கலீல் ஜிப்ரானின் 100 குட்டிக் கதைகள் - Page 8
- Details
- Category: சிறுகதைகள்
- Published Date
- Written by சுரா
- Hits: 8647
சட்டம் உண்டாக்கல்
பல நூறு வருடங்களுக்கு முன்பு நல்ல குணங்களைக் கொண்ட அறிவாளியான ஒரு மன்னன் இருந்தான். தன்னுடைய மக்களுக்கு சட்டங்கள் உண்டாக்க அவன் தீர்மானித்தான்.
சட்டங்கள் உண்டாக்குவதற்காக ஆயிரம் ஜாதிகளைச் சேர்த்த ஆயிரம் அறிஞர்களை உடனடியாக அரசவைக்கு வரவழைத்தான்.
எல்லாம் முறைப்படி நடந்தது. ஆயிரம் சட்டங்கள் உண்டாக்கப்பட்டு மன்னனிடம் தரப்பட்டது. அதைப் படித்தபோது மன்னன் மனதிற்குள் கண்ணீர் விட்டான். காரணம்- ஆயிரம் வகையான குற்றங்கள் தன்னுடைய நாட்டில் இருக்கின்றன என்று அதுவரை மன்னனுக்கு தெரியாமல் இருந்தது.
மன்னன் சட்டங்களை எழுதும் அதிகாரியை வரவழைத்தான். எழுதப்பட வேண்டிய சட்டங்களை அவனே சொன்னான் - புன்சிரிப்புடன். மொத்தம் ஏழு சட்டங்கள் மட்டுமே எழுதப்பட்டன.
அறிஞர்களுக்கு அதைப் பார்த்து கோபம் வந்துவிட்டது. அவர்கள் தங்களின் ஊர்களுக்கு திரும்பினார்கள்- தாங்கள் வடிவம் கொடுத்த ஆயிரம் சட்டங்களுடன்.
அந்த எல்லா ஜாதிகளிலும் இன்று வரையிலும் ஆயிரம் சட்டங்கள் இருக்கின்றன.
அந்த நாடு உன்னதமான நாடாக இருந்தாலும் ஆயிரம் சிறை அறைகள் இருக்கத்தான் செய்கின்றன. அந்தச் சிறை அறைகள் முழுக்க பெண்களும் ஆண்களும் நிறைந்திருக்கின்றார்கள். அவர்கள் எல்லோரும் ஆயிரம் சட்டங்களை மீறியவர்கள்.
அந்த நாடு உண்மையிலேயே உன்னதமான நாடுதான். அங்குள்ள மக்கள் ஆயிரம் சட்டங்களை உண்டாக்கியவர்களின், அறிவாளியாக ஒரு மன்னனின் பரம்பரையைச் சேர்ந்தவர்கள்.
நேற்று, இன்று, நாளை
நான் நண்பனிடம் சொன்னேன்:
‘இங்கே பாரு, அந்த ஆளின் கைகளில் அவள் சாய்ந்து படுத்திருக்கா. நேற்று இதே மாதிரி என் கைகளில் அவ சாய்ந்து படுத்திருந்தா.’
அதற்கு நண்பன் சொன்னான்:
‘நாளைக்கு என் கைகளில் அவள் சாய்ந்து படுத்திருப்பா.’
‘இங்கே பாரு... அவள் அந்த ஆளோடு மிகவும் நெருக்கமா உட்கார்ந்திருக்கா. நேற்று அவள் என்கூட மிகவும் நெருக்கமா உட்கார்ந்திருந்தா.’
‘நாளைக்கு அவள் எனக்கு அருகில் இருப்பா.’
‘அதோ பாரு... அந்த ஆளோட கோப்பையில இருந்து அவள் மதுவை அருந்துறா. நேற்று அவள் என் கோப்பையில் இருந்து அது அருந்தினா.’
‘நாளைக்கு என் கோப்பையில் இருந்து அருந்துவா.’
‘அங்கே பாரு... எந்த அளவுக்கு காதல் உணர்வுடன் வெறித்த கண்களுடன் அவள் அந்த ஆளைப் பார்க்கிறா! நேற்று அவள் என்னையும் இதே மாதிரி பார்த்தா.’
‘இதே மாதிரி நாளைக்கு அவள் என்னைப் பார்ப்பா.’
‘அந்த ஆளின் காதுகளில் காதல் கவிதைகளை அவள் மெதுவான குரல்ல சொல்றது உன் காதுல விழுகுதா? நேற்று இதே காதல் கவிதைகளை அவள் என் காதுல சொன்னா.’
‘நாளைக்கு அவள் இதே கவிதைகளை என் காதுகள்ல சொல்லுவா.’
‘இங்கே பாரு... அவள் அந்த ஆளைக் கட்டிப்பிடிக்கிறா. நேற்று அவள் என்னைக் கட்டிப் பிடிச்சா.’
‘நாளை அவள் என்னைக் கட்டிப் பிடிப்பா.’
‘என்ன வினோதமான பெண்ணாக இருக்கிறாள் அவள்!’ - நான் ஆச்சரியப்பட்டேன்.
அதற்கு நண்பன் சொன்னான்:
‘அவள் வாழ்வைப் போன்றவள். எல்லோரும் அவளைக் சொந்தமாக்குறாங்க. அவள் மரணமும் கூடத்தான். எல்லோரையும் அவள் தனக்குக் கீழ்படியச் செய்கிறாள். அவள் சுதந்திரமானவளும் கூட. எல்லோரும் அவளை கட்டிப் பிடிக்கிறார்கள்.’
தத்துவஞானியும் செருப்பு தைப்பவனும்
செருப்புத் தைப்பவனின் கடைக்கு கிழிந்து போன ஷூவுடன் ஒரு தத்துவஞானி வந்தார். அவர் சொன்னார்: ‘தயவு செய்து என்னுடைய இந்த ஷூவைச் சரி பண்ணித்தா.’
‘நான் இப்போ வேறொருவரின் ஷூவைச் சரி செய்து கொண்டிருக்கிறேன். உங்களுடைய ஷூவை சரி செய்வதற்கு முன்னால், வேறு பலரின் ஷூக்களை நான் சரி பண்ண வேண்டியதிருக்கு. உங்க ஷூவை இங்கே வைங்க. இன்னைக்கு இந்த ஒரு ஜோடியை அணியுங்க. உங்க ஷூக்களை நாளைக்கு நான் தர்றேன்.’ - செருப்பு தைப்பவன் சொன்னான்.
அதைக் கேட்டதும் தத்துவஞானிக்கு கோபம் வந்து விட்டது. ‘என் ஷூக்களைத் தவிர வேறொருவரின் ஷூக்களை நான் அணியமாட்டேன்‘ என்றார் அவர்.
அதற்கு செருப்பு தைப்பவன் சொன்னான்:
‘அப்படியா? உண்மையிலேயே நீங்க தத்துவஞானிதானா? வேறொருத்தரோட ஷூவை நீங்க அணிய மாட்டீங்களா? இதே தெருவுல வேறொரு செருப்பு தைக்கிற ஆள் இருக்கான். அவனுக்கு என்னைவிட தத்துவ ஞானிகளைப் பற்றி நல்லா தெரியும். ஷூவைச் சரி பண்ண நீங்க அந்த ஆள்கிட்ட போங்க.’
பாலம் கட்டியவர்கள்
மன்னன் அந்தியோக்கஸ் அஸ்ஸி நதி கடலில் கலக்கும் இடத்தில் ஒரு பாலம் கட்டினான். நகரத்தின் ஒரு பாதியை இன்னொரு பாதியுடன் இணைப்பதற்காக அந்த பாலம் பயன்பட்டது. கோவேறு கழுதைகள் மீது ஏற்றி மலைகளிலிருந்து கொண்டு வரப்பட்ட பெரிய பெரிய கற்களை பயன்படுத்தி அந்தப் பாலம் கட்டப்பட்டது.
பாலம் சம்பந்தப்பட்ட வேலைகள் முடிந்ததும், அங்கிருந்த தூணில் மன்னன் இந்த வார்த்தைகள் இருக்கும்படி செய்தான்:
‘இரண்டாம் அந்தியோக்கஸ் மன்னன் கட்டி முடித்த பாலம்.’
அழகான அந்தப் பாலத்தின் வழியாக எல்லா மக்களும் நடந்தார்கள்.
ஒரு மாலை நேரத்தில் சிறிது பைத்தியம் பிடித்த நிலையில் இருப்பவன் என்று எல்லோராலும் கருதப்பட்ட ஒரு இளைஞன் அந்தத் தூணின் மீது ஏறினான். அங்கு கொத்தி வைக்கப்பட்டிருந்த வார்த்தைகளைக் கரியால் பூசினான். பிறகு அதற்கு மேலே எழுதினான்:
‘இந்தப் பாலத்தின் கற்களை மலைகளிலிருந்து கீழே கொண்டு வந்தவை கோவேறு கழுதைகள். பாலத்தின் வழியாக இங்குமங்குமாக போய்க் கொண்டிருப்பவர்கள் இந்த பாலத்தைக் கட்டிய கோவேறு கழுதைகளில்தான் சவாரி செய்கிறார்கள்.’
அந்த இளைஞன் எழுதியிருந்ததைப் படித்தவர்களில் சிலர் சிரித்தார்கள். வேறு சிலர் ஆச்சரியப்பட்டார்கள். வேறு சிலர் சொன்னார்கள்: ‘யார் இதை எழுதினதுன்னு எங்களுக்கு தெரியும். அவன் ஒரு அரைப் பைத்தியமாயிற்றே!’
ஆனால், ஒரு கோவேறு கழுதை சிரித்துக் கொண்டே இன்னொரு கோவேறு கழுதையிடம் சொன்னது: ‘இந்தக் கற்களைச் சுமந்தது நாமதான்னு உனக்கு ஞாபகத்துல இருக்குல்ல? இருந்தும் இதுவரையிலும் என்ன சொல்லிக் கொண்டு இருந்தாங்க? இந்தப் பாலத்தைக் கட்டியது அந்தியோக்கஸ் மன்னனாம்!