பேர் சொல்லும் பிள்ளை - Page 12
- Details
- Category: மர்ம கதைகள்
- Published Date
- Written by சித்ரலேகா
- Hits: 8158
அவ்வப்போது சினிமாவில் வரும் சண்டைக்காட்சிகளில் சண்டை போடும் கும்பலில் ஒருவனாக, சண்டை போடுவற்காக ஷுட்டிங் போவதுதான் அவனது தொழில். ஊரெங்கும் காலரா நோய் பரவியபோது, அவனது பெற்றவர்களையும் அந்த நோய் பற்றிக் கொள்ள, வேம்புலியை அநாதையாக்கிவிட்டு போய் சேர்ந்தனர்.
ரங்கனுக்கும் வேம்புலியின் வயதில் ஒரு மகன் இருந்தபடியால் அவனுடன் சேர்த்து வேம்புலியையும் தன் சொந்த மகனைப் போல வளர்த்தான். ரங்கனும், ரங்கனின் மகன் அழகிரியும், சென்னையில் ராஜசேகரனின் தொழிற்சாலையில் வேலை பார்த்து வந்தனர்.
"ஏன் அப்பாரு, அழகிரி அண்ணன் தற்கொலை பண்ணிக்கினானே, அதுக்குக் காரணம் உங்க முதலாளி பிரசாத் ஐயான்னா சொல்ற?"
"அட, நீ என்னடா ஒண்ணும் வௌங்காதவனா இருக்க? அன்னிக்கு ஃபேக்டரிக்கு வெளியில அந்த எறா மீசை ஏகாம்பரத்துக்கும், வரதனுக்கும் கைகலப்பு வந்ததுன்னு சொன்னேன்ல? நீ அப்ப ஷுட்டிங் போயிட்ட?..."
ரங்கனின் கோபத்திற்குக் காரணமான நிகழ்ச்சியின் காட்சிகள் அவனது கண்முன் விரிந்தன.
10
கால் கொலுசு கிணுகிணுவென்று ஒலிக்க, இடுப்பை அசைத்தபடி நளினமான நடைபோட்டு வந்து கொண்டிருந்தாள் மனோன்மணி.
நடிகை 'ரகசியா’வின் சாயலில் இருந்த மனோன்மணி வாலிபர்களை கவர்ந்திழுக்கும் அழகுடன் இருந்தாள். அவளைப் பார்த்ததும் ஏகாம்பரம் அவள் அருகே வந்தான்.
"ஏ பொண்ணு! ரொம்ப அழகா டிரஸ் பண்ணிக்கினு வந்திருக்கியே என்னா விசேஷம்?"
"உன்னைப் பார்க்க வர்றதுதான் எனக்கு விசேஷம்..."
"சரி வா, டீ கடைக்குப் போய் ஏதாவது சாப்பிட்டு டீ குடிக்கலாம்."
இருவரும் அருகிலிருந்த டீ கடைக்கு நகர்ந்தார்கள்.
டீக்கடையில் இவர்கள் இருவரையும் சேர்த்துப் பார்த்த வரதன் சூடேறினான். வரதனின் முறைப்பெண்தான் மனோன்மணி. வரதன், மனோன்மணியை கல்யாணம் செய்து கொள்வதில் உறுதியாக இருந்தான். ஆனால் மனோன்மணி ஏகாம்பரத்தை விரும்பினாள். வரதனின் மொடாக் குடிப்பழக்கம் அவன்மீது அவளுக்கு வெறுப்பை வளர்த்திருந்தது.
கோபத்துடன் முறைத்துப் பார்த்த வரதனைக் கண்டு சிறிதும் பயப்படாமல் தைரியமாக நின்றிருந்தாள் மனோன்மணி. ஏகாம்பரத்தின் அருகே வந்த வரதன், "ஏண்டா, காத்திருந்தவன் பொண்டாட்டியை நேத்து வந்தவன் தட்டிக்கினு போற மாதிரி என்னோட முறைப்பொண்ணு இவளை, நீ தட்டிக்கினு போலாம்னு பார்க்கறியா?"
"எனக்கு கழுத்த நீட்ட சம்மதிச்சது மனோன்மணி. அவ கிட்டயே பேசு..?"
"அவ கிட்ட என்னடா பேசறது? அவ சின்ன பொண்ணு. காலுக்கு கொலுசு வாங்கிக் கொடுத்து அவ கையைப் பிடிக்கலாம்னு கனவு காணாதே. அது ஒரு நாளும் நடக்காது" என்று கத்திய வரதன் மனோன்மணியின் பக்கம் திரும்பினான்.
"நீ வீட்டுக்கு போம்மா." என்று சொல்லியபடியே அவளது கையைப் பிடிக்க முற்பட்டான். இதைக் கண்ட ஏகாம்பரத்திற்கு ரத்தம் கொதித்தது.
"டேய் வரதா, அவ உன் மாமன் பொண்ணா இருக்கலாம். ஆனா, அவ மனசை எனக்குத்தான் கொடுத்திருக்கா... எங்க வழியில குறுக்கே வராம நீ ஒதுங்கிடு. இல்லேன்னா நடக்கறதே வேற..."
"என்னடா பெரிசா மிரட்டறே..." என்று கத்திய வரதன், ஏகாம்பரத்தை அடிக்க ஆரம்பித்தான். அவன் அடித்ததும் ஏகாம்பரத்திற்கு கோப வெறி தலைக்கேறியது. எதிர்த்து வரதனை முரட்டுத்தனமாக அவனும் அடித்தான். கைகலப்பு முற்றியது. பயந்து போன மனோன்மணி வீட்டுக்கு ஓடி விட்டாள். டீக்கடையில் இருந்த நாலைந்து பேரும் ஓடி விட்டனர். தீவிரமாக நடந்த அடிதடியின் முடிவில் பேண்ட்டுக்குள் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து ஏகாம்பரத்தின் வயிற்றில் செருகினான் வரதன்.
வயிற்றில் ஏகமாய் ரத்தம் வடிய சரிந்து கீழே விழுந்தான் ஏகாம்பரம். இதைப் பார்த்த வரதன் ஓடி விட்டான்.
அச்சமயம் அங்கு வந்த அழகிரி உணர்ச்சிவசப்பட்டு ஏகாம்பரத்தின் வயிற்றில் இருந்த கத்தியை உருவினான். ஃபேக்டரிக்கு வெளியே அடிதடி நடந்ததை அறிந்த பிரசாத், போலீசுக்கு தகவல் சொல்லியிருந்தபடியால் போலீஸ் விரைந்து வந்தது. சம்பவம் நடந்த இடத்தில் அழகிரியைத் தவிர வேறு யாரும் இல்லை. கையில் ரத்தம் வழியும் கத்தியுடன் நின்றுக் கொண்டிருந்த அழகிரியை போலீஸ் கைது செய்தது. இந்தத் தகவலை அறிந்து அங்கு வந்தான் ரங்கன்.
"முதலாளி, என் பையன் தப்பு பண்ணல. சண்டையை பார்க்க வந்தவன், ஏகாம்பரம் வயித்துல குத்தியிருந்த கத்தியை கையில் எடுத்திருக்கான். அந்த நேரத்துல அவனுக்கு அப்படி செய்யக்கூடாதுன்னு தோணல. எப்படியாவது என் பையனை காப்பாத்துங்க..."
பிரசாத்தின் கால்களில் விழுந்து கெஞ்சினான் ரங்கன்.
"போலீஸோட நடவடிக்கையில நான் எப்படி தலையிட முடியும்? உன் மகன் நல்லவன்னா அதை கோர்ட் சொல்லட்டும்" என்று பிரசாத் தீர்மானமாகவும், உறுதியாகவும் பதில் கூறினான். போலீஸ், அழகிரியை அடித்து இழுத்துச் சென்றது. அன்று நிகழ்ந்த காட்சிகளை மீண்டும் நினைத்துப் பார்த்த ரங்கன் வாய்விட்டு அழ ஆரம்பித்தான்.
"அழாத அப்பாரு. அந்த சமயத்துல பார்த்து நான் வெளியூர் ஷுட்டிங்னு போயிட்டேனே... அழகிரி என்னோட உடன்பிறப்பு மாதிரி என் மேல பாசத்தோட இருந்தானே அப்பாரு..." கண் கலங்கினான் வேம்புலி.
"உனக்குத்தான் தெரியுமே, நம்ம அழகிரி மானஸ்தன். சுருக்குன்னு ரோஷப்பட்டுடுவான். அவன் மேல எந்த தப்பும் இல்லாதப்ப நடுரோடுல வச்சு போலீஸ் இழுத்துட்டுப் போன அவமானத்தை அவனால தாங்க முடியலை. பத்தாங்கிளாஸ் வரைக்கும் பெரிய படிப்பெல்லாம் படிச்சவனாச்சே. ஜெயில்ல வேற போலீஸ்காரங்க அடிச்சு துன்புறுத்தி இருக்காங்க. அதையெல்லாம் பொறுத்துக்க முடியாம, தற்கொலை பண்ணிக்கிட்டான்டா... ஐயோ நான் என்ன செய்வேன்?..."
ரங்கனின் கண்கள் சிவந்தது. சோகம் மாறி கோபம் ஏறியது. பற்களைக் கடித்தான்.
"அந்த பிரசாத் மட்டும் அன்னிக்கு ஒரு வார்த்தை நம்ம அழகிரிக்காக போலீஸ்ட்ட பேசி இருந்தார்னா, அவனை போலீஸ் இழுத்துக்கிட்டு போயிருக்காது. அவன் போலீஸ்ட்ட அடி வாங்கி இருக்க மாட்டான். அவமானப் பட்டிருக்கவும் மாட்டான். கேவலப்பட்டுப் போய், இப்படி என்னைத் தவிக்க விட்டுட்டு தற்கொலை பண்ணி இருக்கவும் மாட்டான். அந்த பிரசாத்தைப் பழி வாங்கினாத்தான் எனக்கு நிம்மதி..."
"ரத்தத்துக்கு ரத்தம். அடிக்கு பதிலடி. பழிக்குப்பழி, பலிக்கு பலி, உயிருக்கு உயிர். இந்தக் கணக்குப்படி பார்த்தா அந்த பிரசாத்தோட உயிரைத்தானே அப்பாரு எடுக்கணும்?"
"நான்தான் சொன்னேனடா அது சரிவராதுன்னு. நான் எப்படி என் மகனை இழந்து தவிக்கிறேனோ அது போல அந்த பிரசாத்தும் துடிக்கணும்."
"அப்படின்னா அவருக்கு புள்ள குட்டி இருந்தா அதுங்களை ஒரு வழி பண்ணிடுவோமா?"
"நீ உருப்படியா ஐடியா குடுக்கறதுக்குள்ள நானே செத்துடுவேன் போலிருக்கே? அந்த பிரசாத்துக்கு ஒரு பெண் குழந்தை இருக்கு. அந்தக் குழந்தையை நாம கடத்தணும்."