ராணுவ அதிகாரி
- Details
- Category: புதினம்
- Published Date
- Written by சுரா
- Hits: 6350
சுராவின் முன்னுரை
ஆங்கில இலக்கியத்தின் குறிப்பிடத்தக்க எழுத்தாளரான டி.எச். லாரன்ஸ் (D.H. Lawrence) எழுதிய ‘The Prussian officer’ என்ற புதினத்தை ‘ராணுவ அதிகாரி’ (Raanuva Adhikari) என்ற பெயரில் தமிழில் மொழி பெயர்த்திருக்கிறேன்.
மிகவும் வறுமை வாய்ப்பட்ட குடும்பத்தில் பிறந்த லாரன்ஸ் தன்னைத்தானே வளர்த்துக் கொண்டவர். இவர் ஒரு மிகச் சிறந்த ஓவியரும்கூட.
1911-ஆம் ஆண்டில் லாரன்ஸின் முதல் நாவலான ‘The white Peacock’ வெளிவந்தது. முதல் நாவலே லாரன்ஸுக்கு நல்ல பெயரைப் பெற்றுத் தந்தது.
1918-ல் லாரன்ஸின் ‘Rainbow’ என்ற நாவல் பிரசுரமானது. ஆண் – பெண் உறவுகள் பற்றி ஆபாசமான வர்ணனைகள் ஏராளமாக இருப்பதாகக் கூறி, அந்நூல் தடை செய்யப்பட்டது. அதன் ஆயிரக்கணக்கான பிரதிகள் நீதிமன்றத்தின் தீர்ப்பைத் தொடர்ந்து, நெருப்புக்கு இரையாக்கப்பட்டன.
1920-ஆம் ஆண்டில் லாரன்ஸ் ‘The Lost Girl’ என்ற நாவலை எழுதினார். லாரன்ஸின் புகழ்பெற்ற நாவல் ‘Lady Chatterley’s Lover’ 1928-ஆம் ஆண்டில் வெளியானது. போரில் காயம்பட்டு உடல் ரீதியாக பாதிக்கப்பட்ட கணவன் உயிருடன் இருக்க, அவனுடைய பணக்கார மனைவிக்கும் தோட்டக்காரனுக்குமிடையே உண்டாகும் காதலே அந்த நாவலின் மையக் கரு. அந்தப் புதினமும் அமெரிக்காவில் தடை செய்யப்பட்டது. லாரன்ஸ் எழுதிய இறுதி நாவல் ‘The man who Died.’ 1929-ல் அது பிரசுரமானது.
டி.எச். லாரன்ஸ் தன்னுடைய எழுத்துகளின் மூலம் ‘கிளர்ச்சிக்காரர்’ என்ற பெயரைப் பெற்றவர். ஏற்கெனவே இருக்கக் கூடிய அமைப்புகளுக்கு எதிராகப் போராடக் கூடியவர் அவர். தன் மனதில் படுவதை, சிறிதுகூட அச்சமின்றி வெளியிடுவார். ‘ராணுவ அதிகாரி’யில் வரும் ‘ஆர்டர்லி’ கதாபாத்திரம் ஒரு உதாரணம்.
1930-ஆம் ஆண்டு மரணத்தைத் தழுவிய டி.எச்.லாரன்ஸ் காலத்தைக் கடந்து இன்றும் வாழ்ந்து கொண்டிருக்கிறார் என்றால், அதற்குக் காரணங்கள் அவருடைய கிளர்ச்சி குணமும், மனதில் இருப்பதை துணிச்சலாக எழுதக் கூடிய நேர்மை குணமும்தான்.
இந்த நல்ல நூலை இணைய தளத்தில் வெளியிடும் லேகாபுக்ஸ்.காம் (lekhabooks.com) நிறுவனத்திற்கு என் இதயத்தின் அடித்தளத்திலிருந்து நன்றி.
அன்புடன்,
சுரா (Sura)