ராணுவ அதிகாரி - Page 6
- Details
- Category: புதினம்
- Published Date
- Written by சுரா
- Hits: 6352
மேலதிகாரியின் மனநிலை மிகவும் மோசமாகிவிட்டது. அவர் ஒரு கண்ணாடி டம்ளரில் மதுவை ஊற்றி கையில் வைத்திருக்க, அதன் பெரும்பகுதி தரையில் கொட்டியது. எஞ்சி இருந்ததை பச்சை நிற ஸ்டவ்விற்கு அருகில் சாய்ந்து நின்று கொண்டு அவர் உறிஞ்சிக் குடித்தார். படிகளிலிருந்து கீழே விழுந்த பாத்திரங்களை வேலைக்காரன் பொறுக்கி எடுக்கும் சத்தத்தை அவர் கேட்டார். போதை பிடித்த நிலையில், வெளிறிப் போய் காணப்பட்ட அவர் அதே இடத்தில் நின்று கொண்டிருந்தார். வேலைக்காரன் மீண்டும் வந்தான். மொத்தத்தில் பைத்தியம் பிடித்த ஒரு மனிதராக- வேதனையைத் தாங்கிக் கொண்டு மேலும் கீழும் மூச்சுவிட்டுக் கொண்டே தன்னுடைய வேலைக்காரன் வருவதைப் பார்த்து கேப்டனின் இதயம் சந்தோஷத்தில் துள்ளிக் குதித்துக் கொண்டிருந்தது.
"ஸ்கோணர்...'' அவர் அழைத்தார்.
அந்த ராணுவ வீரன் கால்களை ஒழுங்குபடுத்தி வைத்து நிற்பதற்குச் சற்று நேரமானது.
"சார்...''
பரிதாபமான நிலையில் அடர்த்தியான மீசையுடனும் கனமான புருவங்களுடனும் கறுத்த மார்பிளைப் போன்ற நெற்றியுடனும் இளைஞன் அவருக்கு முன்னால் நின்று கொண்டிருந்தான்.
"நான்... உன்னிடம் ஒரு கேள்வியைக் கேட்டேன்.''
"ஆமாம், சார்.''
அதிகாரியின் குரல் அமிலத்தைப்போல உள்ளே நுழையும் விதத்தில் இருந்தது.
"நீ எதற்காக காதுக்கு நடுவில் ஒரு பென்சிலைச் சொருகி வைத்திருக்கிறாய்?''
இந்த முறையும் வேலைக்காரனின் இதயம் உஷ்ணமானது. அவனால் மூச்சுவிட முடியவில்லை. கறுத்து வேதனை தந்து கொண்டிருந்த கண்களுடன் அவன் அதே இடத்திலேயே நின்று கொண்டிருந்தான். கேப்டனின் கண்களில் உயிரற்ற ஒரு மலர்ச்சி வெளிப்பட்டது. அவர் கால்களை உயர்த்தினார்.
"நான் அதை... மறந்து போய் விட்டேன். சார்...'' கறுத்த கண்களை அதிகாரியின் நீல நிறத்தில் நடனமாடிக் கொண்டிருந்த கண்களில் பதித்தான்.
"உனக்கு அதனால் என்ன லாபம்?''
வார்த்தைகளுக்காக தேடிக் கொண்டிருந்த இளைஞனின் மார்பு உயர்ந்து தாழ்வதை அவர் பார்த்தார்.
"நான் எழுதிக் கொண்டிருந்தேன்.''
"என்ன எழுதினாய்?''
மீண்டும் அந்த ராணுவ வீரன் மேலும் கீழும் பார்த்தான். அவன் மேலும் கீழும் மூச்சு விடுவது அதிகாரியின் காதுகளில் கேட்டது. நீல நிறக் கண்களில் மலர்ச்சி பரவியது. ராணுவ வீரன் தொண்டையைச் சரி செய்து கொண்டாலும், அவனால் பேச முடியவில்லை. திடீரென்று உண்டான ஜுவாலையைப்போல ஒரு புன்னகை அதிகாரியின் முகத்தில் பரவ, ஆர்டர்லியின் தொடையில் பலமான ஒரு அடியை அவர் அதே நேரத்தில் கொடுத்தார்.
இளைஞன் ஒரு பக்கமாக விலகி நின்றான். வெறித்துப் பார்த்துக் கொண்டிருந்த கறுத்த கண்களைக் கொண்ட அவனுடைய முகம் உயிரற்றுக் காணப்பட்டது.
"ம்... சொல்லு...'' அதிகாரியின் உதடுகள் அசைந்தன.
ஆர்டர்லியின் நாக்கு வறண்டு போய்விட்டது. உதடுகளை ஈரப்படுத்துவதற்காக அவன் நாக்கைச் சுழற்றினான். தொண்டையைச் சரி செய்தான். அதிகாரி தன்னுடைய காலை உயர்த்தினார். ஆர்டர்லி மரக் கொம்பைப்போல நின்றிருந்தான்.
"கொஞ்சம் கவிதை... சார்...'' தெளிவற்ற, தடுமாற்றம் கலந்த அவனுடைய குரல் கேட்டது.
"கவிதையா? என்ன கவிதை?'' சந்தோஷமற்ற ஒரு புன்னகையுடன் கேப்டன் கேட்டார்.
மீண்டும் தொண்டையைச் சரி செய்யும் சத்தம் கேட்டது. மீண்டும் கேப்டனின் மனதில் சோர்வு உண்டானது. உடல்நலம் பாதிக்கப்பட்டவனைப் போல அவன் தளர்ந்துபோன கோலத்தில் காணப்பட்டான்.
"என் காதலிக்காக.. சார்...'' காய்ந்து வறண்டுபோன அசாதாரணமான குரல் கேட்டது.
"ஓஹோ!'' அவர் முகத்தைத் திருப்பிக் கொண்டு சொன்னார்: "அந்த மேஜையைத் துடைத்து சுத்தமாக்கு.''
"க்ளிக்" என்ற சத்தம் ராணுவ வீரனின் தொண்டைக்குள்ளிருந்து வெளியே வந்தது. மீண்டும் "க்ளீக்" என்ற சத்தம். அது முடிந்தவுடன் பாதி செயற்கையாக வரவழைத்துக்கொண்ட குரலில், "சரி... சார்'' என்ற சத்தமும்..
இளைஞன் ஒரு வயதான மனிதனைப்போல பலவீனமான இதயத்துடன் நடந்து, அங்கிருந்து அகன்றான்.
தனிமையில் விடப்பட்ட அதிகாரி, சிந்தனைகளில் மூழ்கி விடாமலிருக்க முயற்சித்து, அங்கேயே உட்கார்ந்திருந்தார்.
எதைப் பற்றியும் சிந்திக்க வேண்டாம் என்று உள் மனம் அவருக்குக் கட்டளை இட்டது. அந்தச் சமயத்திலும் பலத்துடன் செயல்படுவதற்கான ஆவேசம் உண்டாக்கிய சந்தோஷம் அவருடைய மனதிற்குள் நிறைந்திருந்தது. தொடர்ந்து பலமான ஒரு எதிர்வினை, அச்சப்படக் கூடிய அளவுக்கு ஒரு மோதல்- அவருடைய மனதிற்குள் நடந்தன. எதிர்வினை ஆற்ற வேண்டும் என்ற ஒரு மனநிலை- ஒரு மணி நேரம் ஒன்றொடொன்று தொடர்பு இல்லாத மனப் போராட்டத்துடன் எந்தவிதமான அசைவும் இல்லாமல் அவர் அங்கேயே நின்றிருந்தார். எனினும், மனதின் நிலைமையை வெறுமையாக இருக்கும்படி செய்யக்கூடிய ஒரு மனசக்தியை அவர் பெற்றார். அதன் மூலம் மனதின் போராட்டங்களிலிருந்து தன்னை அவர் காப்பாற்றிக் கொள்ள முடிந்தது. உள்ளே இருந்த கோபத்தின் மிகவும் மோசமான கட்டம் தாண்டுவது வரை அவர் அதே நிலையில் நின்றிருந்தார்.
அதற்குப் பிறகு அவர் மது அருந்தத் தொடங்கினார். சுய உணர்வு மறைய வேண்டும் என்பதற்காக மது அருந்தும் செயல்! தொடர்ந்து அவர் சுய உணர்வே இல்லாமல் படுத்துத் தூங்கிவிட்டார். காலையில் எழுந்தபோது, அவர் தன்னுடைய இயல்பான குணத்தின் அடித்தளம் வரை ஆராய்ந்து முடித்திருந்தார். அதே நேரத்தில் தன்னுடைய செயல்களால் உண்டான வருத்தத்தைத் தாண்டிச் செல்ல அவர் முயற்சித்தார். தன்னுடைய மனதை அதில் பதிக்காமல் அவர் போராடினார். தன்னுடைய உள்மனதின் கட்டளைகளால் அவர் அதை அழுத்தி இருக்கச் செய்தார். அவை அனைத்தும் உள்ளே சிந்திக்ககூடிய மனதின் செயலாக இருந்தது. மது அருந்தியதால் உண்டான பலவீனத்தில், தளர்ச்சியில், தான் வீழ்ந்து விட்டோம் என்ற எண்ணம் அவருக்கு உண்டானது. காரியங்கள் எல்லாவற்றையும் மங்கலான வெளிச்சத்தில், அடையாளம் தெரிந்து கொள்கிற விதத்தில் அவரால் பார்க்க முடிந்தது. மதுவின் போதையில் அவர் மனப்பூர்வமாக நினைத்துப் பார்க்காமல் இருக்க கடுமையாக முயற்சித்தார். ஆர்டர்லி பெட்காபியுடன் வந்தபோது, அந்த அதிகாலை வேளைக்கு முன்பு இருந்த குழப்பமான மனநிலையை அதிகாரியால் எண்ணிப் பார்க்க முடிந்தது. கடந்து சென்ற இரவில் நடைபெற்ற சம்பவத்தை அவர் ஏற்றுக்கொள்ளவே இல்லை. அப்படியொன்று நடைபெற்றதாக இப்போதுகூட அவர் ஒப்புகொள்வதற்குத் தயாராக இல்லை. தன்னுடைய தீர்மானத்தில் அவர் வெற்றி பெற்றார். அப்படிப்பட்ட ஒரு சம்பவத்தில் தான் ஈடுபடவே இல்லை.
ஆர்டர்லி சாயங்காலம் முழுவதும் தூக்கத்தில் நடப்பதைப் போல நடந்து கொண்டிருந்தான். உணர்ச்சிவசப்பட்ட அவன் சிறிது பீர் பருகினான். அது அந்த அளவுக்கு அதிகமாக இல்லை. மது அவனுக்குள் பழைய உணர்ச்சிகளைத் திரும்பவும் கொண்டு வந்து சேர்த்தது. அவனால் அவை எதையும் ஏற்றுக்கொள்ள முடியவில்லை.