வருவேன் நான் உனது... - Page 2
- Details
- Category: மர்ம கதைகள்
- Published Date
- Written by சித்ரலேகா
- Hits: 9793
அட, சொல்ல வந்த விஷயத்தைக் கோட்டை விட்டுட்டு வேற ஏதேதோ சொல்லிட்டிருக்கேனே... ஃப்ரெண்ட்ஷிப்பை எப்படி டெஸ்ட் பண்ணுவா தெரியுமா? காலேஜூக்கு வந்ததும் முதல்ல இவளைத் தேடி வர்றமான்னு பார்ப்பா. அப்படிச் செஞ்சாத்தான் அவளுக்குத் திருப்தியா இருக்கும். அவளைத்தான் நடு ஆளா வச்சு நாங்க எல்லோரும் எதுவும் செய்யணும். அது கணிப்பு. அதுதான் அவளோட நம்பிக்கையும் கூட. ஃப்ரெண்ட்ஸுக்கு ஒரு பிரச்னைன்னா உயிரைக் குடுத்து ஹெல்ப் பண்ணுவா. எங்க ஃப்ரெண்ட்ஸ் குரூப்ல மிருதுளா மட்டும் தான் ஓரளவு பணக்காரக் குடும்பத்தைச் சேர்ந்த பொண்ணு... அவட்ட இருக்கற இன்னொரு ஸ்பெஷாலிட்டி... எந்தப் பிரச்னை வந்தாலும் திடமான மனசோடு அதை எதிர் கொள்வா. பிரச்னைகளைப் பார்த்து அழுது கண்ணீர் விட மாட்டா..”
“ஏ மாலினி... கொஞ்சம் நிறுத்தறியா? நீ பாட்டுக்கு என்னோட புகழ் பாடி அவரை போர் அடிச்சிக்கிட்டிருக்க...” மிருதுளா மாலினியின் வாயைத் தன் கைகளால் மூடினாள்.
இதையெல்லாம் சற்றுத் தள்ளி நின்று வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்த வருணா, மிருதுளாவின் அருகே வந்தாள்.
“என்ன வருணா, இவ்வளவு லேட்டா வர்ற?” ஏகாந்த் கேட்டதும், வருணா சிரித்தாள்.
“புதுப் பெண்ணை ரசிக்கறதுல நான் வந்ததைக் கூட நீங்க பார்க்கலையா? நான் வந்து ஒரு மணி நேரத்துக்கு மேல் ஆச்சு...”
“ஓ... அப்படியா...?” என்றபடி மிருதுளாவிடம் திரும்பினான் ஏகாந்த்.
“மிருருளா... இவ வருணா. என்னோட அத்தை மகள். பி.காம். படிச்சு முடிச்சுட்டு வேலைக்கு வலை வீசிக்கிட்டிருக்கா”
“ஹாய் வருணா...” மிருதுளா வருணாவின் கையைப் பிடித்துக் குலுக்கினாள்.
வருணா நிறம் கொஞ்சம் மட்டு என்றாலும், அவளது கண்கள் அவளது முகத்திற்கு ப்ளஸ் பாயிண்ட்டாக இருந்தன. நல்ல வாளிப்பான உடல்வாகு. தளதளவென்றிருந்த அவளது தோற்றம் காண்போரைக் கவர்ந்திழுந்தது.
வருணா புன்னகையுடன் மிருதுளாவிடம் பேச ஆரம்பித்தாள். “எங்க ஏகாந்த் மச்சானுக்குப் பொருத்தமான ஜோடியா நீ அமைஞ்சுட்ட மிருதுளா... மச்சான் கொஞ்சம் ‘ஷை’ டைப், கொஞ்சம் முன்கோபி. இரண்டும் சேர்ந்த கலவை இவர். மத்தப்படி ரொம்ப நல்லவர்...” வருணா, ஏகாந்த்தைப் பாராட்டிப் பேசியதைக் கேட்ட மிருதுளா மகிழ்ச்சி அடைந்தாள்.
“வேலைக்கு வலை வீசறதா சொன்னாரே! ஏதாவது இன்ட்டர்வ்யூ அட்டென்ட் பண்ணீங்களா?”
மிருதுளா கேட்டாள்.
“என்ன மிருதுளா... நீங்க... நாங்கன்னு பேசிக்கிட்டு? சும்மா ‘நீ...’ ‘நான்’னே பேசேன்... ஒரு ப்ரைவேட் கம்பெனியில அக்கவுண்ட்ஸ் ஸெக்ஷன்ல அக்கவுண்டன்ட் வேணும்னு விளம்பரம் குடுத்திருந்தாங்க. விசாரிச்சப்ப... நல்ல கம்பெனின்னு சொன்னாங்க. அந்த இன்ட்டர்வ்யூ அட்டென்ட் பண்ணினேன். அங்கே வேலை கன்ஃபர்ம் ஆயிடும்னு நம்பறேன்...”
“வெரி குட். ஆல் த பெஸ்ட்...”
“தேங்க் யூ. நான் கிளம்பறேன் மிருதுளா. ஏகாந்த் மச்சான்! நான் புறப்படறேன்...”
“சரி வருணா... அத்தை எங்கே?”
“அம்மா, அவங்க சொந்தக்காரங்களையெல்லாம் பார்த்ததும், உலகத்தை மறந்து பேச ஆரம்பிச்சுட்டாங்க. அவங்க அப்புறமா வரட்டும். நான் கிளம்பறேன்...” வருணா கிளம்பினாள்.
மேலும் ஒரு மணி நேரத்தில், வந்திருந்த உறவினர்களும், நண்பர்களும் விடை பெற்றனர். அன்றைய தினமே ‘முதல் இரவு’ என்று திட்டமிருந்தபடியால் மிதுளாவின் அப்பா மோகன்ராம், அங்கிருந்து தன் வீட்டிற்குக் கிளம்புவதற்குத் தயாரானார்.
தோழிகள் அனைவரும் மிருதுளாவின் காதில் மட்டும் கேட்பது போல் ரகசியமாக வாழ்த்திவிட்டுக் கிளம்பினர்.
ஏகாந்த், தன் பெற்றோரிடம் சொல்லிவிட்டு வருவதற்காக, அவர்களிடம் நெருங்கினான்.
“காட் ப்ளெஸ் யு மை ஸன்!” கோபால் வாழ்த்தினார். அவனது அம்மா சீதா, மகிழ்ச்சி பொங்கும் மனதுடன், ஏகாந்த்தின் அருகே வந்தாள்.
“ஏகாந்த்... நீ எங்களுக்கு ஒரே மகன். அது போல மிருதுளாவும் அவங்கப்பாவுக்கு ஒரே பொண்ணு. நீங்க ரெண்டு பேரும் சந்தோஷமா வாழணும். உங்களோட சந்தோஷமான வாழ்க்கையிலதான் எங்க சந்தோஷமும் நிம்மதியும் அடங்கி இருக்கு. நல்லபடியா போயிட்டு வாப்பா.”
“சரிம்மா.”
மிருதுளாவும் மாமியார் சீதாவிடமும், மாமனார் கோபாலிடமும் ஆசிகள் பெற்றுக் கொண்டாள்.
மிருதுளாவையும், ஏகாந்த்தையும் தன் காரில் ஏற்றிக் கொண்டு வீட்டிற்குக் கிளம்பினார் மோகன்ராம். பின்பக்க இருக்கையில் ஏகாந்த்தும், மிருதுளாவும் அமர்ந்தனர். அமர்ந்த மறு வினாடியே காரின் கதவைத் திறந்து இறங்க முற்பட்டான் ஏகாந்த்.
“நீங்க ‘ட்ரைவ்’ பண்றீங்க மாமா... அதனால நான் முன் ஸீட்ல வந்து உட்கார்ந்துக்கறேன்...”
“வேணாம் மாப்பிள்ளை... இப்ப எதுக்கு அந்த கார்... ஃபார்மாலிட்டிஸ்? நீங்க மிருதுளா கூடவே உட்கார்ந்துக்கோங்க.”
“சரி மாமா,” என்ற ஏகாந்த், பின் பக்க இருக்கையில் உட்கார்ந்திருந்த மிருதுளாவுடன் உட்கார்ந்து கொண்டதும் கார் கிளம்பியது. முதலிரவு அன்றே முதல் மோதலும் மனஸ்தாபமும் ஏற்படப்போவதை அந்தப் புதுமணமக்கள் அப்போது அறியவில்லை.
2
பெரிய படுக்கை அறை. ரூம் ஸ்ப்ரே தெளிக்கப்பட்டு அறை முழுவதும் சுகந்த மணம் பரவி இருந்தது. ஏகப்பட்ட பலகார, ஸ்வீட் வகைகள் ஏதுமின்றி ஆப்பிள் மட்டுமே வைக்கப்பட்டிருந்தது. பாரம்பரியமான வழக்கமான வெள்ளி டம்ளர்களில் பால் வைக்காமல், அழகிய கண்ணாடி டம்ளர்களில் ஹார்லிக்ஸ் கலக்கி வைத்திருந்தார் மோகன்ராம். அவரது மனைவியும், மிருதுளாவின் அம்மாவுமான சாரதா, கர்ப்பப் பையை அகற்றும் ஆபரேஷன் தோற்றுப் போனதால், மிருதுளா பத்து வயதாக இருக்கும்போதே இறந்துவிட்டாள். என்றாலும் சொந்த பந்தங்களிலிருந்து யாரையும் உதவிக்கென்று அழைத்து வந்து வீட்டோடு வைத்திருப்பதற்கு மோகன்ராமிற்கு உடன்பாடில்லை. சமையலுக்கு ஒரு நடுத்தர வயதுப் பெண்மணியையும், வீட்டு வேலைக்கு ஒரு இளம் பெண்ணையும் அமர்த்தியிருந்தார். எனவே மோகன்ராம் தனக்குத் தெரிந்தவரை மிருதுளாவின் முதலிரவிற்கு ஏற்பாடு செய்திருந்தார். மிருதுளாவின் படுக்கை அறையில் அவளது அம்மாவின் பெரிய வண்ணப் புகைப்படத்தை மாட்டியிருந்தாள் மிருதுளா. அந்தப் படத்தின் முன் நின்று வணங்கினாள். அதன்பின் ‘சிம்பிளாக’ அலங்கரித்திருந்த கட்டிலில் போய் உட்கார்ந்தாள். அவளைப் பின் தொடர்ந்து அறைக்குள் வந்த ஏகாந்த், மிருதுளாவின் அருகே வந்து உட்கார்ந்தான்.
கட்டிலின் அருகே ஒரு மேஜை மீது திருமணத்திற்கு வந்திருந்த பரிசுப் பொருட்கள் பிரிக்கப்படாமல் அடுக்கி வைக்கப்பட்டிருந்தன. புதுமணத் தம்பதிகளான மிருதுளாவும், ஏகாந்த்தும் சேர்ந்து அவற்றைப் பார்க்கட்டும் என்ற எண்ணத்தில் அங்கே வைத்திருந்தார் மோகன்ராம்.
“உனக்கு இன்ட்ரஸ்ட் இருந்தா... கிஃப்ட் பார்சலையெல்லாம் பிரிச்சுப் பார்ப்போமா?...” ஏகாந்த் கேட்டான்.
“ஓ... பார்க்கலாமே...” மிருதுளா கூறியதும், இருவரும் ஆளுக்கு ஒன்றாய்ப் பிரிக்க ஆரம்பித்தனர். ஒரு பார்சலில் ஆணும், பெண்ணும் கை கோர்த்தபடி நிற்கும் அழகிய மார்பிள் பொம்மைகள் கண்ணாடிப் பேழைக்குள் வைக்கப்பட்டிருந்தன.