பேர் சொல்லும் பிள்ளை - Page 4
- Details
- Category: மர்ம கதைகள்
- Published Date
- Written by சித்ரலேகா
- Hits: 8158
"நீலகண்டன், நான் சொல்றேன்னு தப்பா நினைக்காதீங்க. விஜயகுமாருக்கு வெளி இடங்கள்ல யாருக்குக் கீழேயும் வேலை செய்றதுல உடன்பாடு இல்லைன்னு நினைக்கிறேன். அதனாலதான் ஏதாவது சாக்கு சொல்லிட்டு வந்துடறான்."
"இருக்கலாம். அதை என்கிட்ட வெளிப்படையா சொல்ல வேண்டியதுதானே? அதுவும் சொல்ல மாட்டான். நான் எனக்குத் தெரிஞ்ச நண்பர்கள் கிட்ட எல்லாம் சிபாரிசு பண்ணி, கஷ்டப்பட்டு வேலை வாங்கிக் குடுக்க வேண்டியது. இவன் பாட்டுக்கு ரெண்டு நாள் கூட தாக்குப் பிடிக்காம சுவர்ல அடிச்ச பந்து மாதிரி திரும்ப வந்துட வேண்டியது. இதுக்குத்தான் அவனையும் என்னை மாதிரியே எம்.ஏ.பி.எல். படிக்க வச்சு லாயராக்கிடலாம்னு நினைச்சேன்."
"கரெக்ட். அவனும் உங்களை மாதிரி லாயரா ஆகி இருக்கலாம்."
"அதுக்கும் அவன் ஒத்து வரலையே? தகப்பன் சொல்றதை தட்டாம கேக்கற பிள்ளைங்க கிடைக்கறதுக்கு குடுப்பினை வேணும். நான் சொன்னதைக் கேக்காம எம்.பி.ஏ. படிக்கப் போறேன்னான். அதையாவது ஒழுங்கா படிச்சானா? அன்டர் கிரவுண்ட் வேலை பார்த்து, அவன் பாஸ் பண்றதுக்கு எக்கச்சக்கமா செலவழிச்சேன். இந்த லட்சணத்துல கிடைச்ச வேலையை பொறுப்பா செய்யாம வந்து சேர்ந்துடறான். பேர் சொல்ல பிள்ளை வேணும் வேணும்ங்கறீங்க. இவன் என்னோட பேரை ரிப்பேராக்கிடுவான் போலிருக்கே. சேலத்துல பெரிய லாயர் நீலகண்டன்னு நான் பேர் எடுத்திருக்கேன். 'நீலகண்டன் பையனை வளர்த்திருக்கற லட்சணத்தைப் பாரு’ன்னு என்னோடப் பேரைக் கெடுத்து வச்சிருக்கான். அவனோட கவலையே எனக்கு பெரிசா இருக்கு. இவனைப் பெத்து எடுக்கும்போதே என் பொண்டாட்டி உயிரை விட்டுட்டா. இவன் என் உயிரை வாங்கறான்."
"அட, என்ன நீலகண்டன் நீங்க இதுக்குப் போயி இவ்வளவு கவலைப்பட்டுக்கிட்டு? சென்னையில எங்க ஆபிஸ்ல சேர்த்துடறேன். பிரசாத்தோட கண்ட்ரோல்ல உங்க விஜயகுமார் நல்லபடியா பொறுப்பானவனா ஆயிடுவான். பிரசாத் வந்தப்ப சொல்லிக்கிட்டிருந்தான். ரெண்டு போஸ்ட்டுக்கு ஆள் தேவைப்படுதுன்னு. விளம்பரம் குடுக்கச் சொல்லியிருந்தேன். விளம்பரமும் வந்தாச்சு. இன்ட்டர்வியூ அட்டெண்ட் பண்ணச் சொல்லுங்க. உங்க விஜயகுமாருக்கு அதில ஒரு போஸ்ட் கிடைக்க நான் ஏற்பாடு செய்யறேன். உங்க க்ளையண்ட் ஒருத்தர், அவர் பேர் கூட என்னமோ சொல்லுவீங்களே? சேதுபதின்னு... அதான் நீலகண்டன், அந்த சேலம் ரைஸ் மில் காரர் சேதுபதி, அவரோட கேஸ் கோர்ட்ல இழுத்துக்கிட்டே இருக்குன்னீங்க? அது என்ன ஆச்சு..?"
"ஓ! சேலம் சேதுபதியோட டிரைவர் கேஸா? அந்த டிரைவர், சேதுபதியோட காரை ஆக்ஸிடெண்ட் பண்ணிட்டான்ல? அவனுக்கு அப்போ தலையில அடி. அடிபட்டு துடிக்கறானேன்னு கூட பார்க்காம போலீஸ்காரங்க அவசர அவசரமா அவன் கிட்ட கையெழுத்து வாங்கிட்டாங்க...."
"எதுக்காக? எதில கையெழுத்து வாங்கினாங்க?"
"அந்த டிரைவர் குடி போதையில கார் ஓட்டினதா எழுதி அவன்கிட்ட போலீஸ் கையெழுத்து கேட்டிருந்தாங்க. அந்த டிரைவரும் தலையில அடிபட்ட வேதனையில விட்டா போதும்டான்னு அந்நேரத்துக்கு கையெழுத்தைப் போட்டு தொலைச்சுட்டான். உண்மையில அவன் குடிச்சுட்டு கார் ஓட்டலை. எதிரே வந்த லாரி டிரைவர்தான் ராங் சைடில வந்திருக்கான்."
"அடப்பாவமே, அவன் கையெழுத்துப் போட்டதுனாலதான் மாட்டிக்கிட்டானா? இல்ல... நிஜமாவே குடிச்சிருந்தானா?"
"உண்மையிலேயே அந்த டிரைவருக்கு குடிப்பழக்கமே கிடையாது. அதோட, சேலம் சேதுபதிக்கு அவன் உண்மையான விசுவாசமான ஊழியன். அதனாலதான் சேதுபதி இந்தக் கேஸ்ல இருந்து அவனை மீட்கறதுக்காக நிறைய செலவு பண்றார். சேதுபதியோட டிரைவருக்கு சாதகமா கேஸ் ஜெயிச்சுடுச்சு..."
"அதானே, நீலகண்டனா கொக்கா? நீங்க எடுக்கற எந்தக் கேஸும் இதுவரைக்கும் ஜெயிக்காம விட்டதில்லையே? ஆமா... நாம பாட்டுக்கு பேசிக்கிட்டே இருந்ததுல நேரம் போனதே தெரியலை. லஞ்ச் டைம் ஆச்சு. பிரசாத் மாடிக்குப் போனான். இருங்க. அவனைக் கூப்பிடறேன். உங்களுக்கும் லஞ்ச் இங்கதான்" என்றவர் இன்ட்டர்காமில் மாடி அறையின் எண்களை அழுத்தினார்.
"பிரசாத் என்ன தூங்கிட்டியா? வா சாப்பிடலாம்" பிரசாத்தை வரச் சொல்லிவிட்டு இன்ட்டர்காமில் வேறு எண்களை அழுத்தினார்.
"டைனிங் ரூமுக்கு வர்றோம். எல்லாம் ரெடியா எடுத்து வைங்க. வக்கீல் ஐயாவும் வந்திருக்கார்."
கைதேர்ந்த சமையல் வல்லுநர்கள் இருவரை சமையல் வேலைக்கு நியமித்திருந்தார். அவர்களிடம் மதிய உணவை சாப்பிடும் மேஜையில் எடுத்து வைக்கும்படி பணித்தார்.
3
மாடியில் இருந்து பிரசாத் இறங்கி வந்தான். தூங்கி எழுந்ததால் முகத்தைக் கழுவி விட்டு, தலைமுடியை சீர் செய்த பின்பே வந்தான். தலைமுடி லேசாக கலைந்திருந்தாலும் அப்பாவிற்கு கோபம் வரும்.
ராஜசேகரனுக்கு காலை, மதியம் இரண்டு வேளைகளும் வகைவகையான உணவுகள் தேவை. சிறு வயதில் கஷ்டப்பட்டதற்கெல்லாம் சேர்த்து ருசியான உணவு வகைகளை காலையிலும், மதியமும் ஒரு பிடி பிடிப்பார். மாலை நேரங்களில் இரண்டு மணி நேரம் பங்களா தோட்டத்தில் நடைப்பயிற்சியைத் தவறாமல் செய்வார். அதன்பின் இரவில் ஆப்பிள், மாதுளை, திராட்சை, ஆரஞ்சு, வாழைப்பழம் என்று அனைத்துப் பழங்களையும் வயிறு நிரம்ப சாப்பிட்டுவிட்டு படுக்கைக்குப் போகும் முன் பெரிய வெள்ளி டம்ளர் நிறைய பால் குடித்துவிட்டுப் படுத்து விடுவார். அந்தப் பாலில் ஏலக்காய் தூள், குங்குமப்பூ போட்டிருக்க வேண்டும். உணவுப் பட்டியலில் எந்த ஒன்று குறைந்தாலும் கோபம் தலைக்கேறும். எனவே அவரது தேவைகளை அங்கே வேலை பார்க்கும் இரண்டு சமையல் வல்லுனர்களும் மிகுந்த கவனத்துடன் கவனித்துக் கொண்டனர்.
மூவரும் சாப்பிடும் அறைக்குச் சென்று மேஜையின் முன் அமர்ந்தனர். சைவம், அசைவம் இரண்டிலும் வகை வகையான உணவு வகைகள், அழகிய வெளிநாட்டு கண்ணாடிக் கோப்பைகளில் அலங்காரமாக வைக்கப்பட்டிருந்தன. காய்கறி சாலட், பழச்சாறு, சூப் வகைகள் உணவிற்கு முன் சாப்பிடுவதற்காக தயாராக இருந்தன. ஆட்டுக்கறி குழம்பு, கோழிக்கறி வறுவல், மீன் வறுவல் நாவில் நீர் ஊற வைத்தன. சைவ பிரியாணி, காலிஃப்ளவர் குருமா, தயிர் பச்சடி இவை தனி வரிசையில் இருந்தன.
"என்னங்க ராஜசேகரன் பார்த்தாலே பசி ஆறிடும் போல இருக்கு?"
"பசிச்சுக் கிடந்த காலத்துல கடையில அலங்காரமா பலகாரங்கள் இருந்ததைப் பார்த்துக்கிட்டே நின்னிருக்கேன். நான் பார்த்ததைக் கூட தப்புன்னு கடைக்காரன் என்னை நாயை விரட்டின மாதிரி விரட்டினான். ஆனா வயிறை சுருட்டற பசி வந்தப்ப கூட நான் எங்கே இருந்தும் யார் கிட்ட இருந்தும் எதையும் சுருட்டலை. பசி வந்தா பத்தும் பறந்துடும்னு சொல்வாங்க. அந்த பத்தும் என்னன்னு எனக்குத் தெரியாது. ஆனா நேர்மையா, உண்மையா உழைச்சுத்தான் முன்னுக்கு வந்தேன். பணபலம் இல்லாத ஒருத்தன், மனவலிமையால அதை சம்பாதிக்கலாம். அந்த பணபலத்தை அடைஞ்சவன்..? இந்த உலகத்தையே வெல்லலாம்..."