ராணுவ அதிகாரி - Page 8
- Details
- Category: புதினம்
- Published Date
- Written by சுரா
- Hits: 6352
2
ஒரு தொண்டை வறண்டு போன நிலையுடன் அவன் தொடர்ந்து சிரமப்பட்டுக் கொண்டிருந்தான். வானத்தின் மேகங்களுக்கு நடுவில் ஒளிர்ந்து கொண்டிருந்த பனி மூடிய சிகரங்களும், அதற்கு மத்தியில் வெள்ளை, பச்சை நிறங்கள் கலந்து வளைந்து நெளிந்து ஓடிக்கொண்டிருந்த பிரகாசமான நதிகளும், அவை கீழ் நோக்கி அடிவாரத்திற்குள் குதிப்பதும் அவனுக்கு மிகவும் சாதாரண விஷயங்களாகத் தோன்றின.
ஆனால், தாகத்தாலும் ஜுரம் பாதித்து விட்டிருப்பதாலும், தனக்கு எங்கே பைத்தியம் பிடித்துவிடுமோ என்ற எண்ணம் அவனுக்கு உண்டானது. எந்தவொரு குற்றச்சாட்டும் கூறாமல் அவன் முன்னோக்கிச் சென்றான். யாரிடமும் எதுவும் பேச வேண்டும் என்று அவனுக்குத் தோன்றவில்லை. நதிக்கு மேலே நீரும் பனியும் பிரதிபலிப்பதைப்போல இரண்டு கடல் காகங்கள் இருந்தன. பசும்கேழ்வரகு சூரிய வெளிச்சத்துடன் கலக்கும்போது உண்டாகக்கூடிய ஒரு வகையான வாசனை காற்றில் பரவி விட்டிருந்தது. நிம்மதியற்ற உறக்கத்தைப்போல, அந்தப் பயணம் அந்த வகையில் தொடர்ந்து கொண்டிருந்தது.
மேடான சாலைக்கு அருகில் உயரம் குறைவாகவும் விசாலமாகவும் இருந்த பழைய சாமான்கள் வைக்கப்படும் கட்டடத்தில் பீப்பாய்களில் நீர் சேகரித்து வைக்கப்பட்டிருந்தது. ராணுவ வீரர்கள் நீர் பருகுவதற்காக அங்கு வந்து கூடினார்கள். அவர்கள் தலைக் கவசங்களை தங்களின் தலைகளிலிருந்து எடுத்தார்கள். அவர்களுடைய ஈரமான தலை முடிகளிலிருந்து ஆவி வந்து கொண்டிருந்தது. குதிரையின்மீது அமர்ந்திருந்த கேப்டன் இவற்றையெல்லாம் பார்த்துக் கொண்டிருந்தார். அவருடைய தலைக் கவசம் பிரகாசித்துக்கொண்டும் பயங்கரமாக இருந்த கண்களில் ஒரு இருண்ட நிழலை உண்டாக்கிக் கொண்டும் இருந்தாலும், அந்த கீழ்தாடியும் கிருதாவும் மீசையும் சூரிய வெளிச்சத்தில் பளிச்சிட்டுக் கொண்டிருந்தன. அவர் தன்னுடைய ஆர்டர்லியைப் பார்த்தார். குதிரையின்மீது அவர் அமர்ந்திருக்க, கீழே ஆர்டர்லி நடந்து செல்ல வேண்டும். அந்த விஷயம் அவனிடம் எந்தவொரு அச்சத்தையும் உண்டாக்கவில்லை. வெறுமையாக்கப்பட்ட ஒரு பீரங்கியைப்போல தான் ஆகிவிட்டதாக அவன் உணர்ந்தான். தான் எதுவுமே இல்லாத ஒரு பொருள் என்றும் சூரிய வெளிச்சத்திற்குக் கீழே ஓடிக் கொண்டிருக்கும் ஒரு நிழல் என்றும் அவன் தன்னைப் பற்றி நினைத்தான். கேப்டன் தனக்கு மிகவும் அருகிலேயே இருந்ததால், தாகம் இருந்தாலும், அவனால் நீர் அருந்த முடியவில்லை. ஈரமான தலை முடியைக் கோதி விடுவதற்காக அவன் தன்னுடைய தலைக் கவசத்தைக்கூட எடுக்கவில்லை. கேப்டனின் நிழலில் இருக்க வேண்டும் என்பதே அவனுடைய விருப்பமாக இருந்தது. சுயஉணர்வு நிலைக்கு திரும்பிச் செல்ல வேண்டும் என்ற எண்ணம் அவனுக்கு சிறிதும் உண்டாகவில்லை. அப்போது அதிகாரி குதிரையின் வயிற்றுப் பகுதியில் மிதிப்பதை அவன் பார்த்தான். கேப்டன் குதிரையில் பயணித்துப் போய்க் கொண்டிருந்தார். இனி வெறுமைக்குள் தன்னுடைய விருப்பப்படி அவன் நுழைந்து கொள்ள வேண்டியதுதான்.
அந்த தகித்துக் கொண்டிருந்த பிரகாசமான அதிகாலை வேளையில் உற்சாகமான ஒரு சூழ்நிலையை தனக்கு அளிப்பதற்கு எதனாலும் முடியாது என்பதாக அவன் உணர்ந்தான். அவற்றுக்கு மத்தியில் ஒரு பிளவு- ஒரு வெற்றிடம்- அதை அவனால் பார்க்க முடிந்தது. அதே நேரத்தில் மதிக்கக்கூடிய நிலையிலும், அனைத்து அதிகாரங்கள் கொண்டவராகவும் கேப்டன் இருந்தார். ஆர்டர்லியின் உடம்பு முழுவதும் ஒரு உற்சாகமான மின்னல் பரவியது. கேப்டன் தன்னுடைய வாழ்க்கையில் பலம் படைத்தவராகவும் மதிக்கக் கூடியவராகவும் இருந்த நிலையில், தான் வெறும் ஒரு நிழலைப் போன்று வெறுமையாக... மீண்டும் ஒரு மின்னல் உடலெங்கும் பரவி அவனுடைய கண்களைக் கூசச் செய்தது. எனினும், அவனுடைய இதயத் துடிப்பிற்கு அதிக பலம் கிடைத்ததைப்போல இருந்தது.
திரும்பி வரும் பயணத்தை இலக்காகக் கொண்டு அந்த ராணுவப் பிரிவு மலையின் வளைவில் திரும்பியது. கீழே மரக் கூட்டங்களுக்கு மத்தியில் பழைய பொருட்கள் வைக்கப்படும் அறையிலிருந்து மணியடிக்கும் சத்தம் கேட்டது. இடைவெளி இல்லாமல் வளர்ந்திருந்த புற்பரப்பில், வெற்றுப் பாதங்களுடன் நடந்து போய்க் கொண்டிருந்த விவசாய வேலை செய்பவர்கள் தங்களின் தோள்களில் அரிவாள்களைத் தொங்கவிட்டவாறு வேலையை நிறுத்திவிட்டு திரும்பி வந்து கொண்டிருப்பதை அவன் பார்த்தான். தன்னுடன் அவர்களுக்கு எந்தவொரு உறவும் இல்லாததைப்போல அவன் உணர்ந்தான். அவர்கள் ஏதோ கனவில் நடந்துகொண்டிருப்பவர்கள் என்பதாக அவனுக்குத் தோன்றியது. தான் ஏதோ ஒரு கறுத்த கனவில் சிக்கிக் கொண்டுவிட்டதைப்போலவும் அவன் உணர்ந்தான். அது ஒரு குறிப்பிடத்தக்க தோணலாக இருந்தது. அதாவது- எல்லாருக்கும் ஒவ்வொரு வடிவம் உண்டு. ஆனால், தான் மட்டும் ஒரு உணர்வு, சிந்திப்பதற்கும் ஏற்றுக்கொள்வதற்கும் இயலக்கூடிய ஒரு இடைவெளி.
ராணுவ வீரர்கள் பிரகாசித்துக் கொண்டிருந்த மலைத் தொடர்களை நோக்கி அமைதியாக முன்னோக்கி நகர்ந்து கொண்டிருந்தார்கள். நேரம் செல்லச் செல்ல, அவனுடைய தலை மெதுவாக தாள லயத்துடன் சுற்ற ஆரம்பித்தது. சில நேரங்களில் அவனுடைய கண்களுக்கு முன்னால் ஒரே இருட்டாக இருந்தது- வெளிறிப் போன, இனம்புரியாத நிழல்கள்! ஒரு புகைக்கண்ணாடியின் வழியாக பார்ப்பதைப் போலதான் இந்த உலகத்தைப் பார்த்துக் கொண்டிருப்பதாக அவன் உணர்ந்தான். தன்னுடைய தலைக்குள் ஒரு வேதனையை அவன் அனுபவித்தான்.
சுற்றுப்புறம் நறுமணம் நிறைந்ததாக இருந்தது. ஒரு இலைகூட அசையவில்லை. அழகான பச்சை இலைகள் அவற்றின் பலவீனங்களைப் பரவவிட, இறுதியில் காற்று பச்சை நிறத்தால் நிறைந்து கொண்டிருந்தது. சுத்தமான தேன், தேனீக்கள் ஆகியவற்றின் வாசனையைப்போல, புல்லின் வாசனையும் அங்கு எல்லா இடங்களிலும் பரவி விட்டிருந்தது. தொடர்ந்து மெல்லிய- ஆனால், பலமான ஒரு வாசனை காற்றில் கலந்திருந்தது. அவர்கள் பீச் மரக் கூட்டங்களுக்கு அருகில் வந்து சேர்ந்திருந்தார்கள். பிறகு வினோதமான ஒரு கடகடா சத்தமும், அதைத் தொடர்ந்து மனதை வெறுக்கச் செய்யும் மூச்சை அடைக்கக் கூடிய ஒரு மணம்... அவர்கள் ஒரு கூட்டம் செம்மறி ஆடுகளைக் கடந்து சென்று கொண்டிருந்தார்கள். கறுத்த கால்சட்டை அணிந்த ஒரு சிறுவன் ஒரு மரக் கொம்பைக் கையில் வைத்துக்கொண்டு நின்றிருந்தான். வெயிலின் இந்தத் தகிப்பில் செம்மறியாடுகள் எதற்காகக் கூட்டமாக நின்று கொண்டிருக்க வேண்டும்? ஆர்டர்லி அந்தச் சிறுவனைப் பார்த்தாலும், அவன் ஆர்டர்லியைப் பார்க்கவில்லை.
இறுதியில் எல்லாரும் நின்றுவிட்டார்கள். முக்கோணமாக இருந்த ஒரு அறையில் அவர்கள் ரைஃபில்களை அடுக்கி வைத்தார்கள். தங்களைச் சுற்றி வட்டமாக தோலாலான பைகளைப் பரவலாக இருக்கும்படி வைத்தார்கள். பிறகு சிறிது நேரத்திற்கு கூட்டம் பிரிந்தது. அவர்கள் மலையின் சரிவில் உயரமாக இருந்த ஒரு புல் மேட்டில் போய் உட்கார்ந்தார்கள்.
மீண்டும் கடகடா சத்தம்!
ராணுவ வீரர்கள் சுற்றிலும் உட்கார்ந்து கொண்டு பல விஷயங்களைப் பற்றியும் காரசாரமாகப் பேசிக் கொண்டிருந்தார்கள். எனினும், அவர்கள் நல்ல மன நிலையுடன் இருந்தார்கள். இருபது கிலோமீட்டர்களுக்கு அப்பால் நீல நிற மலைகள் தலையை உயர்த்திக் கொண்டு நிற்பதைப் பார்த்து அவர்கள் எந்தவித சலனமும் இல்லாமல் இருந்தார்கள். மலைத் தொடர்களுக்கு மத்தியில் ஒரு நீல நிற மடிப்பு தெரிந்தது.