கலீல் ஜிப்ரானின் 100 குட்டிக் கதைகள் - Page 20
- Details
- Category: சிறுகதைகள்
- Published Date
- Written by சுரா
- Hits: 8647
வசந்த மலர்கள்
இளவேனிற் காலத்தில் என்னுடைய எல்லா கவலைகளையும் ஒன்றாகச் சேர்ந்து நான் தோட்டத்தில் குழி தோண்டி புதைப்பதற்காக வந்தேன்.
ஏப்ரல் திரும்ப வந்தது. வசந்தம் பூமியை திருமணம் செய்ய வந்தது. அப்போது மற்ற மலர்களை விட அழகான மலர்கள் என் தோட்டத்தில் மலர்ந்தன.
அவற்றைப் பார்ப்பதற்காக என்னுடைய பக்கத்து வீடுகளைச் சேர்ந்தவர்கள் வந்தபோது, அவர்கள் என்னிடம் கெஞ்சிக் கேட்டுக் கொண்டார்கள்:
‘இளவேனிற் காலம் திரும்பவும் வர்றப்போ, விதை விதைக்கிற நேரத்தில், எங்களின் தோட்டத்தில் வளர்ப்பதற்காக இந்த மலர்களின் விதைகளைத் தருவீர்களா?’
பெண் துறவியும் விலை மாதுவும்
பாதையில் நடந்து போவோரைப் பார்த்தபடி நீங்கள் ஜன்னலுக்கு அருகில் அமர்ந்திருப்பீர்கள். அப்படிப் பார்த்துக் கொண்டிருக்கும்போது ஓரு பெண் துறவி உங்களின் வலது பக்கமாக வந்து நிற்பாள். ஒரு விலை மாது இடது பக்கத்தில்.
கள்ளங்கபடமற்ற நீங்கள் கூறுவீர்கள்:
‘ஒரு பெண் எந்த அளவிற்கு புனிதம்! இன்னொருத்தி எந்த அளவுக்கு கெட்டவள்!’
ஆனால், நீங்கள் கண்களை மூடி சிறிது நேரம் காதுகளைத் தீட்டிக் கொண்டு உட்கார்ந்திருங்கள். இனம் புரியாத ஒரு வினோதமான ஒரு மெல்லிய குரல் உள்ளே கேட்கும்:
‘ஒரு பெண் பிரார்த்தனையில் இன்னொரு பெண் கவலையில் என்னைத் தேடிக் கொண்டிருக்கிறார்கள். இரண்டு பேர்களின் மனதிலும் எனக்காக ஒரு இடம் இருக்கவே செய்யுது.’