பேர் சொல்லும் பிள்ளை - Page 2
- Details
- Category: மர்ம கதைகள்
- Published Date
- Written by சித்ரலேகா
- Hits: 8158
பெற்றோரை இழந்து விட்ட ஒரே பெண்ணான ஸ்வர்ணாவை கைப்பிடித்த பிறகுதான் பிரசாத்தின் வாழ்வெனும் பாலைவனம், பூஞ்சோலையானது. பெற்றோர் இல்லாத ஸ்வர்ணாவுக்கு பிரசாத்தும், பிரசாத்துக்கு ஸ்வர்ணாவுமாக, அன்பு நதியாய் குடும்ப நீரோட்டம் ஓடியது.
அந்த இல்லற வாழ்வின் இன்ப வெள்ளமாக, தனக்கு பிறந்த குழந்தையும் பணம் என்னும் அரக்கத்தனமான ஆசைக்குப் பலியான துயரம் தொடர்ந்தது. பணத்திற்காக குழந்தையை சில கயவர்கள் கடத்திச் சென்று, மீட்பதற்கான நடவடிக்கைகள் முடிவதற்குள் குழந்தையையே முடித்து விட்டனர் பாவிகள். பெண் குழந்தை என்று வெறுத்துப் போயிருந்த ராஜசேகரன், மறுபடியும் பெண் குழந்தையே பிறந்தால் சொத்துக்கள் கிடையாது என்று விதித்த நிபந்தனை தந்த வேதனையும் சேர்த்து நெஞ்சை நிரப்பியது.
சென்னையில் பல நிறுவனங்களைத் துவக்கி அதன் வெற்றிக்காக வெறியுடன் உழைத்தார் ராஜசேகரன். அவருக்குப் பிடித்தமான ஏற்காட்டில் ஒரு பங்களாவைக் கட்டி, சென்னைக்கும் ஏற்காட்டிற்கும் பிரயாணித்துக் கொண்டிருந்தார்.
பிரசாத்திற்கு படிப்பு முடிந்து உரிய வயது வந்ததும் அவனிடம் சென்னையில் உள்ள நிறுவனங்களின் பொறுப்பைக் கொடுத்துவிட்டு ஏற்காடு பங்களாவில் தங்கினார். அவர் எதிர்பார்த்த மன அமைதியும், உடல் ஓய்வும் இயற்கை எழில் நிறைந்த ஏற்காட்டில் கிடைத்தது. ஓய்வு என்பதற்காக அவர் ஒரேயடியாக ஓய்ந்து போகவும் இல்லை. ஏற்காட்டில் இருந்தபடியே பிரசாத்தின் நிர்வாகப் பொறுப்பை கண்காணித்தபடியும், கண்டித்தப்படியும் வழி காட்டினார்.
சகல சொத்துக்களும் ராஜசேகரனின் பெயரிலேயே இருந்தன. அரசுக்கு வரி கட்டினாலும் பரவாயில்லை. தான் சம்பாதித்து சேர்த்த சொத்துக்கள், தன்னுடைய காலம் வரை தன் பெயரிலேயே இருக்க வேண்டும் என்பதில் தீவிரம் காட்டினார். 'பெற்ற மகன் கூட ஒருநாள் மற்றவன் ஆகிப் போகலாம்’ என்று சிந்தித்து செயல்பட்டார்.
பிரசாத் தனக்குள் இருக்கும் மனக்குறைகளை தந்தையிடம் வெளியிடும் அளவிற்கு அவர், அவனிடம் மனம் விட்டு பழக வில்லை. அவர் உட்கார் என்றால் உட்கார்வது, நில் என்றால் நிற்பது என்று சொன்னதைச் செய்யும் பள்ளிக்கூட மாணவனாகவே வீட்டிலும் இருந்தான். அவர்கள் இருவருக்கும் இருந்த இடைவெளி, அன்புப் பரிமாற்றத்திற்குத் தடைபோடும் வேலியாக இருந்தது. என்றாலும் பிரசாத், ஏறிவந்த பாதை ஏறுமாறாகவோ தாறுமாறாகவோ இன்றி, ஏற்றமிகு குணநலன்களோடுதான் வளர்ந்தான்.
ராஜசேகரனிடம் காணாத அன்பை எல்லாம் மனைவி ஸ்வர்ணாவிடம் கண்டான். பாசத்தைக் கொடுத்து பாசத்தைப் பெற்றான். வெறுமையாகிப் போயிருந்த அவனது இதயக்கூட்டில் மகிழ்ச்சிப் பறவைகள் சிறகடித்துப் பறந்தன. அப்பா அளித்திருந்த வசதியான வாழ்க்கையை நன்றாக அனுபவித்து வாழ்ந்தான். ஆனால் தானும் அவரைப் போல பெற்ற பிள்ளையிடம் பாசத்தை வெளிப்படுத்தாத தகப்பனாக இருக்கக்கூடாது என்பதில் உறுதியாக இருந்தான். குழந்தை சௌம்யா மீது கொள்ளைப் பிரியம் வைத்து, அதை "கண்ணே, மணியே" என்று கொஞ்சி வளர்த்தான். கொஞ்சி வளர்த்த செல்ல மகளும் பூமியில் மிஞ்சவில்லை. மறுபடி ஸ்வர்ணா கர்ப்பமாகி இருக்கும் இந்த நேரத்தில், அப்பாவின் தீவிரமான விதிமுறைகள், கட்டு திட்டங்கள், சட்டங்கள் மூலம் தான் நினைத்ததை செயல்படுத்தும் பிடிவாதம் மனதை வாட்டியது. 'அன்பே உருவான என் மனைவியும், எங்கள் அன்பின் விளைவாக பிறக்கப் போகும் குழந்தையும் நல்லபடியாக இருந்தால் அதுவே போதும். பணமும் சொத்துக்களும் குடுக்க முடியாத சந்தோஷத்தையும், பாசத்தையும் என் குடும்பம் எனக்குத் தரும். அதுதான் எனக்குப் பெரிது. எது நடந்தாலும் சரி’ என்ற மனநிலையில் தைரியமாக இருந்தான் பிரசாத்.
மாடிப்பகுதி முழுவதும் சுற்றி வந்தவன், மறுபடியும் படுக்கையில் சாய்ந்தான். அவனையும் அறியாமல் கண் அயர்ந்தான்.
2
வக்கீல் நீலகண்டன் தன் ஷர்ட் பாக்கெட்டில் இருந்து பாக்குப் பொட்டலத்தை எடுத்தார். பிரித்தார். வாயில் கொட்டிக் கொண்டார்.
"உங்களுக்கு எத்தனையோ தடவை சொல்லியாச்சு. பாக்கு போடாதீங்கன்னு. வாய்ல கான்ஸர் வரும்னு சொல்றாங்க. நீங்க என்னடான்னா பத்து நிமிஷத்துக்கு ஒரு பாக்குப் பொட்டலத்தைப் பிரிச்சு வாய்ல கொட்டிக்கறீங்க. உங்களைத் திருத்தவே முடியாது."
"என்ன பண்றது ராஜசேகரன்? மனுஷன், தன்னோட மனசுக்குக் கட்டளையிட்டு அடக்கி வைக்கணும். மனசு போடற கட்டளைக்கு நாம அடங்கிப் போகக் கூடாது. இது தெரிஞ்சும் சில பழக்கங்களுக்கு நாம அடிமையாகித்தான் போறோம். இந்த பாக்குப் போடற விஷயம் அப்படித்தான் என்னை அடிமையாக்கிடுச்சு. நிறுத்த முடியலை."
ராஜசேகரன், தனக்கு சரி சமமாக உட்கார வைத்து, தன்னை பேர் சொல்லிக் கூப்பிடும் அளவு சம உரிமை கொடுப்பது வக்கீல் நீலகண்டனுக்கு மாத்திரமே.
தொழில் முறையில் உருவாகிய அறிமுகம், நாளடைவில் நட்பாக மலர்ந்தது. வளர்ந்தது. ராஜசேகரனின் நிறுவனங்களில் அவ்வப்போது ஏற்படும் பல சிக்கல்கள் கோர்ட்டில் வழக்குகளான பொழுது அதிதிறமையாக வாதாடி வெற்றி பெற்று ராஜசேகரனின் பணத்தை மட்டுமல்ல, கௌரவத்தையும் பாதுகாத்தார் என்பதில் நீலகண்டன் மீதுள்ள மரியாதையும், நட்பும் கூடியது. அதன் பலனாய் தன்னிடம் மனம் விட்டுப் பேசும் உரிமையை வழங்கி இருந்தார் ராஜசேகரன். இருந்தாலும் அந்த உரிமையையும் சலுகையையும் துஷ்பிரயோகம் செய்யாமல் அளவாகவே அவருடன் எதையும் வாக்குவாதம் செய்வார் நீலகண்டன்.
நெருப்பின் நெருக்கம் குளிருக்கு இதமாக இருப்பினும் அளவுக்கு அதிகமானால், சுட்டெரித்து விடும் என்ற எச்சரிக்கை உணர்வு நீலகண்டனுக்குள் மணி அடித்துக் கொண்டே இருக்கும். நட்போ, பாசமோ எதிலுமே ராஜசேகரன் தாமரை இலைத் தண்ணீராகத்தான் பட்டும் படாமல் இருப்பார். ராஜசேகரனின் குணசித்திரத்தை நன்றாகப் புரிந்து வைத்திருந்தபடியால் அவர்களது நட்பு முறிந்து போகாமல் தொடர்ந்துக் கொண்டிருந்தது.
நீலகண்டனுக்கு, பிரசாத்தின் உணர்வுகள் புரிந்திருந்தது. அவனுக்காக பேசக்கூடிய ஒரு தருணத்தை எதிர்பார்த்துக் காத்திருந்தார்.
பிரசாத் மாடிக்குச் சென்றதும், ராஜசேகரனிடம் மெதுவாக பேச்சைத் துவங்கினார்.
"என்னங்க ராஜசேகரன், சிறந்த தொழிலதிபருக்கான அரசாங்க விருதை ரெண்டு தடவை வாங்கிட்டீங்க. ஹிண்டு பேப்பர்ல உங்க இன்ட்டர்வியூவும், உங்க இன்டஸ்ட்ரீஸ் பத்தின சகல விஷயங்களும் ஃபுல் பேஜ் கவர் பண்ணி உங்க போட்டோ கூட போட்டிருந்தாங்களே. அதைப் பார்த்துட்டு என்னோட க்ளையண்ட்சும், ஃப்ரெண்ட்சும் போன் மேல போன் போட்டு உங்களைப் புகழ்ந்துத் தள்ளிட்டாங்க. இவ்வளவு பெருமைகளுக்கும், புகழுக்கும் உரிய உங்களை க்ளையண்ட்டாவும், நண்பராகவும் அடைஞ்சதுல எனக்கு எவ்வளவு சந்தோஷம் தெரியுமா? ஏதோ பிறந்தோம், வளர்ந்தோம்னு இல்லாம வாழ்ந்தோம், சாதிச்சோம்னு உங்களுக்கு ஒரு அடையாளத்தை அறிவிக்கும்படியா உயர்ந்துட்டீங்க. இதுக்காக நீங்க பல வருஷங்கள் எவ்வளவு கஷ்டப்பட்டிருக்கீங்கன்னு எனக்குத் தெரியும்.