ராணுவ அதிகாரி - Page 4
- Details
- Category: புதினம்
- Published Date
- Written by சுரா
- Hits: 6352
சில நேரங்களில் ராணுவ வீரர்களுக்கு முன்னால் ஒரு கோபம், ஒரு போர்- இவை உண்டாவதும் உண்டு. தான் எந்த நேரத்திலும் வெடித்துச் சிதறுவதற்குத் தயார் நிலையில் இருக்கிறோம் என்ற உண்மையை அவர் நன்கு உணர்ந்திருந்தார். எனினும், சேவை என்ற விஷயத்திற்கு அவர் முன்னுரிமை தந்தார். அதே நேரத்தில் அந்த இளம் ராணுவ வீரன் தன்னுடைய உற்சாகத் தன்மையிலும் முழுமையான இயல்பு நிலையிலும் நம்பிக்கை வைத்திருந்தான். ஒவ்வொரு அசைவிலும் அவன் அதை வெளிப்படுத்தினான். சங்கிலியிலிருந்து அவிழ்த்துவிடப்பட்ட மிருகங்களிடம் இருப்பதைப் போன்ற ஒரு இனிய உணர்ச்சியாக அது இருந்தது. அது அந்த அதிகாரியை மேலும் அதிகமாக பொறாமை கொள்ளச் செய்தது.
தன்னைத்தானே எவ்வளவு கட்டுப்படுத்திக் கொண்டாலும், தன்னுடைய ஆர்டர்லிமீது கொண்ட முரண்பாடான எண்ணத்தை கேப்டனால் மாற்றிக் கொள்ளவே முடியவில்லை. அவனை வெறுமனே விடுவதற்கும் அவருக்கு மனம் வரவில்லை. கட்டுப்படுத்த முடியாமல் எந்த அளவுக்கு நேரம் எடுக்குமோ, அந்த அளவுக்கு இருக்கக்கூடிய வேலைகளைச் செய்வதற்கு அவனுக்கு கேப்டன் கட்டளைகள் இட்டார். அவனை அவர் கூர்ந்து கவனித்துக்கொண்டே இருந்தார். ஒரு இளம் ராணுவ வீரனைப் பார்த்து கோபப்பட்டு சத்தம் போட்டுக் கத்துவது என்பதையும் தன்னுடைய அதிகார தோரணையை வெளிப்படுத்துவது என்பதையும் அவர் வாடிக்கையாக்கி விட்டிருந்தார். அந்த மாதிரியான நேரங்களில் காதுகளை மூடிக்கொண்டு சிவந்து போன முகத்துடன் ஆரவாரம் அனைத்தும் முடிவதற்காக அந்த இளைஞன் காத்திருப்பான்.
அவனுடைய சிந்தனை மையங்களுக்குள் சத்தங்கள் எந்தச் சமயத்திலும் நுழைவதே இல்லை. தன்னுடைய எஜமானின் உணர்ச்சிகளுக்கு எதிராக தன்னைக் காப்பாற்றிக் கொள்ளும் வகையில் தைரியம் கொண்டவனாக இருந்தான். ஆர்டர்லியின் கையின் இடது பெருவிரலில், காயத்தைச் சேர்த்து தைத்ததால் உண்டான நீளமான ஒரு அடையாளம் இருந்தது. இறுதியில் கேப்டனின் பொறுமை இல்லாமல் போனது. ஒருநாள் ஆர்டர்லி மேஜையைச் சரி செய்து போட்டுக் கொண்டிருக்கும்போது, அதிகாரி அவனுடைய பெருவிரலில் ஒரு பென்சிலை வைத்து அழுத்திக் கொண்டே கேட்டார்: "உனக்கு இது எப்படி வந்தது?''
இளைஞன் கண்களைச் சிமிட்டி, எச்சரிக்கையுடன் கூறினான்: "மரம் வெட்டும் கோடரியால்.... இங்கு இந்த ஹெர்ஹாப்மேனில் நடந்த விஷயம்...''
அதற்கு மேலும் விளக்கங்களைக் கேட்பதற்காக அதிகாரி காத்து நின்றிருந்தார். எதுவுமே கூறப்படவில்லை. ஆர்டர்லி தன்னுடைய பொறுப்புகளை நிறைவேற்றுவதற்காகத் திரும்பினான். கேப்டனுக்கு கோபம் வந்தது. வேலைக்காரன் அவரைத் தவிர்த்தான். மறுநாள் அந்தப் பெருவிரலில் தன்னுடைய கவனத்தைச் செலுத்தாமல் இருப்பதற்கு, கேப்டன் தன் மனதின் ஓட்டத்தைக் கட்டுப்பாட்டில் வைப்பதற்கு மிகவும் சிரமப்பட வேண்டியதிருந்தது. அவருடைய ரத்தத்தின் வழியாக ஒரு நெருப்பு ஜுவாலை உயர்ந்து பரவிக் கொண்டிருந்தது.
தன்னுடைய வேலைக்காரன் மிகவும் சீக்கிரமே தன்னிடமிருந்து சென்று விடுவான் என்பதையும், மிகவும் சந்தோஷத்தில் திளைத்திருப்பான் என்பதையும் அவர் நன்கு அறிவார். எனினும்,அந்த வேலைக்காரன் தன்னுடைய எஜமானிடமிருந்து எந்த அளவுக்கு முடியுமோ அந்த அளவுக்கு விலகியே இருந்தான். கேப்டனோ பைத்தியம் பிடித்தவரைப்போல வெறுப்புடன் இருந்தார். ராணுவ வீரன் அங்கு இல்லாத நேரத்தில், அவருக்கு சிறிதும் ஓய்வே இல்லாமலிருந்தது. ஆர்டர்லி அங்கு இருக்கும் போது, அவர் ஏமாற்றம் நிறைந்த கண்களைக் கொண்டு அவனைப் பார்த்தார். துடிப்பே இல்லாமலிருந்த இருண்டு காணப்பட்ட கண்களுக்கு மேலே இருந்த அந்த கறுத்த கண் இமைகளை அவர் மிகவும் வெறுத்தார். அழகான உறுப்புகளின் அசைவுகளையும் அவர் வெறுத்தார். எந்தவொரு ராணுவத்தின் சட்டத்தின் மூலமும் அவற்றை அசைவே இல்லாமல் ஆக்க முடியவில்லை. ஏசல்களையும் கிண்டல் கலந்த வார்த்தைகளையும் பயன்படுத்தி அவர் ஆண்களுக்கே உரிய குணத்தை வெளிப்படுத்தக் கூடியவராகவும் கொடூரமானவராகவும் மாறினார்.
"உன்னை எந்தக் கால்நடைகள் வளர்க்கின்றன? பேசும்போது உன்னால் நேராகப் பார்க்க முடியாதா? நான் பேசும்போது என் கண்களையே பார்.''
ராணுவ வீரன் தன்னுடைய கறுத்த கண்களை அவரை நோக்கிக் திருப்பினாலும், அவை எதையும் பார்க்கவில்லை. மெல்லிய ஏதோவொரு உணர்ச்சியைக் கண்களில் நிறைத்துக் கொண்டே அவன் தன்னுடைய உயர் அதிகாரியின் நீல நிறக் கண்களையே பார்த்தான்.
ஒருநாள் அதிகாரி தன்னுடைய கனமான ராணுவக் கையுறையை இளைஞனின் முகத்தில் வீசி எறிந்தார். ஒரு சூடத்தை நெருப்புக்குள் வீசி எறியும்போது உண்டாகக்கூடிய ஒரு பிரகாசத்தை அந்தச் சமயத்தில் அந்த கறுத்த விழிகளில் பார்க்க முடிந்தது என்ற மனசந்தோஷம் அவருக்கு உண்டானது. லேசான ஒரு முனகலுடனும் நடுக்கத்துடனும் அவர் சிரித்தார்.
ஆனால், இன்னும் இரண்டே மாதங்கள்தான் இருக்கின்றன. இளைஞன் ஏதோ உள்மனதிலிருந்து உண்டான கட்டளை என்பதைப் போல தன்னுடைய விஷயத்தில் மட்டுமே அக்கறை செலுத்தக் கூடியவனாக இருந்தான். தன்னுடைய உயர் அதிகாரி ஒரு மனிதனே அல்ல, தான் மிகுந்த அதிகாரங்கள் படைத்த ஒரு மனிதன் என்பதைப் போலவே அவனுடைய நடவடிக்கைகள் இருந்தன. தனிப்பட்ட முறையில் மோதல் என்பது ஒரு பக்கம் இருக்க, வெளிப்படையான கோபத்தைக்கூட தவிர்க்க வேண்டும் என்று அவனுடைய உள்மனம் கட்டளை இட்டது. ஆனால், எவ்வளவு முயற்சித்தாலும், அந்த கோபம் வெளிப்படவே செய்தது- அது மேலதிகாரியின் உணர்ச்சிக் கொந்தளிப்பிற்கு எதிராக இருந்தாலும். எனினும், அதை அடக்கி வைத்திருக்க வேண்டும் என்றே அவன் முயற்சி செய்தான். ராணுவத்திலிருந்து விலகி வந்தபோது, அவனுக்கு நிறைய நண்பர்கள் இருந்தார்கள். அவர்கள் எந்த அளவுக்கு நல்லவர்களாக இருந்தார்கள் என்பதை அவன் நினைத்துப் பார்த்தான். ஆனால் அதைப் பற்றி எதுவுமே தெரியாமல் அவன் தனிமையில் வாழ்க்கையை நகர்த்திக் கொண்டிருந்தான். இப்போதோ, ஏற்கெனவே தொடர்ந்து கொண்டிருக்கும் தனிமை உணர்வுக்கு மேலும் பலம் வந்து சேர்ந்து கொண்டிருந்தது. தன்னுடைய நாட்களை இப்படியே செலவழித்துவிட வேண்டியது தான் என்று அவன் நினைத்தான். ஆனால், மேலதிகாரி வெறுப்படையக் கூடிய அளவுக்கு கொடூர குணம் கொண்ட மனிதராக மாறினார். அதைத் தொடர்ந்து இளைஞன் பயம் கொண்டவனாக ஆனான்.
பழமைத்தன்மை கொண்ட, சுதந்திர இயல்பு உள்ள, மலைவாழ் இனத்தைச் சேர்ந்த ஒரு இளம் பெண் இளம் ராணுவ வீரனுக்கு காதலியாக இருந்தாள். இருவரும் மிகவும் அமைதியாக ஒன்றாகச் சேர்ந்து நடப்பார்கள். உரையாடுவதற்காக அல்ல. அவளுடைய தோளில் கையைப் போட்டுக் கொண்டு நடப்பதற்காகவும் உடல் ரீதியான தேவைக்காகவும்தான் அவன் அவளை வைத்திருந்தான். கேப்டனை மிகவும் எளிதாக ஒதுக்கி வைக்கக்கூடிய மனநிலையை அது அவனுக்கு அளித்தது. அவளோ வார்த்தைகளால் விளக்கிக் கூற முடியாத அளவுக்கு அவனுக்காகவே வாழ்ந்து கொண்டிருந்தாள். அவர்கள் ஒருவரையொருவர் காதலித்தார்கள்.