வருவேன் நான் உனது...
- Details
- Category: மர்ம கதைகள்
- Published Date
- Written by சித்ரலேகா
- Hits: 9793
காலையில் திருமணம். அன்று மாலையே ரிஸப்ஷன். திருமண வைபவத்திற்கென்று கனத்த பட்டுச் சேலையையும், அதைவிடக் கனமான நகைகளையும் சுமந்து களைப்பாயிருந்த மிருதுளா, வரவேற்பு விழாவில் சுடிதாருக்கு மாறியிருந்தாள். எனவே களைப்பு நீங்கிப் புத்தம் புதிதாய் மலர்ந்த ரோஜா போல் புத்துணர்ச்சியுடன் காணப்பட்டாள்.
சுடிதார் என்றாலும் அதன் அடக்க விலை ரூபாய் இருபதாயிரத்தைத் தாண்டியிருந்தது. மிருதுளாவே பார்த்துப் பார்த்துத் தேர்வு செய்து, துணி எடுத்திருந்தாள். அவளே டிஸைன் செய்து தைக்கக் கொடுத்து வாங்கினாள். அதன் துப்பட்டாவில் கோக்கப்பட்டிருந்த அழகிய மணிகள் காண்போரைக் கவர்ந்தன. காலையில் முகூர்த்தத்திற்குக் கட்டியிருந்த பட்டுப் புடவையின் முந்தானையிலும் அதே போன்ற மணிகளைத் தைத்திருந்தாள்.
தங்கத்தில் கோத்திருந்த முத்துமாலையும், காதுகளில் அணிந்திருந்த முத்துத் தொங்கல்களும் அவளது அழகிற்கு மேலும் அழகூட்டின.
சுற்றியிருந்த கூட்டத்தைக் கூடப் பொருட்படுத்தாமல் அவளையே வைத்த கண் வாங்காமல் ரசித்துக் கொண்டிருந்தான் மாப்பிள்ளை ஏகாந்த். அவனது கவனத்தைக் கலைத்தது ஒரு குரல். அந்தக் குரலுக்கு உரியவள் மிருதுளாவின் தோழி ரேகா.
“என்ன மிஸ்டர் ஏகாந்த்... மிருதுளாவைக் கண் கொட்டாமல் ரசிச்சிக்கிட்டிருக்கீங்க...?!”
ரேகா கேட்டதும் தன் உணர்விற்குத் திரும்பிய ஏகாந்த், சற்றே வெட்கப்பட்டான். தன்னைக் கேலி பண்ணிய ரேகா, ஒரு வித்தியாசமான பெண்ணாய் இருந்ததைக் கண்டு மனதிற்குள் பிரமித்தான். அவள் ஒரு பெண். அசாதாரணமான உயரம். ஆண்களைப் போன்ற ஆஜானுபாகுவான உருவ அமைப்பு. உடம்பில் மட்டுமின்றி முகத்திலும் ஒரு முரட்டுத்தனம். குரலில் கூடப் பெண்மையின் மென்மையின்றி சற்று மெலிதான வன்மை இருந்தது. அவளைப் போலவே அவள் அணிந்திருந்த ஜீன்சும் ரஃப் அன்ட் டஃப் ஆக இருந்தது.
‘ட்ரபிள் மேக்கர்’ என்று கொட்டை எழுத்தில் எழுதப்பட்டிருந்த டீ-ஷர்ட் அணிந்திருந்தாள். அந்த டீ- ஷர்ட் ஏறி இறங்கிய வளைவுகள் மட்டுமே அவள் பெண் என்பதை வெளிப்படுத்தின.
ஆண்கள் ஒருவருக்கொருவர் முதுகில் தட்டித் தட்டிப் பேசுவது போலவே ரேகாவும் மற்றவர்களிடம் பேசும் பொழுது ‘டொம்’, ‘டொம்’ என்று தட்டியபடி பேசினாள்.
மிருதுளாவிற்கு ஏகப்பட்ட சிநேகிதிகள். மாலினி, பத்மினி, காமினி, வனிதா, ஸ்டெல்லா, பூஜா, அம்ருதா என்று பல மாநிலப் பெண்களும் மிருதுளாவின் திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் கலந்து கொண்டிருந்தனர். அங்கிருந்த சில பெரிசுகள், இவர்கள் அடிக்கும் லூட்டியை வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தனர்.
“காலம் எப்படி மாறிப் போச்சு பார்த்தியா, கல்யாணப் பொண்ணோட ட்ரெஸ்லயிருந்து அவளைச் சுத்தி நிக்கிற தோழிப் பெண்களோட அரட்டையும், ஆட்டம் பாட்டமும் கவனிச்சியா? ஆண் பிள்ளைங்க மாதிரி என்ன ஒரு சிரிப்பு, சத்தமான பேச்சு!” காதில் அணிந்திருந்த ப்ளூ ஜாகர் வைரக் கம்மல் டால் அடிக்க, தலையை ஆட்டி ஆட்டிப் பேசியது ஒரு பெண் பெரிசு.
“என்ன மாப்பிள்ளை சார்... ஒண்ணுமே பேச மாட்டேங்கறீங்க, ரிஸப்ஷனுக்கு வந்திருந்த உங்க ஃப்ரெண்ட்ஸ் எல்லாம் பந்திக்கு முந்திட்டாங்க. நீங்க எங்ககிட்ட மாட்டிக்கிட்டீங்க...” வனிதா பேசியதைக் கேட்டு மிருதுளாவின் தோழிகள் குரூப் பலமாகச் சிரித்தனர்.
“ஏ வனிதா, பாவம் மிஸ்டர் ஏகாந்த். ஏற்கெனவே நம்பளைப் பார்த்து மிரண்டு போயிருக்காரு. நீ வேற பயமுறுத்தாதே.” பேசிக் கொண்டே வனிதாவின் முதுகில் ஒரு தட்டுத் தட்டினாள் ரேகா.
“இவ ஒருத்தி. தொடாம, அடிக்காம பேசவே மாட்டா. யம்மாடி! சரியான வலி இவ தட்டின இடத்துல.”
“ஏ ரேகா... ஆண்கள் கூடப் பேசும்போது இப்படித் தட்டிப் பேசினா தப்பா நெனச்சுக்க மாட்டாங்களா?”
“அதெல்லாம் அவ ரொம்ப உஷார். நம்மகிட்ட மட்டும் தான் அவ கை நீளும். ஆண்களைத் தொடற மாதிரிச் சூழ்நிலை வந்தா... அவன்களை அடிச்சி நொறுக்கறதுக்குத்தான் கையை நீட்டுவா...” பத்மினி கூறியதும், மறுபடியும் அங்கே சிரிப்பலை பரவியது. ஏகாந்த் நெளிந்தான். இயற்கையிலேயே கூச்ச சுபாவமுள்ள அவன், பல பெண்கள் நடுவில் மாட்டிக் கொண்டு மேலும் சங்கோஜப்பட்டான். அவனது சுபாவம்தான் அப்படி. அவனது உருவம் மிகவும் கம்பீரமானதாக இருந்தது. அவனது முகம் வசீகரமாக இருந்தது. தன் தோழிகளிடம் ஏதாந்த் மாட்டிக் கொண்டதைக் கண்டு பரிதாபமாக அவனைப் பார்த்தாள் மிருதுளா.
“பயந்துட்டீங்களா? இவங்க எல்லோருமே இப்படித்தான். வாழ்க்கை வாழ்வதற்கேன்னு புரிஞ்சுக்கிட்டு ஒவ்வொரு நிமிஷத்தையும் சந்தோஷமா அனுபவிக்கறாங்க. நானும் இப்படித்தான்...”
“இல்லை, மிஸ்டர் ஏகாந்த். இவ பொய் சொல்றா. இவளுக்கு முணுக்குன்னு மூக்குக்கு மேல கோபம் வந்திடும். நாங்க எல்லோரும் ஒரு ரகம்னா இவ ஒரு வித்தியாசமான ரகம். பல வருஷமா இவ கூட ரொம்ப இன்ட்டிமேட்டா பழகறோம். இருந்தாலும் அப்பப்ப எங்க ஃப்ரெண்ட்ஷிப்பை டெஸ்ட் பண்ணிப் பார்ப்பா...” மாலினி கூறினாள்.
“ஃப்ரெண்ட்ஷிப்பை டெஸ்ட் பண்ணிப் பார்க்கறதா, புதுசா இருக்கே நீங்க சொல்றது?...” வியப்புடன் கேட்டான் ஏகாந்த்.
“அப்பாடா... இப்பவாவது வாயைத் திறந்தீங்களே.” பேச ஆரம்பித்த ஸ்டெல்லாவை இடை மறித்தாள் அம்ருதா.
“நம்ப மிருதுளாவைப் பத்தி மிஸ்டர் ஏதாந்துக்கு எடுத்துச் சொன்னாத்தானே புரியும்?” அம்ருதா சொன்னதும், ஏகாந்திடம் திரும்பினாள் ஸ்டெல்லா.
“நாங்க இவ இல்லாம எங்கயும் போறதில்ல. இவ எங்க கூட வந்தாத்தான் எங்களோட எல்லா ப்ரோக்ராமும் ஜாலியா இருக்கு. இவ என்ன சொன்னாலும் கேட்போம். ஏன்னா... இவளோட அன்பு அத்தனை ஆழமானது. இவளோட நட்புக் கிடைக்க... நாங்க ரொம்ப ‘லக்கி’. இவ எங்க மேல கொட்டற அன்பை நம்மகிட்ட இருந்த எதிர்பார்ப்பா. நட்பும், பாசமும் மனசுக்குள்ள நிறைய இருக்குன்னு மூடி வச்சுக்கறதை ஏத்துக்க மாட்டா. ஏதாவது ஒரு வழியில அன்பை வெளிப்படுத்தியே தீரணும்ங்கறது இவளோட எண்ணம். எதையும் வெளிப்படையாப் பேசிடணும்னு சொல்லுவா. அவளும் அப்படித்தான்... எதையும் மனசுல மறைச்சு வைக்காம வெளிய கொட்டிடுவா...”
ஸ்டெல்லா விட்ட இடத்திலிருந்து பத்மினி தொடர்ந்தாள். “பணக்கார வீட்டுப் பெண்ணா இருந்தாலும் ஏழைகளை இளக்காரமா நினைக்க மாட்டா. எல்லார் கூடயும் சரிசமமா பழகுவா. எம்.ஏ. ஸோஷியாலஜி படிச்ச இவ. பொதுச் சேவை, உரத்த சிந்தனை பற்றிய பேச்சாற்றல், கர்நாடக சங்கீதம் இதிலயெல்லாம் கில்லாடி. சமையல் கூட இவளுக்குக் கை வந்த கலை. எல்லா மாநிலச் சமையல்களும் அத்துப்படி. நிறையச் சமையல் புத்தகங்கள் வாங்கி வச்சிருக்கா. இவ்வளவு திறமைகள் இருந்தும் கொஞ்சம் கூடத் தலைக்கனம் கிடையாது.