
வயதான மாலுமி ஒருமுறை என்னிடம் சொன்னான்: ‘முப்பது வருடங்களுக்கு முன்னால் என் மகள் ஒரு மாலுமியுடன் ஓடி விட்டாள். நான் அவங்க ரெண்டு பேரையும் மனசுக்குள்ளே சபித்தேன். அதற்குக் காரணம் - இந்த உலகத்திலேயே நான் மிகவும் அதிகமா பாசம் வச்சிருந்தது என் மகள் மீதுதான். ஓடிப் போன கொஞ்ச நாட்களிலேயே அந்த மாலுமி இளைஞன் தான் போன கப்பலோடு சேர்ந்து கடலுக்குள்ளே மூழ்கிப் போயிட்டான். அவனோடு சேர்ந்து என் மகளும். ஒரு இளைஞன், ஒரு இளம்பெண் - ரெண்டு பேரின் மரணத்துக்கும் காரணமான ஒரு கொலைகாரனை நீங்க என்கிட்ட பார்க்கலாம். நான் போட்ட சாபம்தான் அவர்களைச் சாகடிச்சிடுச்சு. இப்போ நான் என் சவக்குழிக்குப் போற வழியில் கடவுள்கிட்ட அதற்காக மன்னிப்பு கேக்குறேன்.’
அவனுடைய வார்த்தைகளில் தனக்குத் தானே பெருமைப்பட்டுக் கொள்ளும் ஒரு தொனி கலந்திருந்தது. தன்னுடைய சாபத்தின் சக்தியைப் பற்றி அவன் இப்போதும் பெரிதாக நினைத்துக் கொண்டிருக்கிறான் என்பதை என்னால் உணர முடிந்தது.
ஒரு மனிதருக்கு சொந்தத்தில் பழத்தோட்டம் இருந்தது. அங்கு நிறைய மாதுளம் பழங்கள் இருந்தன. குளிர்காலத்தில் வீட்டிற்கு வெளியே வெள்ளித்தட்டில் மாதுளம் பழங்களை அவர் வைப்பார். அத்துடன் ஒரு அறிவிப்பையும் வைப்பார்: ‘ஒரு மாதுளம் பழத்தை நீங்கள் எடுத்துக் கொள்ளலாம்.
ஆட்கள் அந்த வழியே நடந்து செல்வார்கள். ஒரு பழத்தைக் கூட யாரும் எடுக்கவில்லை.
அவர் ஆழமாக யோசித்தார். அடுத்த இளவேனிற் காலத்தின் போது வீட்டிற்கு வெளியே மாதுளம் பழங்கள் எதையும் அவர் வைக்கவில்லை. அதற்கு பதிலாக பெரிய எழுத்துக்களில் ஒரு அறிவிப்புப் பலகை மட்டும் வைத்தார்:
‘மிகவும் சுவையான மாதுளம் பழங்கள் இங்கு கிடைக்கும். ஆனால், மற்ற எதற்கும் கொடுப்பதை விட அதிகமாக வெள்ளி காசுகள் அதற்கு நீங்கள் தர வேண்டும்.’
அதற்குப் பிறகு என்ன நடந்தது தெரியுமா? பெண்களும் ஆண்களும் முண்டியடித்துக் கொண்டு அங்கு ஓடி வந்தார்கள்- மாதுளம் பழங்களை வாங்குவதற்காக.
நகரத்திலிருந்த தேவாலயத்தின் படிகளில் நின்று கொண்டு பல கடவுள்களையும் பற்றி மத ஆசிரியர் கூறிக் கொண்டிருந்தார். அப்போது மக்கள் தங்களுக்குள் கூறிக் கொண்டார்கள்: ‘அதுதான் எங்களுக்கு நல்லா தெரியுமே! இந்த தெய்வங்கள் அனைத்தும் நம்ம கூட தானே வாழ்ந்து கொண்டிருக்கு! நாம் போகுற இடத்துக்கெல்லாம் நம்ம கூடவே எல்லா தெய்வங்களும் வருமே!’
சிறிது நேரத்திற்குப் பிறகு வேறொரு மனிதன் சந்தை இருக்கும் இடத்தில் நின்று கொண்டு மக்களிடம் சொன்னான்: ‘கடவுள் என்ற ஒன்று இல்லவே இல்ல.’
அந்தச் செய்தியைக் கேட்டு பலரும் மகிழ்ச்சியடைந்தார்கள். அதற்குக் காரணம் - தெய்வங்கள் மீது அவர்கள் எல்லோருக்கும் ஒரு வித பயம் இருந்தது.
இன்னொரு நாள் வேறொரு மனிதன் வந்தான்.அவன் சொன்னான்: ‘கடவுள் ஒண்ணே ஒண்ணுதான்.’
அதைக் கேட்டவர்கள் பயந்து விட்டார்கள். காரணம் – பல தெய்வங்களின் ஆணையை விட ஒரு தெய்வத்தின் ஆணை அவர்களுக்கு மனதில் பயத்தில் உண்டாக்கியது.
அதே நாள் காலையில் இன்னொரு ஆள் அங்கு வந்தான். அவன் மக்களிடம் சொன்னான்: ‘மூன்று தெய்வங்கள் இருக்கின்றன. அவர்கள் ஒவ்வொருவராக காற்றில் தங்குகிறார்கள். அவர்களுக்கு கருணையே வடிவமான ஒரு அன்னை இருக்கிறாள். அவர்களின் தோழியும் சகோதரியும் கூட அந்த அன்னைதான்.’
அதைக் கேட்டு மக்களுக்கு நிம்மதியாக இருந்தது. அவர்கள் தங்களுக்குள் மெதுவான குதலில் கூறிக் கொண்டார்கள்:
‘மூன்று கடவுள்களில் யாருக்காவது நம்முடைய வீழ்ச்சியைப் பற்றி மாறுபட்ட கருத்து இருக்கும். தவிர, பெரிய மனதைக் கொண்ட அவர்களின் அன்னை ஏழைகளான இந்த கஷ்டங்களில் இருக்கும் மனிதர்களுக்காக வாதாடுவார்கள்.’
எனினும், தெய்வங்கள் பலர் என்றும், அவர்கள் மூன்று பேர் என்றும், ஒரே ஒரு தெய்வம்தான் என்றும், தெய்வம் என்ற ஒன்று இல்லவே இல்லை என்றும், கருணையே வடிவமான ஒரு அன்னை அவர்களுக்கு இருக்கிறாள் என்றும் தங்களுக்குள் சண்டை போட்டுக் கொள்ளும், வாதம் செய்யும் மக்கள் இப்போதும் நகரத்தில் இருக்கவே செய்கிறார்கள்.
பணக்காரனின் மனைவி இளம் பெண்ணாக இருந்தாள். அதே நேரத்தில் கல்லைப் போல காது கேட்காமல் இருந்தாள். ஒரு நாள் காலையில் உணவு சாப்பிட்டுக் கொண்டிருந்த போது அவள் சொன்னாள்: ‘நான் நேற்று சந்தைக்குப் போயிருந்தேன். அங்கே என்னவெல்லாம் விற்பனைக்காக வச்சிருந்தாங்க தெரியுமா? தமாஸ்கஸ்ல இருந்து கொண்டு வரப்பட்ட பட்டுத்துணிகள், இந்தியாவுல இருந்து கொண்டு வரப்பட்ட பர்தாக்கள், பெர்ஷியாவுல இருந்து கொண்டு வரப்பட்ட மாலைகள், யேமனிலிருந்து கொண்டு வரப்பட்ட வளையல்கள்... இந்தப் பொருட்களை நம்ம நகரத்திற்கு வியாபாரிகள் இப்போத்தான் கொண்டு வந்திருக்காங்க. என்னைப் பாருங்க... நான் கிழிஞ்சு போன ஆடைகளை அணிஞ்சிருக்கேன்! பேருக்குத்தான் நான் ஒரு பெரிய பணக்காரரின் மனைவி. அந்த அழகான ஆடைகள்ல நான் சிலவற்றை வாங்கணும்.’
அப்போதும் உணவை விடாமல் சாப்பிட்டுக் கொண்டிருந்த கணவன் சொன்னான்:
‘என் அன்பே! தெருவுல நடந்து போறதுக்கும் மனசுல விருப்பப்பட்டதை வாங்குறதுக்கும் நீ தயங்கவே வேண்டாம்.’
காது கேட்காத மனைவி சொன்னாள்: ‘வேண்டாம்... நீங்க எப்பவும் வேண்டாம் வேண்டாம்னுதான் சொல்லுவீங்க. நான் கிழிந்து போன ஆடைகளுடன் நம்முடைய நண்பர்களுக்கு மத்தியில் வந்து நிற்கணுமா? உங்க செல்வத்தன்மையையும் என்னுடைய சொந்தக்காரர்களையும் நான் அவமானப்படுத்தணுமா?
‘அன்பே! நான் வேண்டாம்னு சொல்லலியே! உன் விருப்பம் போல நீ சந்தைக்குப் போகலாம். நகரத்துக்கு வந்திருக்குறதுலேயே மிகவும் அழகான ஆடைகளையும் இரத்தினங்களையும் நீ வாங்கலாம்’ - பணக்காரன் சொன்னான்.
தன் கணவனின் வார்த்தைகளை மீண்டும் தவறாக எடுத்துக் கொண்ட அவள் சொன்னாள்:
‘பணக்காரர்களிலேயே மிகவும் கஞ்சனாக இருக்குற மனிதர் நீங்கதான். அழகாகவும், கவர்ச்சியாகவும் இருக்குற பொருட்களை நீங்க எனக்கு மறுக்குறீங்க. என் வயதிலுள்ள மற்ற பெண்கள் இந்த நகரத்துல விலை மதிப்புள்ள ஆடைகள் அணிந்து பூந்தோட்டங்கள்ல நடந்து திரியிறாங்க.’
சொல்லி விட்டு அவள் அழ ஆரம்பித்தாள். அவருடைய கண்களிலிருந்து கண்ணீர் துளிகள் மார்பில் விழுந்தபோது, அவளின் அழுகைச் சத்தம் மேலும் பெரிதானது.
‘வேண்டாம்... வேண்டாம்னு நீங்க எப்பவும் என்கிட்ட சொல்லுவீங்க - நான் ஒரு ஆடையோ, இரத்தினமோ வேணும்னு விரும்பி கேட்டால்...’
அதைக் கேட்டு கணவனுக்கு அவள் மீது இரக்கம் உண்டானது. அவன் எழுந்து நின்றான். தன்னுடைய பணப்பெட்டியிலிருந்து கை நிறைய பொன்னை எடுத்து தன் மனைவிக்கு முன்னால் வைத்தான். பிறகு அன்பான குரலில் சொன்னான்: ‘அன்பே! சந்தைக்குப் போயி உனக்கு தேவையான பொருட்கள் எல்லாவற்றையும் வாங்கிக்கோ.’
அன்று முதல் காது கேட்காத அந்த இளம் பெண் தான் ஏதாவது வேண்டும் என்று விரும்பிய நிமிடங்களில் கண்ணீர் துளிகளுடன் தன் கணவன் முன்னால் வந்து நிற்பாள். கணவன் எதுவும் பேசாமல் கை நிறைய தங்கத்தை எடுத்துக் கொண்டு வந்து அவள் மடியில் போடுவான்.
அந்த இளம்பெண் ஒரு இளைஞனுடன் காதல் வயப்பட்டாள். அந்த இளைஞன் அதிக தூரம் பயணம் செய்வதை வாடிக்கையாகக் கொண்டிருப்பவன். அவன் மிகவும் தூரத்தில் இருக்கும்போது அவள் தன்னுடைய அறைக்குள் இருந்து கொண்டு அழுவாள்.
அப்படி அவள் அழுவதைப் பார்க்கும்போது அவளுடைய கணவன் தனக்குள் கூறிக் கொள்வான்: ‘சில புதிய வியாபாரிகள் வந்திருப்பாங்க. புதிய பட்டாடைகளும் அபூர்வமான இரத்தினங்களும் சந்தையில் விற்பனைக்கு வந்திருக்கும்.’
தொடர்ந்து கை நிறைய தங்கத்தைக் கொண்டு வந்து அவளுக்கு முன்னால் வைப்பான்.
You can use your Facebook account to sign into our site.
fb iconLog in with Facebook