கலீல் ஜிப்ரானின் 100 குட்டிக் கதைகள் - Page 9
- Details
- Category: சிறுகதைகள்
- Published Date
- Written by சுரா
- Hits: 8647
வரலாறு
தன்னுடைய வழியில் பக்கத்து கிராமத்தில் வசிக்கும் ஒரு மனிதனை நம்முடைய பயணி சந்தித்தான். பரந்துகிடந்த வயலைச் சுட்டிக் காட்டிய பயணி கேட்டான்:
‘அஹ்லம் மன்னன் தன்னுடைய எதிரிகளைத் தோல்வியடையச் செய்த போர்க்களம் இதுதானே?’
அதற்கு அந்த கிராமத்து மனிதன் சொன்னான்: ‘இது எந்தக் காலத்திலும் ஒரு போர்க்களமாக இருந்தது இல்லை. முன்பு புகழ் பெற்ற சாத் என்ற நகரம் இங்கே இருந்தது. அந்த நகரத்தை நெருப்பு வச்சு எரிச்சிட்டாங்க. இப்போ அந்த இடம் வயலா இருக்கு. நீங்கதான் அதைப் பார்க்குறீங்களே?’
அதற்கு அந்த ஆள் சொன்னான்:
‘அங்கு எந்தச் சமயத்திலும் ஒரு நகரம் இருந்ததே இல்லை. ஒரு துறவியின் மடம் இருந்தது. தெற்கிலிருந்து வந்தவர்கள் அதை அழித்துவிட்டார்கள்.’
பயணி மீண்டும் நடந்தான். மூன்றாவதாக ஒரு ஆளைப் பார்த்தான். பரந்து கிடந்த வயலைச் சுட்டிக் காட்டியவாறு மீண்டும் அவன் கேட்டான்:
‘அங்கு ஒரு துறவியின் மடம் இருந்தது. அப்படித்தானே?’
‘எந்தக் காலத்திலும் ஒரு துறவியின் மடம் அந்த இடத்தில இருந்ததே இல்ல. எங்களோட முன்னோர்கள் சொல்லிக் கொண்டிருந்தது என்ன தெரியுமா? அந்த வயல்ல ஒரு பெரிய எரி நட்சத்திரம் வந்து விழுந்ததாம்.’
ஆச்சரியம் நிறைந்த இதயத்துடன் பயணி தன்னுடைய பயணத்தைத் தொடர்ந்தான். மிகவும் வயதான ஒரு மனிதரை அவன் வழியில் பார்த்தான். அவருக்கு வணக்கம் கூறிய பயணி அவரிடம் சொன்னான்: ‘அய்யா, இந்த ஊரைச் சேர்ந்த மூன்று மனிதர்களை இதே வழியில நான் பார்த்தேன். அதோ அந்த வயலைப் பற்றி நான் அவர்களிடம் கேட்டேன். ஒவ்வொரு ஆளும் இன்னொரு ஆளு சொன்னதை மறுத்தாங்க. ஒவ்வொரு புது கதையையும் ஒவ்வொருத்தரும் சொன்னாங்க.’
வயதான பெரியவர் தலையை உயர்த்தினார். பிறகு சொன்னார்: ‘நண்பனே, அவங்க ஒவ்வொருத்தர் சொன்னதும் உண்மைதான். இருக்கும் நிலையுடன் மாறுதல்களை இணைப்பதற்கும் அதிலிருந்து உண்மையைக் கண்டுபிடித்து கூற மிகவும் குறைவான மனிதர்களால் மட்டுமே முடியும்.’
பொற்காசுகள் கொண்ட பெல்ட்
இரண்டு மனிதர்கள் பாதையில் சந்தித்தார்கள். அவர்கள் நகரத்தை நோக்கி நடந்தார்கள். மதிய நேரம் ஆன போது அவர்கள் பரந்து கிடந்த ஒரு நதியின் கரையை அடைந்தார்கள். நதியைக் கடப்பதற்கு பாலம் எதுவும் இல்லை. ஒன்று அதை நீந்தி கடக்க வேண்டும். இல்லாவிட்டால் தெரியாத வழிகளைத் தெரிந்து கொண்டு செல்ல வேண்டும்.
இரண்டு மனிதர்களும் சேர்ந்து தீர்மானித்தார்கள்: ‘நாம நீந்துவோம். நதி அந்த அளவுக்கு ஒண்ணும் பெருசா இல்ல.’
இருவரும் நீரில் இறங்கி நீந்த ஆரம்பித்தார்கள்.
ஒரு மனிதனுக்கு நதியைப் பற்றியும், அதன் தன்மையைப் பற்றியும் நன்கு தெரியும். ஆனால், நதியின் நடுப் பகுதியை அடைந்தபோது, அவன் நிலைகுலைந்து போய் விட்டான். வேகமாக ஓடிக் கொண்டிருந்த நீர் அவனை இழுத்துக் கொண்டு செல்ல ஆரம்பித்தது.
முன்பு ஒருமுறை கூட நீரில் நீந்தி பழக்கமில்லாத இரண்டாவது ஆள் வேகமாக நீந்தி எதிர்கரையை அடைந்தான். தன்னுடைய நண்பன் அப்போதும் நீருடன் போராடிக் கொண்டிருப்பதை அவன் பார்த்தான். அவன் மீண்டும் நதிக்குள் இறங்கி, தன் நண்பனைக் காப்பாற்றி கரைக்குக் கொண்டு வந்தான்.
நீரோட்டத்தில் சிக்கிய மனிதன் கேட்டான்: ‘நீந்தவே தெரியாதுன்னு நீங்க சொன்னீங்களே? பிறகு எப்படி இந்த அளவுக்கு தைரியமாக உங்களால ஆற்றை நீந்தி கடக்க முடிந்தது?’
அதற்கு அந்த இன்னொரு மனிதன் சொன்னான்: ‘நண்பரே, என்னுடைய இடுப்பில் கட்டப்பட்டிருக்கும் இந்த பெல்ட்டைப் பார்த்தீங்களா? இது முழுவதும் பொற்காசுகள் இருக்கு. என் பிள்ளைகளுக்கும் மனைவிக்கும் வேணும்னு நான் சம்பாதிச்சது. ஒரு முழு வருடமும் கஷ்டப்பட்டு உழைச்சு நான் இதைச் சம்பாதிச்சிருக்கேன். இந்த பெல்ட்டின் கனம்தான் என்னை நதியைக் கடக்க வச்சது... நான் நீந்திக் கொண்டிருந்தப்போ என் மனைவியும், பிள்ளைகளும் என் தோள்ல ஏறி உட்கார்ந்திருந்தாங்க.’
நகரத்தை நோக்கி இருவரும் நடையைத் தொடர்ந்தார்கள்.
சிவப்பு மண்
மரம் மனிதனிடம் சொன்னது: ‘என் வேர்கள் ஆழமான சிவப்பு மண்ணுக்குள்ளே இருக்கு. நான் என்னுடைய கனிகளை உனக்கு தர்றேன்.’
மனிதன் அதற்கு சொன்னான்: ‘நம்ம ரெண்டு பேர்க்குமிடையில்தான் எத்தனை ஒற்றுமை! என் வேர்களும் ஆழமான சிவப்பு மண்ணுக்குள்ளேதான் இருக்கு. உன் கனிகளை எனக்கு நீ தரணும்ன்றதுக்காக சிவப்பு மண் உனக்கு சக்தியைத் தருது. நன்றியுடன் அதை வாங்கிக்கணும்னு சிவப்பு மண் எனக்கு கற்றுத் தருது.’
முழுநிலவு
நகரத்தின் மீது முழு நிலவு ஆட்சி செய்து கொண்டிருந்தது. எல்லா நாய்களும் முழு நிலவைப் பார்த்து குரைத்துக் கொண்டிருந்தது.
ஒரு நாய் மட்டும் குரைக்கவில்லை. அது அதிகார தொனியில் சொன்னது:
‘நீங்க குரைச்சு அமைதியை உறக்கத்துல இருந்து எழுப்பிடாதீங்க. நிலவை பூமிக்குக் கொண்டு வர யாராலும் முடியாது.’
அதைக் கேட்டதும் எல்லா நாய்களும் தாங்கள் குரைப்பதை நிறுத்தின. பயந்து போய் அவை அமைதி காத்தன. ஆனால், அதுவரை அறிவுரை கூறிக் கொண்டிருந்த நாய் மட்டும் இரவு முழுவதும் குரைத்துக் கொண்டேயிருந்தது - அமைதியை வேண்டி.
சொற்பொழிவாற்றும் துறவி
ஒரு துறவி நன்கு சொற்பொழிவு செய்யக் கூடியவராக இருந்தார். அவர் மாதத்தில் மூன்று முறைகள் மிகப் பெரிய நகரங்களுக்குச் சென்று வேதச் சொற்பொழிவுகள் செய்வார். தன்னிடமிருக்கும் எல்லாவற்றையும் மற்றவர்களுக்குப் பங்கு போட்டு கொடுத்து விடுவார். அவர் ஒரு அருமையான பேச்சாளர். அவருடைய புகழ் எல்லா இடங்களிலும் பரவியது.
ஒரு மாலை நேரத்தில் மூன்று மனிதர்கள் அவர் இருக்கும் இடத்திற்கு வந்தார்கள். துறவி அவர்களை வணக்கம் சொல்லி வரவேற்றார்.
வந்தவர்கள் சொன்னார்கள்: ‘நீங்க தானம் செய்வதைப் பற்றியும், இருப்பதை மற்றவர்களுக்குப் பகிர்ந்து கொடுப்பதைப் பற்றியும் சொற்பொழிவு செய்றீங்க. உள்ளவர்கள் இல்லாதவர்களுக்குத் தரணும் என்று சொல்றீங்க. உங்களுடைய புகழ் உங்களைப் பணக்காரரா ஆக்கிடுச்சு. இதுல சந்தேகப்படுறதுக்கு எதுவுமே இல்ல. உங்கக்கிட்ட இருக்கிற சொத்தை எங்களுக்குத் தாங்க. நாங்கள் இல்லாதவர்கள். தேவைகள்ல இருக்குறவங்க...’
‘நண்பர்களே, இந்தப் படுக்கையும் பாயும் தலையணையும் தவிர வேறு எதுவுமே என்கிட்ட இல்ல. உங்களுக்கு வேணும்னா, இவற்றை எடுத்துக்கங்க. தங்கம், வெள்ளி எதுவும் என்கிட்ட இல்ல’ - துறவி கூறினார்.
அவர்கள் கேவலமாக துறவியைப் பார்த்தார்கள். பிறகு முகத்தைத் திருப்பி வைத்துக் கொண்டு வெளியேறினார்கள். கடைசி ஆள் ஒரு நிமிடம் வீட்டின் வாசலில் நின்றான். பிறகு அவன் சொன்னான்: ‘சரியான சதிகாரன்... வஞ்சகன்... உன்னால் செய்ய முடியாத விஷயங்களை நீ மற்றவர்களுக்கு சொல்லித் தர்ற... உபதேசம் செய்யிற...’