ராணுவ அதிகாரி - Page 9
- Details
- Category: புதினம்
- Published Date
- Written by சுரா
- Hits: 6352
அதைத் தாண்டி மலையின் அடிவாரத்தில் விசாலமாகவும் வெளிறிப் போயும் காணப்பட்ட நதி, மஞ்சள் நிறமும் சாம்பல் நிறமும் கலந்த மீன் கூட்டங்களுக்கும் கறுத்த பைன் மரக்காடுகளுக்கும் நடுவில் நீண்டு பரவி ஓடிக் கொண்டிருந்தது. நதி மலையின் அடிவாரத்தை நோக்கி ஓடிக் கொண்டிருப்பதைப்போல தோன்றியது. ஒரு மைல் தாண்டி, யாரோ ஒரு பெரிய மிதவையை இயக்கியவாறு போய்க் கொண்டிருந்தார்கள். அது ஒரு வினோதமான நிலப்பகுதி. இன்னும் சற்று அருகில், பீச் மரங்களின் வரிசைகளின் முடிவில் சிவப்பு நிற மேற் கூரையையும், வெள்ளை நிறத்தில் அடித்தரையையும், சதுரமான சாளரங்களையும் கொண்ட ஒரு கட்டடம் தெரிந்தது. நீண்ட வரிசைகளாக கேழ்வரகு, சீமைப்புல், வெளிறிய பச்சை நிறத்தில் காணப்பட்ட சோளச் செடிகள் ஆகியவை வளர்ந்து நின்றிருந்தன. ஆர்டர்லியின் கால்களுக்குக் கீழே, மேட்டிற்குக் கீழே இருந்த கறுத்த சதுப்பு நிலத்தில் வட்ட வடிவத்திலிருந்த மலர்கள் சுவாசத்தை அடக்கிக்கொண்டு மெல்லிய தண்டுகளில் இருந்தன. அவற்றின் நறுமணம் காற்றில் கலந்து விட்டிருந்தது. தான் கண்களை மூடி தூக்கத்திற்குள் விழுந்து கொண்டிருக்கிறோமோ என்று அவன் நினைத்தான்.
திடீரென்று தன்னுடைய கண்களுக்கு முன்னாலிருந்த வண்ண மயமான இடத்தை நோக்கி ஏதோ நகர்ந்து வருவதை அவன் பார்த்தான். இளம் நீல நிறமும் அடர்த்தியான சிவப்பு நிறமும் கலந்த கேப்டனின் உருவம் மலைப்பரப்பிற்கு இணையாக தானிய வயல்களின் வழியாக சாதாரண வேகத்தில் வந்து கொண்டிருப்பது தெரிந்தது. கொடி அடையாளங்கள் நன்கு தெரிந்தன. ஆணவமும் நிச்சயமற்ற தன்மையும் நிறைந்த குதிரையின்மீது சவாரி செய்யும் கேப்டனின் உருவம் வந்து கொண்டிருந்தது. வேகமாகவும் பிரகாசமாகவும் தெளிவாகவும் தெரிந்த அந்த உருவத்தின்மீது அந்தச் சூரியனின் முழு ஒளியும் விழுந்திருந்தது. அதை நீக்கி விட்டுப் பார்த்தால், பிறகு அங்கு நிலவிக் கொண்டிருந்தது அழகும் பிரகாசமும் நிறைந்த நிழல் மட்டுமே. அர்ப்பணிப்பு உணர்வுடன், எந்தவித எதிர்பார்ப்பும் இல்லாமல், இளம் ராணுவ வீரன் உற்றுப் பார்த்துக் கொண்டு அங்கேயே உட்கார்ந்திருந்தான். குதிரையோட்டத்தின் வேகம் குறைந்து, இறுதியாக நெடுங்குத்தாக இருந்த பாதையை அடைந்தபோது, அந்த ஆர்டர்லியின் மனதிலும் உடலிலும் தாங்க முடியாத மின்னல் கீற்றுகள் உண்டாயின. அவன் காத்துக் கொண்டிருந்தான். பலமான ஒரு நெருப்பு குண்டத்தை தலையின் பின் பகுதியில் கட்டித் தொங்கவிட்டிருப்பதைப்போல அவன் உணர்ந்தான். ஏதாவது சாப்பிட வேண்டும் என்று அவன் நினைக்கவில்லை. கைகளை மெதுவாக அசைத்தபோது, அவை நடுங்கின. இதற்கிடையில் குதிரைமீது ஏறி அமர்ந்திருந்த அதிகாரி மெதுவாகவும், மிடுக்குடனும் அருகில் வந்து கொண்டிருந்தார். ஆர்டர்லியின் மனம் போராட்டத்திற்குத் தயாராகிக் கொண்டிருந்தது. குதிரையின்மீது கேப்டன் நிம்மதியாக உட்கார்ந்திருப்பதைப் பார்த்த அவனுடைய மனதிற்குள் மீண்டும் ஒரு மின்னல் கீற்று பாய்ந்து சென்றது.
இளம் நீல நிறமும் அடர்த்தியான சிவப்பு நிறமும் கலந்த தலைக் கவசங்கள் மலைத் தொடர்களுக்கு அருகில் சிதறிச் சிதறி நின்று கொண்டிருப்பதை கேப்டன் பார்த்தார். அது அவரை சந்தோஷம் கொள்ளச் செய்தது. கட்டளைக் குரலும் அவரை சந்தோஷப்படுத்தியது. அந்தக் கூட்டத்தில், எப்போதும் இருக்கக் கூடிய பணிவுடன் தன்னுடைய ஆர்டர்லியும் நின்று கொண்டிருப்பதை அவர் பார்த்தார். அதிகாரி பாதத்தை ஊன்றிக் கொண்டு மெதுவாக எழுந்து நின்று பார்த்தார். இளம் ராணுவ வீரன் அமைதி நிலவிக் கொண்டிருந்த தன்னுடைய முகத்தை குனிய வைத்துக் கொண்டிருந்தான். கேப்டன் இருக்கையில் நிம்மதியாக உட்கார்ந்தார். குதிரை நடக்க ஆரம்பித்தது. மனிதர்கள், வியர்வை, தூசி ஆகியவற்றின் வாசனை கலந்த வெட்டவெளியை நோக்கி அவர் கடந்து சென்றார். அது அவருக்கு நன்கு பழகிவிட்ட ஒரு விஷயமாக இருந்தது. லெஃப்டினன்டுடன் குசலங்கள் விசாரித்து முடித்து அவர் சில அடிகள் மேலே ஏறி, ஆட்களின் கூட்டத்தில் எதுவுமே இல்லாமல் நின்று கொண்டிருந்த தன்னுடைய ஆர்டர்லியையே பார்த்துக்கொண்டு நின்றார்.
அந்த இளம் ராணுவ வீரனின் இதயம் ஒரு நெருப்புக் குண்டத்தைப் போல உள்ளே எரிந்து கொண்டிருந்தது. அவன் மிகவும் சிரமப்பட்டு மூச்சுவிட்டான். மலைச்சரிவைப் பார்த்த அதிகாரி, மூன்று இளைஞர்களான ராணுவ வீரர்கள் (அவர்களுக்கு மத்தியில் ஒரு பாத்திரத்தில் நீர்) சூரியனின் கதிர்கள் விழுந்து கொண்டிருந்த பச்சை நிற வயலுக்கு எதிரில் அமர்ந்திருப்பதைப் பார்த்தார். மரத்திற்குக் கீழே மேஜையைப் போட்டு, அதில் மிகவும் பரபரப்பானவரும் பலசாலியுமான ஒரு லெஃப்டினன்ட் உட்கார்ந்திருந்தார். அதைத் தொடர்ந்து கேப்டன் தைரியத்தை வரவழைத்துக் கொண்டு ஒரு காரியத்தைச் செய்தார். அவர் தன்னுடைய ஆர்டர்லியை அழைத்தார். கட்டளைக் குரல் கேட்டதும் இளம் ராணுவ வீரனின் தொண்டைக்குள் ஒரு நெருப்பு ஜுவாலை பரவியது. அவன் பார்க்கும் சக்தியை இழந்தவனைப் போல அடித்துப் பிடித்து எழுந்தான். அதிகாரியின் கீழே நின்று கொண்டு அவன் மரியாதை செலுத்தினான். அவன் மேலே பார்க்கவில்லை. கேப்டனின் குரலில் ஒரு பதற்றம் இருந்தது.
"சத்திரத்திற்குச் சென்று எனக்காக... எடுத்துக் கொண்டு வா...'' அதிகாரி கட்டளை இட்டார். "சீக்கிரமா... சீக்கிரமா...'' அவர் சொன்னார்.
இறுதி வார்த்தையைத் தொடர்ந்து அந்த அதிகாரியின் வயிற்றில் ஒரு மின்னல் வெட்டு உண்டானது. தன்னுடைய சக்தியைத் திரும்பவும் பெற்றுவிட்டதைப்போல அவன் உணர்ந்தான். ஆனால், அவன் இயந்திரத்தனமான பணிவுடன் கிட்டத்தட்ட ஒரு கரடியைப்போல கீழ் நோக்கி வேகமாக ஒரு ஓட்டம் ஓடினான். அவனுடைய ட்ரவுசர்கள் ராணுவ பூட்களில் பட்டு உரசின. இந்தக் கண்மூடித்தனமான அடிபணியும் செயலை அதிகாரி கூர்ந்து பார்த்துக்கொண்டிருந்தார்.
ஆனால், ஆர்டர்லியின் உடல் மட்டுமே பணிவு கொண்டதாகவும் இயந்திரத்தனமானதாகவும் உத்தரவுகளைப் பின்பற்றிக் கொண்டும் இருந்தது. மனதிற்குள் அந்த இளம் வாழ்வின் அனைத்து சக்திகளும் படிப்படியாக ஒரே இடத்தில் சேர்ந்து சேகரிக்கப்பட்டு மாற ஆரம்பித்திருந்தன. அவன் தன்னுடைய கடமையைச் செய்வதற்காக திரும்பவும் மலையின் மேலே வேகமாக ஏறினான். நடக்கும்போது தலையில் வேதனை உண்டானதால், தன்னையே அறியாமல் அவனுடைய உடல் முழுவதும் நடுங்கிக் கொண்டிருந்தது. ஆனால், இதயத்தின் அடித்தளத்தில் அவன், அவனாகவே இருந்தான். சாதுவான அவனேதான்! துண்டுத் துண்டாக பிய்த்து எறிய இயலாத அவனேதான்!
கேப்டன் காட்டுப் பகுதியை நோக்கி கடந்து சென்றார். ஆர்டர்லி உற்சாகமும் பயங்கரத்தன்மையும் ராணுவ வீரர்களின் வாசனையும் நிறைந்த காட்டுப் பகுதியின் வழியாக தட்டுத் தடுமாறி நடந்தான். அவனுடைய மனதிற்குள் இப்போது வினோதமான ஒரு தைரியம் வந்து சேர்ந்து கொண்டிருந்தது.