கலீல் ஜிப்ரானின் 100 குட்டிக் கதைகள் - Page 4
- Details
- Category: சிறுகதைகள்
- Published Date
- Written by சுரா
- Hits: 8647
திருவிழாவிற்கு வந்த இளம் பெண்
கிராமப் பகுதியிலிருந்து அழகான ஒரு இளம் பெண் திருவிழாவைப் பார்ப்பதற்காக வந்திருந்தாள். அவளுடைய முகத்தில் ரோஜா மலரும் லில்லி மலரும் இருந்தன. தலைமுடியில் சூரியனின் அஸ்தமனமும் உதடுகளில் அதிகாலைப் பொழுதின் புன்சிரிப்பும்.
இதற்கு முன்பு அறிமுகமில்லாதவள் என்றாலும், அந்த இளம்பெண் கண்ணில் பட்டவுடன் இளைஞர்கள் அவளிடம் ஓடி வந்தார்கள். அவளைச் சுற்றி அவர்கள் வட்டமிட்டு நின்றிருந்தனர். ஒருவன் அவளுடன் சேர்ந்து நடனமாட விரும்பினான். இன்னொருவன் அவளை வாழ்த்தி கேக் வெட்ட விரும்பினான். எல்லோரும் அவளுடைய முகத்தில் முத்தமிட விரும்பினார்கள். என்ன இருந்தாலும் அது ஒரு திருவிழாதானே?
இளம்பெண் அதைக் கேட்டு ஒரு மாதிரி ஆகிவிட்டாள். எல்லா இளைஞர்களும் மிகவும் கீழ்த்தரமானவர்கள் என்ற முடிவுக்கு அவள் வந்தாள். அவர்களை அவள் வாய்க்கு வந்தபடி திட்டினாள். ஒன்றிரண்டு இளைஞர்களை அவள் கன்னத்தில் அடிக்கக் கூட செய்தாள். பிறகு அவள் அங்கிருந்து ஓடி விட்டாள். வீட்டிற்குச் செல்லும் வழியில் அவள் தன் மனதிற்குள் கூறினாள்: ‘நான் வெறுத்துப் போயிட்டேன். அந்த இளைஞர்களுக்கு எப்படி நடந்துக்கணும்னே தெரியல்ல. அவர்கள் ஏன் அவ்வளவு கீழ்த்தரமா வளர்க்கப்பட்டிருக்காங்க! மன்னிக்கிறதுக்கு ஒரு அளவு இல்லையா?’
அதற்குப் பிறகு ஒரு வருடம் நடந்தோடியது. ஒவ்வொரு நாளும் அவள் திருவிழாவைப் பற்றியும் அந்த இளைஞர்களைப் பற்றியும் நினைத்துப் பார்ப்பாள். அவள் மீண்டும் திருவிழாவிற்கு வந்தாள். முகத்தில் ரோஜா மலரும் லில்லி மலரும் இருந்தன. கூந்தலில் சூரிய அஸ்தமனமும் உதடுகளில் அதிகாலைப் பொழுதின் புன்சிரிப்புமாக அவள் இருந்தாள்.
அவளைப் பார்த்த இளைஞர்கள் தங்கள் முகத்தை வேறு பக்கம் திருப்பிக் கொண்டார்கள். அன்று முழுவதும் அவளை யாரும் கண்டு கொள்ளவேயில்லை. அவள் மட்டும் தனியாக அந்த நாளைச் செலவழித்தாள்.
மாலை நேரத்தில் வீட்டிற்குச் செல்லும் பாதையில் நடந்து சென்ற போது அவள் தேம்பித் தேம்பித் தேம்பி அழுதாள். ‘நான் வெறுத்துப் போயிட்டேன். எப்படி நடந்துக்கணும்னே கொஞ்சம் கூட அந்த இளைஞர்களுக்கு தெரியவே இல்ல. அவர்கள் எவ்வளவு மோசமா வளர்க்கப்பட்டிருக்காங்க! மன்னிக்கிறதுக்கும் ஒரு அளவு இல்லையா?’- அவள் தனக்குள் சொல்லிக் கொண்டிருந்தாள்.
இரண்டு இளவரசிகள்
ஷவாக்கிஸ் நகரத்தில் ஒரு இளவரசன் இருந்தான். அவனை எல்லோரும் விரும்பினார்கள். ஆண்களும் பெண்களும் அடிமைகளும் வயலில் இருக்கும் உயிர்கள் எல்லோரும் அவனைக் காண ஓடி வருவார்கள்.
ஆனால், அவனுடைய மனைவியான இளவரசிக்கு அவன் மீது சிறிது கூட விருப்பமில்லை. அது மட்டுமல்ல. அவள் அவனை வெறுக்கவும் செய்தாள். இந்த விஷயம் ஊரில் உள்ள எல்லோருக்கும் தெரியும்.
ஒரு நாள் அருகிலிருந்த நகரத்தைச் சேர்ந்த இளவரசி ஷவாக்கிஸின் இளவரசியைப் பார்ப்பதற்காக வந்தாள். பேசிப் பேசி அவர்கள் தங்களின் கணவன்மார்கள் விஷயத்திற்கு வந்தார்கள்.
ஷவாக்கீஸ் இளவரசி ஆவேசம் பொங்க சொன்னாள்:
‘திருமணமாகி எத்தனையோ வருடங்கள் ஆன பிறகும் கணவனுடன் சந்தோஷமாக நீங்க வாழ்றதைப் பார்க்குறப்போ எனக்கு பொறாமை தோணுது. என் கணவரை நான் வெறுக்குறேன். அவர் எனக்கு மட்டும் சொந்தமானவர் அல்ல. என் அளவுக்கு கவலைப்படுற ஒரு பெண் இங்கு வேறு யாரும் இல்லை.’
பார்ப்பதற்காக வந்திருந்த இளவரசி அவளையே கண் இமைக்காமல் பார்த்தாள். பிறகு சொன்னாள்: ‘உன் கணவர் மேல நீ பிரியம் வச்சிருக்கே. அது உண்மை. இன்னும் பயன்படுத்தப்படாத உணர்வுகள் அவர் மீது உனக்கு இருக்கு. பெண்ணின் வாழ்க்கை பூந்தோட்டத்தின் வசந்தம் மாதிரி. என்னையும் உன் கணவரையும் பார்த்து நீ பரிதாபப்படணும். நாங்கள் ஒருத்தரையொருத்தர் சகிச்சிக்கிட்டு வாழ்ந்து கொண்டிருக்கிறோம்- பொறுமையுடன், அமைதியா. இதை எங்களின் சந்தோஷமா நீயும் மற்றவர்களும் நினைச்சுக்கிறீங்க.
இடி மின்னல்
கடுமையான காற்று வீசிய நாளன்று பாதிரியார் தேவாலயத்திற்குள் இருந்தார். கிறிஸ்தவ மதத்தைச் சேராத ஒரு பெண் பாதிரியாரின் முன்னால் வந்து நின்று கேட்டாள்: ‘நான் கிறிஸ்துவப் பெண் அல்ல. நரகத்துல இருந்து எனக்கு விடுதலை கிடைக்குமா?’
அந்தப் பெண்ணை கூர்ந்து பாதிரியார் பார்த்தார். பிறகு அவர் பதில் சொன்னார்: ‘இல்ல... நிச்சயமா இல்ல. ஞானஸ்தானம் செய்து கொண்டவர்களுக்கு மட்டுமே பாவத்திலிருந்து விடுதலை கிடைக்கும்.’
பாதிரியார் சொல்லி முடிந்ததும், தேவாலயத்தின் மீது இடி விழுந்து, தீ பிடித்தது.
நகர மக்கள் ஓடி வந்தார்கள். அவர்கள் அந்தப் பெண்ணைக் காப்பாற்றினார்கள். ஆனால், பாதிரியார் நெருப்புக்கு இரையாகிவிட்டிருந்தார்.
துறவியும் உயிரினங்களும்
பச்சை மலைகளுக்கு இடையில் துறவி ஒருவர் வாழ்ந்து கொண்டிருந்தார். தூய்மையான மனதையும் நிர்மலமான இதயத்தையும் கொண்ட ஒரு துறவி அவர்.
பூமியிலிருக்கும் எல்லா மிருகங்களும் வானத்திலிருக்கும் எல்லா பறவைகளும் ஜோடி ஜோடியாக அவரைத் தேடி வருவார்கள். ஒவ்வொன்றையும் அவர்கள் மிகவும் மகிழ்ச்சியுடன் கேட்பார்கள். அவரைச் சுற்றிலும் ஆர்வத்துடன் அவர்கள் குழுமியிருப்பார்கள். மாலை நேரம் வரும் வரை அவர்கள் திரும்பிப் போகாமல் அங்கேயே இருப்பார்கள். இரவு வந்தவுடன் அவர் அவர்களைப் போகும்படி கூறிவிடுவார். போகும்போது அவர்களை ஆசீர்வதித்து, காற்றும் காடும் அவர்களைப் பத்திரமாக பார்த்துக் கொள்ள வேண்டும் என்று வேண்டி அனுப்புவார்.
ஒரு மாலை நேரத்தில் துறவி காதலைப் பற்றி பேசிக் கொண்டிருந்தார். அப்போது ஒரு புள்ளிமான் தலையை உயர்த்தி கேட்டது.
‘நீங்க காதலைப் பற்றி பேசுறீங்க. அப்படின்னா உங்க ஜோடி எங்கே?’
‘எனக்கு ஜோடி இல்ல’ - துறவி சொன்னார்.
அதைக் கேட்டதும் மிருகங்களும் பறவைகளும் அதிர்ச்சியடைந்து நின்று விட்டார்கள். அவர்களிடம் ஒரு வித பரபரப்பு வந்து ஒட்டி கொண்டது. அவர்கள் தங்களுக்குள் பேசிக் கொள்ள ஆரம்பித்தார்கள். காதலைப் பற்றியும் உடல் ரீதியாக இணைவது பற்றியும் அவர் எப்படி பேச முடியும்? அவற்றைப் பற்றி அவருக்கு எதுவும் தெரியாதே!
வெறுப்புடன், அமைதியாக பறவைகளும் மிருகங்களும் அந்த இடத்தை விட்டு புறப்பட்டார்கள்.
அன்று இரவு துறவி மட்டும் தனியாக இருந்தார். பாறையில் கவிழ்ந்து படுத்துக் கொண்டு முகத்தை பூமி மீது வைத்தவாறு அவர் தேம்பி தேம்பி அழுதார். கைகளை மார்பில் அடித்துக் கொண்டு ஒலமிட்டார்.