கலீல் ஜிப்ரானின் 100 குட்டிக் கதைகள் - Page 10
- Details
- Category: சிறுகதைகள்
- Published Date
- Written by சுரா
- Hits: 8647
பழைய மது
ஒரு பணக்காரன் தன்னுடைய நிலவறையைப் பற்றியும், அங்கு பத்திரமாக வைக்கப்பட்டிருக்கும் மதுவைப் பற்றியும் மதிப்புடன் நினைத்துப் பார்த்தான். தனக்கு மட்டுமே தெரிந்திருக்கும் விசேஷ நாட்களில் பயன்படுத்த வேண்டும் என்பதற்காக மிகப் பழமையான மது ஒன்றை ஒரு பெட்டிக்குள் பத்திரமாக அவன் வைத்திருந்தான்.
அந்த மாநிலத்தின் ஆளுநர் ஒரு நாள் அவனைத் தேடி வந்தார். ஆளுநரைப் பற்றி அவன் ஆழமாக யோசித்தான். கடைசியில் அவன் ஒரு முடிவுக்கு வந்தான். ஒரு சாதாரண ஆளுநருக்காக அவன் அந்த மது இருக்கும் பெட்டியைத் திறக்க தயாராக இல்லை.
இன்னொரு நாள் பாதிரியார் ஒருவர் வந்தார் பணக்காரன் தனக்குள் கூறிக் கொண்டான்: ‘இல்ல... அந்தப் பெட்டியை நான் திறக்க மாட்டேன். மதுவின் மதிப்பு என்னன்னு பாதிரியாருக்குத் தெரியாது. அதன் வாசனை அவருடைய நாசித் துவாரங்களுக்குள் நுழையாது.’
வேறொரு நாள் அந்த நாட்டின் இளவரசன் வந்தான். அந்த பணக்காரனுடன் சேர்ந்து அவன் இரவு உணவு சாப்பிட்டான். அப்போது பணக்காரன் நினைத்தான். ‘ஒரு இளவரசன் பருகுவதை விட மதிப்புள்ளது அந்த மது.’
தன்னுடைய சொந்த மருமகனின் திருமணத்தின் போதும் அந்த பணக்காரன் தனக்குத் தானே கூறிக் கொண்டான்: ‘இந்த விருந்தாளிகளுக்காக நான் அந்தப் பெட்டியைத் திறக்க மாட்டேன்.’
வருடங்கள் கடந்து சென்றன. அவன் கிழவனாகி மரணமடைந்தான். எல்லோரையும் போல அவனையும் மண்ணுக்குள் போட்டு மூடினார்கள்.
அதே நாளில் மற்ற மது வகைகளுடன் சேர்ந்து மிகவும் பழமையான அந்த மதுவையும் வெளியே எடுத்தார்கள். பக்கத்து வீடுகளைச் சேர்ந்த விவசாயிகள் மது முழுவதையும் உள்ளே தள்ளினார்கள். அவர்கள் யாருக்கும் அதன் பழம் பெருமை தெரியவில்லை.
அவர்களைப் பொறுத்த வரையில் கோப்பையில் ஊற்றபட்டது எல்லாமே மது - அவ்வளவுதான்.
மதிப்பு மிக்க கவிதை
நூற்றுக்கணக்கான வருடங்களுக்கு முன்பு ஏதனுக்குச் செல்லும் வழியில் இரண்டு கவிஞர்கள் சந்தித்தார்கள். ஒருவரையொருவர் சந்தித்தது குறித்து அவர்கள் மிகவும் மகிழ்ச்சியடைந்தார்கள்.
முதல் கவிஞர் கேட்டார்: ‘சமீபத்தில் நீங்கள் என்ன இயற்றினீர்கள்? உங்களின் வீணையுடன் அது எப்படி இணைந்தது?
அதற்கு இரண்டாவது கவிஞர் சொன்னார்: ‘என் கவிதைகளிலேயே மதிப்பு மிக்க கவிதையை நான் சமீபத்துலதான் எழுதினேன். சொல்லப் போனால் கிரேக்க மொழியில் இதுவரையில் எழுதப்பட்ட கவிதைகளிலேயே மிகச் சிறந்த கவிதை இதுவாகத்தான் இருக்கும். மிக உயர்ந்த ஸியூஸ் கடவுளிடம் செய்யும் பிரார்த்தனையே அந்தக் கவிதை.’
தன்னுடைய மேலாடைக்குள்ளிருந்து அவர் ஒரு ஓலையை வெளியே எடுத்தார்.
‘இதோ பாருங்க... இதுதான் அந்தக் கவிதை. இதைப் படிப்பதற்கு எனக்கு எவ்வளவு மகிழ்ச்சியா இருக்கு தெரியுமா? வாங்க... வெண்மையான ஸைப்ரஸ் மரங்களின் நிழல்ல நாம போய் உட்காருவோம்.’
கவிஞர் தன்னுடைய கவிதையை வாசித்தார். அது ஒரு நீளமான கவிதையாக இருந்தது.
‘இது ஒரு மதிப்பு மிக்க கவிதையே. பல யுகங்களைத் தாண்டி இந்த கவிதை வாழும். நீங்கள் வாழ்த்தப்படுவீர்கள்’ - நண்பரான கவிஞர் சொன்னார்.
‘சரி... இந்த நாட்களில் நீங்க என்ன எழுதுனீங்க?’
‘நான் ரொம்பவும் குறைவாகத்தான் எழுதினேன். எட்டே எட்டு வரிகள்தான். அதுவும் தோட்டத்துல விளையாடிக் கொண்டிருக்கும் குழந்தையைப் பற்றி....’
அந்த வரிகளை அவரும் பாடினார். அப்போது கவிஞரான நண்பர் சொன்னார்:
‘மோசம்னு சொல்ல முடியாது. அந்த அளவுக்கு மோசம் ஒண்ணும் இல்ல.’
இரண்டு பேரும் பிரிந்து சென்றார்கள்.
இன்று - இரண்டாயிரம் வருடங்களுக்குப் பிறகு அந்த எட்டு வரிகளும் ஒவ்வொரு மொழியிலும் பாடப்படுகின்றன. நேசிக்கப்படுகின்றன. புகழப்படுகின்றன.
அந்த இன்னொரு கவிஞரின் கவிதை பல நூறு வருடங்களாக நூல் நிலையங்களுக்குள்ளும், வித்துவான்மார்களின் அறைகளுக்குள்ளும் இருக்கிறது. அது நினைக்கப்படவும் செய்கிறது. ஆனால், நேசிக்கப்படவில்லை. பாடப்படவில்லை.
லேடி ரூத்
பசுமையான குன்றின் மீது தன்னந்தனியாக நின்று கொண்டிருந்தது அந்த வெள்ளை நிற அரண்மனை. தூரத்திலிருந்து மூன்று மனிதர்கள் அதையே பார்த்துக் கொண்டிருந்தார்கள். முதல் மனிதன் சொன்னான்: ‘அதோ... லேடி ரூத்தின் அரண்மனை. வயதான கெட்ட மந்திரவாதி அவள்!’
இரண்டாவது மனிதன் அதை மறுத்தான்: ‘நீங்க தப்பா சொல்றீங்க. அவள் ஒரு பேரழகி. வாழ்க்கையை கனவுகளுக்காக ஒதுக்கி வைத்த அழகி அவள்.’
இரண்டு பேர் சொன்னதையும் மூன்றாவது மனிதன் மறுத்தான்: ‘நீங்க ரெண்டு பேருமே தப்பா சொல்றீங்க. பரந்து கிடக்கும் இந்த நிலத்துக்குச் சொந்தக்காரியே அவள்தான். பணியாட்களின் இரத்தம் முழுவதையும் அவள் உறிஞ்சி குடிக்கிறா.’
லேடி ரூத்தைப் பற்றி தங்களுக்குள் விவாதம் செய்தவாறு அந்த மூன்று நபர்களும் நடந்தார்கள். கடை வீதியை அடைந்த அவர்கள் ஒரு வயதான மனிதரைப் பார்த்தார்கள். அவர்களில் ஒருவன் கிழவரிடம் கேட்டான்: ‘தயவு செய்து ஒரு விஷயத்தைச் சொல்ல முடியுமா? அந்தக் குன்றின் மீது இருக்கும் வெள்ளை அரண்மனையில் வசிக்கும் லேடி ரூத்தைப் பற்றி உங்களுக்கு ஏதாவது தெரியுமா?’
கிழவர் தலையை உயர்த்தினார். மூன்று பேரையும் பார்த்து அவர் சிரித்தார். பிறகு சொன்னார்: ‘எனக்கு இப்போ தொண்ணூறு வயசு. நான் சின்னப் பையனா இருந்ததுல இருந்து லேடி ரூத்தைப் பற்றி நான் நினைத்துக் கொண்டேதான் இருக்கேன். எண்பது வருடங்களுக்கு முன்னாடியே அவங்க இறந்துட்டாங்க. அந்த வீட்டுல இப்போ யாரும் இல்ல. சில நேரங்கள்ல அங்கே ஆந்தைகள் அலறும். பேய்கள் நடமாடக் கூடிய இடம் அதுன்னு ஆட்கள் சொல்றாங்க.’
அற்புதமான கதை
கவிஞர் ஒரு விவசாயியைப் பார்த்தார். கவிஞர் சற்று விலகி நின்றார். விவசாயி வெட்கத்துடன் நின்றிருந்தான். எனினும், இருவரும் பேசினார்கள். விவசாயி சொன்னான்: ‘சமீபத்துல நான் கேட்ட ஒரு கதையைச் சொல்றேன். பொறியில ஒரு எலி மாட்டிக் கொண்டது. இரையாக வைத்த வெண்ணையை எலி மகிழ்ச்சியுடன் தின்று கொண்டிருந்தது. அப்போ ஒரு பூனை பக்கத்துல வந்தது. அதைப் பார்த்து எலிக்கும் நடுக்கம் வந்திடுச்சு. அது கொஞ்ச நேரத்திற்குத்தான். எலிக்கு தெரியும் தான் பொறிக்கு உள்ளே பத்திரமா இருக்கோம்னு.
அப்போ பூனை சொன்னது:
‘நண்பனே, நீ சாப்பிடுறது உன்னோட கடைசி உணவு.’
அதற்கு எலி பதில் சொன்னது: ‘ஆமா... உண்மைதான். எனக்கு ஒரு வாழ்வு இருக்கு. அதே மாதிரி ஒரு மரணமும் இருக்கு. உன் விஷயம் அப்படியா? எல்லாரும் சொல்றாங்க உனக்கு ஒன்பது வாழ்வு இருக்குன்னு. அதன் அர்த்தம் என்ன? நீ ஒன்பது தடவைகள் சாகணும்...’
விவசாயி கவிஞரைப் பார்த்துக் கொண்டே கேட்டான்: ‘அற்புதமான ஒரு கதை இது! அப்படித்தானே?’
அதற்கு பதிலெதுவும் கூறாமல் கவிஞர் நடந்து சென்றார். ஆனால், அவர் தனக்குள் கூறிக் கொண்டிருந்தார்: ‘உண்மைதானோ? நமக்கு ஒன்பது வாழ்வா? அப்படின்னா ஒன்பது தடவைகள் நாம சாவோம். ஒன்பது மரணம்! பொறிக்குள் இருந்தாலும் ஒரே ஒரு வாழ்வு மட்டும்... அதுதான் உண்மையிலேயே எல்லாவற்றையும் விட நல்லது. இறுதி உணவிற்காக ஒரே ஒரு துண்டு வெண்ணெய் மட்டுமே வைத்திருக்கும் விவசாயியின் வாழ்க்கை... இருந்தாலும் பாலை வனங்களுடன் காட்டிலிருக்கும் சிங்கங்களுடன் குருதி உறவு கொண்டவராயிற்றே, நாம்?’