ராணுவ அதிகாரி - Page 2
- Details
- Category: புதினம்
- Published Date
- Written by சுரா
- Hits: 6352
சூரிய உதயத்திற்குப் பிறகு அவர்கள் முப்பது கிலோமீட்டர்களையும் தாண்டி விட்டிருந்தார்கள். அவர்கள் பயணம் செய்த வெளிறிப்போன- தகித்துக் கொண்டிருந்த வீதியில் இங்குமங்குமாக வளர்ந்து நின்றிருந்த மரக்கூட்டங்கள் சிறுசிறு நிழல்களைத் தந்து கொண்டிருந்த அதே நேரத்தில், கடுமையான வெயிலுடன் சேர்ந்து கொண்டும் இருந்தன. இரு பக்கங்களிலும் விசாலமாகவும் ஆழமாகவும் இருந்த அடிவாரம் வெயிலில் பிரகாசித்துக் கொண்டிருந்தது.
ஒளிர்ந்து கொண்டிருந்த வானத்திற்குக் கீழே ஒளிக் கீற்றுகள் இருண்டு, பச்சைப் பசேல் என காட்சியளித்த கேழ்வரகுச் செடிகளை வெளிறித் தெரியும்படி செய்து, முதிர்ச்சி அடைந்திராத இளம் மக்காச்சோளச் செடிகளையும், கறுத்த பைன் மரங்களையும் நிழலுருவில் தெரியும்படிச் செய்தன. அதே நேரத்தில், மலைத் தொடர்களுக்கு முன்னால், வெளிர் நீல நிறத்திலும் அசைவே இல்லாமலும் இருந்த மூடுபனி வெட்ட வெளியின் ஆழத்தில் சற்று பிரகாசித்துக் கொண்டிருந்தது. அந்த ராணுவக் குழு கேழ்வரகு வயல்களுக்கு மத்தியிலும், அடிவாரங்களின் வழியாகவும், உயர்ந்த சாலையின் இரு பக்கங்களிலும் இருந்த பழ மரங்களுக்கு மத்தியிலும் அணிவகுப்பு செய்துகொண்டு மலைத்தொடர்களை நெருங்கிப் போய்க் கொண்டிருந்தது. ஒளியைப் பரப்பிக் கொண்டிருந்த- அடர்த்தியான பச்சை நிறத்தில் காட்சியளித்த கேழ்வரகுச் செடிகள் கடுமையான வெப்பத்தை விநியோகித்துக் கொண்டிருக்க, நேரம் செல்லச் செல்ல மலைத் தொடர்கள் நெருக்கத்தில் இருப்பதாகவும், கண்களுக்கு நன்கு தெரியக் கூடியதாகவும் ஆயின. ராணுவ வீரர்களின் பாதங்கள் சூடேறிப் போய் இருக்க, ஹெல்மெட்டின் வழியாக வியர்வை வழிந்து கொண்டிருக்க, தோளில் கிடந்த துணி வெப்பத்தை அளிப்பதற்கு பதிலாக குளிர்ச்சியான, ஊசி குத்துவதைப் போன்ற ஒரு உணர்ச்சி நிறைந்த அனுபவத்தைத் தந்து கொண்டிருந்தது.
முன்னால் காட்சியளித்த மலைத் தொடர்களை அவன் மிகவும் அமைதியாகப் பார்த்துக்கொண்டே நடந்துகொண்டிருந்தான். பூமியிலிருந்து எழுந்துயர்ந்த பாதி மண்ணும் பாதி வெட்ட வெளியும் ஒன்றோடொன்று சேர்ந்து, மென்மையான மூடுபனிக் கூட்டங்களுக்கு மத்தியில் வெளிர் நீல நிறத்தில் இருந்த மலையின் உச்சிகள் தலையை உயர்த்திக் கொண்டு காட்சியளித்தன.
இப்போது அவனால் வேதனை இல்லாமல் நடக்க முடியவில்லை. இந்தப் பயணத்தில் ஒரு முறைகூட நொண்டிக் கொண்டு நடக்கக்கூடாது என்று அவன் முதலிலேயே தெளிவாகத் தீர்மானித்து வைத்திருந்தான். முதலில் சில எட்டுகள் எடுத்து வைத்தவுடனேயே, அவன் மிகவும் சிரமப்பட்டான். அவன் ஒரு மைல் தூரம் மூச்சைப் பிடித்துக்கொண்டு எப்படியோ நடந்து சமாளித்தான். அவனுடைய நெற்றியில் குளிர்ச்சியான வியர்வைத் துளிகள் அரும்பிவிட்டிருந்தன. ஆனால், அவன் அதைத் துடைத்துவிட்டு நடந்தான். மற்ற காயங்களுடன் ஒப்பிட்டுப் பார்க்கும்போது அவை எவ்வளவோ சாதாரணம்! அவன் எழுந்து நிற்பதற்கு மத்தியில் கீழே கண்களை ஓட்டினான். தொடையின் அடிப்பகுதியில் ஆழமான காயங்கள்! காலையில் முதலடியை எடுத்து வைத்ததிலிருந்தே அதைப் பற்றிய புரிதல் அவனுக்கு இருந்தது. இந்த நிமிடம் வரை அவனுக்கு நெஞ்சில் கடுமையான ஒரு வெப்பமும், தாங்கிக் கொள்ள முடியாத வேதனையும் இருந்து கொண்டிருந்தது. தான் சுவாசிக்கும்போது சிறிதுகூட காற்று நெஞ்சுக்குள் நுழைவதில்லை என்பதை அவன் உணர்ந்தான். எனினும், அவன் அதை அலட்சியப் படுத்திவிட்டு, சாதாரண மனநிலையுடன் தன் நடையைத் தொடர்ந்து கொண்டிருந்தான்.
காலையில் காப்பி வாங்கியபோது, கேப்டனின் கை நடுங்கியது. அவருடைய ஆர்டர்லி மீண்டும் அதை கவனித்தான். சற்று முன்னால் இருந்த பண்ணை வீட்டிற்கு அருகிலிருந்து குதிரையின் மீதேறி பயணிக்கும் இளம் நீலநிற சீருடையை அணிந்த கேப்டனும், அவருடைய தலையிலிருந்த கவசமும், வாளுறையும், குதிரையின் பட்டுபோல பளபளத்துக் கொண்டிருந்த உரோமங்களுக்கு மத்தியில் வழிந்து கொண்டிருந்த வியர்வை நதிகளும் சேர்ந்து மிக உயர்ந்த ஒரு காட்சியை அளித்துக்கொண்டிருந்தன.
திடீரென்று குதிரையின் மீதேறிப் பயணித்துக் கொண்டிருக்கும் அந்த உருவத்துடன் தான் உறவு கொண்டிருக்கிறோம் என்ற உணர்வு ஆர்டர்லிக்கு உண்டானது. ஒரு நிழலைப்போல மிகவும் அமைதியாகத் தொடர்ந்து வரும் தவிர்க்க முடியாத விதியை மனதில் சபித்துக்கொண்டே அவன் பின்தொடர்ந்தான். தனக்குப் பின்னால் வந்து கொண்டிருக்கும் கூட்டத்தைப் பற்றியும், அந்தக் கூட்டத்தில் நடந்து வந்து கொண்டிருக்கும் ஆர்டர்லியைப் பற்றியும் அதிகாரிக்கு நன்றாகவே தெரிந்திருந்தது.
தலையின் நடுப்பகுதியில் நரை விழுந்து கிட்டத்தட்ட நாற்பது வயது மதிக்கக் கூடிய- நல்ல உயரத்தைக் கொண்ட ஒரு மனிதராக அந்த கேப்டன் இருந்தார். திடமான உடலமைப்பைக் கொண்ட அவர் மேற்கு திசையில் மிகச் சிறந்த ஒரு குதிரைச் சவாரி செய்யக்கூடிய மனிதராகவும் இருந்தார். அவருடைய தோற்றமும் மிகவும் அழகாகவே இருந்தது. அவ்வப்போது குதிரையைத் தடவி விட வேண்டிய நிலையில் இருந்த ஆர்டர்லிக்கு அவருடைய வயிற்றுப் பகுதியில் மிகவும் அதிகமாகத் தெரிந்த சதையின் அளவையும் அழகையும் பார்த்து ஆச்சரியம் உண்டானது.
எஞ்சிய நேரத்தில் தன்னைப் பார்க்கும் நேரங்களில் மட்டுமே, ஆர்டர்லி அதிகாரியைப் பார்த்தான். அவன் மிகவும் அபூர்வமாகவே தன்னுடைய எஜமானின் முகத்தைப் பார்த்திருக்கிறான். அவன் அந்தப் பக்கம் பார்ப்பதேயில்லை. தவிட்டு நிறம் கலந்த செம்பட்டை நிறத்தில் இருந்த தலை முடியை அவர் ஒட்ட வெட்டிவிட்டிருந்தார். கொடூரத் தன்மை நிறைந்த வாய்ப்பகுதிக்கு மேலே இருந்த கிருதாவையும் அவர் ஒட்ட வெட்டி, அதை கவனம் செலுத்தி வைத்திருந்தார். மெலிந்து காணப்பட்ட கன்னங்களையும் அழகான முகத்தையும் கொண்டிருந்தார். முகத்தில் இருந்த ஆழமான சுருக்கங்கள், நெற்றியில் தெரிந்த பொறாமை கலந்த இறுக்கம் ஆகியவை அவருடைய வாழ்க்கைப் போராட்டங்களை வெளிப்படையாகக் காட்டின. இவற்றை நீக்கிவிட்டுப் பார்த்தால், அந்த முகம் அழகாக இருக்கிறது என்றே கூறலாம். அழகான புருவங்களுக்குக் கீழே இருந்த அவருடைய இளம் நீல நிறக் கண்கள் உணர்ச்சியற்ற தன்மை கொண்ட பார்வையை வெளிப்படுத்திக் கொண்டிருந்தன.
நல்ல பலசாலியாகவும், மிகுந்த பொறுமை குணம் கொண்ட ப்ரஷ்ய பிரபு வம்சத்தைச் சேர்ந்த ஒரு மனிதராகவும் கேப்டன் இருந்தார். ஆனால், அவருடைய தாயோ ஒரு போலெண்ட் பிரபு வம்சத்தைச் சேர்ந்தவள். சிறு வயதிலிருந்து சூதாட்ட விளையாட்டில் இருந்த அளவற்ற ஈடுபாடு காரணமாக, ராணுவத்தில் மிக உயர்ந்த பதவிகளில் அமர்வதற்கான வாய்ப்புகளை அவர் இழந்து விட்டிருந்தார். ஒரு காலாட்படையின் தலைவன் என்ற பதவியை மட்டும் அவர் தன்னிடம் வைத்துக்கொண்டு வாழ்க்கையை நடத்திக் கொண்டிருந்தார். அவருக்குத் திருமணமாகவில்லை. அவருடைய பதவி அத்தகையதாக இருந்தது. ஒரு பெண்கூட திருமண வாழ்க்கையை நோக்கி அவரைக் கவர்ந்து இழுக்கவில்லை.