பேர் சொல்லும் பிள்ளை - Page 8
- Details
- Category: மர்ம கதைகள்
- Published Date
- Written by சித்ரலேகா
- Hits: 8158
"நாம ரெண்டு பேரும் இப்படிப் புலம்பிப் புலம்பி, கடைசியில நடக்கக் கூட முடியாத கிழவனா ஆகிடுவோம்ன்னு நினைக்கிறேன்."
"சரி சரி. கொஞ்ச நேரம் உட்கார். எங்க அண்ணன் கிட்ட கெஞ்சி கூத்தாடி இன்னிக்கு பேப்பர் வாங்கிட்டு வந்திருக்கேன். க்ளாஸிஃபைட் பார்க்கலாம் வா."
"அட போடா, வெறுத்துப் போச்சு. வீட்ல அப்பாவுக்கு வயித்துல ஆப்ரேஷன் பண்ணதுல இருந்து அம்மா என்னை வார்த்தைகளால வறுத்து எடுக்கறாங்க. அவங்களைக் குற்றம் சொல்லலை. அப்பாவோட ஆப்ரேஷன் செலவினால வீட்டில பயங்கரமான பணத்தட்டுப்பாடு. அதனால கோபப்படறாங்க. ஆனா அவங்க திட்டும் பொழுது மனசு படற வேதனை! தாங்க முடியலைடா. பேசாம கொள்ளை அடிச்சாவது வீட்டுக்குப் பணம் குடுத்து அம்மாவோட கடுமையான திட்டுகள்ல இருந்து தப்பிக்கலாம் போல இருக்குடா.."
"டேய்..." அவனது வாயைத் தன் கைகளால் பொத்தினான் வாசு.
"என்னடா பேசற? கௌரவமான குடும்பத்தைச் சேர்ந்த நாம இந்த மாதிரி தவறான போக்கை மனசால கூட சிந்திச்சுப் பார்க்கக் கூடாதுடா."
"முடியலைடா. வீட்டுக்குள்ள இருக்க முடியலை. அம்மா அப்பா கஷ்டத்தைப் பார்க்கவும் முடியலை, அவங்க குத்திக் காமிச்சுப் பேசறதை சகிச்சுக்கவும் முடியலை..."
"அதுக்காக? திருட்டும், புரட்டும் பண்ணித்தான் வீட்டுக்கு பணம் குடுக்கணுமா? ஏதோ வெறுப்புல பேசிட்ட. இனிமேல விளையாட்டாக் கூட இப்படிப் பேசாதே."
"சரிடா. பேப்பரைப் பார்த்துத் தொலை. ஏதாவது விடிவு காலம் பிறக்குதான்னு பார்ப்போம்."
வாசுவின் கையில் இருந்த செய்தித்தாளைப் பிரித்தான். சரவணனும், வாசுவின் தலையோடு தலை ஒட்டியபடி வேலை வாய்ப்புக்கான விளம்பரங்கள் மீது கண்களை ஓட விட்டான்.
"டேய்... இதோ பாருடா..." திடீரென வாசு துள்ளிக் குதித்தான். தொடர்ந்தான். ராஜசேகரன் இன்டஸ்ட்ரீஸ் விளம்பரம் குடுத்திருக்காங்கடா. அந்த கம்பெனியோட ஆபிசுக்கு சீஃப் அக்கவுண்டண்ட் தேவையாம். அதுபோக செக்ரட்டரி போஸ்ட்டுக்கும் ஆள் தேவையாம். பெரிய கம்பெனிடா சரவணா. தனியார் நிறுவனம்ன்னாலும் சம்பளம் நிறைய குடுப்பாங்களாம். சலுகைகள் எல்லாம் தாராளமா இருக்குமாம். இங்கே மட்டும் நமக்கு வேலை கிடைச்சுடுச்சுன்னா... கவர்மெண்ட் வேலை கிடைச்ச மாதிரிடா. சொல்லி வச்ச மாதிரி ரெண்டு போஸ்ட்டுக்கு விண்ணப்பங்கள் கேட்டிருக்காங்க பாரேன்...."
"டேய்...டேய்.... நிறுத்துடா. என்னவோ நம்ம ரெண்டு பேருக்கும் அந்த ராஜசேகரன் இன்டஸ்ட்ரீஸ்ல வேலையே கிடைச்சுட்ட மாதிரியில்ல அடுக்கிக்கிட்டே போற? பேப்பர்ல வந்திருக்கறது விளம்பரம் மட்டும்தாண்டா. உனக்கோ எனக்கோ அப்பாயிண்ட்மென்ட் ஆர்டர் கிடைச்சுட்ட மாதிரி ஒரேயடியா குதிக்காத. இன்ட்டர்வியூன்னாலே அலர்ஜியா இருக்கு. பெரிய கம்பெனி. அவங்களுக்குள்ளயே வேண்டிய ஆளுக்குத்தான் வேலை குடுப்பாங்க. விளம்பரம், இன்ட்டர்வியூ இதெல்லாம் வெறும் கண்துடைப்புடா.."
"ப்ளீஸ் சரவணா, விரக்தி ஆகாத. நம்பிக்கைதாண்டா வாழ்க்கைக்கு ஆதாரம். முயற்சி செய்வோம். நல்ல வேலை. நம்ப கஷ்டமெல்லாம் தீர்ந்துடும். நாம்பளும் உத்யோகத்துல சேர்ந்து கௌரவமா தலைநிமிர்ந்து நிக்கணும். நீ எத்தனை நாளுக்கு உங்க அம்மா கிட்ட பேச்சு கேட்டுக்கிட்டிருக்கறது?... நான் எத்தனை நாள் என் அண்ணன் கையையே எதுக்கெடுத்தாலும் எதிர்பார்த்துக்கிட்டு நிக்கறது! இதுக்கெல்லாம் ஒரு முடிவு வர வேண்டாமா? டேய் சரவணா... எனக்கென்னமோ மனசுக்குள்ள பட்சி பறக்குதுடா நம்பளுக்கு அந்த ராஜசேகரன் இன்டஸ்ட்ரீஸ்ல வேலை கிடைக்கும்னு..."
"என்ன?! மனசுக்குள்ள பட்சி பறக்குதா? இப்ப என் வயித்துல பூச்சி பறக்குது பசியினால. காலையில காபியைக் கூட நிறுத்திட்டேன். ஓடின ஓட்டத்துக்கு, வயிறு கொண்டா கொண்டான்னு கேட்குது. அம்மா கிட்ட திட்டு வாங்கிக்கிட்டாவது ரெண்டு இட்லியோ தோசையோ சாப்பிட்டாத்தான் மதியம் வரைக்கும் தாக்கு பிடிக்கும். வாடா போலாம்." சரவணன், வாசுவின் கையைப் பிடித்து இழுத்தான்.
"டேய், பொறுமையா நான் சொல்றதைக் கேளுடா. எதிர்காலம் இருட்டா தெரியுதுடா. பயம்மாவும் இருக்கு. நமக்குன்னு எந்த வருமானமும் இல்லாம வாழ்நாள் முழுசும் எப்பிடிடா ஓட்ட முடியும்? அண்ணனோட நிழல்ல எத்தனை நாளைக்கு நிக்க முடியும்? அவனுக்கு ரெண்டு குழந்தைங்களாயிடுச்சு. அதுவே அவனுக்கு பாரம். நானும் சேர்ந்து அவனுக்கு கஷ்டத்தைக் குடுத்துட்டிருக்கேன். பஸ்சுக்கு காசு கேக்கறதுன்னா கூட அண்ணா, அண்ணி முகத்தைப் பார்த்து மூடைப் பார்த்துக் கேட்கணும். இவ்வளவு பெரிய ஆளா வளர்ந்து நிக்கற நாம, இன்னும் எவ்வளவு நாளைக்கு மத்தவங்க கையை எதிர்பார்க்க முடியும்? பெத்த பாசம், ரத்த பாசமெல்லாம் பணம் இல்லைன்னா சுத்தமா போயிடும்டா. இதை நான் தப்பா சொல்லலை. இன்னிக்கு நிலைமை அப்படி இருக்கு. ஒரு ஆண் வருமானத்துல குடும்பம் முழுசும் சாப்பிடறதே கஷ்டம். மத்த செலவுகள் எவ்வளவு இருக்கு? ஏதோ நம்பளால முடிஞ்ச ஒரு தொகையை மாசா மாசம் குடுத்துட்டா அவங்க பாரமும் குறையும். நம்பளும் இப்பிடி தண்டமா சுத்திக்கிட்டிருக்கோமேன்னு வருத்தப்பட வேண்டியதில்லை. கௌரவமா, தலை நிமிர்ந்து நடக்கலாம்" வாசு பேசுவதைக் கேட்ட சரவணன், சில நிமிடங்கள் யோசித்தான்.
"நீ சொல்றதும் நியாயமாத்தான் தோணுது. எங்க வீட்ல நிலைமை ரொம்ப மோசமா இருக்கு. ஆபரேஷன் முடிஞ்சப்புறம் அப்பாவை ஆறு மாசம் வேலைக்குப் போகக் கூடாதுன்னு டாக்டர் சொல்லிட்டார். அதனாலதான் அம்மாவுக்கு ரொம்ப கஷ்டம். நீ சொல்ற மாதிரி, அந்த ராஜசேகரன் இன்டஸ்ட்ரீஸ் நடத்தற இன்ட்டர்வியூவுக்குப் போகலாம்."
"தாங்க்ஸ்டா சரவணா. நிச்சயமா நமக்கு அங்கே வேலை கிடைக்கும். இவ்வளவு நாள் கஷ்டப்பட்டுட்டோம். இனிமேலும் நம்பளை அந்தக் கடவுள் கஷ்டப்பட விட மாட்டார். என் மனசுல இருந்த நம்பிக்கை ரொம்ப ஸ்ட்ராங்கா வந்துருச்சு."
"பசுமரத்துல ஆணி அடிச்சாப்ல, நீ சொல்லச் சொல்ல உன்னோட நம்பிக்கை என் மனசுலயும் பச்சுன்னு பிடிச்சுருச்சு."
இருவரும் பேசிக் கொண்டே நடந்தனர்.
டீக்கடையைப் பார்த்ததும், புல்லைப் பார்த்த பசுவைப் போல இருவரும் நின்றனர். சரவணன், தன் சட்டைப் பையைத் துழாவினான். ஐம்பது பைசா நாணயம் மட்டும் கையில் வந்தது.
வாசு, தன் காலியான ஷர்ட் பையைப் பிதுக்கிக் காண்பித்தான்.
"இவ்வளவு நேரத்துக்கப்புறம் அம்மாகிட்டப் போய் காபியோ, டீயோ கேக்கறதுன்னா பயம்மா இருக்குடா. என்ன பண்றது? ஐம்பது காசை பிச்சைக்காரனுக்குப் போட்டா கூட திட்டிட்டு போறான். இந்த லட்சணத்துல நாம டீ குடிக்க முடியுமா?"
"சரி வாடா, இந்தப் பஞ்சமெல்லாம் இனி கொஞ்ச நாளைக்குத்தான்" நெஞ்சத்தில் நம்பிக்கை நட்சத்திரம் தோன்ற, இருவரும் களைப்பை உணராமல் உற்சாகமாக நடந்தனர்.