இருட்டுக்குள் நிமிட நேரங்களுக்கு எடுத்து எறியப்பட்ட ஒரு பிணத்தின் நிழலாக இந்த உலகம் மாறியது. பிறகு அது பூரணத்துவத்துடன் மிகப் பெரியதாகத் திரும்பி வந்தது.
சாதாரண ஜுரமும், உஷ்ணமும் அவனுடைய உள்ளுக்குள் ஆக்கிரமித்து விட்டிருந்தது. (இரவைப்போல மூளை திறந்து மூடுகிறது). சில நேரங்களில் பயத்தால் உண்டான நடுக்கங்களுடன் ஒரு மரத்தைச் சுற்றிச் சுற்றி, தன்னுடைய பெரிய கண்களால் அவன் வெறித்துப் பார்த்துக் கொண்டேயிருந்தான். தொடர்ந்து அணி வகுப்பு செய்ததையும், சூரியதாபம் ரத்தத்தை பாதித்ததால் உண்டான குழப்பங்களையும் தவிர, கேப்டனின்மீது கொண்ட வெறுப்பையும் அதனால் உண்டான ஆவேசத்தையும் அவன் நினைத்துப் பார்த்தான். அதே நேரத்தில், வேதனையிலிருந்து பிறந்த, வேதனைக்குள் கரைந்த நிம்மதியை அவன் மீண்டும் பெற்றான்.
பொழுது புலர்ந்தவுடன், அவன் தீர்மானத்துடன் எழுந்தான். அப்போது மிகுந்த தாகத்தின் விளைவு அவனுடைய மூளையை பாதித்தது. சூரியன் அவனுடைய முகத்தில் அடிக்க, பனித் துளிகளில் ஈரமான ஆடைகளிலிருந்து ஆவி பறந்து கொண்டிருந்தது. பேய் பிடித்தவனைப்போல அவன் எழுந்தான். அங்கு, அவனுக்கு முன்னால் நிரந்தரமான, குளிர்ந்த, கம்பீரமான மலைத் தொடர்கள், அதிகாலை ஆகாயத்தின் ஒளியுடன் சேர்ந்து காட்சியளித்தன... அவனுக்கு அவை தேவைப்பட்டன. அவை அவனுக்கு மட்டும் வேண்டும். தன்னை விட்டுப் பிரிந்து அவற்றுடன் போய் இரண்டறக் கலக்க வேண்டும் என்று அவன் ஆசைப்பட்டான். வெண்மையாகவும், மென்மையாகவும் இருந்த பனித் துளிகளுடன் இருந்த அவை எந்தவித சலனமும் இல்லாமலும் எளிதானதாகவும் இருந்தன. உரத்த முனகல்களுடன், அவன் எந்தவிதமான சலனமும் இல்லாமல் நின்றிருந்தான். அந்தக் கைகள் நெளிந்து கொண்டும், ஒன்றையொன்று பிடித்துக் கொண்டும் இருந்தன. அவன் புற்பரப்பில் ஜுரம் பாதித்த மனிதனைப்போல நெளிந்து கொண்டு படுத்திருந்தான்.
குழப்பங்கள் நிறைந்த ஒருவகையான கனவில் மூழ்கிய அவன் அசையாமல் படுத்திருந்தான். தாகம் தன்னிடமிருந்து விடை பெற்றுக் கொண்டு விட்டதாக அவன் உணர்ந்தான். தொடர்ந்து தன்னுடைய மனதின் உண்மைத் தன்மையின்மீது அவனுக்கு வேதனை உண்டானது. பிறகு இன்னொரு விஷயம். அதாவது- அவனுடைய உடலின் தவிப்பு! பல தனிப்பட்ட காரணங்களால் அவன் பிரிக்கப்பட்டு கிடக்கிறான். இனி அவை அனைத்தும் எல்லையற்ற வெறுமையின் ஆழத்திற்குள் போய் மறைந்து விடும். அவற்றுக்கிடையே ஆச்சரியப்படக் கூடிய ஏதோ வேதனை நிறைந்த உறவு இருந்தது. ஆனால், அவை ஒன்றை விட்டு ஒன்று விலகி விலகிப் போய்க் கொண்டிருக்கின்றன.
மீண்டும் அவனுடைய சுய உணர்வு மண்டலம் சொன்னதைத் திரும்பச் சொன்னது. அவன் இடுப்பில் கையை வைத்து எழுந்து நின்று பிரகாசித்துக் கொண்டிருந்த மலைத் தொடர்களையே வெறித்துப் பார்த்தான். பூமிக்கும் சொர்க்கத்திற்குமிடையே ஆச்சரியப்படும் வகையில் அவை வரிசை வரிசையாக சலனமே இல்லாமல் நின்றிருந்தன. கண்களில் கறுப்பு தோன்றும்வரை அவன் வெறித்துப் பார்த்துக்கொண்டே இருந்தான். அழகும் பரிசுத்தமும் நிறைந்த கம்பீரத்துடன் நின்று கொண்டிருந்த அந்த மலைகளின் காட்சி தனக்கு நிரந்தரமாக இல்லாமல் போய்விட்டதாக அவன் உணர்ந்தான்.
4
மூன்று மணி நேரங்களுக்குப் பிறகு, ராணுவ வீரர்கள் அவனைக் கண்டு பிடித்தார்கள். அவன் தன்னுடைய தலையைக் கையின்மீது வைத்து, கறுத்த தலைமுடியை சூரியனுக்குக்கீழே வைத்துப் படுத்திருந்தான்.
ஆனால், அவனுக்கு அப்போதும் உயிர் இருந்தது.
திறந்த வாயைப் பார்த்த இளம் ராணுவ வீரர்கள் பயத்துடன் அவனை கீழே படுக்க வைத்தார்கள்.
பார்வையை மீண்டும் பெறாமலே, இரவில் அவன் மருத்துவமனையில் மரணமடைந்தான்.
டாக்டர்கள் இறந்த உடலின் கால்களிலும் உடலின் பின் பகுதியிலும் காயங்கள் இருப்பதைப் பார்த்தார்கள். அவர்கள் அமைதி காத்தார்கள்.
பிணவறையில் இரண்டு இறந்த உடல்களும் ஒன்றாகக் கிடந்தன. ஒன்று வெளுத்ததாகவும் மெலிந்ததாகவும் இருந்தாலும், நன்றாக ஓய்வு எடுப்பதைப்போல தோன்றியது. இளமையும் பலமும் கொண்ட இன்னொரு இறந்த உடல் படுத்திருப்பதைப் பார்த்தால், அது எந்த நேரத்திலும் ஆழமான உறக்கத்திலிருந்து எழுந்து வந்து, மீண்டும் வாழ்வுக்குள் நுழைந்து விடும் என்பதைப்போல தோன்றியது.