பேர் சொல்லும் பிள்ளை - Page 3
- Details
- Category: மர்ம கதைகள்
- Published Date
- Written by சித்ரலேகா
- Hits: 8158
பரம்பரைப் பணக்காரங்க, முன்னோர்கள் சேர்த்து வச்ச சொத்தை பல மடங்கா பெருக்குவாங்க அல்லது ஆண்டு அனுபவிச்சுட்டு அவங்க ஆயுசுக்குள்ள அழிக்கவும் செய்வாங்க. ஆனா நீங்க தனி ஆளா படிப்படியா முன்னேறி இவ்வளவு பெரிய ஆளா ஆகி ஏகப்பட்ட சொத்துக்கள் சேர்த்திருக்கீங்க."
"நீலகண்டன், கொஞ்சம் மூச்சு விட்டுக்கோங்க. ஒரேயடியா புகழ்ந்துகிட்டே போறீங்க? சின்ன வயசுல ஒரு வேளைக்கு அரை வயிறு சாப்பாடு கூட கிடைக்காம, வயிறு காயும்பொழுதெல்லாம், தலை நிமிர்ந்து வாழ்ந்து காட்டணும்னு வெறி ஏறுச்சு. ஒரு பன் கூட வாங்கி சாப்பிடக் காசு இல்லாம தவிச்சிருக்கேன். உதவின்னு கேக்கப் போன இடங்கள்ல உனக்கென்னடா தெரியும்னு கேவலமா பேசி ஓட ஓட விரட்டினாங்க. அன்னிக்கு எனக்குள்ள எழுந்த வேகம்! நான் நிக்கணும்னு எழுந்தேன். உழைச்சேன். களைப்பைப் பத்தி கவலைப்படாம உழைச்சேன். நடைபாதையில லாட்டரி டிக்கெட் வித்தேன். வயித்தைக் காயப் போட்டு கொஞ்சம் கொஞ்சமா பணம் சேர்த்தேன். சேர்த்த பணத்துல சின்னச் சின்ன பொருட்கள் வாங்கி லாபம் வச்சு விக்க ஆரம்பிச்சேன். பணம் சம்பாதிக்கற வழி, என் மனவலியைப் போக்குச்சு. மேல மேல பணம் பணம்னு அலைஞ்சேன். திரிஞ்சேன். பாடுபட்டு சம்பாதிச்சு நான் யார்னு நின்னு காட்டினேன். உறவுக்காரங்க என்னை உதாசீனம் செஞ்சதுனாலதான் உயரணும்ங்கற வெறி வந்தது. எனக்கு இடைஞ்சலாக இருந்த தடைக்கற்களே நான் முன்னேறுவதற்கு படிக்கட்டுகளா அமைஞ்சது.
சொத்துக்கள் வந்ததும், சொந்தங்களும் தேடி வந்துச்சு. யாரையும் நான் கிட்ட நெருங்க விடலை. நெறிஞ்சு முள்ளா இருந்து உறவுகளை முறிச்சுட்டேன். 'பசிச்ச வயிறுக்கு ஒரு பிடி சோறு போட்டா, கூடவே வந்து ஒட்டிக்குவானே’ன்னு இரக்கம் இல்லாம துரத்தி அடிச்ச உறவுக் கூட்டத்துக்கு வாழ்க்கைன்னா ஏற்ற, இறக்கம் இருக்கும்ங்கறது தெரியாம போச்சு. இதைப் பார்த்து என் மனசு வெறுத்துப் போச்சு. என்னோட இந்த ஏராளமான சொத்துக்கள்ங்கற விளைநிலத்துல விதையும் நான்தான், தண்ணீர் ஊத்தினதும் நான்தான். உரமும் நான்தான். நான், என் வாழ்க்கையின் உயர்வு, நான் ஆரம்பிச்ச நிறுவனங்கள், சேர்த்த சொத்துக்கள் இவைதான் என் உலகம்னு வாழறதுலதான் எனக்கு சந்தோஷமும், அமைதியும், வேற எதைப் பத்தியும் எனக்குக் கவலை இல்லை."
கடந்த காலத்தின் கசப்பான உணர்வுகளையும், நிகழ்காலத்தில் ஜெயித்துக்காட்டிய இனிய அனுபவங்களையும் தன் கணீர் குரலில் ராஜசேகரன் பேசியதைக் கேட்ட நீலகண்டனுக்கு பிரமிப்பாக இருந்தது.
பிஞ்சு வயதில் மனதில் பட்ட காயம் ராஜசேகரனின் மனித நேயத்தைப் பதம் பார்த்திருந்தது. இதைப் புரிந்து கொண்ட நீலகண்டன் பேச்சை மாற்றினார்.
"உங்களை மாதிரி அபூர்வமான மனிதர்கள் இந்த உலகத்துல அரிதானவர்கள் ராஜசேகரன். உங்களோட சொத்துக்களுக்கு வாரிசா பிரசாத் இருக்கான். அதுபோல உங்களோட தைர்யம், விடாமுயற்சி, நிர்வாகத் திறமையிலயும் பிரசாத் உங்க வாரிசா இருப்பான்."
"பிரசாத் என்னோட வாரிசுதான். ஆனா அவனுக்குப் பெண் குழந்தை பிறந்தா அது என்னோட வாரிசா ஆகாது."
"அட, என்னங்க நீங்க, அதெல்லாம் அந்தக் காலம். பொண்ணுங்க சமையல் கட்டில முடங்கிக் கிடந்தாங்க. இப்ப டாக்டரா, இன்ஜினியரா, பைலட்டா, அமைச்சர்களா, தொழில் அதிபர்களா கொடி கட்டிப் பறக்கறாங்க. வாழ்க்கையில தோல்வி அடைஞ்சு சோர்ந்து போன பெண்கள் கூட ஆண்களை சார்ந்திருக்க வேண்டிய அவசியம் இல்லாம, தங்களோட சொந்தக்கால்கள்ல நிக்கறாங்க. ஆண்தான் வாரிசுன்னு நீங்க பேசறது சரி இல்லைங்க."
"நோ.. நீலகண்டன், ஆண்தான் குடும்பத்துக்கு வாரிசு."
"பெண் குழந்தை உடம்புலயும் உங்க ரத்தம்தானே ஓடும்?"
"ஆனா, பொண்ணு வேற குடும்பத்துக்குப் போயிடுவா. வேற ஒரு பரம்பரையோட ரத்தம், புதுசா வந்து சேருதுல்ல? அதே மாதிரி சொத்துக்களும் வேற குடும்பத்துக்குதானே போகும்?"
"உங்களோட இந்த முடிவுல எனக்கு உடன்பாடு இல்லை ராஜசேகரன். இந்த விஷயத்துல நீங்க பழமைவாதியா இருக்கீங்க. ஆண் பிள்ளைகளை சொத்துக்கு வாரிசா நினைக்கிறோம். அவங்க அந்த சொத்துக்காகத்தானே சுத்தி நிப்பாங்க? ஆனா பொண்ணுங்க நம்ப மேல உண்மையான பாசத்தோட இருப்பாங்க. நமக்கு ஒரு நோய், நொடின்னா நம்ப கிட்ட இருந்து கவனிக்கறது பெண் பிள்ளைங்கதான்..."
"அவங்களுக்குக் கல்யாணம் பண்ணி வச்சு, நம்ப வசதிக்கு ஏற்ப கார், வீடு, நகை, நட்டு போட்டுத்தானே அனுப்பறோம்? பிறகென்ன சொத்து வேண்டிக் கிடக்கு? சொத்துக்களுக்கு சரிநிகர் வாரிசாக்கி, சொத்துக்களையும் குடுக்கறோம்னு வச்சுக்கோங்க, தகப்பன் வழி சொத்துக்கள் மட்டுமே இருக்கும்.. பேர் சொல்ல யாரும் இருக்க மாட்டார்கள்."
"உங்க பேர் சொல்லத்தான் ஆண் வாரிசு பிரசாத் இருக்கானே?"
"அவன் தலைமுறையோடு என் பெயரும் அழிஞ்சுடுமே, அவனுக்கு ஆண் வாரிசு இல்லாமப் போனா?"
"சொத்துக்கள் பிரசாத்துக்கு கிடையாதுன்னு எழுதினா மட்டும் உங்க பேர் சொல்ல என்ன வாய்ப்புகள் இருக்கு?" நீலகண்டன் இவ்வாறு கேட்டதும், ராஜசேகரன் லேசாக சூடேறினார்.
"கோர்ட்ல குறுக்குக் கேள்வி கேக்கற மாதிரி என் கிட்ட கேக்காதீங்க நீலகண்டன். நான் ஒரு முடிவு எடுத்தா அதை எந்தக் காரணத்துக்காகவும் மாத்த மாட்டேன். அவனோட பெண் வாரிசுகளுக்கு அவன்தான் சொத்துக்களை சேர்க்கணும். என்னோட சொத்துக்கள் அவனுக்கு ஆண் வாரிசு பிறந்தாத்தான். இதில எந்த மாற்றமும் கிடையாது. இதுக்கு மேல நாம இதைப் பத்தி பேச வேணாம்னு நினைக்கிறேன் நீலகண்டன். என் மனசை மாத்தற உங்க முயற்சி நிச்சயமா நடக்காது. உங்களுக்குத்தான் தெரியுமே, இந்த ராஜசேகரனோட பிடிவாதத்தைப் பத்தி?" ராஜசேகரனின் குரலில் லேசான கடுமை எட்டிப் பார்த்தது.
"அது சரிதாங்க. வாதத்துக்கு மருந்து உண்டு. பிடிவாதத்துக்கு ஏது மருந்து?" ராஜசேகரனின் பிடிவாதமான மனநிலையை மாற்ற எண்ணி சிரித்துக் கொண்டே கேட்டு, இறுக்கமான அந்த சூழ்நிலையை இயல்புக்கு மாற்றினார் நீலகண்டன். மேலும் தொடர்ந்தார். "நீங்க சொன்னபடியே உயில் எழுதற வேலைகளை சீக்கிரமா ஆரம்பிச்சுடறேன்."
"வேற என்ன சேதி? உங்க மகன் விஜயகுமார் விஷயம் என்ன ஆச்சு? மும்பையில ஏதோ ஒரு கம்பெனியில வேலைக்குச் சேர்ந்திருக்கான்னு சொன்னீங்க?"
"அந்தக் கதையை ஏன் கேட்கறீங்க? போன மச்சான் திரும்பி வந்தான் பூ மணத்தோடங்கற மாதிரி அந்த கம்பெனியில சேர்ந்த ஒரு வாரத்துல திரும்ப இங்கேயே வந்துட்டான்."
"ஏன்? என்ன ஆச்சு?"
"வழக்கம் போலத்தான். எனக்கு அது பிடிக்கலை. இது பிடிக்கலைன்னு விதண்டாவிதமா பேசறான்."