வருவேன் நான் உனது... - Page 5
- Details
- Category: மர்ம கதைகள்
- Published Date
- Written by சித்ரலேகா
- Hits: 9793
மறைமுகமா கேலி பண்றது... இப்படிச் சின்னச் சின்ன லூட்டியெல்லாம் அடிச்சதுண்டு. அதெல்லாம் அந்த வயசுக்குரிய சராசரி உணர்வுகளோட பிரதிபலிப்பு. எந்தப் பெண்ணையுமே நான் காதல் கண்ணோட்டத்துல பார்த்தது இல்லை. பழகினது இல்லை. பொண்ணுங்க என்கிட்ட வந்து ‘ஐ லவ் யூ’ சொல்லியிருக்காங்க. அவங்களை நாசூக்கா மறுத்துட்டேன். நான் இது வரைக்கும் யார் கிட்டயும் ‘ஐ லவ் யூ’ சொன்னதில்ல. இப்ப உன்கிட்ட சொன்ன ‘ஐ லவ் யூ’தான் நான் முதல்ல சொன்ன ‘ஐ லவ் யூ’...”
“நானும் உங்களை மாதிரிதான். உங்களைச் சந்திக்கற வரைக்கும் யாரையும் காதலிச்சதில்ல. ஆனா...”
ஆனா என்று ஆரம்பித்துத் தொடர்ந்து மிருதுளா கூறிய விஷயத்தைக் கேட்டு அதிர்ச்சி அடைந்தான் ஏகாந்த்.
3
“ஆனா... எனக்கு ஆண் சினேகிதர்கள் உண்டு.” மிருதுளா கூறியதைக் கேட்ட ஏகாந்த்திற்கு என்ன சொல்வது என்று புரியவில்லை. அவன் சற்றும் எதிர்பாராத அந்த விஷயத்தை அவனால் ஜீரணித்துக் கொள்ள முடியவில்லை. படித்தவன் என்றாலும் தன் மனைவிக்கு ஆண் சினேகிதர்கள் உண்டு என்பதை முதல் இரவில் அவளே சொல்லக் கேட்டது, இதயத்தில் அதிர்ச்சி அலைகளை மோதச் செய்தது.
“என்னங்க, யோசிக்கறீங்க?! அவங்க யாருமே நம்ப கல்யாணத்துக்கோ ரிஸப்ஷனுக்கோ வரலையேன்னுதானே? அவங்க எல்லாருமே வேற வேற ஸ்டேட்ஸ்ல இருக்காங்க. ரெண்டு பேர் சென்னையிலதான் இருந்தாங்க. ஆனா அவங்களும் ஆஸ்திரேலியா போயிட்டாங்க. மத்தவங்களுக்கும் ஏதோ ஒரு வகையில வர முடியாம ஆயிடுச்சு. எல்லோரும் இ.மெயில்ல மெஸேஜ் அனுப்பி இருக்காங்க.”
“அ... அப்படியா?” சமாளித்துப் பேசினான் ஏகாந்த்.
“ஏன் உங்க முகம் ஒரு மாதிரியாயிடுச்சு? ஓ... எனக்கு ஆண் நண்பர்கள் இருக்காங்கன்னு சொன்னது உங்க மனசைப் பாதிச்சுடுச்சு இல்ல?... இட்ஸ் நேச்சர். நம்ம நாட்டுக் கலாச்சாரத்தைப் பொறுத்த வரைக்கும் இன்னும் இது சகஜமாகலை. அப்படியே ஆண்கள் கூட ஃப்ரெண்ட்ஷிப் இருந்தாலும் கல்யாணத்துக்குப் பிறகு எதுக்குப் பிரச்சனைன்னு கணவன்கிட்ட சொல்லாம விட்டுருவாங்க. அத்தோட அந்த ஃப்ரெண்ட்ஷிப்பையும் விட்டுருவாங்க. ஆனா நான் வித்தியாசமானவ. நட்புக்கு ஆண், பெண் பேதம் கிடையாது. நட்புக்குன்னு ஒரு மரியாதை இருக்கு. ஒரு ஆணுக்கும், பெண்ணுக்கும் ஏற்படற காதல்ல உடல் சம்பந்தப்பட்ட ஈர்ப்பு இருக்கு. ஆனா சிலர். ‘அப்படியெல்லாம் இல்ல. உடல் சீதியான எந்த ஈர்ப்பும் இல்லாத காதல்... எங்களோட காதல்’ன்னு சொல்லிக்குவாங்க. அது பொய். பொய்யான வேஷம் போடறது... காதலுக்குத் தேவையில்லாதது. உடல் உணர்வு சம்பந்தப்படாத காதல், காதலே இல்ல. ஒரு துளி உடல் ஈர்ப்புதான் பெரிய வெள்ளம் மாதிரியான காதலைப் பெருக வைக்குது... பொங்க வைக்குது. நட்புங்கறது காதலுக்கு அப்பாற்பட்டது. நட்புக்காக எந்த தியாகமும் செய்யலாம்னு தோணும். நண்பனுக்காக உயிரையே குடுக்கக்கூடத் துணிச்சல் வரும். ஆண், பெண் இரண்டு பேர் சம்பந்தப்பட்ட நட்புல கூட இந்த மாதிரி தியாக உணர்வுகள் உருவாகும். ஆனா நட்புக்கும், காதலுக்கும் வித்தியாசம் தெரியாதவங்க கூட இருக்காங்க. எனக்கே அதைப்பத்தின அனுபவம் இருக்கு. ப்ராஜக்ட் விஷயமா பெங்களூர் போனப்ப ‘அரவிந்த் பானர்ஜி’ன்னு ஒருத்தன். அவனும் கேம்ப்புக்கு வந்திருந்தான். அவன் பெங்காலி. நல்லவன். பணக்கார வீட்டுப் பையன். அவங்கப்பா பெரிய ப்ரிண்டிங் ப்ரெஸ் வச்சிருக்காரு. வெளிநாட்டுல இருந்து கூட அவங்க ப்ரெஸ்சுக்கு ப்ரிண்ட்டிங் ஆர்டர் வருமாம். இது தவிர அரவிந்தோட அம்மா வழியில ஏகப்பட்ட பூர்வீகச் சொத்துக்கள் வந்திருக்கு. அதனால அந்த அரவிந்த் ஏகப்பட்ட வசதிகளோட வளர்ந்திருக்கான். இங்க... சென்னையில ஹாஸ்டல்ல ஸ்கூல் படிப்பு படிச்சிருக்கான். அதனால சகஜமா தமிழ் பேசுவான். செகுசா வசதிகள்ல்ல வளர்ந்த அவன் அந்த வசதியான வாழ்க்கைக்கு அடிமையானவன்னு சொல்லலாம். எல்லார் கூடயும் பழகற மாதிரிதான் அவன் கூடயும் பழகினேன். ஆனா அவன் என்னோட சகஜமான பழக்கத்தைக் காதல்ன்னு தப்பா புரிஞ்சுக்கிட்டான். என்கிட்ட வந்து காதல் கீதல்ன்னு பெனாத்தினான். அவனுக்கு நல்லபடியா புத்திமதி சொல்லி, நட்போட மகிமையை விளக்கினேன். புரிய வச்சேன். புரிஞ்சுக்கிட்டான்....”
“அவன் நம்ப கல்யாணத்துக்கு வந்தானா?” ஏகாந்த் கேட்டான்.
“அவங்கம்மாவுக்கு உடம்பு சரியில்லாததனால வர முடியலைன்னு இ.மெயில் அனுப்பியிருந்தான். எதையுமே மனம் திறந்து பேசிட்டா... புரிந்து கொள்ளுதல் வந்துடும். புரிந்து கொள்ளுதல் வந்துட்டா உண்மையான அன்பும் வந்துடும்...”
“எல்லாப் பெண்களும் உன்னை மாதிரி ஆண் நண்பர்களைப் பத்தியும், அவங்களோட நட்பைப் பத்தியும் அவங்களோட கணவர்ட்ட சொல்லுவாங்களா?....”
“மத்தவங்க சொல்லுவாங்களோ இல்லையோ... அது எனக்குத் தெரியாது. ஆனா... கல்யாணம் ஆகற வரைக்கும் நட்போட பழகிட்டு கல்யாணத்துக்கப்புறம் அந்த நட்பை முறிச்சுக்கறது, மறைக்கறது எனக்கு உடன்பாடு இல்லாத விஷயம். ஒரு பெண் இன்னொரு பெண் கூடச் சினேகிதமா பழகற மாதிரி, ஒரு பெண் இன்னொரு ஆண் கூட ப்ரெண்ட்லியா பழகறதுல என்ன தப்பு? நட்பு அர்த்தமுள்ளது. மனித நேயமிக்கது. இதெல்லாம் என்னோட சொந்த அபிப்பிராயங்கள்!”
மிருதுளா பேசியதையெல்லாம் கேட்ட ஏகாந்த், அவனுடைய மனதில் தோன்றிய ஒரு கேள்வியை அவளிடம் கேட்டான்.
“இப்படி... காதல்னு நினைக்கற அளவுக்குப் பழகிட்டு, அப்புறம் அது காதல் இல்லை, வெறும் நட்புதான்னு சொல்றதும் நியாயமான செயல்தானா?...”
“காதல்னு நினைக்கற அளவுக்குன்னா? நான் என்ன டூயட் பாடினேனா... அவன் பின்னால சுத்தினேனா? உங்க கேள்வியே சரியில்ல...” லேசான கோபம் எட்டிப் பார்த்ததில் மிருதுளாவின் உதடுகள் துடித்தன.
“எதுக்காகக் கோபப்படறே? நீதானே சொன்ன... எதையும் ஓப்பனா பேசித் தெளிவு பண்ணிக்கணும்னு? தப்பா எதுவும் கேக்கலியே மேடம். தப்புன்னா சொல்லுங்க. தோப்புக் கரணம் போட்டுடறேன்...” அவன் குறும்பாகப் பேசியதும் கோபம் மறைந்து சிரித்தாள் மிருதுளா.
அவன் தலையில் லேசாகக் குட்டினாள்.
“என்னதான் படிச்சவர், விசாலமான மனசு உள்ளவர்ன்னாலும் பொதுவான ஆண்பிள்ளைப் புத்தி அப்பப்ப தலைதூக்குது பார்த்தீங்களா?”
“நோ... நோ... நிச்சயமா நான் சராசரி ஆண் பிள்ளை இல்லை. நீ எப்படி வித்தியாசமான கேரக்டரா இருக்கிறோ, அது போல நானும் எதையும் நிதானமா, ப்ராக்டிகலா சிந்திச்சுப் பேசறவன்.”
“அது சரி, நீங்க யாரையும் காதலிக்கலை, யார்ட்டயும் ஐ லவ் யூ சொன்னதில்லைன்னு சொன்னீங்க. அத்தை பெண்ணு வருணா மேல கூட ‘கிக்’ இல்ல, அன்பு மட்டுமேன்னு சொன்னீங்க. சிநேகிதிகள் கூடவா இல்ல?”