பேர் சொல்லும் பிள்ளை - Page 19
- Details
- Category: மர்ம கதைகள்
- Published Date
- Written by சித்ரலேகா
- Hits: 8161
"உங்க செக்யூரிட்டி காளியோட மெடிக்கல் ரிப்போர்ட் வந்ததும் எனக்குத் தேவையான தகவல்கள் கிடைக்கும்னு நம்பறேன். உங்க தோட்டக்காரன் வேம்புலி தலைமறைவாகி இருக்கான். இவங்க ரெண்டு பேரும் என்னோட சந்தேக லிஸ்ட்ல இருக்காங்க. கூடிய சீக்கிரம் குழந்தையை யார் கடத்தினாங்கன்னு கண்டுபிடிச்சுடுவேன். கவலைப்படாதீங்க. உங்க குழந்தையை பத்திரமா கண்டு பிடிச்சுக் குடுக்க என்னால முடிஞ்ச வரைக்கும் முயற்சி பண்ணுவேன்."
"தாங்க்ஸ் இன்ஸ்பெக்டர்."
"உங்க பங்களாவுக்கு பக்கத்துல உள்ள மத்த பங்களாக்காரங்க கூட உங்களுக்கு நல்ல பழக்கம் உண்டா?”
"இந்த ஏரியாவுல எல்லா பங்களாவுமே இடைவெளி தள்ளி தள்ளித்தான் இருக்கும். அதனால யார் கூடயும் நெருக்கமான பழக்கம் கிடையாது. ஏதாவது விசேஷம்னா இன்விடேஷன் குடுத்துப்போம். அதுவும் கூட ஃபார்மலாத்தான்."
"எதுக்கும் நான் அந்த பங்களாக்காரங்களையும் விசாரிச்சுப் பார்க்கணும். அந்த வேம்புலி எந்த ஏரியாவுல இருந்து வர்றான்னாவது தெரியுமா?"
"ஸாரி இன்ஸ்பெக்டர், தெரியாது. இங்க வேலைக்கு வர்றதுக்கு முன்னால வேலூர்ல வேலை பார்த்ததா மட்டும்தான் சொன்னான்.”
"செக்யூரிட்டி காளிகிட்ட விசாரிச்சா வேம்புலியோட அட்ரஸ் கிடைச்சுடும். காளியையும், வேம்புலியையும் விசாரிச்சா கூடுதலான தகவல்கள் கிடைக்கும். இப்ப நான் கிளம்பறேன். உங்க போனை டேப் பண்றதுக்கு ஏற்பாடு செஞ்சிருக்கேன். மிரட்டல் போன் வந்தா உடனே என்னைக் கூப்பிடுங்க. என்னோட செல் நம்பரை எழுதிக்கோங்க."
ஸ்வர்ணா இன்ஸ்பெக்டர் சொன்ன நம்பரைக் குறித்துக் கொண்டாள். இன்ஸ்பெக்டர் கிளம்பினார்.
21
மறுநாள் விடியற்காலைப் பொழுது. தினமும் ஜாக்கிங் போவதற்காக காரில் புறப்பட்ட தொழிலதிபர் ராபர்ட், தெரு ஓரமாக இருந்த குப்பைத் தொட்டியைப் பார்த்ததும் ஞாபகம் வந்தவராக, காரை ஓரமாக நிறுத்தினார்.
முன்தின இரவு கார் டிக்கிக்குள் ஏகமாய் சேர்ந்து விட்ட மினரல் வாட்டர் பாட்டில்களைக் குப்பைத் தொட்டியில் போட்டுடலாம் என்று நினைத்தவர் காரில் இருந்து இறங்கினார். டிக்கியைத் திறந்தார். காலியான பாட்டில்களை எடுத்தார். குப்பைத் தொட்டியின் அருகே போனார். குப்பைத் தொட்டிக்குள் போடப் போனவர், அங்கே கறுப்பு நிறக் குப்பைப் பை முழுவதும் நிரப்பப்பட்டுக் கிடப்பதைப் பார்த்தார்.
"இயேசுவே" அவரது இதயம் வேகமாக துடித்தது. அதிர்ச்சியில் அவரது கையில் இருந்த பாட்டில்கள் கீழே சரிந்தன.
குப்பைப் பையின் மேல் பகுதியில் வெள்ளை வெளேரென்று இரண்டு பிஞ்சுக் கைகள் கொஞ்சமாய் விறைப்பாய் நீட்டிக் கொண்டிருந்தன. தன்னைத்தானே சமாளித்துக் கொண்ட ராபர்ட், மெதுவாக ஒரு பாட்டிலின் மேல் பகுதியினால் குப்பைப் பையைப் பிரிக்க முயற்சித்தார். தன் எண்ணத்தை மாற்றிக் கொண்டு, பாக்கெட்டில் இருந்த செல்போனை எடுத்தார்.
"ஸார், நான் ராபர்ட். ஜோ அண்ட் ஜோ இன்டஸ்டரி ஓனர். பீச் ரோடு ஓரமா இருக்கற குப்பைத் தொட்டியில ஒரு கவருக்குள்ள குழந்தை கிடக்கு ஸார். கைகள்லாம் விறைச்சுடுச்சு ஸார். உயிர் இருக்காது...."
மறுமுனையில், செய்தியின் பரபரப்பு குரலில் வெளிப்பட்டது.
"நீங்க எதையும் டிஸ்டர்ப் பண்ணாம அங்கேயே வெயிட் பண்ணுங்க. இதோ நாங்க வந்துடறோம்" இன்ஸ்பெக்டர் ப்ரேம் குமாரும், சப்- இன்ஸ்பெக்டர் கார்த்திக்கும் தங்கள் துறை குழுவுடன் வந்து சேர்ந்தனர். குழந்தை இருந்த குப்பைப் பையை எடுத்து, குழந்தையின் உயிரற்ற உடல் என்பதை ஊர்ஜிதம் செய்தனர்.
"நீங்கதான் மிஸ்டர் ராபர்ட்டா?"
இன்ஸ்பெக்டர் ப்ரேம்குமார் விசாரணையைத் துவங்கினார்.
"ஆமா இன்ஸ்பெக்டர். நான்தான் உங்களுக்கு போன் பண்ணினேன்."
"குப்பைத் தொட்டியில இருந்த குழந்தை எப்படி உங்க கண்ல பட்டது?"
"நான் தினமும் ஜாக்கிங் பண்றதுக்காக இங்கே வருவேன். ஒரு வாரமா என்னோட கார் டிக்கியில காலியான வாட்டர் பாட்டில்கள் சேர்ந்துடுச்சு. அதை குப்பைத் தொட்டிக்குள்ள போட்டுடலாம்னு போனேன். ஒரு கறுப்பு ப்ளாஸ்டிக் கவர்ல சின்னக் குழந்தையோட கை தெரிஞ்சது. அதைப் பார்த்ததும் ரொம்ப அதிர்ச்சியாயிட்டேன். போலீசுக்கு சொல்றதுதான் நல்லதுன்னு உங்களுக்கு போன் பண்ணினேன். நீங்க வர்ற வரைக்கும் இங்கே யாருமே இல்லை இன்ஸ்பெக்டர்."
இதற்குள் காவல்துறையைச் சேர்ந்த போட்டோகிராபர் குப்பைத் தொட்டிக்குள் குழந்தையின் பிணம் கிடந்த கறுப்பு நிற கவரை புகைப்படம் எடுத்துக் கொண்டிருந்தார். பெண் குழந்தையின் உயிரற்ற உடல் சற்று ஊதிப் போய் இருந்தது.
"இயேசுவே."
குழந்தையின் முழு உடலையும் பார்த்த ராபர்ட் மறுபடியும் அதிர்ச்சி அடைந்தார்.
"ஆறு மாசக் குழந்தையை இப்படி பண்றதுக்கு எந்தப் பாவிக்கு மனசு வந்துச்சோ இன்ஸ்பெக்டர்...?" ராபர்ட் பரிதாபத்துடன் பேசினார்.
"இந்த மாதிரி கேஸ் எல்லாம் எங்களுக்குப் பார்த்து பார்த்துப் பழகிப் போச்சு மிஸ்டர் ராபர்ட். நீங்க ஸ்டேஷனுக்கு வந்து எப்.ஐ.ஆர் போட்டதும் கையெழுத்து போட்டுட்டுப் போயிடுங்க."
"ஓ. கே. இன்ஸ்பெக்டர்."
22
கண்ணீர் மிதக்கும் கண்களோடு, பூஜை அறையே கதியாய் கிடந்தாள் ஸ்வர்ணா. பிரசாத்தும் ஆபீஸிற்கு சரியாகப் போகாமல் விரக்தியான மனநிலையில் இருந்தான். ஷேவ் செய்யாமல் முள் முள்ளான தாடியுடன் இருந்தான். குழந்தையைப் பற்றிய தகவல் கிடைக்காதா என்ற பரிதவிப்பில் நிமிடங்கள் ஒவ்வொன்றும் யுகமாய் கழிந்தன.
டெலிபோன் மணி ஒலித்தது. பரபரப்புடன் சென்று ரீசிவரை எடுத்தான். ஸ்வர்ணாவும் ஓடி வந்து பிரசாத்தின் அருகே நின்றாள்.
"ஹலோ!"
மறுமுனையில் இருந்து கிடைத்த செய்திக்கு ஏகமாய் அதிர்ந்தான் பிரசாத். ரிசீவரை சரியாக வைக்கக்கூட இயலாதவனாய் அருகில் இருந்த சோஃபாவில் சரிந்தான்.
"என்னங்க? என்ன ஆச்சு?" ஸ்வர்ணா பயத்தில் நடுங்கினாள்.
"ஸ்வர்ணா... பீச் ரோடு குப்பைத் தொட்டியில் ஒரு குழந்தையோட பிணம் கிடைச்சிருக்காம். அது... அது... நம் கவிதாவா இருக்குமோன்னு போலீஸ் சந்தேகப்படறாங்க. நம்பளை வந்து அடையாளம் காட்டச் சொல்றாங்க..."
"ஐயோ... கடவுளே அது என் குழந்தையா இருக்கக் கூடாது. இருக்கவே இருக்காது..." அதற்கு மேல் பேச இயலாதவளாய் பிரசாத்தின் மடிமீது சாய்ந்தாள்.
"எழுந்திரும்மா. இன்ஸ்பெக்டர் நம்பளை உடனே கவர்மெண்ட் ஹாஸ்பிடலுக்கு வரச் சொல்றார். கிளம்பு."
கண்களைத் துடைத்தபடி எழுந்தாள்.
இருவரும் கிளம்பினார்கள்.
குப்பைத் தொட்டியில் கிடந்த குழந்தையின் பிணம், தங்கள் குழந்தை கவிதாதான் என்று அடையாளம் காட்டிய ஸ்வர்ணாவும், பிரசாத்தும் கதறி அழுத காட்சி நெஞ்சை உருக்கியது.
"பிரசாத், நீங்க தைரியமா இருந்தாத்தான் உங்க மனைவிக்கு ஆறுதல் சொல்ல முடியும். அவங்களை கவனிங்க. ரொம்ப அதிர்ச்சியாகி இருக்காங்க. வீட்டுக்குக் கூட்டிட்டுப் போங்க. நான் மத்த ஃபார்மாலிட்டீஸ் எல்லாம் பார்க்க வேண்டி இருக்கு. நீங்க கிளம்புங்க.