அன்புள்ள தியோ - Page 31
- Details
- Category: வாழ்க்கை வரலாறு
- Published Date
- Written by sura
- Hits: 7837
இப்போது அழகான உடலமைப்பைக் கொண்ட ஒரு இளம்பெண் உற்சாகமான முகத்துடன் வெளியே பார்க்கிறாள். அடுத்த நிமிடமே பார்த்தாலே பயம் உண்டாகிற மாதிரியான தோற்றத்துடன் இன்னொரு மெலிந்து போன பெண் வந்து நிற்கிறாள். அம்மை பாதித்த முகத்தைச் சற்று மனதில் கற்பனை பண்ணிப் பார். அதுதான் அவளின் தோற்றம். ஒளி மங்கிப் போன சாம்பல் நிறக் கண்கள், அதற்குமேல் புருவம் கிடையாது. சிறிய அடர்த்தி குறைவான கூந்தல், மஞ்சள் நிறம்... ஸ்வீடன் அல்லது டென்மார்க் நாட்டைச் சேர்ந்தவளாக இருக்க வேண்டும். இந்தக் காட்சியைப் பார்த்துக் கொண்டே இருக்கலாம் போல்தான் இருக்கிறது.
எவ்வளவு நேரம்தான் அதையே பார்த்துக் கொண்டு இருப்பது?
நான் ஒவ்வொரு தெருவாக சுற்றி அலைந்தேன். பெரிதாக அங்கு ஒன்றும் நான் பண்ணவில்லை. ஆனால், பலதரப்பட்ட பெண்களுடன் அமர்ந்து ஜாலியாக பேசிக் கொண்டிருந்தேன். அவர்கள் என்னை ஒரு மாலுமி என்று நினைத்துவிட்டார்கள்.
ஓவியம் வரைவதற்கு அங்கு நல்ல மாடல்கள் கிடைப்பார்கள் என்பதைத் தெரிந்து கொண்டேன்.
இன்று என்னுடைய சாமான்களையும், ஓவியம் வரைய பயன்படும் பொருட்களையும் பெற்றுக் கொண்டேன். இதற்காக நான் எப்படியெல்லாம் காத்திருந்தேன்.
என்னுடைய ஸ்டுடியோ கிட்டத்தட்ட தயாராகிவிட்ட மாதிரிதான். பணம் எதுவும் செலவழிக்காமல் நல்ல மாடல்கள் கிடைத்தால், நான் பயப்படுவதற்கு அவசியமே இல்லை. அவர்களுக்குக் கொடுக்கக்கூடிய அளவிற்கு என்னிடம் என்ன பணம் இருக்கிறது? அதற்காக நான் வருத்தப்படவில்லை. போஸ் தருவதற்காக அவர்களுக்கு ஏதாவது கொடுப்பது என்பதுதான் உண்மையிலேயே சரியான விஷயம். காரணம் - நகரத்தில் இருக்கும் மாடல்களுக்குத் தரும் பணத்திற்கும் இங்கிருக்கும் விவசாயிகளுக்குத் தருவதற்குமிடையே மிகப்பெரிய வேறுபாடு இருக்கிறது. ஆனால், ஒரு விஷயம் மட்டும் உண்மை. ஆன்ட்வெர்ப் ஒரு ஆர்வத்தைத் தூண்டக்கூடிய இடம். ஒரு ஓவியனுக்கு ஏற்ற இடம் இது.
என்னுடைய ஸ்டுடியோ அப்படியொன்றும் மோசமானதாக இல்லை. நிறைய சிறு சிறு ஜப்பானிய படங்களை நான் சுவரில் மாட்டி வைத்திருக்கிறேன். அப்படி மாட்டி வைக்கப்பட்டிருக்கும் படங்கள் எனக்கு மிகவும் பிடித்திருக்கின்றன. தோட்டங்களில் இருக்கும் பெண்கள், கடற்கரையில் இருக்கும் பெண்கள், குதிரை வீரர்கள், மலர்கள், முட்செடிகளின் கிளைகள் - இப்படி பல்வேறு வகைப்பட்ட படங்கள் என் ஸ்டுடியோவின் சுவரை அலங்கரித்துக் கொண்டிருக்கின்றன.
என் வேலையை நான் தொடங்கிவிட்டேன் என்பதற்காக உண்மையிலேயே சந்தோஷப்படுகிறேன். இந்த குளிர் காலம் வரையில் நான் வெறுமனே உட்கார்ந்திருக்க வேண்டியதில்லை. எனக்கு ஒரு இடம் கிடைத்துவிட்டது என்பதற்காக மனதில் மகிழ்ச்சியடைகிறேன். அது ஒரு சிறிய இடம் என்பது வேறு விஷயம். காலநிலை மிகவும் மோசமாக இருக்கும்போதுகூட நான் அங்கு அமர்ந்து ஓவியங்களை வரைய முடியும் என்பது எவ்வளவு பெரிய விஷயம்?
அதே நேரத்தில் இன்னொரு விஷயத்தையும் உன்னிடம் நான் சொல்லியாக வேண்டும். கடந்த பல நாட்களாகவே நான் அப்படியொன்றும் வசதியாக வாழவில்லை என்பதே அது. முதல் தேதி எனக்குக் கடிதம் வருவது மாதிரி நீ அனுப்பி வைத்தால் நன்றாக இருக்கும். அதுவரை சாப்பிடுவதற்குத் தேவையான பணம் என்னிடம் இருக்கிறது. அதற்குப் பிறகுதான் நான் பிரச்னைக்குரிய மனிதனாகவே ஆவேன்.
நான் எதிர்பார்த்ததைவிட என்னுடைய சிறிய அறை மிகவும் நன்றாக இருக்கிறது. அப்படியொன்றும் மோசமாக இருப்பதுபோல் அது தோன்றவில்லை. என்னிடம் நான் வரைந்த மூன்று ஓவியங்கள் இருக்கின்றன. அவற்றை ஓவியங்களை விற்பனை செய்யும் நபர்களிடம் கொண்டு செல்லலாம் என்று இருக்கிறேன். தெருவைப் பார்க்கும் ஜன்னலே இல்லாத பெரிய மாளிகைகளில் அவர்கள் வசித்துக் கொண்டிருப்பார்கள்.
இங்கிருக்கும் பூங்கா மிகவும் அழகாக இருக்கிறது. ஒருநாள் காலையில் அங்கு அமர்ந்து நான் ஓவியம் தீட்டினேன்.
அப்படியொன்றும் அதிர்ஷ்டக் குறைவு உள்ள மனிதனாக நான் இல்லை. தங்குவதற்கான இடத்தைப் பொறுத்தவரை எனக்குக் கிடைத்திருப்பது நல்ல இடமே. சில ஃப்ராங்குகளைச் செலவு செய்து நான் ஒரு ஸ்டவ்வையும் ஒரு விளக்கையும் வாங்கி வைத்திருக்கிறேன்.
அவ்வளவு எளிதில் நான் தளர்ந்துவிட மாட்டேன். அதை மட்டும் உன்னிடம் உறுதியாக என்னால் கூற முடியும். லெர்மி வரைந்த ‘அக்டோபர்’ என்ற ஓவியத்தைப் பார்க்க நேர்ந்தது. மாலை நேரத்தில் ஒரு உருளைக்கிழங்கு தோட்டத்தில் அமர்ந்திருக்கும் அந்தப் பெண் என்னை மிகவும் கவர்ந்துவிட்டாள். மிகவும் அழகான ஓவியம் அது. ஆனால், நான் ‘நவம்பர்’ என்ற ஓவியத்தை இதுவரை பார்க்கவில்லை. உன்னிடம் அது இருக்கிறதா? ரஃபேல் வரைந்த ஒரு அழகான ஓவியத்தையும் சமீபத்தில் எனக்கு பார்க்கும் சந்தர்ப்பம் கிடைத்தது.
என்னுடைய முகவரி- 194, ர்யூ தேஇமேஜஸ். உன்னுடைய கடிதத்தை அந்த முகவரிக்கே அனுப்பு. தே கான்கோ ஃப்ரெஞ்ச் ஓவியங்களைப் பற்றி எழுதிய கட்டுரைகள் அடங்கிய தொகுப்பின் இரண்டாவது பாகத்தையும் நீ படித்து முடித்தபிறகு, எனக்கு அனுப்பி வை. இத்துடன் கடிதத்தை முடிக்கிறேன்.
உன்
வின்சென்ட்
என்னுடைய ஓவியங்கள் இங்கு இருப்பதைவிட நகரத்தில் பார்க்கும்போது கறுப்பாக இருப்பது விநோதமான ஒரு விஷயம்தான். நகரமெங்கும் இருக்கும் வெளிச்சம் கிராமப் பகுதியைவிட சற்று குறைவு என்பது இதற்கு அர்த்தமா? இது பற்றி எனக்கு எதுவும் தெரியாது. இதைக் கேட்டு உண்மையிலேயே எனக்கு அதிர்ச்சியாக இருக்கிறது. நான் இங்கு இருந்துகொண்டு என்னுடைய ஓவியங்கள் எப்படி இருக்கின்றன என்று நினைத்துக் கொண்டிருக்கிறேனோ, அதைவிட கறுப்பாக நீ அவற்றைப் பார்க்கிறாய் என்பதை இப்போது தெரிந்து கொண்டேன். எது எப்படியோ, இப்போது என் கைவசம் இருக்கும் ஓவியங்கள் எந்த காரணத்தைக் கொண்டும் மோசமானதாக இல்லை. மில், இளவேனிற்கால மரங்கள் நிறைந்த சாலை ஆகியவற்றுடன் வேறு சில ஓவியங்களும் தற்போது என்னிடம் இருக்கின்றன.
***
ஆன்ட்வெர்ப், ஜனவரி 1886
அன்புள்ள தியோ,
நான் பாரீஸுக்கு வருவதை, ஜுன், ஜூலைக்கு முன்னால் இருக்கும்படி நீ பார்த்துக் கொண்டால் எனக்கு மிகவும் உதவியாக இருக்குமென்று எண்ணுகிறேன். அங்கு வருவதைப் பற்றி நான் மனதில் ஆர்வத்துடன் இருக்கிறேன்.
ஒழுங்கான சாப்பாடும் மற்ற விஷயங்களும் கிடைத்தால் ஆறு மாத காலத்திற்குள் நிச்சயம் நான் நல்ல நிலைக்கு வந்துவிடுவேன்.
நான் மிகவும் பலவீனமாக இருப்பதாக உணர்கிறேன். அளவுக்கு அதிகமான வேலை காரணமாக நான் மிகவும் பாதிக்கப்பட்டிருக்கிறேன். சாதாரணமாக இது நடக்கக்கூடியதுதான். இதில் ஆச்சரியப்படுவதற்கு ஒன்றுமே இல்லை. நல்ல உணவை சாப்பிட வேண்டும். அதுதான் இப்போது முக்கியம்.