ராணுவ அதிகாரி - Page 10
- Details
- Category: புதினம்
- Published Date
- Written by சுரா
- Hits: 6352
கேப்டன் தான் மனதில் நினைத்திருந்ததைவிட குறைவான ஒரு யதார்த்தம் என்பதாக அவன் உணர்ந்தான். அவன் காட்டின் பசுமையான நுழைவாயிலை நெருங்கினான். அங்கு பாதி உடலை நிழலில் இருக்கும்படி செய்து, குதிரை நின்று கொண்டிருப்பதையும் சூரியனின் வெளிச்சமும் இலைகளின் நிழல்களும் அதன் சாம்பல் நிறத்திலிருந்த உடலில் பாய்ந்தோடி விளையாடிக் கொண்டிருப்பதையும் அவன் பார்த்தான். சமீபத்தில் மரங்கள் வெட்டப்பட்ட ஒரு திறந்த இடம் அங்கு இருந்தது. அங்கு பொன் நிறத்தில் மின்னிக் கொண்டிருந்த பசுமைக்கு மத்தியில்- சூரிய வெளிச்சத்தின் உன்னதத்தில் நீல நிறமும் மஞ்சள் நிறமும் உள்ள இரண்டு உருவங்கள் நின்றிருந்தன. அவற்றில் மஞ்சள் நிறத்தில் மின்னிக் கொண்டிருந்த பகுதிகள் தெளிவாகத் தெரிந்தன. கேப்டன் லெஃப்டினன்ட்டிடம் உரையாடலை ஆரம்பித்தார்.
நிர்வாணமாகவும் சாம்பல் நிறத்தில் தோலைக் கொண்டதாகவும் உள்ள உடல்கள் படுத்துக் கிடப்பதைபோல, தெளிவாகத் தெரிந்து கொண்டிருந்த அந்த வெட்ட வெளியில் மரங்களின் பெரிய உச்சிகள் விழுந்து கிடந்தன. அதற்கு அருகில் ஆர்டர்லி நின்றிருந்தான். வெளிச்சம் சிதறிக் கிடப்பதைப்போல மர இலைகள் தரையை ஒளிமயமாக ஆக்கிவிட்டிருந்தன. வெட்டப்பட்ட மரங்களின் முரட்டுத்தனமான பகுதிகள் அழகான தலைகளுடன் ஆங்காங்கே கிடந்தன. அதைத் தாண்டி, அழகான ஒரு பீச் மரத்தின் சூரிய ஒளிபட்ட பசுமையான பகுதி தெரிந்தது.
"அப்படியென்றால், நான் இனிமேல் முன்னோக்கிப் போகலாம்.''
கேப்டன் கூறுவதை ஆர்டர்லி கவனித்தான். லெஃப்டினன்ட் மரியாதை செலுத்திவிட்டு, குதிரையை செலுத்திக் கொண்டு சென்றார். அவனும் முன்னோக்கி நகர்ந்தான். அதிகாரியின் அருகில் நடந்தபோது, அவனுடைய வயிற்றுப் பகுதியில் பலமான ஒரு மின்னல் கீற்று பாய்ந்து சென்றது.
சுமாராக தடித்துக் காணப்பட்ட இளம் ராணுவ வீரனின் உருவம் முன்னோக்கி கால் தடுமாறிப் போய்க் கொண்டிருப்பதை கேப்டன் பார்த்தார். அவருடைய நரம்புகளில் உஷ்ணம் ஏறியது. இதோ... தன்னுடன் போட்டி போடக்கூடிய ஒரு மனிதன்! குனிந்த தலையுடன் நின்றிருந்த அவன் வேகமாக வந்து நின்றிருந்த அந்த மிடுக்கான மனிதருக்கு முன்னால் கீழ்ப்படிந்தான்.
ஆர்டர்லி குனிந்து உணவை ஒரு முக்காலியில் வைத்தான். பிரகாசித்துக் கொண்டிருந்த சூரியனின் ஒளியை ஏற்ற நிர்வாண கரங்களை கேப்டன் கூர்ந்து பார்த்தார். அந்த இளம் ராணுவ வீரனிடம் உரையாட வேண்டும் என்ற எண்ணம் அவருக்கு இருந்தாலும், அதற்கு முடியவில்லை. வேலைக்காரன் தன்னுடைய தொடையில் அடித்து ஒரு புட்டியின் கார்க்கைத் திறந்து அதிலிருந்த பீரை ஒரு மக்கிற்குள் ஊற்றினான். அவன் தலையைக் குனிந்த வண்ணம் இருந்தான். கேப்டன் அந்த மக்கை வாங்கினார்.
"சூடு!...'' அவர் தனக்குத் தானே கூறிக்கொள்வதைப்போல சொன்னார்.
ஆர்டர்லியின் இதயத்திற்குள்ளிருந்து நெருப்பு ஜுவாலை வெளியே வந்தது. கிட்டத்தட்ட அது அவனை மூச்சுவிட முடியாமல் செய்வதைப் போல தோன்றியது.
"ஆமாம்... சார்.'' அவன் பற்களைக் கடித்துக் கொண்டே சொன்னான்.
கேப்டன் பீர் குடிக்கும் சத்தத்தை அவன் கேட்டான். அவன் தன்னுடைய முஷ்டிகளை இறுகப் பிடித்துக்கொண்டிருந்ததால், கைகளில் அதன் வேதனை தெரிந்தது. அத்துடன் பாத்திரத்தின் மூடி அடைக்கப்படும் சத்தமும் கேட்டது. அவன் தலையை உயர்த்திப் பார்த்தான். கேப்டன் தன்னையே கூர்ந்து கவனித்துக் கொண்டிருப்பதை அவன் பார்த்தான். அவர் திடீரென்று பார்வைகளை தூரத்தில் செலுத்தினார். தொடர்ந்து அதிகாரி குனிவதையும் மரத்திற்குக் கீழே இருந்து ஒரு ரொட்டித் துண்டை பொறுக்கி எடுப்பதையும் அவன் பார்த்தான். தனக்கு முன்னால் குனிந்து கொண்டிருக்கும் உடலைப் பார்த்த அந்த இளம் ராணுவ வீரனின் உடம்பெங்கும் ஒரு மின்னல் மீண்டும் பாய்ந்தது. அவனுடைய கைகள் நடுங்கின. அவன் தூரத்தை நோக்கிப் பார்த்தான். தன்னுடைய அதிகாரி பதைபதைப்புக்குள்ளாகி இருக்கிறார் என்பதை அவன் உணர்ந்து கொண்டான். ரொட்டி பிய்க்கப்பட்ட நிலையில் கீழே விழுந்தது. அந்த இரண்டு ஆண்களும் அசையாமல் மூச்சை அடக்கிக் கொண்டு நின்றிருந்தார்கள். எஜமான் மிகவும் சிரமப்பட்டு ரொட்டியைக் கடித்துத் தின்று கொண்டிருந்தார்.
ஆர்டர்லி அந்த மக்கின் ஓரம், கைப்பிடியில் அழுத்திக் கொண்டிருந்த வெளுத்த கை ஆகியவற்றால் ஈர்க்கப்பட்ட ஒரு மனிதனைப்போல பார்த்துக் கொண்டு நின்றிருந்தான். அது மேலே வந்தது. இளைஞனின் பார்வையும் அதோடு சேர்ந்து உயர்ந்தது. வயதில் மூத்த அதிகாரியின் சக்தி படைத்த தொண்டை, பீரின் நுரைகளுக்குத் தகுந்தாற்போல உருண்டு விளையாடிக் கொண்டிருப்பதும், தாடையின் செயல்பாடும் மிகவும் சுவாரசியமாக இருந்தது. அந்த இளைஞனின் கைகளை அழுத்தக்கூடிய அதே உள் மனதின் கட்டளை அவற்றை சுதந்திரமாக இருக்கும்படி செய்தது. பலமான ஒரு ஜுவாலையால் அது இரண்டு துண்டுகளாக ஆகி விட்டதைப்போல அவன் குதித்தான்.
அதே நிமிடத்தில் மரத்தின் வேரில் தட்டி, அதிகாரி ஒரு சத்தத்துடன் கூர்மையாக இருந்த ஒரு பெரிய வேரில் போய் விழுந்தார். கையிலிருந்த பாத்திரம், சிதறிக் கீழே விழுந்தது. ஒரு நிமிடத்திற்குள் பணிவான குணத்தையும் ஆத்மார்த்தமான முக வெளிப்பாட்டையும், பற்களின் வரிசைகளுக்கு மத்தியில் நெருக்கமாக இருக்கும் கீழுதட்டைக் கொண்ட முகத்தையும் கொண்ட ஆர்டர்லி தன்னுடைய காலால், அதிகாரியின் நெஞ்சில் அழுத்தினான். அவருடைய கீழ்த் தாடையை பலத்தைப் பயன்படுத்தி பின்னோக்கி வரச் செய்து மரத்தடியின் இன்னொரு முனைக்குக் கொண்டு சென்றான். நிம்மதி தரக்கூடிய ஒரு உணர்ச்சிவசப்பட்ட நிலையிலும், கைகள் சுதந்திரமாக்கப்பட்ட சந்தோஷத்திலும் அவன் இந்தத் தாக்குதலை நிகழ்த்தினான். தொடர்ந்து உள்ளங்கையின் கீழ்ப்பகுதியைப் பயன்படுத்தி, முழு சக்தியையும் ஒன்று சேர்த்து அவன் கீழ்த்தாடையைத் தாக்கினான். தாடி முடிகளால் சற்று முரட்டுத்தனமாகத் தோன்றிய அந்தக் கீழ்த்தாடை தன்னுடைய கைகளுக்குள் சிக்கிக் கிடப்பதை நினைத்து அவன் ஒரு தனிப்பட்ட சந்தோஷத்தை அனுபவித்தான். ஒரு நிமிட நேரம்கூட அவன் ஒய்வு எடுக்கவில்லை. ரத்தம் பலமாக தன்னுடைய கையில் பாய்ந்து ஒழுகக் கூடிய வகையில் அதிகமான பலத்தைப் பயன்படுத்தி அவன் அந்த மனிதரை பின்னோக்கி நகர்த்தி அழுத்தினான். இறுதியில் "க்ளிக்" என்றொரு சத்தத்தையும் நெரித்து அடங்குவதால் உண்டான ஒரு சந்தோஷத்தையும் தன்னுடைய கைகளில் அவனால் உணரமுடிந்தது. தன்னுடைய தலை நீராவியாக ஆகிவிட்டதைப் போல அவனுக்குத் தோன்றியது. இனம்புரியாத நடுக்கங்கள் அதிகாரியின் உடம்பெங்கும் உண்டாயின. அது அந்த இளம் ராணுவ வீரனை அச்சம் கொள்ளச் செய்து பதைபதைப்பு அடையும்படி செய்தது. எனினும், அவற்றைக் கட்டுப்படுத்துவதில் அவன் தனிப்பட்ட சந்தோஷம் அடைந்தான்.