அன்புள்ள தியோ - Page 36
- Details
- Category: வாழ்க்கை வரலாறு
- Published Date
- Written by sura
- Hits: 7837
இன்று காலையில் என்னுடைய ஜன்னல் வழியாக கிராமத்தைப் பார்த்தேன். நான் பார்க்கும்போது சூரியன் இன்னும் உதிக்கவில்லை. அது உதிப்பதற்கு எவ்வளவோ முன்னால்தான் நான் பார்த்தது. அப்போது அதிகாலை நேர நட்சத்திரம் வானத்தில் இருந்தது. அது எவ்வளவு பெரியதாக இருந்தது தெரியுமா? தாபினி, ரூஸோ ஆகியோர் அதைத்தான் ஓவியமாக வரைந்திருக்கிறார்கள். அந்த ஓவியங்களில் ஒரு நெருக்கம், கம்பீரம், அமைதித் தன்மை, தனித்துவம் எல்லாற்றையும்விட இதயத்தைப் பிழியும் தன்மை இருக்கும். இப்படிப்பட்ட உணர்ச்சிகளுக்கு நான் எதிரானவன் அல்ல.
பல நேரங்களில் கனவுகளில் ஆழ்ந்து விடுவதே என்னுடைய வேலையாகி விடுகிறது. தீவிரமாக எங்கெங்கோ இருக்கும் விஷயங்களை மனதில் நினைத்துக்கொண்டு உட்கார்ந்து விடுகிறேன். அதனால் நான் செய்ய நினைக்கும் விஷயங்களில் ஓரளவுக்கே என்னால் ஈடுபட முடிகிறது. காலப்போக்கில் இந்நிலை மேலும் அருமையான ஓவியங்களைத் தீட்ட உதவும் என்று எதிர்பார்க்கிறேன். ஆனால், அப்படிப்பட்ட ஒரு நிலை இதுவரை வரவில்லை.
நான் இங்கு வந்து ஒரு மாதமாகிவிட்டது. வேறு எங்கிருந்தும் யாரும் என்னைப் பார்க்க வரவில்லை. பார்க்க வேண்டும் என்றும் அவர்களுக்குத் தோன்றவில்லை. அதன் விளைவாக, நன்றாக வேலை செய்ய வேண்டும் என்ற ஒரே எண்ணம் தான் இப்போது என் மனதில் வலிமை பெற்று நின்று கொண்டிருக்கிறது.
வேறு எங்காவது போக வேண்டும் என்ற எண்ணம் மற்றவர்களிடம் இருப்பது மாதிரி எனக்குத் தோன்றவில்லை. வாழ்க்கையை நடத்துவதற்காக நாம் வெவ்வேறு இடங்களில் சிதறக் கிடப்பதால் நமக்கு இப்படிப்பட்ட எண்ணங்கள் தோன்றுகின்றன என்று நினைக்கிறேன்.
என்னால் கொஞ்சம்கூட புரிந்துகொள்ள முடியாதது, எல்லோரும் எப்படி ஒன்றுமே செய்யாமல் அமைதியாக இருக்கிறார்கள் என்பதுதான். அதுதான் தெற்கில் உள்ளவர்களின் மிகப்பெரிய தவறு. அவர்களின் அழிவிற்குக் காரணம்கூட இந்தப் போக்குதான். ஆனால் என்ன அழகான கிராமம் தெரியுமா இது? வானத்தின் நீலமும் மேலே தெரியும் சூரியனும்... அடடா, இருந்தாலும் நான் கார்டனை மட்டுமே பார்த்திருக்கிறேன். ஜன்னல் வழியே எதைப் பார்க்க முடியுமோ அதைப் பார்க்கிறேன்.
மாப்பசானின் புதிய நூலான ‘ஸ்ட்ராங் அஸ் தி டெட்’ஐப் படித்தாயா? என்ன அருமையான கதை தெரியுமா அது? அந்த வரிசையில் அமைந்த நூல்களில் நான் படித்த கடைசி புத்தகம் ஸோலாவின் ‘தி ட்ரீம்’. அதில் காட்டப்பட்டிருக்கும் எம்ப்ராய்டரி பண்ணும் பெண்ணின் உருவம் மிக மிக அழகானது. எம்ப்ராய்டரியைப் பற்றிய விளக்கம் பொன் வர்ணத்தில் சொல்லப்பட்டிருந்தது. பொன் வர்ணம் என்பது பல்வேறு மஞ்சள் வர்ணத்தின் ஒரு கூட்டுதானே. ஆனால் அதில் இருந்த மனிதனின் உருவம் அவ்வளவு இயற்கையாக இல்லை என்பதே என் எண்ணம். பெரிய சர்ச்சின் உருவத்தில்கூட எனக்கு திருப்தியில்லை. அதுகூட அதிக நீல வர்ணத்தில் இருக்கிறது என்பதே என் கருத்து. வேறு வர்ணங்களை பயன்படுத்தியிருந்தால், நிச்சயம் அது மேலும் நன்றாக இருந்திருக்கும். அந்த மாதிரியான விஷயங்களை லமார்ட்டினில் பார்க்கலாம்.
நான் உனக்கு அனுப்பியிருந்த ஓவியங்களில் மிகவும் மோசமாக இருப்பவற்றை நீயே விட்டெறிந்து விடுவாய் என்று நினைக்கிறேன். இல்லாவிட்டால் குறைந்தபட்சம் நன்றாக இருப்பதை மட்டுமே மற்றவர்களிடம் காண்பிப்பாய் என்ற எண்ணமும் எனக்கு இருக்கிறது.
நான் இங்கு ஓய்வெடுத்துக் கொண்டிருக்கிறேன் என்பதை மனதில் வைத்துக்கொள். புதிய கேன்வாஸும் பெயின்ட்டுகளும் என் கைக்கு வந்தபிறகு, நான் வெளியே போய் இந்தக் கிராமத்தின் ஒரு பகுதியைப் பார்த்து வரலாமென்று இருக்கிறேன்.
எங்கு பார்த்தாலும் மலர்கள் பூத்துக் குலுங்கிக் கொண்டிருக்கின்றன. பார்க்கும் திசைகளெல்லாம் பல்வேறு வர்ணங்கள் கண்ணில் தெரியும் என்பதை நான் சொல்ல வேண்டுமா என்ன? அதனால் ஐந்து மீட்டர் அதிகமாக கேன்வாஸை எனக்கு அனுப்பி வை.
பூக்கள் கொஞ்ச நாட்கள்தான் இருக்கும். அதற்குப் பிறகு மஞ்சள் வர்ணத்தில் தானியக் கதிர்கள் வந்துவிடும். ஆர்ளில் நான் பார்த்ததைவிட, இங்கு அது நன்றாக இருக்கும் என்று நினைக்கிறேன். ஆர்ளில் இருந்ததைவிட, இங்கு மலைகள் அதிகம் இருப்பதால், சூறாவளி காற்றின் வேகம் குறைவாகவே இருக்கிறது. இதுவே ஆர்ளாக இருந்தால், காற்றின் கொடுமையைத் தாங்கவே முடியாதே.
தோட்டத்தில் நான் வரைந்த ஓவியங்கள் உன் கையில் கிடைத்த பிறகு, நான் இங்கு அதிக கவலையில் இல்லை என்பதை நீயே உணர்வாய்.
இத்துடன் இப்போதைக்கு கடிதத்தை முடிக்கிறேன். உன்னிடமும் ஜோவிடமும் மனதிற்குள் கைகுலுக்கிக்கொண்டு.
உன்
வின்சென்ட்.
***
செயின்ட்-ரெமி, பிப்ரவரி, 1890
அன்புள்ள தியோ,
சிறிது நேரத்திற்கு முன்புதான் உன்னிடமிருந்து நீ தந்தையான நல்ல செய்தியை அறிந்தேன். ஜோவிற்கு இருந்த இக்கட்டான நேரம் முடிவடைந்தது குறித்து மகிழ்ச்சி. பொடி பையன் நன்றாக இருக்கிறான் அல்லவா? நான் வார்த்தையால் சொல்வதைவிட இந்த செய்தி எனக்கு ஏகப்பட்ட சந்தோஷத்தை அளிக்கிறது. இதைக் கேட்டு அம்மா எந்த அளவிற்கு மகிழ்ச்சி அடைவார்கள் என்பதை நினைத்துப் பார்க்கிறேன். இரண்டு நாட்களுக்கு முன்பு அம்மா ஒரு நீண்ட கடிதம் எழுதியிருந்தார். உனக்கு என்ன நடக்க வேண்டுமென்று நான் நினைத்தேனோ, அது நடந்திருக்கிறது. நான் கடந்த பல நாட்களாக உன்னைப் பற்றி என்னவெல்லாம் நினைத்தேன் என்பதை சொல்ல வேண்டிய அவசியமில்லை என்று நினைக்கிறேன். உன் கடிதம் என் மனதை மிகவும் தொட்டுவிட்டது. ஜோ இரவில் உட்கார்ந்து எனக்கு கடிதம் எழுதியதை நினைத்து மனதில் மிகவும் மகிழ்ச்சியடைகிறேன். கஷ்டமான நிமிடங்களில்கூட அவள் தைரியமாகவும் அமைதியாகவும் இருந்ததை மனதிற்குள் எண்ணி பெருமிதம் கொள்கிறேன். நான் உடல்நலமில்லாமல் இருந்த கடைசி நாட்களை மறக்க இந்தக் கடிதம் உதவியது. நான் இப்போது எங்கிருக்கிறேன், என் மனம் எங்கெல்லாம் அலைபாய்ந்து கொண்டிருக்கிறது என்பது எனக்கே தெரியவில்லை.
என்னுடைய ஓவியங்களைப் பற்றி ஆல்பெர்த் ஆரே எழுதியிருந்த கட்டுரையை நீ அனுப்பியிருந்ததைப் பார்த்து நான் ஆச்சரியமடைந்தேன். எப்படியெல்லாம் வரையக்கூடாது என்பதைவிட எப்படியெல்லாம் வரையலாம் என்பதைப் பற்றித்தான் நான் அதிகமாக சிந்திக்கிறேன் என்பது நான் சொல்லித்தான் உனக்கு தெரிய வேண்டுமா என்? அந்தக் கட்டுரையாளர் மிகவும் சரியாகவே எழுதியிருந்தார். ஒரு பெரிய வெற்றிடத்தை நிரப்ப வேண்டியிருக்கிறது என்று அவர் குறிப்பிட்டிருந்தது சரியே. அது எனக்கு மட்டும் சொல்லப்பட்ட ஒன்றல்ல. எல்லா இம்பரஷனிஸ்ட்டுகளுக்கும் கூறப்பட்டதாகவே நான் நினைக்கிறேன். சரியான நேரத்தில் எழுதப்பட்டிருந்த அந்தக் கட்டுரை எனக்கு மிகவும் பிடித்திருந்தது. கட்டுரையாளர் பல்வேறு விஷயங்களையும் தெரிந்திருக்கும் ஒரு நபர் என்று எப்படி மற்றவர்கள் கண்களுக்குப் படுகிறாரோ, அதே மாதிரிதான் என் கண்களுக்கும் படுகிறார். ஆங்காங்கே நல்லவை பல இருக்கவே செய்கின்றன என்கிறார் - என்னுடைய ஓவியங்களைப் பார்த்துவிட்டு. உண்மைதான்.