பேர் சொல்லும் பிள்ளை - Page 16
- Details
- Category: மர்ம கதைகள்
- Published Date
- Written by சித்ரலேகா
- Hits: 8160
"ரிலாக்ஸ் பிரசாத். உன்னோட மனநிலை எனக்குப் புரியுது. உங்க அப்பாவோட குணச்சித்திரம் அப்படி அமைஞ்சுடுச்சு. அவரைப் புரிஞ்சுக்கிட்டவங்க யாருமே கிடையாது."
"நான் அவரைப் புரிஞ்சுக்கிட்டேன். அவருக்கு பெத்த மகனை விட பணம், சொத்து, பேர் இதுதான் முக்கியம். இதை நல்லாவே புரிஞ்சுக்கிட்டேன். அதனாலதான் அவரோட சொத்துக்கள் எதையுமே நான் எதிர்பார்க்கலை. எதிர்ப்பார்ப்புகள் இருந்தாத்தானே ஏமாற்றங்கள்? ராஜசேகரனோட மகன் ராஜசேகரனைவிட பெரிய ஆளா வந்துட்டார்னு அவரோட பேரை சொல்ல வைப்பேன்" உள் மனதின் வெறுப்பு வெளிப்பட பேசிய பிரசாத், அதற்கு மேல் எதுவும் நீலகண்டனிடம் பேச விரும்பாமல் நகர்ந்தான்.
நீலகண்டன் கிளம்பினார்.
16
காலம் யாருக்காகவும் காத்திருக்கவில்லை. ராஜசேகரன் எழுதி வைத்த உயிலின்படி, சென்னையில் உள்ள பங்களாவை காலி செய்வதற்குரிய கெடு முடிய இன்னும் சில மாதங்களே இருந்தன.
பங்களாவின் காம்பவுண்டு ஓரமாக மறைந்து நின்று எட்டிப் பார்த்துக் கொண்டிருந்த ரங்கனை தற்செயலாய் பார்த்து விட்ட வேம்புலி திடுக்கிட்டான்.
வேகமாக அவனிடம் நெருங்கி ரங்கனின் கையை பிடித்து இழுத்துக் கொண்டு, பங்களாவை விட்டு சற்று தூரம் தள்ளி நின்றுக் கொண்டான். பதற்றமான குரலில் பேச ஆரம்பித்தான்.
"இன்னா அப்பாரு, நீ இன்னாத்துக்கு இங்கே வந்தே?"
"நீ பாட்டுக்கு இங்க வந்து வேலைக்கு சேர்ந்துக்கின. ஆனா நம்ப வேலை ஒண்ணும் நடக்கலியே. அதான் இன்னா ஏதுன்னு கண்டுக்கினு போலாம்னு வந்தேன்."
"ஐயோ அப்பாரு, நீயி இங்கே வர்றது ரொம்ப டேஞ்சரு. சும்மாவே அந்த செக்யூரிட்டி காளி என் மேல சந்தேகப்பட்றான். உன்னை வேற பார்த்துட்டான்னா போச்சு. நீ கௌம்பு. நம்ப ப்ளான் படி எல்லாம் கச்சிதமா நடக்கும். இந்த வூட்டுக்கார எஜமானியம்மா என்மேல அசைக்க முடியாத நம்பிக்கை வச்சிருக்கிறாங்கோ. இதுக்காக நான் எவ்வளவு பாடு பட்டிருக்கேன்.. நீ இன்னாடான்னா திடுதிப்புன்னு இங்க வந்து நிக்கற... கிளம்பு கிளம்பு. பிரசாத், பங்களாவை காலி பண்ணப் போறதா அரசல் புரசலா பேசிக்கிறாங்க. அதுக்குள்ள நம்ப விஷயத்தை முடிச்சுடுவேன். நீ கௌம்பு" வேம்புலி, ரங்கனைத் துரத்தினான்.
"அட இன்னாதான் பண்ணப் போறேன்னு சொல்லிட்டா நான் போயிடறேன்."
"ஐயோ அப்பாரு, நீ வளர்த்த என்மேல உனக்கு இத்தினி டவுட்டா? நல்லா கேட்டுக்க. இந்த வீட்டு அம்மா, வெள்ளிக்கு வெள்ளி கோயிலுக்குப் போவாங்க. அவங்க போகச் சொல்ல, என் கையில் குழந்தையை குடுத்துட்டு போற அளவுக்கு ஸ்ட்ராங்கா நம்ப வச்சிருக்கேன். இன்னிக்கு வெள்ளிக்கிழமை. காரியத்தை கச்சிதமா முடிச்சுடுவேன். ஒரே இடைஞ்சல் என்னான்னா இந்த காளி ஒருத்தன்தான். அதை எல்லாம் நான் சமாளிச்சு, பளிச்னு விஷயத்தை முடிக்கறேன். நீ இங்க இருந்து இடத்தை காலி பண்ணு. டீ குடிக்கப் போன காளி வந்துடப் போறான். ம்..ம்.. போ."
ரங்கன் வேகமாக அங்கிருந்து கிளம்பினான்.
17
குழந்தை கவிதாவை தங்கள் கண்மணி போல காத்து வளர்த்தனர் ஸ்வர்ணாவும், பிரசாத்தும். குழந்தை கவிதா, ஸ்வர்ணாவின் மடியில் படுத்தபடி விளையாடிக் கொண்டிருந்தாள். அதன் சிரிப்பைப் பார்த்துக் கொண்டிருந்த பிரசாத்தின் முகத்தில் திடீரென வேதனை ரேகைகள் தென்பட்டன.
"ஸ்வர்ணா, நான் ராஜகுடும்பத்தை சேர்ந்தவன் மாதிரி வளர்ந்தேன். வாழ்ந்தேன். நம்ப குழந்தை கவிதா எப்படி வளரப் போறா? வாழப் போறா?"
"ஏங்க இப்படி கவலைப்படறீங்க? நீங்கதான் உங்க அப்பாவை விட செல்வந்தரா பெரிய ஆளா வந்துடணும்னு தீவிரமா இருக்கீங்களே?"
"அதில எந்த சந்தேகமும் இல்லை. கஷ்டப்படப்படத்தான் முன்னுக்கு வரணும்ங்கற வேகமும், வெறியும் அதிகமாகும். எங்க அப்பாவே அப்படித்தானே? அவருக்கென்ன அவங்க அப்பன், பாட்டனா சொத்து சேர்த்து வச்சுட்டுப் போனாங்க? கஷ்டப்பட்டாரு. கஷ்டங்கள் குடுத்த வெறியினாலதானே கொஞ்சம் கொஞ்சமா முன்னேறி பெரிய கோடீஸ்வரன் ஆனார். அது மாதிரி நானும் என் லட்சியத்தை எட்டிப் பிடிப்பேன்."
"நிர்வாகத் திறமையில உங்களுக்கு இருக்கற அனுபவம், உங்க திறமை இதெல்லாம் நிச்சயமா உங்களை ரொம்ப சீக்கிரமாவே உயர்த்தும். எனக்கு அந்த நம்பிக்கை இருக்குங்க."
"நம்பிக்கை வேற. நடைமுறை வாழ்க்கை வேற ஸ்வர்ணா. ஏன் சொல்றேன்னா, ஏதாவது பிஸினஸ் துவங்கலாம்னு தெரிஞ்ச இடங்கள்ல எல்லாம் கடன் கேட்டுப் பார்த்துட்டேன். எல்லாரும் கையை விரிச்சுட்டாங்க. 'உங்க அப்பா உனக்கு சல்லிக்காசு எழுதி வைக்கலயாமே? எதை வச்சு இங்கே வந்து கடன் கேக்கற’ முகத்துக்கு நேரே கேக்கறாங்க ஸ்வர்ணா" பெருமூச்சு விட்டபடி தொடர்ந்தான் பிரசாத். "உழைக்கத் தேவையான மனோ பலம் என்கிட்ட நிறையவே இருக்கு. ஆனா பண பலம் இருந்தா அது ஒரு கூடுதல் சக்திதானே?"
"உங்க அப்பா கோடி கோடியா சம்பாதிச்சார். என்ன பிரயோஜனம்? தன்னோட சொந்த மகன் அதுவும் ஒரே மகனுக்கு இப்பிடி எதுவுமே எழுதி வைக்காம விட்டுட்டாரே, இப்பிடி ஒரு தகப்பன் இந்த உலகத்துல எங்கேயும் இருக்க மாட்டாங்க. அவர் உயிரோடு இருக்கும்பொழுது நமக்கு எல்லா சௌகர்யங்களையும் செஞ்சு குடுத்தார். சகல வசதிகளோடு வாழ வச்சார். ஆனா ஒரு அல்பமான காரணத்துக்காக ஆஸ்தி முழுசையும் தருமத்துக்கு எழுதி வச்சுட்டாரு."
"உனக்கு அது அல்பமான காரணம். அவருக்கு அது ஆணித்தரமான காரணம். பேர் சொல்ல பிள்ளை இல்லைன்னு தத்து எடுத்துக் கூட வளர்க்கறாங்க. தத்து எடுத்த பிள்ளைகளுக்கு தங்களோட சொத்துக்களை எழுதியும் வைக்கறாங்க. ஆனா இவரோட பேர் சொல்ல பெத்தபிள்ளை நான் இருந்தும் அவரோட வாரிசுன்னு பேர் சொல்ல பேரப்பிள்ளை இல்லைங்கறதுக்காக என்னை இப்பிடி ஒண்ணுமில்லாதவனா விட்டுட்டாரு. மனோ பாவங்களும், குணநலன்களும் மனிதருக்கு மனிதர் வேறுபடறது சகஜம்தானே? இதைப்பத்தி எல்லாம் நான் பெரிசா கவலைப்படறதில்லை."
"உங்களுக்காக ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் அம்மன் கோயிலுக்குப் போய் வேண்டிக்கிட்டிருக்கேன். என்னோட பிரார்த்தனை நிச்சயமா பலிக்கும். பிஸினஸ் பண்றதுக்கு பணம் கிடைக்கலைன்னா என்ன? நல்ல கம்பெனியா பார்த்து வேலைக்கு சேர்ந்துடுங்க."
"ஆமா, நானும் அதையேதான் நினைச்சேன். வேலை பார்த்துக்கிட்டே, பணம் புரட்டறதுக்கு முயற்சி பண்ணனும். எப்பாடு பட்டாவது வாழ்க்கையில முன்னுக்கு வரணும். முதல்ல இந்த பங்களாவை காலி பண்ணனும். இங்கே வாழறது நரகத்துல வாழற மாதிரி இருக்கு..."
"சும்மா அதையே நினைச்சு கவலைப்பட்டுக்கிட்டிருக்காதீங்க. சாப்பிட வாங்க." பிரசாத்திற்கு சாப்பிட எடுத்து வைப்பதற்காக சமையலறைக்கு சென்றாள் ஸ்வர்ணா.