அன்புள்ள தியோ - Page 27
- Details
- Category: வாழ்க்கை வரலாறு
- Published Date
- Written by sura
- Hits: 7837
இந்த இடத்திற்கு பயணம் வந்ததற்காக உண்மையிலேயே சந்தோஷப்படுகிறேன். இங்கு நான் பார்த்த காட்சிகள் என்னை வெகுவாகக் கவர்ந்துவிட்டன. இந்த மாலைவேளையில் இங்கிருக்கும் மண் குவியல்கள் வார்த்தையால் விவரிக்க முடியாத அளவிற்கு மிகவும் அழகாக இருக்கின்றன. தௌபினி வரைந்த ஒரு ஓவியத்தில் இத்தகைய ஒரு காட்சியைப் பார்க்கலாம். வானம் இந்த மாதிரிதான் இருக்கிறது என்று வாயால் சொல்ல முடியாத அளவிற்கு சாம்பல் கலந்த வெள்ளை நிறத்தில் காட்சியளிக்கிறது. மேகங்கள் திட்டுத்திட்டாக என்றில்லாமல் சாம்பல், வெள்ளை, பழுப்பு என்று பல்வேறு நிறங்களில் அடர்த்தியாக வானமெங்கும் படர்ந்திருக்கின்றன. அவற்றுக்கு நடுவில் வானத்தின் விளிம்பில் பிரகாசமான ஒரு சிவப்பு ஒளிக்கீற்று தெரிகிறது. அதற்குக் கீழே ப்ரவுன் வர்ணத்தில் மலைகள் காட்சியளிக்கின்றன. அந்த சிவப்பு கீற்றுக்கு மிகவும் கீழே வரிசையாக அமைந்திருக்கும் சிறு குடிசைகள் தெரிகின்றன. மாலை நேரங்களில் இந்த இடம் மிகவும் அமைதி தவழும் ஒரு இடமாக நமக்கு காட்சித் தரும். டான்குய்க்ஸாட்டின் கதைகளில் வரும் மில்களும், பாலங்களும் பிரகாசித்துக் கொண்டிருக்கும் மாலை நேர வானத்திற்குக் கீழே நிழல் வடிவத்தில் தெரியும். மாலை நேரத்தில் இந்த கிராமம் தண்ணீரில் பிரகாகமாகத் தெரியும் ஜன்னல்களைப் பிரதிபலித்தபடி நமக்கு ஒரு அழகான காட்சியாகத் தெரியும்.
ஹூக்வீனை விட்டு புறப்படுவதற்கு முன்னால் நான் பல படங்களை வரைந்தேன். அவற்றில் ஒன்று பாசி படர்ந்த ஒரு பெரிய வீடு. அதை வரையும்போது என்னை முழுமையாக அதில் ஈடுபடுத்திக் கொண்டேன். சொல்லப் போனால் அதை வரையும்போது என்னையே நான் மறந்துவிட்டேன். அந்த ஓவியம் மிகவும் சிறப்பாக வந்திருப்பதாகவே நான் நினைக்கிறேன்.
நீ அமெரிக்காவிற்குப் போக வேண்டும் என்று ஆசைப்பட்டதைப் போலவே, நான் கிழக்கு இந்தியத் தீவுகளுக்குப் போக வேண்டும் என்ற எண்ணத்தை மனதில் வைத்திருக்கிறேன். இந்த மாதிரியான ஆசைகள் மனதை ஆக்கிரமித்துக் கொண்டிருப்பது உண்மையிலேயே கவலை தரக்கூடிய ஒரு விஷயம்தான். ஜன்னல் வழியாக இப்போது நான் பார்த்துக் கொண்டிருக்கும் காட்சிகளை நீ பார்க்க என்று பிரியப்படுகிறேன். அமைதி தவழும் இந்த கிராமம் - ஒரு மனிதனை நம்பிக்கையுடையவனாகவும், ஓய்வுடன் இருக்கக்கூடியவனாகவும், வேலையில் முழுமையான ஈடுபாட்டுடன் இருக்கக்கூடியவனாக மாற்றிவிடும். இங்கிருந்தவாறு நிறைய படங்களை வரைய வேண்டும் என்பதற்காகவே சற்று அதிகமாக இங்கு நான் தங்கிவிட்டேன். ஸ்வீலூவிற்கு மிகவும் அருகில்தான் நான் இருக்கிறேன். பலருடன் லிபர்மேனும் அங்குதான் இருக்கிறார். இங்கு பழமையான, பெரிதாக இருக்கும் பல குடிசைகளை நீ பார்க்கலாம். இதில் ஆச்சரியம் என்னவென்றால் மாட்டுத் தொழுவத்திற்கும் வசிக்குமிடத்திற்குமிடையே ஒரு சிறு தடுப்புகூட இருக்காது. இத்தகைய ஒரு இடத்தைத்தான் பார்க்க வேண்டும் என்று இத்தனை நாட்களாக நான் காத்திருந்தேன்.
இந்த கிராமத்தில் இருக்கும் பழமை, பரந்து கிடக்கும் தன்மை, அமைதி - இதை இங்கு வரும் ஒவ்வொருவரும் காணலாம். நிரந்தரமாக எனக்கென்று ஒரு முகவரியை உன்னிடம் கொடுக்க முடியாத நிலையில் நான் இருக்கிறேன். காரணம் - அடுத்து வரும் சில நாட்களுக்கு நான் எங்கு இருப்பேன் என்ற விஷயம் எனக்கே தெரியாததுதான். ஆனால், அக்டோபர் 12ஆம் தேதி நான் ஹூக்வீனில்தான் இருப்பேன். அந்த முகவரிக்கே நீ அந்த சமயத்தில் கடிதம் எழுதலாம். நான் கடிதத்தைப் பிரித்துக் கொள்வேன்.
இப்போது நான் இருப்பது புதிய ஆம்ஸ்டர்டாமில்.
அப்பா பத்து கில்டாருக்கு போஸ்டல் ஆர்டர் அனுப்பியிருந்தார். அதோடு சேர்ந்து நீ அனுப்பியிருந்த பணமும் வந்தது. இதை வைத்து நான் கொஞ்சம் படங்களை வரையலாம்.
இப்போது நான் தங்கியிருக்கும் விடுதியிலேயே சில நாட்கள் தங்கியிருக்கலாம் என்று திட்டமிட்டிருக்கிறேன். இங்கிருந்த அந்தப் பெரிய குடிசைகள் இருக்கும் இடத்திற்கு நான் எளிதாக போய் வர முடியும். அங்கு விசாலமான இடங்கள் நிறையவே இருக்கின்றன. வெளிச்சத்திற்கும் பஞ்சமேயில்லை. அந்த ஆங்கிலேயர் வரைந்த ஓவியத்தைப் பற்றி நீ உன் கடிதத்தில் எழுதியிருந்தாய். மெலிந்து போன பூனையும் கல்லறையும் உள்ள அந்த ஓவியத்தை அந்த மனிதர் இருட்டறைக்குள் இருந்தவாறு வரைந்தார் என்று குறிப்பிட்டிருந்தாய். இருட்டான அறைக்குள் அமர்ந்து படம் வரைவது என்பது உண்மையிலேயே மிகவும் கஷ்டமான ஒரு விஷயம். அப்படி வரையப்பட்ட ஓவியம் நிச்சயம் ஆழமில்லாததாகவே இருக்கும். அந்த ஓவியத்தை வெளிச்சத்திற்குக் கொண்டு வந்தால், அதில் இருக்கும் உருவங்கள் எவ்வளவு பலமில்லாததாக இருக்கின்றன என்பது தெரிய வரும். திறந்து வைக்கப்பட்டிருந்த கதவு வழியாக அறைக்குள் அமர்ந்து வெளியே தெரிந்த சிறு தோட்டத்தை ஓவியமாக வரைந்தபோது நான் எனக்குக் கிடைத்த அனுபவம் இது.
நான் உன்னிடம் சொல்ல வருவது என்னவென்றால் அத்தகைய ஒரு கஷ்டம்கூட இங்கு இல்லை என்பதைத்தான். நல்ல வெளிச்சம் உள்ள ஒரு அறையை இங்குதான் பெற முடியும். குளிர் காலத்தின்போது வெப்பத்தைக் கொண்டு வருவதும் இங்கு ஒரு பிரச்னையாக இல்லை. நீ இனிமேலும் அமெரிக்காவைப் பற்றி நினைக்காமல் இருந்தால், பல காரியங்கள் தானாகவே நடக்கும் என்று உறுதியாக நான் நம்புகிறேன்.
அங்கிள் சி.எம்.வான்கா ஏன் அமைதியாக இருக்கிறார் என்பதற்கு நீ கொடுத்த விளக்கம் எனக்கு சரி என்றே படுகிறது. ஆனால், பல நேரங்களில் ஒரு மனிதர் இந்த மாதிரி சிரத்தை இல்லாமல் வேண்டுமென்றே இருப்பதுகூட நடக்கக்கூடியதுதான். பின் பக்கத்தில் நீ சில படங்களைப் பார்க்கலாம். நான் அவசரத்தில் இந்தக் கடிதத்தை எழுதுகிறேன். இப்போதே நேரம் அதிகம் ஆகிவிட்டது.
இங்கு நாம் இருவரும் சேர்ந்து நடக்க வேண்டும், நாம் இருவரும் சேர்ந்து படம் வரைய வேண்டும் என்று நான் ஆசைப்படுவது நியாயம்தானே? இந்த கிராமம் உனக்கு மிகவும் பிடிக்கும். நிச்சயமாக இது உன்னைக் கவரும் என்ற திடமான நம்பிக்கை எனக்கு இருக்கிறது. இத்துடன் கடிதத்தை முடிக்கிறேன். நீ நலமாக இருப்பாய், நல்ல விஷயங்கள் பலவும் அங்கு நடக்கும் என்ற நம்பிக்கை எனக்கு இருக்கிறது. இந்தப் பயணத்தின்போது உன்னைப் பல சமயங்களில் நான் நினைத்திருக்கிறேன். கை குலுக்கிக்கொண்டு.
உன்
வின்சென்ட்
***