கலீல் ஜிப்ரானின் 100 குட்டிக் கதைகள் - Page 15
- Details
- Category: சிறுகதைகள்
- Published Date
- Written by சுரா
- Hits: 8647
சந்தோஷமும் கவலையும்
மேமாதத்தில் ஒருநாள் குளக்கரையில் சந்தோஷமும் கவலையும் சந்தித்துக் கொண்டன. இருவரும் ஒருவருக்கொருவர் குசலம் விசாரித்தனர். தகதகத்துக் கொண்டிருந்த நீர்ப்பரப்பிற்கு அருகில் அமர்ந்து பேச ஆரம்பித்தனர்.
பூமியில் நிறைந்திருக்கும் அழகைப் பற்றியும் காடுகளிலும் மலைகளிலும் உள்ள வாழ்க்கையின் வசந்தத்தைப் பற்றியும் சூரியன் தோன்றும் போதும் மறையும் போதும் கேட்கக் கூடிய பாடல்களைப் பற்றியும் சந்தோஷம் பேசியது.
சந்தோஷம் சொன்ன எல்லா விஷயங்களையும் கவலை ஒத்துக் கொண்டது. அந்த நிமிடத்தின் வசீகரத் தன்மையையும் அழகையும் அது புரிந்துகொண்டதே அதற்குக் காரணம்.
மே மாதத்தில் வயல்களும் மலைகளும் என்பதைப் பற்றி கவலை நீண்ட நேரம் சொல்லிக் கொண்டே இருந்தது.
அவர்கள் இருவரும் நீண்ட நேரம் ஒன்றாக அமர்ந்து பேசிக் கொண்டிருந்தார்கள். எல்லா விஷயங்களிலும் அவர்கள் ஒரே மனநிலையைக் கொண்டிருந்தார்கள்.
அதே நேரத்தில் குளத்தின் அக்கரையில் இரண்டு வேடர்கள் போய்க் கொண்டிருந்தார்கள். நீர்ப்பரப்பு வழியாக இந்தக் கரையைப் பார்த்த ஒரு வேடன் கேட்டான்:
‘அந்த ரெண்டு ஆட்களும் யாரு?’
‘ரெண்டு ஆட்கள்னா சொன்னே? ஒரே ஒரு ஆளுதானே! தண்ணில கூட ஒரே ஒரு ஆளோட உருவம்தானே தெரியுது!’
‘இல்ல... இல்ல... ரெண்டு ஆட்கள் இருக்காங்க. குளத்துல இருக்கிற தண்ணியில ரெண்டு ஆட்களோட உருவம் தெரியுது!’
‘எனக்கு ஒரு ஆள் இருக்குறதுதான் தெரியுது.’
‘எனக்கு தெளிவா ரெண்டு ஆட்கள் தெரியிறாங்க.’
இப்போது வரையிலும் வேடர்களில் ஒரு ஆள் தனக்குத் தெரிவது ஒரு ஆள் என்றும், இன்னொருவர் தனக்குத் தெரிவது இரண்டு ஆட்கள் என்றும் கூறிக் கொண்டே இருக்கிறார்கள். இரண்டு ஆட்களைப் பார்ப்பதாகக் கூறும் வேடன் தன் நண்பனுக்கு சரியான பார்வை சக்தி இல்லை என்று நினைக்க ஆரம்பித்து விட்டான்.
புல்லின் கோபம்
குளிர்காலத்தில் புல் இலையை கோபித்தது: ‘நீ கீழே விழுறப்போ என்ன சத்தம் கேட்குது! என்னுடைய கனவுகளை நீ அதன் மூலம் சிதறடிக்கிறே!’
அதற்கு வெறுப்புடன் இலை பதில் சொன்னது:
‘தரையில் பிறந்து அதே தரையிலேயே வாழ்க்கையை ஓட்டிக் கொண்டிருப்பவன் நீ. இசை என்றால் என்னவென்று தெரியாத முன் கோபக்காரன் நீ. உன்னதமான காற்று மண்டலத்தில் நீ வாழல. ஒரு பாடலைப் பாட கூட உன்னால் முடியாது.’
பூமியில் விழுந்த இலை உறக்கத்தில் மூழ்கியது. வசந்த காலம் வந்தபோது அது கண் விழித்தது. அப்போது அது ஒரு புல்லாக மாறியிருந்தது.
மீண்டும் குளிர்காலம் வந்தது. அது அப்போதும் நல்ல உறக்கத்தில் இருந்தது. அதற்கு மேலே காற்றில் இலைகள் விழுந்து கொண்டிருந்தன. தனக்குத்தானே அது கூறிக்கொண்டது:
‘குளிர்காலத்தின் இந்த இலைகள்! என்ன சத்தத்தை இந்த இலைகள் உண்டாக்குகின்றன! என்னுடைய கனவுகளையெல்லாம் இந்த இலைகள் சிதறடிக்கின்றன!
வான இயல் ஆராய்ச்சியாளர்
தேவாலயத்தின் நிழலில் ஒரு பார்வை தெரியாத மனிதன் தனியே அமர்ந்திருப்பதை நானும் என்னுடைய நண்பனும் பார்த்தோம். நண்பன் அவனுக்கு நேராக விரலைக் காட்டி சொன்னான்: ‘அதோ பார்... நம்ம ஊரின் விஞ்ஞானி அந்த ஆள்தான்.’
நான் நண்பனிடமிருந்து பிரிந்து பார்வை தெரியாத அந்த மனிதனிடம் சென்றேன். அவனுக்கு ‘வணக்கம்’ சொன்னேன். ஒருவரோடொருவர் சிறிது நேரம் பேசிக் கொண்டிருந்தோம். பேச்சுக்கு மத்தியில் நான் கேட்டேன்:
‘நான் கேட்கும் இந்த கேள்விக்காக என்னை நீங்க மன்னிக்கணும். உங்களுக்கு எப்போ இருந்து பார்வை சக்தி இல்லாமற் போனது?’
‘என் பிறவியில இருந்து.’
‘விஞ்ஞானத்தின் எந்தப் பிரிவில் உங்களுக்கு ஈடுபாடு.’
‘நான் ஒரு வான இயல் ஆராய்ச்சியாளன்.’
அவன் தன்னுடைய மார்பில் கை வைத்துக் கொண்டே சொன்னான்: ‘இந்த சூரியனையும், சந்திரனையும், நட்சத்திரங்களையும் நான் பார்த்துக் கொண்டேயிருக்கிறேன்.’
நாடோடி
நான் ஒரு முறை ஊர் ஊராக சுற்றிக் கொண்டிருக்கும் ஒரு மனிதனைப் பார்த்தேன். சிறிது பைத்தியக்காரனைப் போல இருக்கும் அந்த ஆள் சொன்னான்: ‘நான் ஒரு நாடோடி. பூமியில் குள்ளர்களுக்கு மத்தியில் நடப்பதைப் போல் நான் உணர்றேன். என்னுடைய தலை பூமியில் அவர்களின் தலையில இருந்து எழுபது முழம் உயரத்துல இருக்கு. அதனால் உயர்ந்த, சுதந்திரமான பல சிந்தனைகள் என்னிடம் உண்டாகின்றன.
உண்மையாக சொல்லப் போனால், நான் நடப்பது மனிதர்கள் மத்தியில் இல்லை. அவர்களுக்கு மேலே நான் நடக்குறேன். பரந்து கிடக்கும் வயல்களில் என் காலடிச் சுவடுகளை மட்டும்தான் அவர்களால் பார்க்க முடியுது. என் காலடிச் சுவடுகளின் வடிவத்தைப் பற்றியும், அளவில் அவை பெரிதாக இருப்பதைப் பற்றியும் அவர்கள் விவாதிப்பதையும், ஆச்சரியப்படுவதையும் நான் பல நேரங்கள்ல கேட்டிருக்கேன்.
சிலர் சொல்வாங்க எத்தனையோ வருடங்களுக்கு முன்னால் பூமியில் வாழ்ந்த ராட்சஷ உயிரினத்தின் சுவடுகள் அவை என்று. தொலை தூரத்துல இருந்து எரி நட்சத்திரங்கள் விழுந்தது அங்குதான் என்று சிலர் சொல்லுவார்கள். ஆனால், என் நண்பனே... உங்களுக்கு நல்லா தெரியும் - அவை ஒரு நாடோடியின் காலடிச் சுவடுகள்தானே தவிர, வேறு எதுவும் இல்லை என்ற உண்மை.’
சோளக்கொல்லை பொம்மை
சோளக் கொல்லை பொம்மையிடம் ஒரு நாள் நான் சொன்னேன்: ‘தனிமையான இந்த வயல்ல இருந்து நீ ரொம்பவும் களைச்சுப் போயிருப்பே!’
‘நான் எந்தச் சமயத்திலும் களைப்புன்னு ஒண்ணை உணர்ந்ததே இல்ல. பயமுறுத்துகிறோம்ன்ற சந்தோஷம் ஆழமானதும் நீண்ட நேரமா நிலை பெற்று நிற்கக் கூடியதுமாச்சே!’
ஒரு நிமிடம் சிந்தித்து விட்டு, நானும் அதை ஒத்துக் கொண்டேன்:
‘நீ சொல்றது சரிதான். அந்த சந்தோஷத்தை நானும் அனுபவிச்சிருக்கேன்.’
‘வைக்கோல் நிறைக்கப்பட்டவர்கள் மட்டும்தான் அந்த சந்தோஷத்தை உணர முடியும்.’
சோளக்கொல்லை பொம்மை சொன்னது.
அந்த நிமிடமே நான் அங்கிருந்து கிளம்பினேன். அது என்னைப் பாராட்டியதா இல்லாவிட்டால் அவமானப்படுத்தியதா என்பதையே கண்டுபிடிக்க முடியாமல்.
ஒரு வருடம் கடந்தது. இந்த இடைப்பட்ட காலத்தில் சோளக்கொல்லை பொம்மை ஒரு தத்துவ ஞானியாக மாறிவிட்டிருந்தது. அதற்கருகில் மீண்டும் ஒரு நாள் நான் போனேன். அப்போது அங்கு நான் பார்த்தது என்ன தெரியுமா?
அந்த பொம்மையின் தொப்பிக்குக் கீழே இரண்டு காகங்கள் கூடு கட்டிக் கொண்டிருந்தன.
தூக்கத்தில் நடப்பவர்கள்
நான் பிறந்த ஊரில் ஒரு தாயும் மகளும் வாழ்ந்தார்கள். இருவருமே தூக்கத்தில் நடக்கக் கூடியவர்கள்.
அமைதி உலகத்தை முழுமையாக ஆக்கிரமித்திருந்த ஒரு இரவு நேரம். தூக்கத்தில் நடக்கும் தாயும் மகளும் பனி போர்த்தி விட்டிருந்த தங்களுடைய தோட்டத்தில் ஒருவரையொருவர் சந்தித்துக் கொண்டார்கள்.
தாய் உரத்த குரலில் சொன்னாள்: ‘என்னுடைய பரம எதிரி! என்னுடைய இளமையை அழித்தவள்! என்னுடைய அழிவிலிருந்து தன்னுடைய வாழ்க்கையைப் படைத்துக் கொண்டவள்! என்னால் உன்னை கொல்ல முடிந்தால்...!’
மகள் அதற்கு பதில் சொன்னாள்: வெறுப்பு நிறைந்த பெண்! சுயநலவாதி! கிழவி! எனக்கும் என்னுடைய சுதந்திரமான செயல்களுக்கும் நடுவில் நின்று கொண்டிருக்கும் பெண்! வாடி வதங்கிப் போன தன்னுடைய வாழ்க்கையின் எதிரொளியாக என்னுடைய வாழ்க்கையை மாற்ற ஆசைப்பட்டவள்! நீ செத்துப் போயிருந்தா...!’
அந்த நிமிடத்தில் காலை நேர சேவல் கூவியது.
இரண்டு பெண்களின் தூக்கமும் கலைந்தது. தாய் அன்புடன் கேட்டாள்: ‘இது நீயா என் மகளே?’
அதே அன்புடன் மகள் பதில் சொன்னாள்: ‘ஆமாம்... என் அன்பான தாயே!