பேர் சொல்லும் பிள்ளை - Page 17
- Details
- Category: மர்ம கதைகள்
- Published Date
- Written by சித்ரலேகா
- Hits: 8160
18
சில நாட்களாக தன்னைப் பார்ப்பதை சரவணன் தவிர்த்து வருவதை உணர்ந்த வாசு மிகவும் கவலைப்பட்டான். சரவணனை அவனது வீட்டுக்குச் சென்று சந்திக்க வேண்டும் என்று முடிவு செய்தான்.
காலையில் ஜாக்கிங் கிளம்புவதற்கு முன் சரவணனின் வீட்டுக்குச் சென்று அழைப்பு மணியை ஒலிக்கச் செய்தான். சரவணனின் அம்மா கமலா கதவை திறந்ததும் வாசுவைப் பார்த்து ஆச்சர்யப்பட்டாள்.
"வாப்பா வாசு"
"சரவணனை பார்க்கணும்மா"
வாசு சொன்னதும் கமலா மேலும் வியப்படைந்தாள்.
"என்னப்பா வாசு. உன் கூட வரலையா அவன்?" கமலா கேட்டதும் வாசு திகைத்தான். அதன்பின் தன்னை சுதாரித்துக் கொண்டான்.
"அ... அது வந்தும்மா... நான் இன்னிக்கு வீட்டுக்குப் பால் வாங்கிக் குடுத்துட்டு வர லேட்டாயிடுச்சு. சரவணன் இருந்தா அவனைக் கூப்பிட்டுக்கிட்டு போயிடலாம்னு வந்தேன்" சமாளித்துப் பேசுவதற்குள் அந்த அதிகாலைப் பொழுதிலும் வாசுவிற்கு வியர்த்தது.
"என்னமோப்பா... கொஞ்ச நாளா சரவணன் போக்கே சரியில்லை. உருப்படியா வேலைக்குப் போகாட்டாலும் ஒழுங்காவாவது இருந்தான். இப்ப என்னடான்னா வீட்லயே சரியா இருக்கறதில்லை. கேட்டா மழுப்பலா ஏதாவது சொல்றான். இப்பிடி திடீர்னு மாறிட்டான். அதைப் பத்தி உனக்கு ஏதாவது தெரியுமா? நீயும் அவனும்தானே எப்பவும் சேர்ந்து இருப்பீங்க?"
"வேலை கிடைக்காத மனக்குறைதான் அவன் மனசுல ரொம்ப இருக்கு. பெத்தவங்களுக்கு பாரமா இருக்கோமேன்னு என்கிட்ட சொல்லி ரொம்ப வேதனைப்படறான். இதே கவலைதான் எனக்கும். மத்தபடி சரவணன் கிட்ட தப்பா எதுவும் இருக்காதும்மா, நீங்க கவலைப்படாதீங்க." கமலாவிற்கு ஆறுதல் சொன்னாலும் வாசுவின் இதயம் திகிலுடன் துடித்தது.
"நீ சொல்றதும் சரிதான். கொஞ்ச நாளா சரவணன் சரியா சாப்பிடறதும் கிடையாது. எதையோ பறிகுடுத்த மாதிரி எப்ப பார்த்தாலும் ஏதாவது யோசனையிலேயே இருக்கான். வேலை கிடைக்காத வேதனையிலதான் அவன் அப்படி இருக்கான்னு தெரிஞ்சும், கஷ்டம் பொறுக்காம சில சமயம் அவனை கடுமையா திட்டிடறேன். அதுதான் அவன் மனசை பாதிச்சிருக்கு போலிருக்கு. இனிமே திட்டாம இருக்க முயற்சி பண்றேன். உங்க ரெண்டு பேருக்கும் கூடிய சீக்கிரம் வேலை கிடைக்கணும்னு நான் சாமியை வேண்டிக்கிறேன்."
"ரொம்ப தாங்க்ஸ் மா. நான் கிளம்பறேன். சரவணன் எனக்காகக் காத்துக்கிட்டிருப்பான்." பொய்யை உண்மை போல் சொல்வதற்கு வாசு மிகவும் கஷ்டப்பட்டான். பெற்ற தாயின் மனது பரிதவித்ததால், வெளிவந்த வார்த்தைகளின் பாரம் அவன் மனதிலும் ஏறிக் கொண்டது. 'சரவணனை எங்கே சந்திப்பது? என் வீட்டுல போன் இருக்கு போன் நம்பரும் அவனுக்குத் தெரியும். இருந்தாலும் ஒரு போன் கூட பண்ணலையே’ சிந்தித்தபடியே நடந்தான் வாசு.
சிறிது தூரம் நடந்தபின் டெலிபோன் பூத்திற்குள்ளிருந்து சரவணன் வருவதைப் பார்த்தான். வேகமாக அவனிடம் சென்றான். வாசுவை பார்த்துவிட்ட சரவணன், பார்க்காதது போல எதிர் திசையில் நடக்க ஆரம்பித்தான்.
'இன்னிக்கு இவனை விடக்கூடாது. பார்த்துப் பேசியே ஆகணும்’ விடாப்பிடியாக சரவணனை பின் தொடர்ந்தான் வாசு. ஆனால் தான் பின் தொடர்வதை சரவணன் தெரிந்துக் கொள்ளக்கூடாது என்பதில் கவனமாக இருந்தான். அரை கிலோ மீட்டர் சென்றபின் சரவணனின் அருகே சைக்கிளில் வந்த ஒருவன் நின்று பேசிக் கொண்டிருப்பதைப் பார்த்தான். சைக்கிளில் வந்தவனின் தோற்றம் மரியாதைக்குரியதாக இல்லை. அடிதடிகளில் ஈடுபடும் ரௌடி போல காட்சி அளித்தான்.
அந்த மனிதன் சரவணனின் தோளைத் தொட்டதும் சரவணன் தன்னை யாரேனும் பார்க்கிறார்களா என்று சுற்றும் முற்றும் பார்ப்பதை வாசு கவனித்தான். தன்னைப் பார்த்து விடாமல் மறைந்து நின்று கொண்டான். இருவரும் ரகசியமாக பேசிக் கொள்வது வாசுவிற்குப் புரிந்தது. 'யார் இவன்? இதுக்கு முன்னால இவனை எங்கேயும் பார்த்ததில்லை. ஆளைப் பார்த்தாலே தப்புக்களை தப்பாமல் செய்பவன் என்று தெரிகிறதே, இவனுடன் சரவணனுக்கு என்ன சகவாசம்?’ வாசுவின் மனதில் அடுக்கடுக்காய் கேள்விகள் எழுந்தன.
மறுபடியும் சரவணனை நோட்டமிட்டான். அந்த புதிய மனிதனை அவசர அவசரமாக அங்கிருந்து அனுப்புவது வாசுவிற்கு நன்றாக புரிந்தது. திடீரென்று பெயிண்ட் உதிர்ந்த நிலையில் இருந்த ஒரு பழைய அம்பாஸிடர் கார் சரவணன் அருகே நின்றது. சரவணன் அதில் ஏறிக் கொள்ள அந்தக் கார், விர்ரென்று விரைந்தது.
19
காளியின் முகத்துக்கு நேரே பார்சலை நீட்டினான் வேம்புலி.
"அட! பிரியாணி வாசனை ஆளையே தூக்குது?! என்ன விசேஷம் இன்னிக்கு தடபுடலா பிரியாணி கொண்டு வந்திருக்க?"
"அது ஒண்ணும் இல்ல. எங்க வூட்டாண்ட எல்லாருமா சேர்ந்து ஆளுக்கு கொஞ்சம் காசு போட்டு பிரியாணி செஞ்சாங்க. உனக்குதான் பிரியாணின்னா போதுமே. மனசு கேக்கல. அதான் உனக்காக எடுத்தாந்தேன்"
"என்னையும் நினைச்சு எனக்காக ஆசையா கொண்டு வந்திருக்க. கல்லுக்குள்ள ஈரம்னு சொல்லுவாங்களே அந்த மாதிரி."
"நான் கல்லும் இல்ல. மண்ணும் இல்ல. சாதாரண மனுஷன்தான். ஒரே இடத்துல வேலை பார்க்கறோம். நமக்குள்ள ஒத்துப் போறதுதானே நல்லது. இந்தா பொட்டலத்தைப் புடி" பிரியாணி பார்சலை காளியிடம் கொடுத்தான் வேம்புலி.
'இந்த காளியோட வீக்னஸ் பிரியாணின்னு தெரிஞ்சுக்கிட்டது எவ்வளவு நல்லதாப் போச்சு? இத வச்சே இன்னிக்கு என்னோட திட்டத்தை முடிக்கணும்’ உள்ளுக்குள் தோன்றிய எண்ணங்களை வெளியில் காட்டிக் கொள்ளாமல் சாமர்த்தியமாய் பேசுவது வேம்புலிக்கு கைவந்த கலை என்பதை அறியாமல் காளி, தூக்க மருந்து கலந்த பிரியாணியை சுவைக்க ஆரம்பித்தான்.
கோவிலுக்குப் போய்விட்டு திரும்பிய ஸ்வர்ணா, பங்களாவினுள் நுழைந்ததும், காளி தூங்குவதைப் பார்த்து திகைத்தாள். கூடவே கோபமும் கொண்டாள். காளியின் அருகே சென்றாள்.
"காளி, ஏ காளி..."
காளியிடம் சிறிதும் அசைவு இல்லை.
'இவனுக்கு குடிக்கறப் பழக்கமும் கிடையாதே... ஏன் இப்படி பேச்சு மூச்சு இல்லாம கிடக்கறான்?’ யோசித்த ஸ்வர்ணா வேம்புலியைத் தேடினாள். கண்ணுக்கெட்டிய தூரம் வரை அவன் தென்படவில்லை.
"வேம்புலி.... வேம்புலி..." குரல் கொடுத்தாள். பதில் இல்லை. எதுவும் புரியவில்லை. நெஞ்சில் சின்னதாய் ஒரு திகில் பரவ, வேகமாய் வீட்டினுள் சென்றாள். நிலைகுலைந்து, குப்புறப் படுத்துக் கிடந்த பிரசாத்தைப் பார்த்தாள்.
"ஐயோ, என்னங்க... என்ன ஆச்சு உங்களுக்கு?" ஸ்வர்ணாவின் கையில் இருந்த பூக்கூடைக்குள் இருந்த பூக்களும் பிரசாத பொட்டலங்களும் சிதறின. மயங்கிக் கிடந்த பிரசாத்தின் அருகே சென்றாள். அவனுடைய தலையில் அடிபட்டிருந்த இடத்தில் இருந்து ரத்தம் வழிந்திருந்தது.
"என்னங்க... என்னங்க.." பதறியபடி அவனைத் திருப்பினாள். கண்களில் அசைவு இல்லை. அதிர்ச்சியுடன் அலறியபடியே தண்ணீரை எடுத்து வந்து அவனுடைய முகத்தில் தெளித்தாள்.