பேர் சொல்லும் பிள்ளை - Page 5
- Details
- Category: மர்ம கதைகள்
- Published Date
- Written by சித்ரலேகா
- Hits: 8158
ராஜசேகரன் பேசியதைக் கேட்ட பிரசாத்திற்கு அவரது அந்தப் பேச்சே பிடிக்கவில்லை. 'பணம்... பணம்... பணம்... அப்பாவுக்கு இதைத் தவிர வேற சிந்தனையே இருக்காது போலிருக்கு’ மௌனமாக சாப்பிட ஆரம்பித்தான்.
"என்னப்பா பிரசாத், சத்தத்தையே காணோம்?" நீலகண்டன் கேட்டார்.
"ஒண்ணுமில்லை அங்கிள். பசி இல்லை. அதான்..."
"இந்த வயசுல பசி இல்லைன்னா என்னப்பா அர்த்தம்? கல்லை மென்று தின்னாக்கூட ஜீரணிக்கிற வயசு உனக்கு. நல்லா சாப்பிடு" நீலகண்டன் சிரித்துப் பேசி பிரசாத்தின் மௌனத்தைக் கலைத்து, அவனை மூடுக்குக் கொண்டு வர முயற்சித்தார்.
"ஸ்வர்ணா நல்லா இருக்காளா பிரசாத்?" கோழிக்கறியில் ரோஸ்ட் செய்த தொடைப்பகுதியைக் கடித்தபடியே நீலகண்டன் கேட்டார்.
"நல்லா இருக்கா அங்கிள். ஆனா... முதல் குழந்தை சௌம்யா போன துக்கத்தில இருந்து அவ இன்னும் மீளலை. சரியா சாப்பிடறதில்லை. அதனால பலவீனமா இருக்கா."
"நல்ல ஸ்பெஷலிஸ்ட் டாக்டர் கிட்ட கூட்டிட்டு போக வேண்டியதுதானே?"
"அதெல்லாம் கூட்டிட்டுப் போய் காமிச்சாச்சு. எல்லா செக்-அப்பும் பண்ணிட்டாங்க. உடல் ரீதியா எந்த விதமான குறையும் இல்லை. மனதில இருக்கற சோகத்தை மறந்து, நேரத்துக்கு சாப்பிட்டாள்னா நல்லா இருப்பான்னு டாக்டர் சொன்னாங்க."
"சாப்பிடாம கிடந்தா மட்டும் போன குழந்தை உயிரோட கிடைச்சுடுமா?" ராஜசேகரன் குறுக்கிட்டார்.
"ராஜசேகரன், பெண்கள் மென்மையான மனசு உள்ளவங்க. அவங்க இப்பிடித்தான். இந்த லேடீஸ் சென்டிமென்ட்டெல்லாம் உங்களுக்குப் புரியாது."
"ஆமாம். பிரசாத்தோட அம்மா வடிவுக்கரசி மண்டையைப் போட்டதுக்கப்புறம் பொம்பளைங்க சமாச்சாரமே எனக்கு மறந்து போச்சுதான்" ஏதோ தமாஷான ஜோக் அடித்தது போல சிரித்துக் கொண்டார் ராஜசேகரன்.
"என்னையும் அந்த லிஸ்ட்ல சேர்த்துடாதீங்க. என்னால அதையெல்லாம் மறக்கவும் முடியாது. துறக்கவும் முடியாது..."
"பொம்பளைங்க சமாச்சாரம்ன்னதும் உம்ம புத்தி எங்கேயோ தாவிடுச்சு பார்த்தீங்களா? சாப்பிட்டுட்டு ஒழுங்கா கேஸ் வேலைகளைப் போய் கவனிங்க..." மேலும் சிரித்தபடி நீலகண்டனின் முதுகில் ஓங்கித் தட்டினார் ராஜசேகரன்.
பிரசாத்துக்கும் சிரிப்பு வந்தது. சிரித்தான்.
"யப்பாடா.... உங்க பையனை சிரிக்க வைக்க, நான் எவ்வளவு பேச வேண்டி இருக்கு பாருங்க. பிரசாத், மனுஷனுக்கு கவலைகள், கஷ்டங்கள் எல்லாம் ஏற்படறது நம்பளோட அனுபவத்துக்காகத்தான். அனுபவங்கள் தான் மனுஷனுக்கு நிறைய பாடங்களைக் கத்துக் குடுக்குது. எப்பவும் மனசை எதுக்கும் தயாரா வச்சுக்கணும். தொழிற்சாலையில லேபர் பிரச்னைகள் இல்லாம கொஞ்ச காலம் சுமுகமா போயிட்டிருக்கும். அந்தக் கூட்டத்தில் எவனாவது ஒரு நக்ஸலைட் இருந்தா போதும் மத்தவங்க மனசையும் கலைச்சுடுவான். அப்புறமென்ன? ஸ்டிரைக்குன்னு கொடி பிடிப்பாங்க. சம்பள உயர்வுன்னு குரல் குடுப்பாங்க. அதையும் தைர்யமா எதிர் கொள்ளணும். அவனோட பலவீனம் எதுன்னு தெரிஞ்சு, அங்க அடிக்கணும். மிஞ்சி மிஞ்சிப் போனா ஏதோ கொஞ்சம் கூலியோ சம்பளமோ அதிகம் கேப்பான். அதையும் தூக்கி விட்டெறிஞ்சா, இந்த ஸ்ட்ரைக், போராட்டம் இதெல்லாம் உருவாகாது.
“முதலாளி, தொழிலாளிக்கு நடுவுல நீ பெரிசா நான் பெரிசான்னு ஒரு நிலைமை வர்றதுக்குள்ள நாம கொஞ்சம் விட்டுக் கொடுத்துட்டா கேஸும் தேவை இல்லை. கோர்ட்டும் தேவை இல்லை. நமக்கும் டென்ஷன் கிடையாது. சில நெளிவு சுளிவுகளைப் புரிஞ்சுக்கிட்டா தெளிஞ்ச நீரோடை மாதிரி மனசு ரிலாக்ஸ்டா இருக்கும்."
நீலகண்டன் பேசுவதை கேட்ட பிரசாத்திற்கு, அவர் கூறிய கருத்துக்கள் அனைத்தும் நடைமுறை உண்மை என்பது புரிந்தது. அதை புரிந்து கொண்ட உணர்வில் புன்னகைத்தான்.
"இதெல்லாம் நான் உங்க அப்பா கிட்ட கத்துக்கிட்ட பாடம். பிஸினஸ் மேக்னட் ராஜசேகரனோட மகன் நீ, உனக்கே நான் அல்வா குடுக்கறேன்னு பார்க்கறியா? நல்ல விஷயங்கள் நமக்குத் தெரிஞ்சதை நாலு பேருக்கு சொல்லி அவங்களும் நன்மை அடையணும். நீயும் உங்க அப்பாவை போல திறமைசாலிதான். ஆனா அவரைப் போல அனுபவசாலி கிடையாது. அதுக்குரிய வாய்ப்புகள் உனக்குக் குறைவு. அதனால உங்க குடும்ப நண்பனா உனக்கு அறிவுரை சொல்றேன். வாய்விட்டு சிரிக்கணும். மனம்விட்டு பேசணும். மானிடப்பிறவி மிக அரிதான பிறவி. இந்தப் பிறவியில நாம ஒரு அர்த்தத்தோட வாழ்ந்து முடியணும். பணமும் வாழ்க்கைக்கு தேவைதான். ஆனா அதுவே வாழ்க்கையாகிட முடியாது." ஜாடைப் பேச்சு பேசி, ஓரக்கண்ணால் ராஜசேகரனை பார்த்தார் நீலகண்டன்.
ம்கூம். அவருக்கு அதெல்லாம் ஏறவே இல்லை. அவர் பாட்டுக்கு கோழி வறுவலை ருசி பார்த்தபடி இருந்தார். நீலகண்டன் தன் சார்பாக பேசுவது ஓரளவு ஆறுதலாக இருந்தது பிரசாத்திற்கு.
சாப்பிட்டு முடிந்ததும் மூவரும் முன்பக்க ஹாலுக்கு வந்தனர். "அப்பா, நான் கிளம்பறேன்ப்பா. முக்கியமான டாக்குமென்ட்ஸ் எல்லாம் உங்க கையெழுத்துக்காக அனுப்பி இருந்தேனே? அதெல்லாம் ஸைன் பண்ணிட்டீங்களா?"
"எல்லாம் நான் பார்த்து கையெழுத்துப் போட்டுட்டேன். ப்ரீஃப் கேஸ்ல எடுத்து வச்சிருக்கேன். ஜாக்கிரதையா எடுத்துட்டுப் போ."
"ஆபீஸ்ல உன்னோட ரூமுக்கு இன்னொரு ஏ.ஸி. போடணும்னியே. வாங்கி மாட்டறதுக்கு ஏற்பாடு பண்ணு."
"ஆமாம்ப்பா. சென்னை வெயில்ல ஏ.ஸி. இல்லாம ஒரு நிமிஷம் கூட இருக்க முடியலை. ஏற்கெனவே ஒரு ஏ.ஸி. இருக்கு. அந்த குளிர்ச்சி போதலை."
"போன உடனே புது ஏ.ஸி. வாங்கி மாட்டிடு. ஓப்பல் கார் வேணும்னு கேட்டிருந்தியே? அந்த டீலர் வந்து உன்னைப் பார்த்தாங்களா? ஏற்கெனவே சியோலா கார் ஒண்ணும், ஃபோர்ட் ஐக்கானும் வச்சிருக்கீல்ல? அது கூட புதுசா இப்ப வந்திருக்கற ஓப்பல் க்ளப் காரும் வாங்கிக்க. கார் வாங்கறதுக்குத் தேவையான பணத்துக்கு செக் அனுப்பு. நான் கையெழுத்துப் போட்டு கூரியர்ல அனுப்பி வைக்கறேன். இந்த கோடை காலத்துக்கு ஸ்விட்சர்லாந்த் போணும்னு சொன்னியே? அதுக்கான ஏற்பாடெல்லாம் பண்ணிட்டியா?"
"இல்லைப்பா. ஸ்வர்ணாவை டாக்டர் ரமணி எங்கேயும் பிரயாணம் பண்ணக் கூடாதுன்னு சொல்லிட்டாங்க. அதனால போகலை."
"சரி, ஸ்வர்ணாவோட பிறந்த நாள் வருது. அவளுக்கு கிஃப்ட் பண்றதுக்காக வைர ஸெட் வாங்கணும்னியே அதையும் வாங்கிடு."
"தாங்க்ஸ்ப்பா. நீங்க எப்ப சென்னைக்கு வர்றீங்க?"
"நான் இப்போதைக்கு அங்கே வர்ற மாதிரி திட்டம் ஒண்ணும் இல்ல. சரி, நீ கிளம்பு. மணி இப்பவே மூணாச்சு."
"சரிப்பா. போயிட்டு வரேன். அங்கிள் பார்க்கலாம்." இருவரிடமும் விடைபெற்று புறப்பட்டான்.
'மகன் கேட்டதையெல்லாம் வாரி வழங்கும் மனசு இந்த ராஜசேகரனுக்கு. ஆனா சொத்து விஷயத்துல மட்டும் பிடிவாதம். மகனுக்கு வசதியான வாழ்க்கையை அவன் பிறந்ததில் இருந்தே அளித்து வந்த ராஜசேகரனுக்கு, அவனிடம் வாய் வார்த்தைகளாக ஏன் தன் அன்பை வெளிப்படுத்தும் மனம் மட்டும் இல்லாமல் போய்விட்டது? சிறு வயதில் ஏற்பட்ட தாக்கத்தின் எதிரொலி!
நாளடைவில் சரியாகும்னு நம்புவோம். மனதில் தோன்றும் இந்த எண்ணங்களை ராஜசேகரனிடம் வெளியிடும் நாள் விரைவில் வரணும். அதன் மூலம் பிரசாத்தின் எதிர்காலம் சிக்கல் இல்லாமல் அமைஞ்சுடணும்’ நினைவுகள் பின்னலிட்டது. கையசைத்து பிரசாத்திற்கு விடை கொடுத்தார் நீலகண்டன். பிரசாத் காரைக் கிளப்பினான்.