பேர் சொல்லும் பிள்ளை - Page 9
- Details
- Category: மர்ம கதைகள்
- Published Date
- Written by சித்ரலேகா
- Hits: 8158
7
நகரத்திலேயே மிக அதிகமான கட்டணம் வசூலிக்கும் நவீன வசதிகள் யாவும் அடங்கிய மருத்துவமனையின் முன் பிரசாத்தின் புது ஓப்பல் கார் நின்றது. காரில் இருந்து இறங்கி, ஸ்வர்ணாவை கைத்தாங்கலாக மருத்துவமனைக்குள் அழைத்துச் சென்றான்.
வரவேற்பாளரிடம் சென்ற பிரசாத், "டாக்டர் ரமணி இங்கே அட்மிட் பண்ணச் சொல்லியிருக்காங்க..." என்று சொல்ல ஆரம்பித்தான்.
"பேஷண்ட் நேம் என்ன சார்."
"மிஸஸ். ஸ்வர்ணா பிரசாத்."
"ஓ.. அவங்களா? மேடம் ஏற்கெனவே போன்ல சொல்லிட்டாங்க. ஏ.ஸி. ரூம்தானே சார் வேணும்?"
"ஆமா. ஏ.ஸி. ரூம்தான் வேணும்."
"கொஞ்சம் வெயிட் பண்ணுங்க சார்."
"சரி!"
பிரசாத்தும், ஸ்வர்ணாவும் அங்கே போடப்பட்டுள்ள நாற்காலியில் உட்கார்ந்தார்கள்.
வரவேற்பாளர், இன்ட்டர்காமில் அறிவிப்புகளைக் கொடுத்து ஸ்வர்ணா அங்கே அட்மிட் ஆவதற்குரிய ஏற்பாடுகளை மிக விரைவாக செய்து முடித்தாள்.
அணிந்திருந்த யூனிஃபார்ம் பளிச்சென இருக்க, சிரித்த முகத்துடன் நர்ஸ் அர்ச்சனா அங்கே வந்தாள்.
"நீங்கதானே மிஸஸ். ஸ்வர்ணா பிரசாத்?"
"ஆமாம்" ஸ்வர்ணா பதில் கூறியதும் அவளை ஸ்பெஷல் ஏ.ஸி. ரூமுக்கு அழைத்துச் சென்றாள் அர்ச்சனா.
அவர்களைப் பின் தொடர்ந்தான் பிரசாத்.
ஃபைவ் ஸ்டார் ஹோட்டல் அறை போல மிக வசதியாக இருந்த அறையினுள் அனுமதிக்கப் பட்டாள் ஸ்வர்ணா.
பிரசாத்தைப் பார்த்து, "வெயிட் பண்ணுங்க சார். டாக்டர் ரமணி இன்னும் பத்து நிமிஷத்துல வந்துடுவாங்க."
"சரி" பிரசாத் சொன்னதும் அர்ச்சனா வெளியேறி சென்றாள்.
"என்னங்க, வலி அதிகமாவே இல்லை. எதுக்காக என்னை இவ்வளவு சீக்கிரம் ஆஸ்பத்திரியில சேர்த்துட்டீங்க?"
"டாக்டர் ரமணி என்ன சொன்னாங்கன்னு மறந்திட்டியா? நீ பலவீனமா இருக்கறதுனால வலியோட அறிகுறி லேசா தெரிஞ்சவுடனேயே அட்மிட் பண்ணச் சொன்னாங்கள்ல? எல்லாம் நான் பாத்துக்கறேன். நீ எதைப் பத்தியும் யோசிக்காம அமைதியா இரு."
"உங்க அப்பாவுக்கு போன் பண்ணி சொல்லிட்டீங்களா?"
"டாக்டரை பார்த்ததுக்கப்புறம்தான் அவருக்கு போன் பண்ணனும்."
"என்னாலதான் உங்க அப்பாவுக்கும் உங்களுக்கும் பிரச்னை..."
"இத பாரு ஸ்வர்ணா, இந்த முறையும் பெண் குழந்தை பிறந்தா அவருக்குப் பிரச்னை. எந்தக் குழந்தை பிறந்தாலும் எனக்கு எந்தப் பிரச்னையும் இல்ல. டெலிவரி ஆகப் போற இந்த நேரத்துல கண்டதையும் நினைச்சு கவலைப்படாம இரு..." அவன் பேசி முடிப்பதற்குள் டாக்டர் ரமணி உள்ளே வந்தார்.
"என்ன பிரசாத், ஸ்வர்ணா என்ன சொல்லுது? வழக்கம் போல உங்க அப்பாவை நினைச்சு பயந்துக்கிட்டிருக்குதா?"
"அதை ஏன் டாக்டர் கேட்கறீங்க? எப்ப பார்த்தாலும் அது விஷயமாத்தான் இவளுக்கு கவலை."
"சரி பிரசாத், நீங்க கொஞ்சம் வெளியே வெயிட் பண்ணுங்க. ஸ்வர்ணாவை செக் பண்ணிட்டு கூப்பிடறேன்."
பிரசாத் வெளியேறினான்.
ஸ்வர்ணாவிற்கு தைரியம் சொல்லிய அவன் மனதிற்குள் உளைச்சல் புயல் உருவானது. 'டாக்டர் ரமணி, ஸ்வர்ணா ரொம்ப பலவீனமா இருக்கறதா சொல்றாங்க. இந்த பிரசவம் நல்லபடியா நடந்து, ஸ்வர்ணா பழையபடி கலகலப்பா சந்தோஷமா வீட்டுக்கு திரும்பி வரணும். ஏற்கெனவே அவ பெற்றெடுத்த முதல் குழந்தைய பறி குடுத்த துயரம் இன்னும் அவளுக்கு மாறல. அந்தக் குழந்தையையே நினைச்சுக்கிட்டு தன்னைத்தானே வருத்திக்கறா. என் மேல உயிரையே வச்சிருக்கற ஸ்வர்ணா, இப்ப பிறக்கப் போற குழந்தையால சந்தோஷமா இருக்கணும்.’ பிரசாத்தின் மனதிற்குள் ஓடிய எண்ணங்களைத் தடுத்து நிறுத்தியது டாக்டர் ரமணியின் குரல்.
"உள்ளே வாங்க பிரசாத்."
பிரசாத் உள்ளே சென்றான்.
"நைட் பத்து மணிக்குள்ள குழந்தை பிறந்திடும் பிரசாத். ஒண்ணும் பயப்பட வேண்டியதில்ல. நீங்க இங்கே இப்ப வெயிட் பண்ண வேண்டிய அவசியம் இல்ல. உங்க ஆபீஸ் போய் உங்க வேலையெல்லாம் முடிச்சிட்டு எட்டு மணிக்கு வந்தா போதும். அதுக்கு முன்னாடி தேவைப்பட்டால் உங்க மொபைலுக்கு நானே கூப்பிடறேன். நர்ஸ் வந்து மெடிசின் லிஸ்ட் குடுப்பாங்க. அதை வாங்கிக் குடுத்துட்டு நீங்க கிளம்பலாம்."
"சரி டாக்டர்." டாக்டர் ரமணி வெளியேறியதும் ஸ்வர்ணாவின் அருகே வந்தான் பிரசாத்.
"பார்த்தியா, ஒண்ணும் பயம் இல்லைன்னு டாக்டரே சொல்லிட்டாங்க. உன்னோட ஹாண்ட் பேக்ல நிறைய புக்ஸ் கொண்டு வந்திருக்கியே, அதப் படிச்சிக்கிட்டிரு. ஏதாவது அவசரம்னா டாக்டரே என்னை மொபைலில் கூப்பிடறதா சொல்லியிருக்காங்க."
"சரிங்க."
பிரசாத் கிளம்பினான்.
டாக்டர் ரமணியின் வைத்திய அறிவையும் கணிப்பையும் மீறி ஸ்வர்ணாவிற்கு அடுத்த ஒரு மணி நேரத்திலேயே பிரசவ வலி அதிகமாக ஏற்பட்டது.
இதை அறிந்த டாக்டர் ரமணி, ஸ்வர்ணாவை லேபர் அறைக்கு அழைத்து வர அறிவிப்பு கொடுத்தார். பிரசாத்திற்கும் தகவலை கூறினார். இரவு எட்டு மணிக்கு ஸ்வர்ணாவிற்கு பெண் குழந்தை நல்லபடியாக பிறந்தது. குழந்தையைப் பார்த்த ஸ்வர்ணா மகிழ்ச்சி கொண்டாள். அவளது மகிழ்ச்சியில் பிரசாத்தும் பங்கு கொண்டான். ராஜசேகரனுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
8
ராஜசேகரன் இன்டஸ்ட்ரீஸ் தனக்கே உரிய கம்பீரத்துடன் காட்சி அளித்தது. எங்கெல்லாம் க்ரானைட் இழைக்க முடியுமோ அங்கெல்லாம் இழைக்கப்பட்டிருந்தது. வரவேற்பு அறையில் இருந்த மேஜை, சோஃபா ஸெட்கள் அனைத்தும் உயர்ந்த ரக தேக்கு மரத்தால் மிக நேர்த்தியான வேலைப்பாடுகளுடன் செய்யப்பட்டிருந்தன. வெளிநாட்டு நவீன காபி மிஷின், மேக்கப் போட்ட நடிகையைப் போல அழகாக இருந்தது. 'சில்’ என்ற ஏ.ஸி. குளிர், சென்னை என்பதையே மறக்க வைத்தது.
கையில் ஃபைலுடனும், கண்ணில் கனவுகளுடனும் பல பட்டதாரி இளைஞர்கள் பிரமிப்புடன் உட்கார்ந்திருந்தனர். நம்பிக்கை நிறைந்த நெஞ்சத்துடன் காத்திருந்தனர். இவர்களுள் சரவணனும், வாசுவும் அதே உணர்வுகளுடன் மௌனமாய் உட்கார்ந்திருந்தனர்.
இருப்பதில் சுமாரான பான்ட், ஷர்ட்டை பளிச் என துவைத்து அயர்ன் செய்து, பழைய ஷுக்களுக்கு பாலீஷ் போட்டு சற்று பளபளப்பாக்கி அணிந்து வந்திருந்தனர்.
"சரவணா, ஆபீஸ் எப்படி இருக்கு பார்த்தியாடா? நாம காத்துக் கிடந்ததுக்கு இங்கே வேலை கிடைக்கணும்டா. கிடைக்கும்டா." கிசு கிசுப்பாய் வாசு பேசினான்.
"இந்த இன்ட்டர்வியூவுக்கு இன்னும் ஆறு பேர் வந்திருக்காங்க."
"ஆறு பேர்தானே? நேர்மையான இன்ட்டர்வியூவா இருந்தா நம்பளோட தகுதிக்குத்தான் கிடைக்கணும்."
"சரி, சரி. பேசாம உட்கார். சத்தம் போடாதே." சரவணன் சொல்லிக் கொண்டிருக்கும்போதே யூனிஃபார்ம் அணிந்த ப்யூன் "ஸார் வந்துட்டார்" என்று சொல்லிக் கொண்டே பரபரப்பாக வெளியே ஓடினான். அங்கிருந்த அனைவரும் சுதாரித்துக் கொண்டு நேராக உட்கார்ந்தனர்.