பேர் சொல்லும் பிள்ளை - Page 6
- Details
- Category: மர்ம கதைகள்
- Published Date
- Written by சித்ரலேகா
- Hits: 8158
4
ஏற்காட்டில் இருந்து சேலம் வந்து, அங்கிருந்து சென்னை வந்து சேரும்பொழுது மணி ஒன்பது ஆகி இருந்தது. பிரசாத், சென்னையில் உள்ள தன் பங்களாவை நோக்கி காரை செலுத்தினான். கார் ஹாரன் ஒலி கேட்டதும் எப்.எம். ரேடியோவில் திரை கானம் கேட்டுக் கொட்டிருந்த செக்யூரிட்டி உஷாரானான். ரேடியோவின் தொண்டையைத் திருகி நிறுத்தினான். ஓடிச் சென்று, காம்பவுண்ட் கதவுகளைத் திறந்து விட்டான். பிரசாத்தைப் பார்த்து சல்யூட் அடித்தான். கார் போர்டிகோவில் நின்றது.
கார் வந்து நிற்கும் சப்தம் கேட்டு, ஸ்வர்ணா வெராண்டாவிற்கு வந்தாள். கையில் ப்ரீஃப் கேசுடன் காரை விட்டு இறங்கினான் பிரசாத்.
"நீங்க மட்டும் தனியா காரை ஓட்டிக்கிட்டு போனீங்கள்ல, அதனால எனக்கு ரொம்ப பயம்மா இருந்துச்சுங்க."
"நான் என்ன சின்ன பையனா? இல்லை கார் ஓட்ட இப்பத்தான் புதுசா கத்துக்கிட்டிருக்கேனா? எதுக்காக இந்த பயம்?"
"அதில்லைங்க... நம்ம குழந்தையைக் கடத்திக்கிட்டுப் போய் கொன்னுட்டாங்களே பாவிங்க. அவங்களாலே நம்ப குடும்பத்துக்கு மறுபடி ஏதாவது ஆபத்து வருமோன்னு எப்பவும் எனக்குள்ள பயம். அதனால நீங்க ஏற்காட்ல இருந்து இங்கே வர்றதுக்குள்ள டென்ஷன் ஆகிட்டேன்..."
"இப்படி தேவை இல்லாம டென்ஷன் ஆகித்தான் உடம்பைக் கெடுத்துக்கற. டாக்டரம்மா எவ்வளவு அட்வைஸ் பண்ணாங்க? தைர்யமா இரு. உன் மனசு ரிலாக்ஸ்டா இருந்தாத்தான் வயித்துல வளர்ற குழந்தையும் நல்லபடியா இருக்கும்னு சொன்னாங்கள்ல? பின்ன ஏன் இப்பிடி தேவையில்லாம டென்ஷன் ஆகற? மணியைப் பாரு ஒன்பதுதான் ஆகுது. இன்னிக்கு விடியற்காலை அஞ்சு மணிக்குத்தான் ஏற்காட்டுக்கு கிளம்பினேன். இதோ ஒன்பது மணிக்குள்ள வந்து சேர்ந்துட்டேன். இப்படியெல்லாம் வீணா எதையாவது கற்பனை பண்ணிக்கிட்டிருக்காதம்மா."
"சரிங்க. பெட்டியைக் கொடுங்க. உள்ளே வைக்கிறேன்.
"முக்கியமான டாக்குமென்ட்ஸ் இருக்கு. பத்திரமா எடுத்துட்டுப் போய் என்னோட பீரோ லாக்கர்ல வச்சுடு. நாளைக்கு நான் ஆபீசுக்கு போகும்போது மறக்காம எடுத்துக் குடுத்துடு."
"சரிங்க. பத்திரமா எடுத்து வச்சுடறேன். அது சரி, ஏற்காடுல உங்க அப்பா எப்பிடி இருக்கார்?"
"அவருக்கென்னம்மா, நல்லா இருக்கார். எனக்குத்தான் அங்கே போனாவே மனசு ஒரு மாதிரியா டல்லாயிடுது."
"அங்கே உள்ள குளிரான க்ளைமேட், இயற்கை காட்சிகள்லாம் எனக்கு ரொம்ப பிடிக்கும். இந்த சென்னையில இருக்கற உஷ்ணமும், ஜனநெருக்கடியும், இயந்திரகதியான ஓட்டமும் பார்க்கறதுக்கே வெறுப்பா இருக்குங்க..."
"உனக்கென்ன? ஜன நெருக்கடி, ஓட்டம்ங்கற? வீடு முழுசும் ஏ.ஸி. பண்ணி இருக்கு. என்ன உஷ்ணம்? சொல்லும்மா கண்ணு..."
கிண்டலாக கேட்ட பிரசாத்தின் கன்னத்தை செல்லமாக தட்டினாள் ஸ்வர்ணா.
"ஐய, நான் என்ன எனக்கு கஷ்டமா இருக்குன்னா சொல்றேன்? பொதுவா சென்னை நகரம் பரபரப்பான சூழ்நிலையைப் பார்க்கவே வெறுப்பா இருக்குன்னு சொல்ல வந்தா..."
"சச்ச, சும்மா விளையாட்டுக்குத்தான்மா கேட்டேன். நீ இந்த வீட்ல மகாராணி மாதிரி வாழணும்னுதானே சகல வசதிகளும் பண்ணி இருக்கு?"
"உண்மையிலேயே நான் மகாராணி மாதிரிதாங்க வாழறேன், வசதிகளைப் பொறுத்தவரைக்கும். ஆனா எதுவுமே இல்லாத பரம ஏழையா இருக்கேன், என் உள் உணர்வுகளைப் பொறுத்தவரைக்கும். நான் ஏன் இப்படிச் சொல்றேன்னு உங்களுக்குப் புரியும். நம்ப குழந்தை..."
"திரும்ப... திரும்ப... அதைப் பத்தியே யோசிச்சுக்கிட்டு, பேசிக்கிட்டு... அழுதாவோ, புலம்பினாலோ மறுபடி நம்ப குழந்தை திரும்ப கிடைச்சுடுமா? இழப்புகளை ஏத்துக்கணும். பொறுத்துக்கணும். கடந்த காலத்தை மறக்கணும். எதிர்காலத்தை நோக்கி நம்பிக்கையோட காத்திருக்கணும். எனக்கு மட்டும் வேதனை இல்லையா? உனக்கு ஆறுதல் சொல்றதுலதான் நான் ஆறுதல் அடையறேன். புரிஞ்சுக்க."
"சரிங்க. ஏற்காடு போன விஷயத்தை சொல்லுங்க. உங்க அப்பா வேற என்ன சொன்னார்?"
"அவர் என்ன சொல்லுவார்? வழக்கம் போல கம்பெனி நிர்வாகம், டாக்குமென்ட்ஸ், ஆபீஸ் பத்தி கேட்டார். நான் காலையில சீக்கிரமா எழுந்துட்டேன்ல? அதனால டயர்டா இருந்துச்சு. மாடிக்குப் போய் ரெஸ்ட் எடுக்கலாம்னு போனேன். பழைய ஞாபகம் எல்லாம் வந்துச்சு. அம்மா படத்தைப் பார்த்ததும் சோகம் அதிகமாயிடுச்சு. மனசு தாங்காம அழுதுட்டேன். அப்புறம் கொஞ்ச நேரம் கண் அசந்து தூங்கிட்டேன். நீலகண்டன் அங்கிள் வந்திருந்தார்..."
"அதானே பார்த்தேன். உங்க அப்பாவுக்கு யாரை பார்க்கறாரோ இல்லையோ வக்கீல் நீலகண்டனைப் பார்க்கலைன்னா இருக்க முடியாதே? ம்... அவர் நல்லா இருக்காரா?"
"ஓ. உன்னை ரொம்ப விசாரிச்சார். உன் உடம்புக்கு எப்படி இருக்குன்னு கேட்டார். சொத்தைப் பத்தி அப்பாவோட முடிவு நீலகண்டன் அங்கிளுக்கும் பிடிக்கலை. அப்பா கிட்ட அதைப்பத்தி பேசறார்னு நினைக்கிறேன்..."
"இன்னும் உங்க அப்பா ஆண் வாரிசுக்குத்தான் சொத்துங்கற பிடிவாதத்துலதான் இருக்கார்னு சொல்லுங்க."
"அதில சந்தேகமே இல்லை. அவர் ஒண்ணு சொன்னா சொன்னதுதான்."
"பின்னே, எந்த ஐடியாவுல நீலகண்டன் அங்கிள் உங்க சார்பா அவர்கிட்ட பேசுவார்?"
"அவர், அப்பாவோட வக்கீல் மட்டும் இல்லையே, ஆத்ம நண்பராச்சே? அந்த உரிமையில பேசிப் பார்க்கலாம்னு முயற்சி எடுப்பார். எனக்கு விவரம் தெரிஞ்சு எங்கப்பா இவ்வளவு அந்நியோன்யமா பழகற ஒரே ஆள் நீலகண்டன் அங்கிள்தான். மதியம் சாப்பிடும்போது கூட, அப்பா கிட்ட அவரோட சுபாவத்தைப் பத்தி ஜாடை மாடையா பேசினார். அதையெல்லாம் அவர் கண்டுக்கவே இல்லை. நான் ஏற்காடு பங்களாவுல கால் வச்சதுமே அவர் சொன்னது, இந்த தடவை உனக்கு ஆண் குழந்தை பிறந்தாத்தான் சொத்துக்கள் கிடைக்கும்னு. அப்பவே எனக்கு ரொம்ப கஷ்டமாயிடுச்சு."
"இதில என்னங்க கஷ்டம்? இந்த சொத்து, மத்தவங்க கண்ணை உறுத்தறதுனாலதானே நம்ப குழந்தை நம்ப கண்ணை விட்டு மறைஞ்சுட்டா? பணம் குடுத்து அவளை நாம அடைய முடியுமா? உங்க அப்பாவுக்கு இதெல்லாம் புரியமாட்டேங்குதேன்னு தான் எனக்கு கவலையா இருக்கு..."
"அவருக்குப் புரியாட்டி போகுதும்மா. அவரோட சொத்து இல்லைன்னா நம்பளால வாழ முடியாதா? எங்க அப்பா என்ன... பிறக்கும்போதே கோடீஸ்வரனாவா பிறந்தார். அவரைப் போலவே என்னாலயும் சுயமா சம்பாதிச்சு, சொத்து, சுகம் வாங்க முடியாதா?"
"நீங்க இவ்வளவு தன்னம்பிக்கையாவும், சுயமரியாதையோடவும் பேசறப்ப எனக்கு எவ்வளவு சந்தோஷமா இருக்கு தெரியுமா?