பேர் சொல்லும் பிள்ளை - Page 15
- Details
- Category: மர்ம கதைகள்
- Published Date
- Written by சித்ரலேகா
- Hits: 8161
சரவணன் சற்று தளர்ந்த குரலில் பேசினாலும், தீவிரமான முடிவு எடுத்து விட்ட உறுதி தென்பட்டது.
தன் தோள் மீது கிடந்த வாசுவின் கையை மெதுவாக தள்ளிவிட்டு, அங்கிருந்து நகர்ந்தான் சரவணன்.
14
கையில் குழந்தை கவிதாவுடன் இருந்த வேம்புலியைப் பார்த்து திடுக்கிட்டான் காளி.
"ஏ வேம்புலி, நீ ஏன் குழந்தையை வச்சிருக்க? அம்மா எங்கே?"
"அம்மா கோயிலுக்குப் போயிருக்காங்க. நீதான் பகல் டூட்டிக்கு வராம லீவு போட்டுட்டு போயிட்டியே. அதனால குழந்தையை என்னைப் பார்த்துக்கச் சொல்லிட்டு போனாங்க. பக்கத்துலதானே கோவில் இருக்கு? பத்து நிமிஷத்துல வந்துடறேன்னு சொல்லிட்டுப் போனாங்க. ஆமா தெரியாமத்தான் கேக்கறேன், நான் குழந்தையைத் தூக்கினா உனக்கு இன்னா வந்துச்சு? நானும் ஒரு குடும்பத்துல இருந்து வந்தவன்தானே? குழந்தை சாமிக்கு சமம்னு சொல்லுவாங்க. எனக்கும் கைக்குழந்தைகளைத் தூக்கி வச்சுக்கறதுன்னா எவ்வளவு ஆசை தெரியுமா? எல்லா குழந்தைகளும் வேம்புலி மாமா வேம்புலி மாமான்னு என்னை சுத்தி சுத்தி வருவாங்க."
"உன்னை நம்பி குழந்தையை குடுத்துட்டு போயிருக்காங்க. பத்திரம்..."
"இங்க பாரு காளி. நானும் உன்னாட்டும் பஞ்சம் பொழைக்கத்தான் இந்த ஊருக்கு வந்திருக்கேன். சும்மா எப்பப் பார்த்தாலும் ஏடா கூடமா கேட்டுக்கினே இருக்க. இது சரி இல்ல. என்னோட பேசறதா இருந்தா மரியாதையா பேசு. இல்லைன்னா கம்முனு உன் கூண்டுல போய் குந்திக்கினு கெட சொல்லிட்டேன்."
வேம்புலி கோபமாகப் பேசியதும், காளி எதுவும் பேசாமல் தன் இருப்பிடத்திற்கு சென்றான்.
கோவிலில் இருந்து திரும்பிய ஸ்வர்ணாவைக் கண்டதும் குழந்தையுடன் அவள் அருகே சென்றான் வேம்புலி.
"என்ன வேம்புலி.. குழந்தை அழுதுச்சா?"
"இல்லைம்மா. தூக்கி வச்சிருந்தா போதும்மா. நல்லா வேடிக்கை பார்த்துக்கினு இருக்கும்மா."
"சரி. குழந்தையைக் குடு" வேம்புலியிடம் இருந்து கவிதாவை வாங்கிக் கொண்ட ஸ்வர்ணா, காளி வந்து விட்டதையும் கவனித்தாள்.
"என்ன காளி, நீ எப்ப வந்தே? கொஞ்ச நாளா அடிக்கடி லீவு போட ஆரம்பிச்சிருக்க. கேட்டா ஏதாவது சாக்கு சொல்ற..."
"அது வந்தும்மா... வீட்டில பிரச்னை... அதனாலதான். இனிமே லீவு போட மாட்டேன்மா" என்று சொன்னவன், தலையை சொறிந்தான்.
"என்ன காளி, பணம் எதுவும் வேணுமா? ஏற்கெனவே ஏகப்பட்ட பணம் அட்வான்ஸா வாங்கி இருக்க..."
"அதில்லம்மா... இந்தத் தோட்டக்காரன் வேம்புலியைப் பத்தி உங்ககிட்ட சொல்லணும். அவன் ஆளே சரியில்லம்மா. கொஞ்சம் ஜாக்கிரதையா இருந்துக்கோங்கம்மா... அவன் பேசி முடிப்பதற்குள் ஸ்வர்ணா குறுக்கிட்டாள்.
"நீ பாட்டுக்கு அடிக்கடி லீவு போட்டுட்டு போனப்பவெல்லாம் அவன்தான் உன்னோட வேலையையும் சேர்த்து செஞ்சான். எனக்கென்னமோ அவன் நல்லவனாத்தான் தோணுது. உங்களுக்குள்ள ஏதாவது பிரச்னைன்னா நீயே பேசி தீர்த்துக்க. பாவம் ஏதோ வயிறு காயுதுன்னு பொழைக்க வந்தவனைப் பத்தி எதையாவது வம்பு பேசாதே" என்று கூறி காளியின் வாயை அடைத்தாள்.
வேம்புலி மிக உண்மையாகவும், பவ்யமாகவும் நடித்துக் கொண்டிருந்தபடியால், காளி சொன்னதை ஸ்வர்ணாவால் நம்ப முடியவில்லை. காளியின் வாயை அடைத்த அவளுக்கு, விதியின் கதவு திறந்து கொண்டதை அறிய முடியவில்லை.
15
நாட்கள், தன் போக்கில் மிக வேகமாக நகர்ந்தன. ஏற்காட்டில் இருந்த பெரியவர் ராஜசேகரனின் வாழ்வு முடிந்தது. நோய் நொடி என்று கஷ்டப்படவில்லை. கடைசிவரை தன் இஷ்டப்படி சப்பிட்டு, தன் தினசரி வேலைகளை செவ்வனே முடித்து, சுறுசுறுப்பாக இயங்கிக் கொண்டிருந்தவரின் இதயம் இயங்க மறுத்து நின்று போனது. ஓரிரு நிமிடங்கள் மட்டுமே நெஞ்சு வலியில் அவதிப்பட்ட, அவர் வேரறுந்த மரமாய் சாய்ந்தார்.
வேலைக்காரர்கள் கவனித்து, பிரசாத்திற்கும், நீலகண்டனுக்கும் டெலிபோனில் செய்தியைக் கூறினர். நீலகண்டன் விரைந்து வந்தார். பெரியவரின் இறுதிச் சடங்குகளுக்குரிய வேலைகளை துரிதமாக ஏற்பாடு செய்தார். பிரசாத்தின் வருகைக்காக காத்திருந்தார். ஏற்காடு பகுதியின் பொதுமக்களும், அவர்களது குடும்பத்தினரும் கூடி விட்டனர்.
பிரசாத்தும், ஸ்வர்ணாவும் குழந்தை கவிதாவுடன் வந்து இறங்கினர். ராஜசேகரனின் தகனக் கிரியைகள் அனைத்தும் முடிந்தன. துக்கத்திற்காக வந்திருந்த உறவினர்களும், நண்பர்களும் புறப்பட்டுச் சென்றனர்.
வக்கீல் நீலகண்டன் கையில் ஒரு ஃபைலுடன் பிரசாத்தின் அருகே வந்தார்.
"இதோ பாருப்பா பிரசாத். உன்னோட அப்பாவின் உயில். உனக்கு ரெண்டாவதும் பெண் குழந்தையே பிறந்துட்டதால உன் அப்பா அவரோட சகல சொத்துக்களையும் தரும ஸ்தாபனங்களுக்கு எழுதி வச்சுட்டார். சென்னையில நீ இருக்கற பங்களாவுல இன்னும் ஆறு மாசம் நீயும், உன் மனைவி ஸ்வர்ணாவும் குடி இருக்கலாம். அதுக்கப்புறம் அந்த பங்களாவையும் காலி பண்ணிடனும்னு உயில் எழுதி வச்சிருக்கார். ஐயம் வெரி ஸாரி பிராசாத். உங்க அப்பாகிட்ட உனக்காக நான் எவ்வளவோ பேசிப் பார்த்தேன். கடைசி வரைக்கும் அவர் மாறவே இல்லை. ஒரேயடியா சாதிச்சுட்டார்."
"என்னோட வேதனை அவருக்கு சாதனையா இருக்கறப்ப, உங்களோட போதனை எப்படி ஏறும்? நான் வேதனைன்னு சொல்றது அவரோட சொத்துக்கள் எனக்கு கிடைக்கலைங்கற விஷயம் கிடையாது. எப்பப் பார்த்தாலும் பெண் குழந்தை பெண் குழந்தைன்னு மட்டமா பேசறதைத்தான் சொல்றேன்."
"எப்பிடியாவது அவர் மனசை மாத்திடலாம்னு முயற்சி பண்ணினேன். அவர் நல்ல மூட்ல இருக்கறப்ப சமயம் பார்த்து பல தடவை இதைப் பத்தி பேசியும் இருக்கேன். கொஞ்ச நேரம் பொறுமையா மறுத்துப் பேசுவார். நான் திரும்ப திரும்ப சொல்ல ஆரம்பிச்சதும் கோபப்படுவார். "வேற விஷயம் இருந்தா பேசுங்க"ன்னு கண்டிப்பா சொல்லிடுவார். ராஜசேகரனோட சொத்துக்கள் உனக்குக் கிடைக்கறதுக்காக நான் செஞ்ச முயற்சிகள் எல்லாமே தோல்வியாயிடுச்சு. திடீர்னு இப்பிடி இறந்துடுவார்னு நான் எதிர்பார்க்கவே இல்லை. நோய்ன்னு படுக்கையில படுக்கவும் இல்லை. ஒண்ணும் இல்லை. அஞ்சு நிமிஷம் நெஞ்சுவலியில் உயிர் போயிருச்சு."
"அப்பாவோட உயிர் போனதைப் பத்தித்தான் எனக்குக் கவலையே தவிர. அவரோட உயிலைப் பத்தின கவலை எனக்குத் துளியும் இல்லை. எனக்கு பெண் குழந்தை பிறந்ததுக்கு தண்டனைன்னு நினைச்சு இப்படி எழுதி இருக்காரு. ஆனா இதை ஒரு பரிசாத்தான் நான் நினைக்கிறேன். நானே என்னோட சொந்தக்கால்கள்ல நின்னு, உழைச்சு அவரைப் போலவே செல்வச் சீமானா முன்னுக்கு வந்து காட்டறதுக்கு ஒரு சந்தர்ப்பத்தை எனக்கு ஏற்படுத்திக் கொடுத்திருக்காரு. சின்ன வயசில இருந்தே அவரோட அன்புக்கும், பாசத்துக்கும் ஏங்கி இருக்கேனே தவிர அவரோட சொத்துக்காகவும், பணத்துக்காகவும் இல்லை."