
கேப்டன் இந்த விஷயத்தை தன்னுடைய மனக்கண்களால் பார்த்தார். அவர் பொறாமை காரணமாக பைத்தியம் பிடித்த மனிதரைப்போல ஆனார். எல்லா மாலை நேரங்களிலும் ஒரு நிமிடம்கூட அவனை ஓய்வு எடுப்பதற்கு அவர் அனுமதிப்பதில்லை. அந்த மாதிரியான நேரங்களில் அவனுடைய முகத்தில் கருமை படர்ந்து இருண்டுபோன தன்மை வெளியே தெரிவதைப் பார்த்து அவர் சந்தோஷப்படுவார். சில வேளைகளில் இருவருடைய கண்களும் ஒன்றோடொன்று சந்திப்பதும் உண்டு. இளைஞனின் கண்கள் ஒளி இழந்து, இருண்டு, உயிரற்றவையாகக் காணப்படும். வயதில் மூத்த மனிதரின் கண்கள் அமைதியற்ற தன்மை நிறைந்து அலட்சியத்தன்மை கொண்டவையாக இருக்கும்.
தன்னை முழுமையாக ஆக்கிரமித்து விட்டிருக்கும் கடுமையான கோபத்தை வெளிக்காட்டிக் கொள்ளாமல் இருப்பதற்கு உயர் அதிகாரி மிகவும் படாதபாடுபட்டார். தனக்கு அந்த ஆர்டர்லிமீது இருக்கும் உணர்வு, ஊர் சுற்றியும் முட்டாளுமான ஒரு வேலைக்காரன் காரணமாக இருக்கக் கூடியது என்பதுகூட அவருக்குத் தெரியாமலிருந்தது. அதனால், தன்னுடைய உள்மனதில் மேலோட்டமான நியாயங்களைக் கற்பித்துக் கொண்டு, எஞ்சிய விஷயங்களுடன் அவர் சர்வசாதாரணமாக முன்னோக்கிப் போய்க் கொண்டிருந்தார். எனினும், இந்த விஷயங்கள் அவருடைய உடலுறுப்புகளை மிகவும் பாதித்தன. இறுதியில் அவர் ஒரு பெல்ட்டால் அந்த வேலைக்காரனின் முகத்தில் அடித்தார். வேதனையால் உண்டான கண்ணீருடன் அவன் நடுங்கிக் கொண்டே பின்னோக்கி நகர்ந்து நிற்பதையும் வாயில் குருதி நிறைந்து காணப்படுவதையும் பார்த்த அவருக்கு மிகுந்த சந்தோஷமும் கூச்சமும் கலந்த உற்சாகம் உண்டானது.
ஆனால், தான் எந்தவொரு நேரத்திலும் செய்திருக்கக் கூடாத ஒரு விஷயம் அது என்பதை அவர் தனக்குள் ஒப்புக்கொண்டார். அவனுடைய மனதிற்குள்ளும் கோபம் உண்டாகியிருக்கும். அவனுடைய உடலுறுப்புகள் தனித்தனியாக வேதனைப்பட்டுக் கொண்டிருக்கும். அவர் ஒரு பெண்ணுடன் சில நாட்கள் செலவழிப்பதற்காக அங்கிருந்து கிளம்பினார்.
அது மகிழ்ச்சியை அளிக்கக்கூடிய ஒரு விஷயமாக இருந்தது. உண்மையாகக் கூறப்போனால்- அவருக்கு அந்தப் பெண்ணே தேவையில்லை. எனினும், அவர் சில நாட்களை அவளுடன் செலவிட்டார். இறுதியில் பொறாமை கலந்த மனக்குழப்பம், வேதனை, துயரம் ஆகிய உணர்ச்சிகளுடன் அவர் திரும்பி வந்தார். சாயங்காலம் முழுவதும் ஓடித் திரிந்துவிட்டு அவர் நேராக இரவு உணவு சாப்பிடுவதற்காகத் திரும்பி வந்தார். அவருடைய ஆர்டர்லி வெளியே எங்கோ போய் விட்டிருந்தான். தன்னுடைய நீளமான அழகான கைகளை மேஜையின்மீது அசைவே இல்லாமல் வைத்திருந்த அவர் எந்தவித சலனமும் இல்லாமல் உட்கார்ந்திருந்தார். தன்னுடைய முழு ரத்தமும் உறைந்துவிட்டதைப்போல அவருக்குத் தோன்றியது.
இறுதியில் அவருடைய வேலைக்காரன் அங்கு வந்து சேர்ந்தான்.
அவனுடைய சாதாரண, அழகான உடலுறுப்புகள், அழகான புருவங்கள், கறுத்த அடர்த்தியான தலைமுடி- இவை ஒவ்வொன்றையும் அவர் கூர்ந்து பார்த்தார். ஒரு வார காலத்தில் இளைஞனுக்கு பழைய பிரகாசம் திரும்பவும் கிடைத்து விட்டிருந்தது. அதிகாரியின் கைகள் துடித்தன. இளைஞன் மிகவும் அமைதியாக, எந்தவித அசைவும் இல்லாமல் நின்றிருந்தான்.
மிகவும் அமைதியாக அவர் உணவைச் சாப்பிட்டு முடித்தார். ஆனால், ஆர்டர்லியின் பொறுமை எல்லை கடந்தது. பாத்திரங்களை ஒன்றோடொன்று மோதச் செய்து, அவர் ஒரு சத்தத்தை உண்டாக்கினார்.
"உனக்கு அவசரமான வேலை இருக்கிறதா?'' வேலைக்காரனின் உற்சாகம் நிறைந்த முகத்தை உற்றுப் பார்த்துவிட்டு அதிகாரி கேட்டார். அவன் பதில் கூறவில்லை.
"நீ என்னுடைய கேள்விக்கு பதில் கூற வேண்டும் என்று நினைக்கிறாயா?'' கேப்டன் கேட்டார்.
"ஆமாம், சார்...'' காலியான ராணுவ ப்ளேட்டுகளைக் கையில் பிடித்துக் கொண்டே எழுந்து நின்ற ஆர்டர்லி சொன்னான். கேப்டன் அவனுடைய பதிலை எதிர்பார்த்துக் காத்து நின்றிருந்தார். அவனைப் பார்த்து கேப்டன் மீண்டும் கேட்டார்.
"உனக்கு அவசர வேலை இருக்கிறதா?''
"ஆமாம், சார்...'' இதுதான் பதிலாக இருந்தது. அவனுடைய மனதிற்குள் ஒரு மின்னல் கீற்று பாய்ந்தோடிக் கொண்டிருந்தது.
"என்ன விஷயம்!''
"நான் வெளியே போகிறேன், சார்.''
"ஆனால், இன்று சாயங்காலம் எனக்கு நீ வேணும்.''
ஒரு நிமிட பேரமைதி. அதிகாரியின் முகம் பரபரப்பு நிறைந்த சலனமற்ற தன்மையுடன் இருந்தது.
"சரி, சார்...'' தொண்டையைச் சரி பண்ணிவிட்டு வேலைக்காரன் சொன்னான்.
"நாளைக்கு சாயங்காலமும் எனக்கு நீ வேணும். உண்மையாகக் கூறுவதாக இருந்தால்- போவதற்கு நான் அனுமதி தராதபட்சம், எல்லா மாலை நேரங்களிலும் உனக்கு வேலை இருக்கிறது என்பதை நினைவில் வைத்துக் கொள்.''
சிறு மீசையும் தாடியும் இருந்த முகத்தின் பகுதி அசைவே இல்லாமல் இருந்தது.
"சரி சார்.'' ஒரு நிமிடம் உதடுகளை அசைத்து ஆர்டர்லி பதில் சொன்னான்.
அவன் மீண்டும் வாசல் கதவை நோக்கித் திரும்பினான்.
"நீ ஏன் காதுக்கு மத்தியில் ஒரு பென்சிலைச் சொருகி வைத்திருக்கிறாய்?''
ஆர்டர்லி சற்று தயங்கினான். பிறகு வழக்கம்போல பதில் கூறாமல் அங்கிருந்து நகர்ந்தான். அவன் கதவுக்கு வெளியே பாத்திரங்களை ஒரு குவியல்போல வைத்தான். காதுக்கு நடுவில் வைத்திருந்த பென்சிலை எடுத்து தன்னுடைய பாக்கெட்டிற்குள் வைத்தான். தன்னுடைய காதலியின் பிறந்தநாள் அட்டையில் அவன் ஒரு கவிதையை எழுதியிருந்தான். அதிகாரியின் கண்கள் நாட்டியமாடுவதைப்போல வெளியே துருத்திக் கொண்டு வந்தன. அவரிடம் சற்று பரபரப்பு நிறைந்த புன்னகை தவழ்ந்தது.
"நீ எதற்கு காதுக்கு நடுவில் பென்சிலை வைத்திருக்கிறாய்?'' அவர் கேட்டார்.
ஆர்டர்லி சாப்பாட்டுப் பாத்திரங்களை அடுக்கிப் பிடித்திருந்த கைகளுடன் நின்றிருந்தான். முகத்தில் ஒரு சிறிய புன்னகையுடனும் வெளியே நீட்டிக்கொண்டிருந்த தாடியுடனும் அவனுடைய எஜமான் பெரிய பச்சை நிற ஸ்டவ்விற்கு அருகில் நின்றிருந்தார். அவருடைய பார்வை பட்டவுடன், இளம் ராணுவ வீரனின் இதயம் திடீரென்று வெப்பமானது. தான் குருடனாகி விட்டதைப்போல அவன் உணர்ந்தான். பதில் கூறுவதற்கு பதிலாக அவன் வாசல் பக்கம் தன் கண்களைச் செலுத்தினான். சாப்பாட்டுப் பாத்திரங்களைக் கீழே வைப்பதற்குத் தயாராகிக் கொண்டிருந்த அவன், பின்னால் கிடைத்த ஒரு அடியின் காரணமாக முன்னால் செலுத்தப்பட்டான். பாத்திரங்கள் நடைக்கல்லின்மீது சிதறி விழுந்தன. அவன் கைப்பிடிகள் இருந்த தூணை இறுகப் பற்றிக் கொண்டான். அவன் எழுந்து நிற்க முயற்சிக்க, தொடர்ந்து அடிகள் விழுந்து கொண்டே இருந்ததன் காரணமாக அவன் சில நிமிடங்கள் அந்தத் தூணையே பிடித்துக் கொண்டு படுத்திருந்தான். அவனுடைய மேலதிகாரி அறைக்குள் நுழைந்து கதவை அடைத்தார். வேலைக்காரி படிகளுக்கு கீழே நின்று கொண்டு மேல் நோக்கிப் பார்வையைச் செலுத்தி, கீழே சிதறி விழுந்து கிடந்த பாத்திரங்களைக் கிண்டலாகப் பார்த்தாள்.
You can use your Facebook account to sign into our site.
fb iconLog in with Facebook