ராணுவ அதிகாரி - Page 3
- Details
- Category: புதினம்
- Published Date
- Written by சுரா
- Hits: 6352
நேரத்தைச் செலவழிப்பதற்காக குதிரையின் மீதேறி சவாரி செய்வதுதான் அவருடைய பொழுதுபோக்கு விஷயமாக இருந்தது. சில நேரங்களில் அவர் தன்னுடைய குதிரைகளில் ஒன்றை குதிரைப் பந்தயத்தில் ஓடும்படி செய்வார். எஞ்சியுள்ள நேரத்தில் அவர் அதிகாரிகளுக்கென்றிருந்த க்ளப்பில் இருந்து கொண்டு நேரத்தைப் போக்குவார். அவ்வப்போது அவர் ஒரு காதலியுடனும் நேரத்தைப் பங்கு போடுவார். ஆனால், அப்படிப்பட்ட விஷயங்களுக்குப் பிறகு அவர் மேலும் இறுகிப் போன நெற்றியுடனும் கோபமும் எரிச்சலும் கொண்ட கண்களுடனும்தான் வேலைக்குள்ளேயே நுழைவார். ஆண்களுடன் அவர் அதிகமாகப் பழக்கம் வைத்துக் கொள்வதில்லை. கோபம் வந்துவிட்டால், அதற்குப் பிறகு அவருடைய கொடுரத் தனமான நடவடிக்கைகளைப் பார்க்க வேண்டுமே! இப்படிப்பட்ட மனிதராக அவர் இருந்ததால், மனிதர்கள் எல்லாரும் அவரைப் பார்த்து மிகவும் அஞ்சினார்கள். ஆனால், அந்த அளவிற்கு பெரிய அளவில் வெறுப்பு எதுவும் அவர்களுக்கு அவர்மீது இல்லை. தவிர்க்க முடியாத ஒரு தொந்தரவாக அவர்கள் அவரை நினைத்தார்கள்.
ஆரம்பத்தில் அவர் தன்னுடைய ஆர்டர்லியிடம் மிகவும் குளிர்ச்சியாகத்தான் பழகினார். சிறிது அலட்சியமாகவும் நடந்துகொண்டார். சிரமமான நேரங்களில் அவர் எந்தவித பிரச்சினைகளையும் உண்டாக்கவும் முயற்சிக்கவில்லை. இந்த காரணங்களால், எப்படிப்பட்ட கட்டளைகளை அவர் இடுவார் என்பதையும் அதை எப்படிச் செயல்படுத்தினால் அவருக்குப் பிடிக்கும் என்பதையும் தவிர, அவரைப் பற்றி வேறு எந்த விஷயத்தையும் ஆர்டர்லியால் உறுதிபடக் கூற முடியாது. அந்த அளவுக்கு அது மிகவும் எளிதான விஷயமாக இருந்தது. பிறகு... காலப்போக்கில் எல்லா விஷயங்களும் மாற ஆரம்பித்தன.
நல்ல உடல்நிலையைக் கொண்டவனும் சராசரி உயரத்தைக் கொண்டவனுமாக- இருபத்து இரண்டு வயதுள்ள ஒரு மனிதனாக ஆர்டர்லி இருந்தான். கறுத்த மென்மையான கிருதா வைத்திருந்த அவனுக்கு தடிமனான நல்ல பலம் கொண்ட உறுப்புகள் இருந்தன. இளமைக்கே உரிய ஏதோ ஒன்று, ஒரு துடிப்பு அவனிடம் எப்போதும் இருந்தது. கறுத்த- எந்தவித உணர்ச்சியும் இல்லாத அந்தக் கண்களுக்கு மேலே அடர்த்தியான- வெளிப்படையாகத் தெரியக்கூடிய புருவங்கள் இருந்தன. உணர்ச்சிகளின் கட்ளைகளுக்கு ஆட்பட்டு சிந்தனையின் மூலமாகச் செயல் படுவதில்லை என்பதையும், வெளியிலிருந்து இடப்படும் கட்டளைகளின்படி மட்டுமே வாழ்க்கையைப் பார்க்கிறோம் என்பதையும் அந்தக் கண்கள் சத்தம் போட்டுக் கூறிக்கொண்டிருந்தன.
காலப் போக்கில், புத்துணர்ச்சி நிறைந்தவனும் இளைஞனுமான தன்னுடைய வேலைக்காரனின் இருப்பைப் பற்றி அதிகாரி உணரத் தொடங்கினார். இளமையின் எதிர்பார்ப்பு, தன்னுடைய கட்டளைகளைப் பின்பற்றுவதற்காகக் காத்துக்கொண்டிருப்பதை அவரால் ஒதுக்கிவிட முடியவில்லை. ஒளியை இழந்து காணப்படும்- தன்னுடைய வயதைக் காட்டும்- பலமும் இறுகிப்போன தன்மையும் கொண்ட உடலுக்கு அது ஒரு புத்திளமையின் நெருப்பு ஜுவாலையைப் போல தோன்றியது. அந்த இளைஞனின் அசைவுகளில் குறிப்பிடத்தக்க ஏதோவொன்று... அதுதான் அந்த அதிகாரியிடம் அவனுடைய இருப்பைப் பற்றிய உணர்தலை உண்டாக்கியது. அது அந்த ப்ரஷ்யாக்காரரை பொறாமை கொள்ளச் செய்தது. தன்னுடைய வேலைக்காரனின் இருப்பு காரணமாக வாழ்க்கைக்குத் திரும்பி வருவதற்கு அவர் தயாராக இல்லை. வேண்டுமானால், வேலைக்காரனின் நடவடிக்கைகளில் மாறுதல்களை அவரால் உண்டாக்க முடியும். ஆனால், அவர் அப்படிச் செய்யவில்லை. அவர் இப்போது மிகவும் அபூர்வமாகவே தன்னுடைய ஆர்டர்லியின் முகத்தைப் பார்ப்பார். அவனைப் பார்க்காமல் இருக்க வேண்டும் என்பதற்காகவே அதிகாரி தன்னுடைய முகத்தை எப்போதும் திருப்பி வைத்துக்கொள்வார். எனினும், இளைஞனான படைவீரன் தன்னுடைய அறையில் நின்று கொண்டிருக்கும்போது, வயதில் மூத்த அவர் அவனைப் பார்ப்பார். நீலநிற சீருடைக்கு அடியில் இளமையை வெளிப்படுத்தக் கூடிய அழகான தோள்களை நோக்கி அவர் கண்களைத் திருப்புவார். கழுத்தின் மடிப்புகள் மீதும்! அது அவரை பொறாமை கொள்ளச் செய்யும். இளம் ராணுவ வீரனின் தவிட்டு நிறமும். உருவத்திற்கேற்ற அளவைக் கொண்ட கைகளால் ரொட்டித் துண்டையோ மது புட்டியையோ எடுப்பது, வயதில் மூத்த அவரின் குருதியில் கோபத்தை உண்டாக்கக்கூடிய அடையாளங்களை உண்டாக்கும். இளைஞன் அறிவில்லாதவன் அல்ல என்பது அதற்கு அர்த்தம். அதற்கும்மேலாக, கட்டுப்பாடே இல்லாத இளமை நிறைந்த ஒரு மிருகத்தின் செயல்களிலிருந்து வெளிப்பட்ட கண்மூடித்தனமான, நிச்சயமற்ற அசைவுகள்தான் அதிகாரியிடம் இந்த அளவுக்குப் பொறாமை எழும்படி செய்தன.
ஒருநாள், ஒரு மதுபுட்டி கவிழ்ந்து மேஜையின் விரிப்பில் ரத்தக் கறை படிந்தபோது, ஒரு சாப வார்த்தையுடன் அதிகாரி எழுந்தார். நெருப்புப் பொறி பறந்து கொண்டிருந்த நீல நிறக் கண்கள் பதற்றத்துடன் காணப்பட்ட இளைஞனின் பார்வையுடன் ஒரு நிமிடம் சந்தித்தன. இளம் ராணுவ வீரனுக்கு அது ஒரு அதிர்ச்சியான விஷயமாக இருந்தது. அதற்கு முன்பு எதுவுமே நுழையாத அவனுடைய மனதிற்குள் ஏதோ ஒரு பொருள் ஆழத்தில்... ஆழத்தில்... நுழைந்து கொண்டிருப்பதைப் போல இருந்தது அவனுக்கு. அது அவனை மிகப் பெரிய ஆச்சரியத்திற்குள்ளும் ஏதோ புரியாத புதிருக்குள்ளும் கொண்டு போய் தள்ளிவிட்டது. அவனிடம் இயல்பாக இருக்கக்கூடிய முழுமைத் தன்மை அதன் மூலம் இல்லாமல் போனது. அதற்கு பதிலாக குழப்பங்கள் வந்து ஆக்கிரமித்துக் கொண்டன. அதற்குப் பிறகு இரண்டு ஆண்களுக்குமிடையே புரிந்துகொள்ள முடியாத ஏதோ ஒரு உணர்வு இடம்பிடித்து விட்டிருந்தது.
அதற்குப் பிறகு உண்மையிலேயே ஆர்டர்லிக்கு தன்னுடைய எஜமானைப் பார்ப்பது என்பதே அச்சப்படக்கூடிய ஒரு விஷயமாக ஆகிவிட்டது. அவனுடைய உள்மனம் உருக்கைப் போன்ற அந்த நீல நிறக் கண்களையும் ஆண்மைத்தனம் நிறைந்த புருவங்களையும் நினைத்துப் பார்த்தன. அவற்றை மீண்டும் பார்ப்பதையும் அவரைச் சந்திப்பதையும் அவன் தவிர்த்தான். சற்று பொறுமையுடன் அவன் மூன்று மாத காலம் காத்திருப்பதற்கு முடிவெடுத்தான். அதற்குள் நேரம் வந்துவிடும். கேப்டன் அருகில் இருப்பது அவனுக்குள் இனம் புரியாத ஒரு உணர்வை உண்டாக்கியது. ஒரு போர் வீரனுக்கே இருக்கக் கூடிய சீரான மனநிலையைக் கொண்டு வருவதற்கு அவன் முடிவு செய்தான்.
இந்த வேலையை அவன் தொடங்கி ஒரு வருடமாகிவிட்டது. மழை, வெயில் எதையும் பொருட்படுத்தாமல் அவன் கேப்டனுக்குச் சேவை செய்தான். அது அவனுக்கு எந்தவொரு வகையிலும் சிரமமான ஒன்றாக இல்லை.
ஆனால், அந்த இளம் ராணுவ வீரனின் இருப்பு அதிகாரியின் கடுமையான கட்டுப்பாடுகளுக்குள் நுழைந்து, அவருடைய ஆண்மைத் தனத்திற்கு ஒரு பயமுறுத்தலாக ஆனது. எனினும், நீளமான கைகளைக் கொண்ட அவர் ஒரு மிடுக்கான மனிதராகவே இருந்தார். அவர் தன்னுடைய மனதிற்குள் இருக்கும் எண்ணங்களை வெளிப்படையாகக் காட்டிக் கொள்வதற்குத் தயாராகவும் இல்லை. முழுமையாக ஆக்கிரமித்துக் கொண்டிருந்த உணர்ச்சிகளை அவர் ஒரு மூலையில் ஒதுக்கி வைக்க நன்கு பழகிக் கொண்டிருந்தார்.