அன்புள்ள தியோ - Page 30
- Details
- Category: வாழ்க்கை வரலாறு
- Published Date
- Written by sura
- Hits: 7837
நான் இதற்கு முன்பும் அதே வழியில் பலமுறை நடந்து சென்றிருக்கிறேன். அந்தப் பக்கம் இருக்கும் எல்லா இடங்களும் எனக்கு நன்றாகவே தெரியும். குறிப்பாக மணலும் மண் குவியலும் அமைதியும் நிறைந்த விவசாயத்தை நம்பியிருக்கும் கிராமப் பகுதியிலிருந்து அந்த இடத்திற்கு வருபவர்களுக்கு இந்த இரண்டுக்குமிடையில் இருக்கும் வித்தியாசம் நன்றாகவே தெரியும். அந்த இடத்தின் ஒவ்வொரு பகுதியும் மாறுபட்ட முறையில் அமைந்திருப்பதை யாராலும் உணர முடியும். ஜப்பானிய பாணியில் அமைந்திருக்கும் அந்தக் கட்டிடங்கள் வித்தியாசமானவையாகவும், பார்க்க அழகாகவும், இதற்கு முன்பு நாம் பார்த்திராத மாதிரியும் இருப்பதென்னவோ உண்மை.
நான் உன்னுடன் அந்த இடத்திற்கு நடந்து செல்ல விரும்புகிறேன். நாமிருவரும் ஒரே காட்சியைப் பார்க்கிறோமா என்பதை நான் தெரிந்து கொள்ள வேண்டுமென்று விரும்புகிறேன். அங்கிருக்கும் எல்லாவற்றையுமே ஒருவர் விரும்பி பார்க்கலாம். அங்கு நின்றிருக்கும் கப்பல்கள், கடல் நீர், வானத்தின் சாம்பல் வர்ணம் - எல்லாமே பார்க்கக் கூடியவைதாம். ஒவ்வொரு பொருளிலும் ஒரு துடிப்பு ஒளிந்து கொண்டிருப்பதை நம்மால் உணர முடியும். மற்றவர்களிலிருந்து வித்தியாசப்பட்டு இருப்பதை அங்கிருக்கும் எல்லாமே பறைசாற்றிக் கொண்டிருக்கும்.
சேற்றில் ஒரு வெள்ளை குதிரை நின்றிருக்கிறது. ஒரு மூலையில் வியாபாரப் பொருட்கள் துணியால் மூடப்பட்டு குவிக்கப்பட்டிருக்கின்றன. அதற்குப் பக்கத்திலேயே கறுப்புப் புகை பிடித்த கட்டிடங்கள், சுருக்கமாகச் சொல்லப் போனால் கறுப்பும் வெள்ளையும் கலந்த அந்த இடம் உண்மையாகவே மனதைக் கவரக்கூடியதுதான்.
ஆங்கிலேயர்களின் பாணியில் கம்பீரமாக அமைக்கப்பட்டிருக்கும் மது அருந்தும் சாலையின் ஜன்னல் வழியே பார்த்தால், அழுக்கடைந்து போய் காணப்படும் சரக்குகள் வைக்கப்பட்டிருக்கும் கட்டிடம் தெரிகிறது. தூரத்தில் நின்று கொண்டிருக்கும் கப்பலிலிருந்து எருமையின் கொம்புகளை முரட்டுத்தனமாக மனிதர்களோ இல்லாவிட்டால் பலம் பொருந்திய மாலுமிகளோ இறக்கிக் கொண்டிருக்கிறார்கள். அழகான ஒரு ஆங்கிலேய இளம்பெண் ஜன்னலுக்கு அருகில் நின்றவாறு சாமான்கள் இறக்கப்படும் இந்தக் காட்சியையோ அல்லது வேறு ஏதோ காட்சியையோ பார்த்தவாறு நின்றிருக்கிறாள். சேற்றுக்கு மேலே காட்சியளிக்கும் வானம், எருமையின் கொம்புகள் - இரண்டையும் ஒரே நேரத்தில் பார்க்கும் போது நமக்கே ஒரு மாறுபாடு தெரியும். திடகாத்திரமான உடலமைப்பைக் கொண்ட சதைப்பிடிப்பான மாலுமிகள் தங்களின் ஆஜானுபாகுவான தோள்களை உலுக்கியவாறு ஆன்ட்வெர்ப்பிற்கே உரிய கிராமத்து மொழியைப் பேசிக் கொண்டும் மாமிசத்தைத் தின்று கொண்டும், பீரை அருந்திக் கொண்டும் இருக்கிறார்கள். அவர்களின் ஒவ்வொரு நடவடிக்கையும் உரத்த சத்தம் கலந்தும், வேகமாகவும் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இதற்கு நேர்மாறாக ஒரு மெலிந்த தோற்றத்தைக் கொண்ட பெண்ணொருத்தி கருப்பு வர்ணத்தில் உடையணிந்து கையை மார்பின்மேல் வைத்தவாறு சாம்பல் நிற சுவரோரமாக எந்தவித ஓசையும் இல்லாமல் எதையோ திருடி வைத்துக் கொண்டு வருகிறாள். அவளின் சுருண்டு போன கறுப்பு முடி, சிறு வட்ட வடிவ முகம்... ஆமாம்... அவளின் முகத்தின் நிறம் ப்ரவுனா இல்லாவிட்டால் ஆரஞ்சும், மஞ்சளும் கலந்ததா என்பதைப் பற்றி என்னால் ஒரு முடிவுக்கு வர முடியவில்லை. அடுத்த நிமிடம் அவள் தன்னுடைய விழிகளை மேல்நோக்கி உயர்த்தி சற்று சாய்வாக பார்க்கிறாள்.
அவள் ஒரு சீன தேசத்துப் பெண் என்பதைப் புரிந்து கொள்ள முடிகிறது. பூனையைப் போல மிகவும் அமைதியாக அவள் இருக்கிறாள். பூச்சியைப்போல் உடல் சிறுத்து காணப்படும் பெண் அவள். மாமிசம் சாப்பிட்டுக் கொண்டிருக்கும் பலம் பொருந்திய அந்த மனிதர்களையும் இவளையும் ஒப்பிட்டுப் பார்க்கும்போது நமக்கு இரண்டுக்குமிடையில் இருக்கும் மிகப்பெரிய வித்தியாசம் பளிச்சென்று தெரியும்.
இன்னொரு வித்தியாசத்தையும் நாம் பார்க்கலாம். நாம் நடந்து செல்ல வேண்டுமென்றால் குறுகலான தெரு வழியேதான் செல்ல வேண்டும். தெருவின் இரண்டு பக்கங்களிலும் உயர்ந்த கட்டிடங்கள், பட்டறைகள், சரக்குகளை அடைத்து வைத்திருக்கும் இடம் ஆகியவை இருக்கும். இதே தெருவின் சற்று தாழ்வான பகுதியில் எல்லா தேசத்து ஆண்களும் பெண்களும் வந்துகூடக்கூடிய விபச்சார விடுதிகள், சாப்பிடும் பொருட்கள் விற்பனை செய்யக்கூடிய கடைகள், மாலுமிகளின் உடைகள் விற்கப்படும் கடைகள், ஹோட்டல்கள் எல்லாமே இருக்கின்றன. அங்கிருக்கும் கூட்டத்தைப் பற்றி நான் சொல்லவே வேண்டாம்.
தெரு மிகவும் நீளமானதுதான். ஒவ்வொரு நிமிடமும் அந்தத் தெருவில் ஏதாவது வித்தியாசம் தெரிந்து கொண்டே இருக்கும். வரிசை வரிசையாக மக்கள் நடந்து கொண்டிருப்பது தெரிகிறது. ஏதோ சண்டையோ சச்சரவோ தெருவில் எப்போதாவது உண்டாகிவிட்டால், தெருவின் சூழ்நிலையை முற்றிலும் மாறிவிடும். தெருவில் நாம் நடந்து செல்லும்பொழுதே உற்சாகக் குரல்களும், எல்லா வகையான கூச்சல்களும் நம்மைச் சுற்றி கேட்டுக் கொண்டே இருக்கும். பட்டப் பகலில் மாலுமி ஒருவன் ஒரு கட்டிடத்திலிருந்து வெளியே தூக்கியெறியப்படும் காட்சியை நாம் பார்க்கலாம். அவனைத் தூக்கி வெளியே எறிந்த பெண்களும், கோபமே வடிவமாக நின்றிருக்கும் மனிதனும் அவனைத் தொடர்ந்து வெளியே வருவார்கள். அவர்களைப் பார்த்து அவன் பயந்து நடுங்குவான். சாக்குமூட்டைகள் மேல் தடுமாறி விழுந்து ஏதாவதொரு சரக்குகள் வைக்கப்படும் கட்டிடத்தின் ஜன்னல் வழியாக தப்பியோடும் மனிதனைப் பார்க்கும் போது எனக்கே என்னவோ போல் இருக்கும்.
எல்லாவற்றையும் கடந்து நாம் கடைசிக்குப் போனால் அங்கு இயந்திரப் படகுகள் நின்றிருக்கும். அதற்கு மேல் அங்கு எதுவும் இல்லை. பரந்து விரிந்து காட்சியளிக்கும் வயல்களில் ஈரம் இருக்கும். ஈரம் பட்டிருக்கும் கதிர்கள் காற்றில் இங்குமங்குமாய் ஆடும். எங்கு பார்த்தாலும் சேறு. ஆற்றில் ஒரே ஒரு கருப்பு வர்ண படகு மட்டும் இருக்கும். முன்னால் இருக்கும் நீர் சாம்பல் வர்ணத்தில் இருக்கும். வானமும்தான். பனியும் குளிர்ச்சியும் சுற்றிலும் இருக்கும். சுற்றிலும் தெரியும் சாம்பல் நிறம் ஏதோ பாலைவனத்தில் இருக்கும் பிரமையை நமக்கு உண்டாக்கும்.
துறைமுகம் இருக்கும் பகுதியை நாம் பார்த்துக் கொண்டிருக்கும்போது, சில நேரங்களில் அங்கிருக்கும் சூழ்நிலையே அடியோடு மாறிவிடும். கண்களுக்கு ஓய்வு கொடுக்க முடியாத அளவிற்கு அதன் தோற்றமே மிகவும் வித்தியாசமானதாகிவிடும். பல்வேறு வர்ணங்களும் இங்குமங்குமாய் தெரிய, நமக்கே அது கண்கொள்ளா காட்சியாக இருக்கும். மோல் வரைந்த ஓவியங்களில் தென்படும் அழகான கோடுகளைப் போல் வனப்பு மிக்கதாக இருக்கும் அந்த முழுப் பகுதியும்.