ராணுவ அதிகாரி - Page 11
- Details
- Category: புதினம்
- Published Date
- Written by சுரா
- Hits: 6352
கீழ்த் தாடையில் இவ்வாறு தாக்குவது, தன்னுடைய பலம் கொண்ட இளமையான கால்களால் தாக்க அவருடைய நெஞ்சு அடங்கிப் போனது, தலை கீழாகக் கிடக்கும் அந்த உடலின் விளையாட்டுகளை தன்னுடைய கைகளைக் கொண்டு தெரிந்துகொள்வது- இவை அனைத்தும் அவனை ஆனந்தம் கொள்ளச் செய்தன.
ஆனால், அது அதே மாதிரி தொடர்ந்தது. அதிகாரியின் நாசியை அவனால் பார்க்க முடிந்தாலும், கண்களை தன்னுடைய விழிகளால் பார்க்க அவனால் முடியவில்லை. முழு உதடுகளையும் வெளியே தள்ளிக்கொண்டு எந்த அளவுக்கு வினோதமாக இருந்தது அந்த வாய்! அதேபோலதான் அதற்கு மேலே விலகி நின்று கொண்டிருந்த மீசையும்! திடீரென்று ஒரு அதிர்ச்சியுடன் அவன் பார்த்தபோது, நாசித் துவாரங்கள் படிப்படியாக ரத்த அபிஷேகத்துடன் இருப்பதை அவன் பார்த்தான். அந்த ரத்த ஆறு சற்று தயங்கி நின்று விட்டு முகத்திலும் கண்களிலும் பாய்ந்தோடிக் கொண்டிருந்தது.
அது அவனை அதிர்ச்சிக்குள்ளாக்கவும் திகைக்க வைக்கவும் செய்தது. அவன் மெதுவாக எழுந்தான். நீண்டு நிமிர்ந்து நெளிந்த அந்த உடல் அசைவே இல்லாமல் ஆனது. அவன் எழுந்து நின்று மிகவும் அமைதியாக அதையே பார்த்தான். தன்னைத் தட்டவும் உதைக்கவும் செய்ததைவிட, இப்போது அது மிகவும் மோசமான நிலையில் இருக்கிறது. அந்த கண்களைப் பார்ப்பதற்கு அவனுக்கே பயமாக இருந்தது. அவை மிகவும் பயங்கரமாக இருந்தன. கண்ணின் வெளுத்த பகுதி மட்டுமே வெளியே தெரிந்தது. அதில் ரத்தம் வழிந்து கொண்டிருந்தது. இந்த காட்சியைப் பார்த்த ஆர்டர்லியின் முகம் பயத்தில் என்னவோபோல ஆனது. சரி... அது அப்படி ஆகிவிட்டது! இதயத்திற்குள் அவனுக்கு முழுமையான சந்தோஷம் உண்டானது. அவன் அந்த அளவுக்கு கேப்டனின் முகத்தின்மீது வெறுப்பு கொண்டிருந்தான். இப்போது அது முடிவுக்கு வந்திருக்கிறது. ஆர்டர்லிக்கு உள் மனதில் மிகப் பெரிய நிம்மதி உண்டானது. அது அப்படி முடிய வேண்டிய ஒன்றுதான். ஆனால், இந்த நீளமான ராணுவ அதிகாரியின் உடல் மரத்தடியின்மீது விழுந்து கிடப்பதையும் நன்கு இருந்த விரல்கள் சுருண்டு கிடப்பதையும் அவனால் சகித்துக் கொள்ள முடியவில்லை. அந்த உடலை எங்காவது மறைத்து வைக்க வேண்டும் என்று அவன் விரும்பினான்.
திடீரென்று அவன் தட்டுத் தடுமாறி எழுந்து அந்த உடலை அழகான பலகையின் பளபளப்பான பகுதியைப் பார்த்து படுக்கை வசத்தில் கிடத்தினான். ரத்தம் நிறைந்த முகம் பார்ப்பதற்கு பயத்தை வரவழைத்தது. அவன் அதை தலைக்கவசத்தைக் கொண்டு மறைத்தான். தொடர்ந்து அவன் ஒவ்வொரு உறுப்புகளையும் சரியாக இருக்கும்படி செய்தான். பிறகு சீருடையிலிருந்து ஒட்டிக் கொண்டிருந்த இலைகளை எடுத்தான். அந்த வகையில் அது நிழலுக்குக் கீழே எந்தவித அசைவும் இல்லாமல் கிடந்தது. மரப்பலகைக்கு நடுவில் இருந்த ஒரு சிறிய துவாரத்தின் வழியாக சூரிய ஒளியின் ஒரு கீற்று அந்த மார்பின்மீது வந்து விழுந்து கொண்டிருந்தது. ஆர்டர்லி சில நிமிடங்களுக்கு அதே இடத்தில் உட்கார்ந்திருந்தான். தன்னுடைய வாழ்வும் முடிவுக்கு வந்துவிட்டது என்பதை அவன் தெரிந்துகொண்டான்.
தொடர்ந்து அந்த நேரத்தில் லெஃப்டினன்ட் மிகப்பெரிய சத்தத்தில், காட்டுக்கு வெளியில் இருந்த தன்னுடைய ஆட்களிடம் நதிக்கு கீழே இருக்கும் பாலத்தை எதிரிகள் ஆக்கிரமித்து விட்டார்கள் என்பதைப் புரிந்துகொள்ள வேண்டுமென்றும், இந்த விதத்தில் அவர்கள் ஒரு ஆக்கிரமிப்பிற்குத் தயாராக வேண்டும் என்றும் விளக்கிக் கூறுவது காதில் விழுந்தது. விஷயங்களைச் சரியானபடி செயல்படுத்துவதில் அவர் அந்த அளவுக்கு திறமைசாலியாக இல்லை. இதை எப்போதும் கேட்டுக்கேட்டு பழகிப் போன ஆர்டர்லிக்கு தாங்கிக்கொள்ள முடியாத அளவுக்கு வெறுப்பு தோன்றியது. எல்லா விஷயங்களையும் லெஃப்டினன்ட் முதலிலிருந்து திரும்பவும் கூறத் தொடங்கியபோது, அவன் தன்னுடைய காதுகளை முழுமையாக மூடிக்கொண்டான்.
தான் உடனடியாக அந்த இடத்தைவிட்டுக் கிளம்பியே ஆக வேண்டும் என்ற விஷயம் அவனுக்கு நன்கு தெரியும். அவன் எழுந்து நின்றான். சூரிய வெளிச்சத்தில் இலைகள் பிரகாசித்துக் கொண்டிருந்தது அவனை ஆச்சரியத்திற்குள்ளாக்கியது. தரையில் கிடந்த மரப்பட்டைகள் வெள்ளை நிறத்தில் ஜொலித்தன. அவனைப் பொறுத்த வரையில் உலகத்திற்கு ஒரு மாறுதல் உண்டாகி இருக்கிறது. ஆனால், எஞ்சி இருப்பவைக்கு அது எதுவும் உண்டாகவில்லை. எல்லாம் அதே மாதிரிதான் இருந்தன.
அவன் மட்டும் அதை ஏற்றுக் கொள்ளவில்லை; அவ்வளவுதான். அவனைப் பொறுத்த வரையில் திரும்பிப் போக முடியாது. பீர் பாத்திரத்தையும் புட்டியையும் திரும்ப எடுத்துக்கொண்டு செல்வது என்பது அவனுடைய பொறுப்பாக இருந்தது. அவன் அதைச் செய்ய முடியாது. அப்போதும் லெஃப்டினன்ட் கம்பீரமான குரலில் விளக்கிக் கூறிக் கொண்டிருந்தார். அவன் போயே ஆக வேண்டும்! இல்லாவிட்டால் அவர்கள் அவனை ஒரு வழி பண்ணி விடுவார்கள். இப்போது யாருடனும் பழகுவது என்பது அவனைப் பொறுத்த வரையில் ஏற்றுக் கொள்ளக் கூடிய ஒன்றல்ல.
அவன் விரல்களை கண்களுக்கு மேலே ஓடவிட்டு தான் எங்கு இருக்கிறோம் என்பதை அறிவதற்கு முயற்சித்தான். வழியில் குதிரை நின்று கொண்டிருப்பதை அவன் பார்த்தான். அவன் அதை நெருங்கி, அதன்மீது ஏறினான். குதிரையின்மீது ஏறி உட்காருவதற்கு அவன் மிகவும் சிரமப்பட்டான். மரக் கூட்டங்களுக்கு மத்தியில் பாய்ந்து சென்றபோது, அவனுக்கு வேதனை தாங்கிக்கொள்ள முடியாத அளவுக்கு இருப்பது தெரிந்தது. அவன் எதையும் கவனிக்கவில்லை. ஆனால், மற்றவர்களிடமிருந்து தனியாகப் பிரிந்து சென்று விடுவோம் என்ற சிந்தனைதான் அவனுக்கு கவலையை அளிக்கக் கூடிய ஒரு விஷயமாக இருந்தது. அந்தப் பாதையின் வழியாக வெளியிலிருக்கும் பகுதிக்குப் போய்விடலாம். காட்டின் எல்லையில் அவன் குதிரையை நிறுத்திவிட்டு, சுற்றி இருந்த இடங்களைப் பார்வையிட்டுக் கொண்டிருந்தான். அந்த விசாலமான அடி வாரத்தில் சூரிய வெளிச்சம் நன்கு விழுந்து கொண்டிருந்த இடத்தில் ராணுவ வீரர்கள் சிறிய ஒரு அணிவகுப்பை நடத்திக் கொண்டிருந்தார்கள். அவ்வப்போது ஒரு மனிதன் சிறுசிறு உயிரினங்களை காளைகளின் உடல்களிலிருந்து அடித்து விரட்டிக் கொண்டிருந்தான். சூரிய ஒளியில் கிராமமும் வெள்ளை நிற கோபுரத்தைக் கொண்ட தேவாலயமும் சிறிதாகத் தெரிந்தன. இதற்கு மேல் அவன் அந்த கிராமத்தின் யாருமல்ல. ஒரு வெளி மனிதனைப் போல அவன் எல்லைக்கு அப்பால் இருட்டில் உட்கார்ந்திருந்தான். அன்றாட வாழ்க்கையை விட்டு அவன் தெரியாத ஒரு இடத்திற்குப் போய்விட்டான். இனி அவன் திரும்பிச் செல்ல வேண்டும் என்ற நிலை அவனுக்கு இல்லை.
சூரிய வெளிச்சம் விழுந்து கொண்டிருந்த அடிவாரத்திலிருந்து திரும்பிய அவன் காட்டுக்குள் குதிரையைச் செலுத்தினான்.