ராணுவ அதிகாரி - Page 13
- Details
- Category: புதினம்
- Published Date
- Written by சுரா
- Hits: 6352
ஒருவேளை, தனக்கு சூரியனால் பாதிப்பு உண்டாகிவிட்டிருக்குமோ என்று அவன் நினைத்தான். இல்லாவிட்டால் பிறகு எதற்கு கேப்டனை தான் நிரந்தரமாக நிசப்தத்தில் கொண்டு போய் மூழ்கடிக்க வேண்டும்? அது சில நாட்களுக்கு முன்பு நடைபெற்றது- இல்லை- சிறிது நேரத்திற்கு முன்பு நடந்தது அது. அவனுடைய முகத்தில் ரத்தம் நிறைந்து நின்றது. அந்தக் கண்கள் மேலே திரும்பின. எப்படியோ அவை அனைத்தும் சரியாகி விட்டிருக்கின்றன! அதுதான் அவனுடைய பதிலாக இருந்தது. ஆனால், இப்போது அவன் அதையெல்லாம் தாண்டி விட்டிருக்கிறான். இங்கு அவன் இதற்கு முன்பு இருந்ததில்லை. அது வாழ்வாக இருந்ததா? இல்லாவிட்டால், இல்லையா? அவன் தனியாக இருந்தான். மற்றவர்கள் எல்லாரும் பிரகாசமான விசாலமான ஒரு பகுதியில் இருந்தார்கள். அவன் மட்டும் வெளியே! நகரம், கிராமம் அனைத்தும் நல்ல பிரகாசத்துடன் இருந்தன! இங்கோ, எல்லாவற்றுக்கும், ஒவ்வொன்றுக்கும், ஒவ்வொரு இருத்தல் தன்மை இருக்கிறது. ஆனால், ஏதாவதொரு நாள் அந்த மற்றவர்கள் அங்கிருந்து வெளியேற வேண்டிய சூழ்நிலை உண்டாகும். அவர்கள் அவனைத்தாண்டிச் சென்றுவிட்டார்கள். முன்பு தந்தையும் தாயும் காதலியும் இருந்தார்கள். அதனால் என்ன? இது ஒரு திறந்த பூமி.
அவன் எழுந்தான். ஏதோ ஒரு ஆரவாரம். அது ஒரு அழகான சாம்பல் நிறத்தைக் கொண்ட அணில். சிவப்பு நிற வாலைச் சுழற்றிக் கொண்டு அது ஓடிக்கொண்டிருந்தது.
அது ஓடிக்கொண்டும், உட்கார்ந்து கொண்டு வாலைச் சுழற்றிக் கொண்டு வெறித்துப் பார்த்துக் கொண்டும் இருந்தது. தனக்குள் சந்தோஷமடைந்து கொண்டு திரும்பவும் வெளியேறிச் சென்றது. மிகவும் வேகமாக அது இன்னொரு அணிலின் உடலின்மீது பாய்ந்து ஏறியது. அவை ஒன்றோடொன்று கட்டிப்பிடித்துக் கொண்டு ஓடிக்கொண்டே பெரிய அளவில் ஆசையை உண்டாக்கிக் கொண்டிருந்தன. ராணுவ வீரனுக்கு அவற்றுடன் பேச வேண்டும்போல இருந்தது. ஆனால், அவனுடைய தொண்டைக்குள்ளிருந்து முரட்டுத்தனமான ஒரு குரல் மட்டுமே வெளியே வந்து கொண்டிருந்தது. அணில்கள் ஓடிப்போய்விட்டன. அவை மரங்களின் மீது தாவி ஏறின. அவற்றில் ஒன்று பாதி தூரம் ஏறிய பிறகு, தன்னை ஒளிந்து கொண்டு பார்ப்பதை அவன் பார்த்தான். பயத்தின் அடையாளங்கள் தனக்குள் பரவி விட்டிருந்தாலும், தன்னுடைய சுய உணர்வுநிலை நிலைபெற்று இருக்கும் வரையில், அது அவனுக்குள் சந்தோஷத்தை உண்டாக்கிக் கொண்டு தான் இருந்தது. மரத்தில் பாதி தூரத்தில் இருந்துகொண்டு அது அப்போதும் அவனையே தன்னுடைய கூர்மையான முகத்தைக் கொண்டு வெறித்துப் பார்த்துக் கொண்டிருந்தது. நகங்கள் இருந்த கைகளை மரத்தின் தோலில் இறுகப் பற்றிக் கொண்டும், வெள்ளை நிற மார்புப் பகுதியை அதோடு சேர்த்து வைத்துக் கொண்டும் அது இருந்தது. பதைபதைப்பு அடைந்து அவன் அங்கிருந்து புறப்பட ஆரம்பித்தான்.
விலகிப் போய்க் கொண்டிருந்த கால்களை ஒழுங்கு பண்ணிக் கொண்டு அவன் மிகவும் வேகமாக நடந்து கொண்டிருந்தான். எதையோ (சிறிது நீருக்காக) தேடிக்கொண்டு அவன் நடந்து கொண்டிருந்தான். நீர் இல்லாததால் தன்னுடைய மூளை உஷ்ணமாகிவிட்டதைப்போல அவனுக்குத் தோன்றியது. அவன் முன்னோக்கி நடந்தான். பிறகு எதுவுமே அவனுக்குத் தெரியவில்லை. நடப்பதற்கு இடையிலேயே அவன் சுய உணர்வை இழந்து விட்டான். எனினும், வாயைத் திறந்து வைத்துக் கொண்டு மேலும் கீழும் மூச்சு விட்டுக் கொண்டே அவன் முன்னோக்கி நடந்து செல்ல முயற்சித்தான்.
மங்கலான ஆச்சரியத்துடன் அவன் கண்களைத் திறந்து உலகத்தை மீண்டும் பார்த்தான். அவையெல்லாம் என்ன என்பதைப் பற்றி அவன் சிறிதுகூட ஞாபகப்படுத்திப் பார்க்க முயற்சிக்கவில்லை. அங்கேயே சுற்றிலும் அடர்த்தியாக இருந்த பொன்னொளியையும் உயரமாக சாம்பல் நிறத்திலும் மஞ்சள் நிறம் கலந்ததாகவும் இருந்த மரங்களையும் பார்த்தான். தூரத்தில் இருள் கொஞ்சம் கொஞ்சமாக ஆக்கிரமித்து வந்து கொண்டிருந்தது. தான் எங்கேயோ வந்து சேர்ந்திருக்கிறோம் என்ற ஒரு சுய உணர்வு அவனுக்குள் உண்டானது. அவன் யதார்த்தத்திற்கு மத்தியில், சொல்லப்போனால்- "தமஸ்" நிலையின் அடித்தட்டில் இருந்தான். அதே நேரத்தில், அவனுடைய மூளைக்குள் அந்த உள் தாகம் இருந்து கொண்டு ஜொலித்துக் கொண்டிருந்தது. மனதில் ஒரு மென்மைத்தனம் உண்டானது. ஏதோ ஒரு புதுமையை தான் அனுபவித்ததுதான் அதற்குக் காரணமாக இருக்குமென்று அவன் நினைத்தான். வெளியே இடி முழக்கம் உரத்துக் கேட்டது. தான் சராசரி வேகத்தில் நடக்கிறோம் என்பதாகவும் வெகுசீக்கிரமே நல்லது நடக்கும் என்றும் அவன் நினைத்தான். ஒருவேளை- மூளையின் வெப்பத்தைக் குறைப்பதற்கு நீர் கிடைக்கலாம்.
திடீரென்று அவன் பயம் காரணமாக அசைவே இல்லாமல் ஆனான். தனக்குக் கிடைக்கப் போகிற நிம்மதிக்கும் தனக்கும் நடுவில் பொன் நிறத்தைக் கொண்ட மின்னல் கீற்று (சில கறுத்த மரத்தடிகள் மட்டும்) தோன்றுவதை அவன் பார்த்தான். பொன் நிறத்தைக் கொண்ட பச்சை சில்க் பகுதிகளை விரித்துக் கொண்டு பாதி பருவத்தில் இருந்த கோதுமைக் கதிர்கள் பிரகாசித்தவாறு நின்று கொண்டிருந்தன. தலையை மூடியிருக்கும் ஆடைக்கு பதிலாக கறுப்பு நிறத்தைக் கொண்ட ஒரு ஆடையை தலை வழியாக மூடிக்கொண்டு, பெரிய பாவாடையை அணிந்த ஒரு பெண் நிழலைப்போல ஒளிர்ந்து கொண்டிருக்கும் பச்சை நிற தானியக் கதிர்களுக்கு நடுவில் நடந்து வந்து கொண்டிருந்தாள். முழுமையான ஒளிக்குள் நுழைவதைப் போல ஒரு கட்டில் அங்கு இருந்தது. அதன் ஒரு பக்கம் நன்கு வெளிறிப் போய் நீல நிறத்திலும், இன்னொரு பக்கம் கறுப்பு நிறத்திலும் இருந்தது. மிகவும் அருகில் பொன்னொளியில் குளித்து நின்று கொண்டிருக்கும் தேவாலயம் இருந்தது. அந்தப் பெண் அவனிடமிருந்து விலகி நின்று கொண்டிருந்தாள். அவளுடன் உரையாடக் கூடிய எந்தவொரு மொழியும் அவனுக்குத் தெரியாமல் இருந்தது. வெளியே நன்கு தெரியக் கூடிய ஒரு உண்மையாக அது இருந்தது. அவனுக்குத் தெரியாமல் அவள் அவனைப் பார்ப்பாள். தொடர்ந்து அவள் உண்டாக்கும் புரிந்து கொள்ள முடியாத குரல்கள் அவனை என்னவோ செய்யும். அவள் மறு பகுதிக்கு குறுக்கே நடந்து செல்ல பார்த்தாள். அவன் ஒரு மரத்திற்கு எதிரே நின்றிருந்தான்.
தொடர்ந்து இறுதியாக கீழே நீண்டு கிடந்த பழ மரங்களின் தோட்டத்தை நோக்கி கண்களை ஓட்டியபோது, அதன் பரந்த வெளியில் இருள் பரவுவதையும், தூரத்தில் இருந்த அற்புதமான வெளிச்சத்தில்- அந்த அளவுக்கு தூரத்தில் இல்லாத ஒளிர்ந்து கொண்டிருக்கும் மலைவரிசைகளையும் அவன் பார்த்தான்.