அன்புள்ள தியோ - Page 39
- Details
- Category: வாழ்க்கை வரலாறு
- Published Date
- Written by sura
- Hits: 7836
ஓவேர், ஜூலை 1890
அன்புள்ள சகோதரனுக்கும் சகோதரிக்கும்,
ஜோ எழுதிய கடிதம் எனக்கு ஒரு வேதத்தைப்போல இருந்தது. நான் அங்கு உங்களுடன் இருந்த நாட்களின்போது உண்டான மன பாதிப்பின் வெளிப்பாடுதான் அந்தக் கடிதம். அன்றாட வாழ்க்கையின் ஓட்டத்திற்காக தினமும் உழைத்துக் கொண்டிருக்கும் நமக்கு உண்மையிலேயே அந்த நிமிடங்கள் சாதாரணம் இல்லைதான். சாப்பிட்டு வாழும் வழக்கமான வாழ்க்கையைத் தாண்டி மேலும் பல இருக்கின்றன என்று நாம் நினைக்கக் கூடியவர்கள்தானே. அதே நேரத்தில் வாழ்க்கையை நடத்த பல கஷ்டங்களையும் நாம் தாண்டத்தான் வேண்டியிருக்கிறது.
என் விஷயத்தை எடுத்துக் கொண்டால், பல நேரங்களில் நான் கூட கவலையில் ஆழ்ந்து விடுகிறேன். உங்களை அழுத்தும் வாழ்க்கையின் பாரம் என்னையும் அழுத்துவதாகவே நான் உணர்கிறேன். என்ன செய்ய முடியும்? முடிந்தவரை உற்சாகமாக இருக்க முயல்கிறேன். ஆனால், பல நேரங்களில் என் வாழ்க்கையின் அடிவேரே ஆட்டம் கண்டு விடுகிறது. நான் எடுத்து வைக்கும் ஒவ்வொரு அடியும் நிலையில்லாத போகிறது.
உங்களுக்கு நான் பெரிய அளவில் இல்லையென்றாலும், சிறிதளவிலாவது சுமையாக இருக்கிறேனோ என்றும், அதனால் என்னை நீங்கள் விலக்கி வைப்பீர்களோ என்றுகூட பல நேரங்களில் நான் பயப்படுகிறேன். ஆனால், ஜோ எழுதிய கடிதம் எனக்கு மிகவும் ஆறுதலாக இருந்தது. நான் மிகவும் கஷ்டப்பட்டுக் கொண்டிருக்கிறேன். உங்களைப்போலவே நானும் மிகவும் சிரமத்தில் இருக்கறேன் என்பதையும் நீங்கள் என்னைப் பற்றி நன்றாகவே புரிந்து வைத்திருக்கிறீர்கள் என்பதையும் அந்தக் கடிதத்தின் மூலம் நான் தெரிந்து கொண்டேன்.
நான் மீண்டும் இங்கு ஓவியம் வரைய உட்கார்ந்துவிட்டேன். ப்ரஷ் கையை விட்டு நழுவி கீழே விழும் அளவிற்கு நான் வரைந்து கொண்டிருக்கிறேன். இதுவரை மூன்று படங்களை வரைந்து முடித்து விட்டேன்.
மேகங்கள் சூழ்ந்து இருண்டு போய் காணப்படும் வானத்திற்குக் கீழே பரந்து கிடக்கும் தானியக் கதிர்களை ஓவியத்தில் வரைந்திருக்கிறேன். அங்கிருக்கும் சோகத்தையும் தனிமையின் உச்ச நிலையையும் தேவையில்லாமல் ஓவியத்தில் கொண்டு வரும் அளவற்கு நான் போக வேண்டியதில்லை என்று நினைக்கிறேன். வெகு சீக்கரமே இந்த ஓவியங்களை நீங்கள் பார்ப்பீர்கள். எவ்வளவு விரைவாக முடியுமோ அவ்வளவு விரைவாக இந்த ஓவியங்களை நான் பாரீஸுக்குக் கொண்டு வந்து உங்களுக்குக் காட்டுகிறேன். நான் வார்த்தைகளால் சொல்ல முடியாததை இந்த ஓவியங்களில் சொல்லி இருப்பதை அதைப் பார்க்கும்போது உங்களால் புரிந்து கொள்ள முடியும். இந்த கிராமப் பகுதியில் இருக்கும் ஆரோக்கியமான சூழ்நிலையையும், கிராமத்திற்கென்றே இருக்கும் உயிர்ப்பையும் கூட நீங்கள் அவற்றில் காணலாம். நான் வரைந்திருக்கும் மூன்றாவது ஓவியம் - தாபினியின் தோட்டம். இங்கு வந்து சேர்ந்ததிலிந்து அந்த ஓவியத்துடன்தான் நான் போராடிக் கொண்டிருக்கிறேன்.
இப்போது திட்டமிடப்பட்டிருக்கும் பயணம் உங்கள் மனதிற்கு சிறிது மாற்றத்தைத் தரும் என்ற நம்பிக்கை எனக்கு இருக்கிறது.
எனக்கு எப்போதும் குழந்தையைப் பற்றித்தான் சிந்தனை. இருக்கும் சக்தி எல்லாவற்றையும் படங்களை வரைந்து கொண்டிருப்பதற்காகப் பயன்படுத்துவதைக் காட்டிலும், குழந்தையை வளர்ப்பது எவ்வளவோ மேல். என்னால் அதை உணர முடிகிறதே தவிர, நிச்சயம் வாழ்க்கையைப் பின்னோக்கி திருப்பிக் கொண்டு போக முடியுமா என்ன? நான் அதைத் தாண்டி வெகுதூரம் வந்துவிட்டேன். மாறுபட்டு எதையாவது யோசிப்பதுகூட என்னைப் பொறுத்தவரை வீண் என்று உணர்கிறேன். அப்படிப்பட்ட ஆசைகள் என்னைவிட்டு முழுமையாகப் போய் விட்டன. ஆனால், அந்த எண்ணம் உண்டாக்கும் காயங்கள் என்னவோ இப்போதும் மனதில் எஞ்சி இருக்கத் தான் செய்கின்றன.
கில்லாமினை மீண்டும் பார்க்க முடியாமல் போனதற்காக வருத்தப்படுகிறேன். ஆனால், என் ஓவியங்களை அவர் பார்த்தார் என்பதை அறிந்து உண்மையிலேயே மிகவும் மகிழ்ச்சியடைகிறேன்.
சிறிது காத்திருந்து அவரைப் பார்த்து பேசியிருக்கலாம். ஆனால், நான் புகை வண்டியைத் தவற விட்டிருப்பேன்.
அதிர்ஷ்டம், தைரியம், வளம் - எல்லாம் வாழ்க்கையில் கிடைக்க வேண்டும் என்று வாழ்த்துகிறேன். அம்மாவையும், நம் தங்கைகளையும் நான் மிகவும் விசாரித்ததாகக் கூறவும். நான் அவர்களை நினைத்துக் கொண்டிருக்கிறேன் என்றும் சொல்லவும். அவர்களிடமிருந்து இன்று காலையில் ஒரு கடிதம் வந்தது. அதற்கு சீக்கிரம் பதில் எழுத வேண்டும். மனதிற்குள் கை குலுக்கியவாறு-
உங்களின்
வின்சென்ட்
என்னிடமிருக்கும் பணம் அதிக நாட்கள் தாங்காது. ஆர்ளிலிருந்து வந்த லக்கேஜுக்கு நான் கையிலிருந்த பணத்தைக் கட்டியிருக்கிறேன். பாரீஸ் பயணம் பற்றிய இனிய நினைவுகள் என் மனதில் வலம் வந்த வண்ணம் இருக்கின்றன. என் நண்பர்களை சந்திக்க வேண்டும் என்று எவ்வளவு நாட்களாக நான் நினைத்திருந்தேன் தெரியுமா? நான் சந்தித்த அந்த டச்சுப் பெண் நல்ல அறிவாளி என்பதை உணர்கிறேன். லாத்ரெக் வரைந்த இசைக் கலைஞனின் ஓவியத்தைப் பார்த்து நான் ஆச்சரியத்தின் விளிம்பிற்கே சென்று விட்டேன். அந்த ஓவியத்தைப் பார்த்து நான் மெய் சிலிர்த்துப் போனேன் என்பது உண்மை.
***
ஓவேர், ஜூலை 1890
அன்புச் சகோதரனுக்கு,
உன்னுடைய கடிதத்திற்கும் அத்துடன் இணைக்கப்பட்டிருந்த 50 ஃப்ராங்க் நோட்டிற்கும் நன்றி. முக்கியமான விஷயம் நன்கு போய்க் கொண்டிருக்கிறது. முக்கியத்துவம் இல்லாத விஷயங்களைப் பற்றி உன்னிடம் ஏன் நான் அதிகமாக சொல்ல வேண்டும்? நாம் நம்முடைய தொழிலைப் பற்றியும், வியாபாரத்தைப் பற்றியும் நிறைய பேசிக் கொண்டிருப்போம். ஆனால், நாம் போக வேண்டிய தூரமோ நிறைய இருக்கும்.
மற்ற ஓவியர்கள் மனதிற்குள் என்ன நினைத்துக் கொண்டாலும் பொதுவாக அவர்கள் அதிகம் பேசுவதில்லை. தங்கள் தொழிலைப் பற்றி அதிகம் பேசிக் கொண்டிருக்காமல் அவர்கள் விலகி நிற்பதையே விரும்புகிறார்கள்.
உண்மை என்னவென்றால் நம்முடைய ஓவியத்தைத்தான் நான் பேச செய்ய வேண்டும். நான் திரும்பவும் ஒரு உண்மையைச் சொல்கிறேன். கோரோவில் இருக்கும் மற்ற விற்பனையாளர்களை விட நீ மாறுபட்டவன். பல ஓவியங்கள் உருவானதில் உன் பங்கும் நிச்சயம் இருக்கிறது என்பதே என் எண்ணம்.
இப்போதிருக்கும் குழப்பமான நிலையில் இந்த விஷயத்தை நான் உன்னிடம் சொல்லியே ஆக வேண்டும். ஓவியங்களை விற்பனை செய்பவர்களுக்கும் ஓவியர்களுக்குமிடையே உறவு மிகவும் மோசமாக நிலவிக் கொண்டிருக்கும் இந்த சூழ்நிலையில் நான் இதை சொல்வது அவசியமும்கூட.
நான் ஓவியம் வரைவதற்காக என் வாழ்க்கையையே முழுமையாக அர்ப்பணித்திருக்கிறேன். அது இருக்கட்டும். நான் பார்த்த வியாபாரிகளைப் போல உள்ள மனிதன் நீ இல்லை. உன் பாதையை நீயே தேர்ந்தெடுத்துக் கொண்டாய் - முடிந்தவரை மனிதாபிமானத்துடன் இருப்பது என்று. ஆனால், அதற்குரிய பலன் என்ன?
இந்தக் கடிதம்தான் வின்சென்ட், தியோவிற்கு எழுதிய கடைசி கடிதம். இது வின்சென்ட் 27ம் தேதி தற்கொலை செய்து கொண்டபோது, அவனின் உடல்மேல் கிடைத்தது. தியோவின் வியாபார விஷயமாக வின்சென்ட் எழுதிய பல வாக்கியங்கள் இங்கு நீக்கப்பட்டிருக்கின்றன.