வருவேன் நான் உனது... - Page 7
- Details
- Category: மர்ம கதைகள்
- Published Date
- Written by சித்ரலேகா
- Hits: 9793
4
கைவிரல்களில் சொடக்குப் போட்டபடியே இருந்தான் அரவிந்த்.
“என்னப்பா அரவிந்த். நான் பேசிக்கிட்டே இருக்கேன். நீ எதுவுமே பதில் சொல்லாம இருந்தா என்ன அர்த்தம்? உடம்பு சரியில்லாம படுத்த படுக்கையா இருக்கற உங்கம்மா உன்னோட கல்யாணத்தப் பார்க்கணும்னு ஆசைப்படறா. உனக்கு நல்ல மனைவி அமைஞ்சு உன் குடும்ப வாழ்க்கை கந்தோஷமா இருக்கணும்னு ஆசைப்படறா. நம்மளோட ஏராளமான சொத்துகளைக் கட்டிக் காக்க, வாரிசுகள் உருவாகணும். அந்த வாரிசுகளை உருவாக்குறதுக்கு இந்த வீட்டுக்கு ஒரு மருமகள் வரணும். எந்தப் பொண்ணைக் காண்பிச்சாலும் ‘பிடிக்கல’, ‘பிடிக்கலை’ன்னு சொல்லிடற நீ யாரையாவது காதலிச்சாலுங்கூடப் பரவாயில்லை. தைரியமா என்கிட்ட சொல்லலாம். அந்தப் பெண்ணையே உனக்குக் கல்யாணம் பண்ணி வைக்கத் தயாரா இருக்கேன். எங்க காலத்துல எல்லாம் ஜாதி விட்டு ஜாதியில காதல், கல்யாணம் இதெல்லாம் மனசால கூட நெனச்சுப் பார்க்க முடியாது. இப்ப காலம் மட்டும் மாறல, என்னோட மனசும் மாறியிருக்கு. எங்களோட ஒரே மகனான நீ கல்யாணமாகிக் குடும்பஸ்தனா ஆகணும்னு ரொம்ப ஆசைப்படறோம். அதனால வேற ஜாதிப் பொண்ணா இருந்தாலும் பரவாயில்லை. ஏழையா இருந்தாலும் பரவாயில்லை. நீ காதலிக்கற பொண்ணு கெளரவமான குடும்பத்தைச் சேர்ந்த பொண்ணா இருக்கணும். அவ்வளவுதான். ஒரு மாசம் உனக்கு டைம் தர்றேன். அதுக்கு மேல ஆச்சுன்னா, நாங்க பாத்து முடிவு பண்ற பெண்ணை நீ கல்யாணம் பண்ணிக்கணும்.” மகன் அரவிந்த்திடம் அவனுடைய அப்பா அருண் பானர்ஜி, திடமான குரலில் திட்டவட்டமாகப் பேசினார்.
அவருக்குப் பதில் கூறுவதற்காக மெதுவாக உதடுகளைப் பிரித்தான் அரவிந்த்.
“சரிப்பா.” ஒற்றை வார்த்தையில் பதில் கூறிவிட்டுத் தன்னுடைய அறைக்குச் சென்றான். கட்டிலருகே இருந்த சிறிய அலமாரியைத் திறந்தான். அதற்குள் அழகிய டைரி ஒன்று இருந்தது. அதைப் பிரித்தான். உள்ளே இருந்த ஒரு போட்டோவைப் பார்த்தான். கேம்ப்பில் எடுத்த குரூப் போட்டோவில் நண்பர்கள், சிநேகிதிகள் குழுவினரோடு காணப்பட்ட மிருதுளா, தன் அழகிய பல் வரிசை தெரியச் சிரித்துக் கொண்டிருந்தாள்.
போட்டோவில் இருந்த மிருதுளாவைப் பார்த்த அரவிந்த்திற்குப் பனி மூட்டம் போலப் பழைய நினைவுகள் தோன்றின.
ப்ராஜெக்ட் வொர்க்கிற்காகச் சென்னையிலிருந்து பெங்களூருக்கு வந்திருந்த மாணவிகளில் மிருதுளாவும் ஒருத்தி. அதில் கலந்து கொண்ட அரவிந்த்தும், மிருதுளாவும் சந்தித்துக் கொண்டதில் இருவரும் நட்புக் கொண்டனர்.
“உங்களை மாதிரியே உங்க பேச்சு ஸ்வீட்டா இருக்கு மிருதுளா. ரொம்ப ஸ்மார்ட்டாவும் இருக்கீங்க. எல்லா ஸ்டூடென்ட்சும் உங்க கூடப் பழகறதுக்கு ஆர்வமா இருக்காங்க. எந்த நேரமும் உங்களைச் சுத்தி சிநேகிதிகள், சிநேகிதர்கள் கூட்டம் இருக்கு. ரியலி யூ ஆர் கிரேட்...”
“கிரேட்டா எதையும் நான் சாதிக்கலை அரவிந்த். எல்லார் கூடயும் நான் நல்லாப் பழகுவேன். என்னோட இந்த இயல்பை ப்ளஸ் பாயிண்ட்டா நான் நினைக்கறேன். வாழ்க்கைல நாம சந்தோஷப் படறதுக்கு ஏராளமான விஷயம் இருக்கு. மனிதப் பிறவி கிடைச்ச நாம, இந்த லைஃப்ல இருக்கற நல்ல. விஷயங்களை அனுபவிக்கணும். அதுசரி... உங்களைப் பத்தி சொல்லுங்களேன். உங்களுக்கு அண்ணன், தம்பி, அக்கா, தங்கச்சி...”
“யாருமே கிடையாது. நான் ஒரே பையன்தான். என் சொந்த ஊர் கொல்கத்தா. ஆனா தாத்தா காலத்துல இருந்து இங்கதான் இருக்கோம். தாத்தா வழிச் சொத்துக்கள் எக்கசக்கமா இருக்கு. எங்க அப்பா ப்ரிண்டிங் ப்ரெஸ் வச்சி, அதுவும் அமோகமா நடந்திட்டிருக்கு. எங்க அம்மா இந்திராணி பானர்ஜி. இந்த விஷயம் படிப்பு முடிச்சதும் ப்ரெஸ்சுக்கு வந்து உட்காரணும்னு அப்பாவோட அன்புக் கட்டளை. என்னோட வாழ்க்கையில... நான் ஆசைப்பட்டதெல்லாமே கிடைச்சிருக்கு. ஆசைப்பட்டது கிடைச்சே ஆகணும்னு நினைப்பேன். எனக்கு வண்ணமயமான வளர்ப்பு மீன்கள் பிடிக்கும். புள்ளி மான்களைப் பார்த்து ரசிக்கப் பிடிக்கும். உயரமான மலைகள், நீர் வீழ்ச்சிகள் போன்ற இயற்கைக் காட்சிகள் பிடிக்கும். நான் அழகை ஆராதிப்பவன். அழகா இருக்கற எல்லாமே என் மனதைப் பாதிக்கும்...” சொல்லி விட்டு ஒரு அர்த்தத்தோடு மிருதுளாவைப் பார்த்தான் அரவிந்த்.
அவனுடைய பார்வையை மிருதுளா புரிந்து கொள்ளவில்லை. சகஜமாகத் தன் பேச்சைத் தொடர்ந்தாள்.
“என்னோட மனசைப் பாதிக்கற விஷயம் என்ன தெரியுமா? என் கூடப் பழகறவங்க, என் மேல அன்பு கொண்டவங்க... யாராக இருந்தாலும் என்கிட்ட பொய் சொல்லக் கூடாது. எதையும் மறைக்கக் கூடாது. அப்படி மறைச்சாலோ, பொய் சொன்னாலோ... அது என் மனசைப் பாதிக்கும்...”
இவர்கள் பேசிக் கொண்டிருக்கும் பொழுது ரேகா வந்தாள். மிருதுளாவின் முதுகில் தட்டினாள்.
“ஆ... வலிக்குதும்மா தாயே... நீ பெண் புலியாக் கூட இல்ல... ஆண் சிங்கமா இருக்கியே...”
“இந்தக் காலத்துப் பசங்ககிட்ட அப்படித்தான் இருக்க வேண்டியிருக்கு. பெண் புலியைக் கூட ‘கிலி’ புடிச்சு ஓட விட்டுருவாங்க. ஆண் சிங்கம் மாதிரி ‘இமேஜ்’ இருந்தாத்தான் அவனுங்களை ஓட ஓட விரட்டலாம். சரி... சரி... நான் உன்னைத் தேடி வந்த விஷயம் என்ன தெரியுமா? மதுரையிலிருந்து வந்திருக்காளே மீனா... அவளுக்குத் திடீர்னு ஃபிட்ஸ் வந்திருச்சு.”
“ஐயோ... அப்புறம் என்ன ஆச்சு?...”
“கீழே விழுந்ததுனால தலையில அடிபட்டு ரத்தம் வந்துச்சு. ‘ஃபர்ஸ்ட் எய்ட்’ பண்ணிட்டோம். வா. அவளை நல்ல ஆஸ்பிட்டலுக்குக் கூட்டிட்டுப் போகலாம்.”
“வா... நாம இப்ப உடனே போகலாம்.” மிருதுளாவும், ரேகாவும் அவசரமாகக் கிளம்பினார்கள்.
“நானும் உங்க கூட வந்தா... உங்களுக்கு உதவியா இருக்கும். எங்க ஃபேமிலி டாக்டரோட க்ளினிக்குக்கு நானே கூட்டிட்டுப் போறேன்.”
அரவிந்த் கூறியதும் மூவரும் விரைந்து சென்றனர். அவனுடைய உதவி செய்யும் மனப்பான்மையை அறிந்த மிருதுளாவிற்கு அவன் மீது மதிப்பு ஏற்பட்டது.
மீனாவிற்குத் தேவையான வைத்திய உதவிகள் அனைத்தையும் கூடவே வந்திருந்து கவனித்துக் கொண்டான் அரவிந்த்.
மிருதுளாவின் மனதைக் கவர்வதற்காகவே மிருதுளாவிற்குப் பிடித்தமான செயல்களைச் செய்தான். அதன் மூலம் மிருதுளாவின் இதயத்தில் இடம் பிடிப்பதில் தீவிரம் காட்டினான்.
கேம்ப்பிற்கு வந்திருந்த மற்ற மாணவர்களுடனும் மிருதுளா சிநேகமாகவும், சகஜமாகவும் பழகுவதைக் கண்ட அவனுக்கு மிருதுளா தன்னிடம் பழகுவது அன்பினாலா அல்லது காதலாலா என்பதைப் புரிந்து கொள்ள முடியவில்லை. ஆனால் அவள் தன்னைக் காதலிக்க வேண்டும் என்று ஆசைப்பட்டான்.
‘இந்த கேம்ப்ல கலந்துகிட்ட மாணவர்கள்ல்ல என்னை விட யாரும் அழகு இல்லை. என்னை விடப் பணக்காரனும் இல்லை.