பேர் சொல்லும் பிள்ளை - Page 18
- Details
- Category: மர்ம கதைகள்
- Published Date
- Written by சித்ரலேகா
- Hits: 8161
முகத்தில் தண்ணீர் பட்டதும் லேசாக கண் விழித்தான் பிரசாத்.
"என்னங்க, என்ன ஆச்சு?" திடீரென ஸ்வர்ணாவின் மூளையில் பொறி தட்டியது. கவிதா எங்கே? தொட்டிலை நோக்கி பார்வையை வீசியவள், திடுக்கிட்டாள். திரும்பினாள். மெள்ள எழுந்திருக்க முயற்சித்துக் கொண்டிருந்த பிரசாத்திடம் கேட்டாள். "குழந்தை எங்கேங்க?"
"கவி... கவிதாவை முகமூடிக்காரன் தூக்கிட்டுப் போயிட்டான் போலிருக்கு ஸ்வர்ணா. என் தலையில எதையோ வச்சு அடிச்சான். நான் வலி தாங்காம மயக்கமாயிட்டேன். இப்பத்தான் தெரியுது. அவன் கவிதாவைத் தூக்கிட்டுப் போயிட்டான் போலிருக்கு... ஐயோ கவிதா.." நெற்றியில் அடித்துக் கொண்டு அழ ஆரம்பித்தான்.
"ஐயோ முகமூடிக்காரனா? என்னங்க சொல்றீங்க? நான் போகும்போது வேம்புலி தோட்டத்தில் இருந்தானே?..."
"வேம்புலி?... நீ போகும்போது அவன் இருந்தானா?!..."
"ஆமாங்க. அவனும் காளியும் இருந்தாங்களே?! ஆனா நான் திரும்பி வரும்போது காளி மயக்கமா விழுந்து கிடக்கறான்."
"காளி மயக்கமா விழுந்து கிடக்கானா? முகமூடிக்காரன் அவனை அடிச்சுப் போட்டுட்டுதான் உள்ளே வந்திருக்கணும்..."
நடந்ததை அறிந்த ஸ்வர்ணாவும் சுவரில் முட்டிக் கொண்டு அழுதாள்.
"கோயிலுக்குப் போயிட்டு வர்றதுக்குள்ள இப்படி பொறுப்பில்லாம குழந்தையை பறிகுடுத்துட்டீங்களே..." குழந்தையை காணவில்லை என்ற அதிர்ச்சியில் பிரசாத்தின் தலைக் காயத்தை மறந்தாள்.
"ஸாரி ஸ்வர்ணா, ஒரு கணம் என்ன நடந்ததுன்னே தெரியலை. கவிதா தொட்டில்ல தூங்கிட்டுதான் இருந்தா. நான் பேப்பர் படிச்சுக்கிட்டிருந்தேன். முகமூடி அணிஞ்ச ஒருத்தன் உள்ளே வந்தான். திடீர்னு என் தலையில இடி விழுந்தாப்ல அடி விழுந்துச்சு. நான் மயக்கமாயிட்டேன். யப்பா... ஆ... தலைவலிக்குது ஸ்வர்ணா... ம்மா..."
"ஐயோ... நான் என்ன பண்ணுவேன்?! உங்களை ஆஸ்பத்திரிக்கு கூட்டிட்டு போறதா, கவிதாவை தேடறதான்னே புரியலையே?... கடவுளே.... நீங்க வாங்க முதல்ல டாக்டர்கிட்ட போலாம்..."
கைத்தாங்கலாக பிரசாத்தைப் பிடித்தபடி தெருமுனை வரை சென்று ஆட்டோ பிடித்தாள். பிரசாத்தை ஏற்றினாள். அரைகுறை மயக்கத்தில் அவள் மீது சாய்ந்தான் பிரசாத்.
20
தலையில் கட்டுடன் சோர்வாக சோபாவில் சாய்ந்திருந்தான் பிரசாத். போன தடவை போல தாமதம் செய்யாமல் உடனே போலீசுக்கு தகவல் கொடுத்திருந்தான். போலீஸார் விசாரணைக்கு வந்தனர்.
"மிஸ்டர் பிரசாத். உங்க குழந்தையைக் கடத்திட்டுப் போயிட்டதா கம்ப்ளெயிண்ட் குடுத்திருக்கீங்க. அந்த விசாரனைக்காக வந்திருக்கோம்.”
"உட்காருங்க இன்ஸ்பெக்டர்!"
"தாங்க்ஸ். என்ன ஆச்சு உங்களுக்கு? தலையில பெரிசா கட்டு போட்டிருக்கீங்க?"
"குழந்தையை கடத்த வந்தவன், என் தலையில தாக்கிட்டு நான் மயக்கமா கீழே விழுந்ததும், என் குழந்தையைத் தூக்கிட்டுப் போயிட்டான் இன்ஸ்பெக்டர்."
இன்ஸ்பெக்டர் ப்ரேம்குமார் தன் விசாரணையைத் துவங்கினார்.
"குழந்தைக்கு என்ன வயசு?" அழுது கொண்டிருந்த ஸ்வர்ணாவிடம் கேட்டார்.
"ஆறு மாசம்தான் ஆகுது இன்ஸ்பெக்டர்."
"இந்த பங்களாவுல எத்தனை பேர் வேலை பார்க்கறாங்க?"
"மூணு பேர். ஒரு செக்யூரிட்டி, தோட்டக்காரன், சமையலுக்கு ஒரு லேடி. வீட்டுவேலைக்கு அந்த லேடியோட மகள். அந்தப் பொண்ணுக்கு கல்யாணம் முடிவாகி இருக்குன்னு ரெண்டு மாசம் லீவு எடுத்துட்டுப் போயிருக்காங்க. ரெண்டு மாசம் கழிச்சு வந்துடுவாங்கங்கறதுனால வேற ஆள் போடலை."
"செக்யூரிட்டி எத்தனை வருஷமா இங்க வேலை செய்யறான்?"
"அவன் மூணு வருஷமா வேலை செய்யறான்."
"ஓகோ, அவன் பேர் என்ன?
"காளி."
"நீங்க கோயில்ல இருந்து வரும்போதே அவன் மயங்கித்தான் கிடந்தானா?"
"ஆமா இன்ஸ்பெக்டர். குடிக்கற பழக்கமே அவனுக்குக் கிடையாது. அதான் எனக்கு எதுவும் புரியலை."
"இன்னும் கொஞ்ச நேரத்துல புரிஞ்சுடும். அவனை கவர்மெண்ட் ஆஸ்பத்திரியில சேர்க்கறதுக்கு ஏற்பாடு பண்ணிட்டோம். மெடிக்கல் செக்கப்ல அவன் எதனால மயக்கமாகிக் கிடந்தான்னு தெரிஞ்சுடும். உங்க தோட்டக்காரனும் வருஷக்கணக்கா இங்க வேலை பார்க்கறானா?"
"இல்லை இன்ஸ்பெக்டர். அவன் வேலைக்கு சேர்ந்து மூணு மாசம்தான் ஆகுது."
"நீங்க கோயிலுக்குப் போகும்போது வேம்புலி இருந்தான். ஆனா வரும்போது இல்ல. அப்படித்தானே?"
"ஆமா இன்ஸ்பெக்டர்."
"புதுசா மூணு மாசத்துக்கு முந்திதான் அவனை வேலைக்கு சேர்த்திருக்கீங்க. அவனோட அட்ரஸ் கேட்டுத் தெரிஞ்சுக்கிட்டீங்களா?"
"ஸாரி ஸார். வேலூர்ல இருந்து வர்றதா சொன்னான். அட்ரஸ் கேட்டு வைக்கலை."
"படிச்ச நீங்களே இப்படி முன்ன பின்ன தெரியாத ஆட்களை சரியா விசாரிக்காம வேலைக்கு வைக்கலாமா?"
"காளி கூட வேம்புலியைப் பத்தி சந்தேகப்பட்டு என்கிட்ட சொன்னான். ஆனா வேம்புலி நல்லவனா இருந்ததுனால, காளி சொன்னதை நான் பெரிசா எடுத்துக்கலை இன்ஸ்பெக்டர்..." ஸ்வர்ணா தயக்கத்துடனும், பயத்துடனும் கூறினாள்.
"நானும் இதையேதான் சொன்னேன் இன்ஸ்பெக்டர். ஏற்கெனவே ஒரு குழந்தையை இதே மாதிரிதான் கடத்திட்டுப் போய் கொன்னுட்டாங்க. அதனால ஜாக்கிரதையா இருன்னு ஸ்வர்ணாகிட்ட நான் சொல்லிக்கிட்டே இருந்தேன்."
"என்ன?! இதுக்கு முன்னாலயும் உங்க குழந்தையைக் கடத்திக்கிட்டுப் போய் கொன்னுட்டாங்களா? அது எப்ப நடந்தது? எப்படி நடந்தது? விவரமா சொல்லுங்க."
"எங்களோட முதல் குழந்தை சௌம்யா. அவளையும் முகமூடிக்காரன் கடத்திட்டுப் போய் பணம் கேட்டு மிரட்டினான். பரங்கிமலை அடிவாரத்துக்கு பணம் கொண்டு வரச் சொன்னான். நான் பணம் எடுத்துக்கிட்டு போறதுக்குக் கொஞ்சம் லேட் ஆயிடுச்சு."
"ஏன்?"
"இங்க இருந்து பரங்கிமலை தூரமும் அதிகம். அந்த சமயம் பார்த்து என்னோட கார் டயர் வேற பங்க்ச்சர் ஆயிடுச்சு. அதை ரெடி பண்ணிக் கொண்டு போறதுக்குள்ள அவசரப்பட்டு குழந்தையைக் கொன்னுட்டான். அவன் பணம் கொண்டு வந்து தரச் சொன்ன இடத்துல என் குழந்தையோட பிணம்தான் இருந்துச்சு."
"போலீஸ்ல கம்ப்ளெயிண்ட் கொடுத்தீங்களா?"
"போலீஸுக்கு சொன்னா குழந்தையைக் கொலை செஞ்சுடுவேன்னு முதல்லயே எச்சரிக்கை பண்ணி இருந்தான். அதனாலதான் போலீஸ்க்கு சொல்லாம பணம் எடுத்துக்கிட்டு கிளம்பினேன்..."
"குழந்தையைக் கொன்னுட்டார்னு தெரிஞ்சப்புறம் போலீஸ்ல புகார் குடுத்தீங்களா?"
"ஆமா இன்ஸ்பெக்டர். அதுக்கப்புறம் புகார் குடுத்தேன். ஆனா அந்தக் கேஸ் இன்னும் கூட அப்பிடியே நிக்குது. என்னோட முதல் குழந்தை சௌம்யாவைக் கடத்திட்டுப் போய் கொன்னவன் யார்னு கண்டுபிடிக்க போலீஸ் நல்லா முயற்சி பண்ணாங்க. ஆனா கண்டு பிடிக்க முடியலை."
"அந்தக் கடத்தலும், கொலையும் நான் இங்கே ஜாயின் பண்றதுக்கு முன்னால நடந்திருக்கணும். அந்தக் கேஸ் ஃபைலை நான் ஸ்டேஷனுக்குப் போய் பார்த்துக்கறேன்."
"என் குழந்தை கவிதாவை உயிரோட கண்டுபிடிச்சுக் குடுத்துடுங்க இன்ஸ்பெக்டர்" சோகத்தில் மூழ்கி இருந்த ஸ்வர்ணா, வேதனை வெளிப்படும் குரலில் மெதுவாகப் பேசினாள்.