கலீல் ஜிப்ரானின் 100 குட்டிக் கதைகள் - Page 17
- Details
- Category: சிறுகதைகள்
- Published Date
- Written by சுரா
- Hits: 8647
ஜனநாயகம்
தொலைவில் இருக்கும் அந்த நகரத்தின் மன்னன் பலம் மிக்கவனாகவும் அறிவாளியுமாக இருந்தான். எல்லோரும் மன்னனின் பலத்தைப் பார்த்து பயந்தார்கள். அவனுடைய அறிவாளித் தனத்தை எல்லோரும் விரும்பினார்கள்.
அந்த நகரத்தில் ஒரே ஒரு கிணறுதான் இருந்தது. மக்களும் அரண்மனையில் இருப்பவர்களும் அதிலிருந்துதான் நீர் மொண்டு குடித்தார்கள்.
ஒரு இரவில் எல்லோரும் தூங்கிக் கொண்டிருந்தபோது மோகினியொன்று நகருக்குள் நுழைந்தது. வினோதமாக ஒரு திரவத்தின் எட்டு துளிகளை கிணற்றுக்குள் அவள் ஊற்றி விட்டாள். ஊற்றிய பின் அவள் சொன்னாள்:
‘இந்த நிமிடம் முதல் இந்த நீரைப் பருகுபவர்கள் பைத்தியமாகி விடுவார்கள்.’
மறுநாள் காலையில் மன்னர், அரண்மனை அதிகாரி இருவரையும் தவிர அந்தக் கிணற்றில் நீர் மொண்டு பருகிய எல்லோரும் பைத்தியமாகி விட்டார்கள். அந்த மோகினி சொன்னபடியே அனைத்தும் நடந்தது.
அன்று பகல் முழுவதும் தெருக்களிலும் கடை வீதிகளிலும் மக்கள் தங்களுக்குள் மெதுவான குரலில் கூறிக் கொண்டார்கள்.
‘நம்ம மன்னனுக்கும் பைத்தியம் பிடிச்சிருக்கு. மன்னனும்அரண்மனை அதிகாரியும் சுய அறிவை இழந்துட்டாங்க. பைத்தியம் பிடித்த மன்னன் நம்மை ஆள தகுதி இல்லை. நாம அவனை பதவியில இருந்து இறக்கணும்.’
அன்று மாலையில் மன்னன் ஒரு பொன்னால் ஆன பாத்திரம் நிறைய அந்தக் கிணற்றிலிருந்து நீர் கொண்டு வரச் சொன்னான். அந்த நீரை மன்னன் எடுத்து குடித்தான். அரண்மனை அதிகாரியும் அந்த நீரைப் பருகினான்.
மறுநாள் நகரம் முழுவதும் ஒரே கூத்தும், கும்மாளமும்தான். மன்னனுக்கும் அரண்மனை அதிகாரிக்கும் சுயஅறிவு மீண்டும் வந்து விட்டதென்று எல்லோரும் கொண்டாடினார்கள்.
புதிய ஆனந்தம்
நேற்று இரவில் புதிய ஒரு ஆனந்தத்தை நான் கண்டுபிடித்தேன். முதலில் நான் அதை சோதித்துப் பார்த்தேன். அப்போது கடவுள் தூதரும் பிசாசும் என்னை நோக்கி வேகமாக வந்தார்கள்.
அவர்கள் இருவரும் என்னுடைய வீட்டு வாசலில் ஒருவரையொருவர் சந்தித்துக் கொண்டார்கள். நான் புதிதாக கண்ட ஆனந்தத்தைப் பற்றிச் சொல்லி இருவரும் ஒருவரோடொருவர் மோதினார்கள்.
ஒருவர் உரத்த குரலில் சொன்னார்: அது பாவம்!
இன்னொருவர் அதை எதிர்த்தார்: அது புண்ணியம்!
சவக் குழி தோண்டுவன்
இறந்து போன என்னுடைய சொந்தங்களில் ஒன்றை நான் மண்ணுக்குக் கீழே புதைக்கச் சென்றிருந்தேன். அப்போது சவக்குழி தோண்டும் மனிதன் எனக்கருகில் வந்து சொன்னான்:
‘இங்கு பிணத்தை அடக்கம் செய்ய வருபவர்களில் உங்களை மட்டும் எனக்கு ரொம்பவும் பிடிச்சிருக்கு.’
‘ரொம்ப சந்தோஷம். சரி.... என்னை மட்டும் நீங்க விரும்புறதுக்கு காரணம்?’
‘அவர்கள் எல்லோரும் அழுதுகொண்டே வர்றாங்க. திரும்பிப் போறதும் அழுது கொண்டேதான். நீங்க மட்டும் சிரித்துக் கொண்டே வர்றீங்க. சிரித்துக் கொண்டே திரும்பிப் போறீங்க.’
அவன் பதில் சொன்னான்.
தேவாலயத்தின் படியில்
நேற்று சாயங்காலம் தேவாலயத்தின் பளிங்கால் ஆன படியில் ஒரு பெண் இரண்டு ஆண்களுடன் அமர்ந்திருப்பதை நான் பார்த்தேன்.
அவளுடைய முகத்தின் ஒரு பக்கம் வெளிறிப் போய் காணப்பட்டது. இன்னொரு பக்கம் பளபளப்பாக இருந்தது.
நன்மையும் தீமையும்
நன்மையின் கடவுளும் தீமையின் கடவுளும் மலை உச்சியில் சந்தித்தார்கள்.
நன்மையின் கடவுள் வாழ்த்தியது. தீமையின் கடவுள் அதற்கு எந்த பதிலும் கூறவில்லை. நன்மையின் கடவுள் மீண்டும் கேட்டது:
‘என்ன, ஒரு மாதிரி இருக்கீங்க?’
‘ஆமா... ஆமா... சமீப காலமா பல நேரங்கள்ல என்னை நீங்கன்னு தப்பா நினைச்சிர்றாங்க. உங்க பேரைச் சொல்லி என்னைக் கூப்பிடுறாங்க. உங்களை மாதிரியே என்னை நினைக்க ஆரம்பிச்சுடுறாங்க. அது என்னை நிச்சியமா சந்தோஷப் படுத்தல'- தீமையின் கடவுள் சொன்னது.
'என்னைப் பலரும் நீங்கன்னு தப்பா நினைச்சிடுறாங்க. உங்க பேரைச் சொல்லி என்னைக் கூப்பிடுறாங்க' - நன்மையின் கடவுள் சொன்னது.
மனிதர்களின் முட்டாள்தனத்தை மனதிற்குள் திட்டிக் கொண்டே தீமையின் கடவுள் அந்த இடத்தை விட்டு நீங்கியது.
முகங்கள்
ஒரு ஆயிரம் வகைப்பட்ட முகங்களை நான் பார்த்திருக்கிறேன். ஒரே அச்சில் வார்த்ததைப் போல ஒற்றை வெளிப்பாடு கொண்ட முகங்களையும் கூட பார்த்திருக்கிறேன்.
இன்று நான் ஒரு முகத்தைப் பார்த்தேன். அதன் பிரகாசத்துக்கு அடியில் இருந்த அழகற்ற தன்மையையும் என்னால் காண முடிந்தது. மற்றொரு முகத்தின் பிரகாசத்தை நான் தூக்கி பார்த்தேன். அது எந்த அளவிற்கு அழகானது என்பதைப் பார்ப்பதற்காக அப்படிச் செய்தேன்.
வெறுமையை அடைந்த காரணத்தால் ஏராளமான சுருக்கங்களைக் கொண்ட வயதான ஒரு முகத்தையும், எல்லா விஷயங்களையும் கொத்தி வைத்திருக்கும் பளபளப்பான ஒரு முகத்தையும் நான் பார்த்தேன்.
எனக்கு முகங்கள் நன்றாகப் புரியும். காரணம்- நான் பார்ப்பது என்னுடைய சொந்த கண்கள் உருவாக்கிய சட்டங்கள் மூலம். அதனால் அடியிலிருக்கும் உண்மையை நான் பார்த்து விடுகிறேன்.
உணர்ச்சிகள்
‘இந்தப் பள்ளத்தாக்கைத் தாண்டி, நீல பனிப்படலம் போர்த்தியிருக்கும் மலையை நான் பார்க்கிறேன். மலை எவ்வளவு அழகாக இருக்கிறது!’ - கண்கள் தன்னை மறந்து சொல்லின.
காது அதைக் கேட்டது. கவனமாக சிறிது நேரம் எதையோ கேட்க முயன்றது. பின்னர் அது சொன்னது:
‘எங்கே இருக்கு மலை? என்னால அதை கேட்க முடியலையே!’
‘மலையை அறிந்து கொள்ளவும் தொடவும் நானும் முயற்சிக்கிறேன். ஆனா, ஒரு பிரயோஜனமும் இல்ல. மலையை என்னால் தொட முடியல’ - உள்ளங்கை சொன்னது.
‘மலையே இல்ல... என்னால வாசனையை உணரவே முடியல...’- மூக்கு தன் நிலைமையைச் சொன்னது.
அப்போது கண் மறுபக்கமாக திரும்பியது. எல்லோரும் சேர்ந்து கண்ணின் அசாதாரணமான நடத்தையைப் பற்றி பேச ஆரம்பித்தார்கள்.
கடைசியில் எல்லோரும் சேர்ந்து ஒரு முடிவுக்கு வந்தார்கள்.
‘கண்ணுக்கு ஏதோ பிரச்னை இருக்கு. அது மட்டும் உண்மை.’
மூடு பனியின் இசை
ஒரு நாள் நான் என்னுடைய உள்ளங்கையை மூடு பனியால் நிறைத்தேன். சிறிது நேரம் கழித்து நான் என்கையைத் திறந்தேன். பார்த்தபோது மூடுபனி ஒரு புழுவாக மாறியிருந்தது.
நான் கையை மூடினேன். மீண்டும் திறந்தேன். அப்போது அதில் ஒரு கிளிக்குஞ்சு இருந்தது.
நான் மீண்டும் கையை மூடினேன். திரும்பவும் திறந்தேன். அதற்குள் வெற்றிடத்தில் அதோ ஒரு மனிதன் நின்று கொண்டிருக்கிறான். கவலையுடன் இருந்த தன்னுடைய முகத்தை அவன் மேல் நோக்கி உயர்த்தினான்.
நான் திரும்பவும் கையை மூடினேன். மீண்டும் திறந்தேன். அப்போது மூடு பனியைத் தவிர வேறு எதுவும் அங்கு இல்லை.
ஆனால், இனிமையான ஒரு இசையை நான் கேட்டுக்
கொண்டிருந்தேன்.