கலீல் ஜிப்ரானின் 100 குட்டிக் கதைகள் - Page 14
- Details
- Category: சிறுகதைகள்
- Published Date
- Written by சுரா
- Hits: 8647
கடவுளும் நானும்
எத்தனையோ வருடங்களுக்கு முன்னால் பேசக் கூடிய ஆற்றல் என்ற ஒன்று என் உதடுகளுக்கு வந்தபோது ‘கடவுளே! நான் உங்களின் அடிமை. உங்களின் இறுதி தீர்மானம் தான் என்னுடைய சட்டம். நான் எப்போதும் உங்கள் விருப்பப்படி நடப்பேன்.’
எதுவும் சொல்லாமல் மிகவும் பலமான ஒரு காற்றைப் போல கடவுள் என்னைக் கடந்து சென்றார்.
ஆயிரம் வருடங்களுக்குப் பிறகு புனிதமான அந்த மலைமீது நான் மீண்டும் ஏறி, கடவுளிடம் சொன்னேன்: ‘என்னைப் படைத்த கடவுளே! நான் உங்களின் படைப்பு, என்னைக் களி மண்ணுல இருந்து நீங்க படைச்சீங்க. என்னுடைய எல்லா விஷயங்களுக்குமாக நான் உங்களுக்கு கடன்பட்டிருக்கிறேன்.’
எதுவும் சொல்லாமல், வேகம் கொண்ட ஆயிரம் சிறகுகளைப் போல கடவுள் என்னைக் கடந்து சென்றார்.
ஆயிரம் வருடங்களுக்குப் பிறகு புனிதமான அந்த மலைமீது நான் மீண்டும் ஏறி, கடவுளிடம் சொன்னேன்: ‘என்னைப் படைத்த கடவுளே! நான் உங்களின் படைப்பு. என்னைக் களி மண்ணுல இருந்து நீங்க படைச்சீங்க. என்னுடைய எல்லா விஷயங்களுக்குமாக நான் உங்களுக்கு கடன்பட்டிருக்கிறேன்.’
எதுவும் சொல்லாமல், வேகம் கொண்ட ஆயிரம் சிறுகளைப் போல கடவுள் என்னைக் கடந்து சென்றார்.
ஆயிரம் வருடங்களுக்குப் பிறகு புனிதமான அந்த மலை மீது நான் மீண்டும் ஏறி, கடவுளிடம் பேசினேன்:
‘தந்தையே! நான் உங்களின் மகன். கருணையாலும், அன்பாலும் நீங்கள் எனக்கு பிறவி அளித்தீர்கள். அன்பு வழியாகவும் பிரார்த்தனை வழியாகவும் உங்கள் சாம்ராஜ்யத்திற்கு நான் வாரிசாக இருப்பேன்.’
பதில் எதுவும் சொல்லாமல், தூரத்திலிருக்கும் மலைகளை மறைக்கக் கூடிய பனிப்படலத்தைப் போல கடவுள் மறைந்தார்.
ஆயிரம் வருடங்களுக்குப் பிறகு புனிதமான அந்த மலை மீது நான் ஏறி கடவுளிடம் மீண்டும் பேசினேன்:
‘என் கடவுளே! என் இலட்சியமே! என் அடைக்கலமே! நான் உங்களின் நேற்று. நீங்கள் என்னுடைய நாளை. உங்களின் பூமியில் வேர் நான். வானத்தில் என்னுடைய மலர் நீங்கள். சூரியனின் ஆசீர்வாதத்தால் நாம் ஒன்றாக வளர்கிறோம்.’
கடவுள் என் மீது சாய்ந்தார். இனிய மந்திரங்களை என்னுடைய காதுகளில் அவர் சொன்னார். பாய்ந்து வரும் அருவியை கடல் வாரி அணைத்துக் கொள்வதைப் போல கடவுள் என்னை இறுக கட்டிக் கொண்டார்.
பிறகு பள்ளத்தாக்குகள் வழியாகவும், சமதளங்கள் வழியாகவும் நான் ஓடியபோது, கடவுள் அங்கும் இருந்தார்.
காதல்
இளம் கவிஞன் அரசியிடம் சொன்னான்: ‘நான் உங்களைக் காதலிக்கிறேன்.’
‘நான் உன் மீதும் அன்பு செலுத்துகிறேன். குழந்தே!
‘நான் உங்க குழந்தை இல்ல. நான் ஒரு ஆண். நான் உங்களைக் காதலிக்கிறேன்.’
‘நான் ஒரு தாய். ஆண் பிள்ளைகள், பெண் பிள்ளைகள் ஆகியோரின் தாய். அவர்கள் எல்லோரும் தங்களின் பிள்ளைகளின், பெண் பிள்ளைகளின் தந்தையும், தாயும் ஆவார்கள். என் ஆண் பிள்ளைகளில் ஒருவன் உன்னை விட வயது அதிகம் கொண்டவன்.
‘இருந்தாலும் நான் உங்களை காதலிக்கிறேன்.’- அந்த இளம் கவிஞன் சொன்னான்.
அதற்கடுத்த சில நாட்களில் அந்த அரசி மரணத்தைத் தழுவினாள். ஆனால், அவளுடைய இறுதி மூச்சு பூமியின் மதிப்பு மிக்க சுவாசத்தை மீண்டும் ஏற்றுக் கொள்ளுவதற்கு முன்பு அரசி தன் மனதிற்குள் கூறினாள்: ‘நான் மிகவும் அதிகமாக விரும்பக் கூடியவனே! என்னுடைய ஒரே வாரிசே! என் இளம் கவிஞனே என்றாவதொரு நாள் நாம் மீண்டும் சந்திப்போம். அப்போ நான் நிச்சயம் எழுபது வயது பெண்ணாக இருக்க மாட்டேன். அது மட்டும் உண்மை.’
கடவுளை அடைய
பள்ளத்தாக்கு வழியே இரண்டு மனிதர்கள் நடந்து சென்றார்கள். அவர்களில் ஒருவன் மலையின் அடிவாரத்தை விரலால் சுட்டிக் காட்டியவாறு சொன்னான்: ‘அதோ பாருங்க ஒரு ஆசிரமம் இருக்குறது தெரியுதா? நீண்ட காலமாக இந்த உலகை விட்டு விடுதலை பெற்ற ஒருவர் அந்த ஆசிரமத்தில் இருக்கிறார். இந்த பூமியில் அவர் தேடிக் கொண்டிருப்பது கடவுளை மட்டும்தான். அவர் கடவுளை நிச்சயம் அடைய முடியாது. தன்னுடைய ஆசிரமத்தையும், ஆசிரமத்தின் தனிமையையும் விட்டுட்டு நம்முடைய உலகத்துக்கு திரும்ப வரும் வரை அவர் கடவுளைப் பார்க்கவே முடியாது, நம்முடைய கவலைகளையும் சந்தோஷத்தையும் பங்கு போட்டுக் கொள்ளவும், திருமணக் கொண்டாட்டங்களில் நடனம் ஆடவும், இறந்து போன மனிதர்களின் பாடைக்கு முன்னால் உட்கார்ந்து கொண்டு அழுவதற்கும் திரும்பி வர்றது வரையில் அவர் கடவுளைப் பார்க்கவே முடியாது.’
‘நீங்க சொன்னதை நானும் ஒத்துக்குறேன். இருந்தாலும் அந்த துறவி ரொம்பவும் நல்லவர் என்பதுதான் என்னுடைய எண்ணம். ஒரு நல்ல மனிதர் மற்றவர்களிடமிருந்து விலகிப் போவதன் மூலம் நன்மை செய்றார்னா அது உண்மையிலேயே நல்ல விஷயம்தானே? இந்த மனிதர்கள் எல்லோரும் நல்லவர்கள் என்று நடித்துக் கொண்டிருப்பதை விட அது மிகப் பெரிய ஒரு விஷயம் அல்லவா?’
நதியின் வழிகள்
குதித்து வேகமாக கீழே விழுந்து கொண்டிருந்த நதியின் தாழ்வுப் பகுதியில் இரண்டு சிறு அருவிகள் சந்தித்தன.
முதல் அருவி கேட்டது:
‘நண்பனே, நீ எப்படி இங்கே வந்தே? வந்த வழி எப்படி இருந்தது?’
‘நான் வந்த பாதை ரொம்பவும் சிரமங்கள் கொண்டதா இருந்தது. இயந்திரத்தின் சக்கரம் முறிஞ்சு போச்சு. என் ஓட்டத்திலிருந்து தன்னுடைய செடிகளுக்கு என்னைக் கொண்டு போன விவசாயி இறந்துட்டாரு. எதுவுமே செய்யாமல் சுயநல எண்ணங்களுடன் வெயில்ல அலைஞ்சு திரிபவர்களின் நாற்றமெடுத்த அழுக்குடன் வருவதற்கு எனக்கு என்னவோ மாதிரி இருந்துச்சு. சகோதரரே, உன் வழி எப்படி இருந்தது?’
‘நான் வந்த பாதை மிகவும் வித்தியாசமா இருந்தது. அருமையான வாசனையைக் கொண்ட மலர்களுக்கும் வெட்கத்துடன் குனிந்து கொண்டிருக்கும் மரங்களுக்கும் நடுவில் நான் மலையிலிருந்து கீழே இறங்கி வந்தேன். ஆண்களும் பெண்களும் வெள்ளிப் பாத்திரங்களில் என்னை மொண்டு குடித்தார்கள். சிறு குழந்தைகள் தங்களின் ரோஜாப் பூவைப் போன்ற சிறு கால்களால் என் ஓரத்தில் நனைத்து விளையாடினார்கள். என்னைச் சுற்றி ஒரே சந்தோஷச் சிரிப்புகளும், இனிமையான பாடல்களும்தான்.... நீ வந்த பாதை அந்த அளவுக்கு மகிழ்ச்சியானதா இல்ல...! அப்படித்தானே? கேட்கவே ரொம்பவும் கஷ்டமாக இருக்கு.’
அப்போது நதி உரத்த குரலில் சொன்னது: ‘வாங்க... வாங்க... நாம கடலுக்குப் போய்க்கிட்டு இருக்கோம். சீக்கிரமா வாங்க... இதோ நாம கடலை நெருங்கி விட்டோம். வாங்க... சீக்கிரமா வாங்க... என்னுடன் இணைத்து விட்டால், அலைஞ்சு திரிஞ்ச விஷயத்தையெல்லாம் நீங்க மறந்தே ஆகணும் - அது சந்தோஷமுள்ளதா இருந்தாலும் கவலைகள் நிறைந்ததா இருந்தாலும். வாங்க... சீக்கிரமா வாங்க... நம்முடைய கடல் அன்னையின் இதயத்தை நாம அடையிறப்போ நானும் நீங்களும் நாம வந்த பாதைகளை முழுமையா மறந்திடுவோம்.