கலீல் ஜிப்ரானின் 100 குட்டிக் கதைகள் - Page 5
- Details
- Category: சிறுகதைகள்
- Published Date
- Written by சுரா
- Hits: 8647
தீர்க்கதரிசியும் சிறுவனும்
ஷரியா என்ற தீர்க்கதரிசி தன்னுடைய தோட்டத்தில் நடந்து கொண்டிருந்தபேபது ஒரு சிறுவன் ஓடி வந்து காலை வணக்கம் சொன்னான்.
தீர்க்கதரிசியும் பதிலுக்கு அவனுக்கு காலை வணக்கம் சொன்னார்.
‘இன்றைய நாள் உனக்கு நல்லா இருக்கணும். நீ மட்டும் தனியா வந்தியா என்ன?’ - தீர்க்கதரிசி சிறுவனைப் பார்த்து கேட்டார்.
‘என் ஆயாவை ஏமாற்றி விட்டு ஓடி வர்றதுக்கு எவ்வளவோ நேரமாச்சு! நான் அந்த வேலிக்கு வெளியே நின்று கொண்டிருக்கேன்னு ஆயா நினைச்சிக்கிட்டு இருக்காங்க. ஆனா, நான் இங்கே வந்து நிக்கிறதுதான் உங்களுக்கு தெரியும்ல?’
மகிழ்ச்சியுடன், சிரித்துக் கொண்டே சிறுவன் சொன்னான். தன் கண்களை இமைக்காமல் அவன் தீர்க்கதரிசியின் முகத்தைப் பார்த்துவிட்டு, சொன்னான்:
‘நீங்களும் தனியாகத்தானே இருக்கீங்க? உங்க ஆயாவை நீங்க என்ன பண்ணுனீங்க?’
‘அது ஒரு தனி கதை. அவளை நான் இழக்க விரும்பல. நான் இந்த தோட்டத்துக்குள்ளே வந்தவுடன், அவள் அந்த வேலிக்குப் பின்னாடி என்னைத் தேடிக்கிட்டிருந்தா.’
அதைக் கேட்டு சிறுவன் குலுங்கிக் குலுங்கி சிரித்தான்.
‘நீங்களும் என்னை மாதிரியே காணாமப் போயிட்டீங்க... அப்படித்தானே? காணாமப் போறதுன்றது நல்ல ஒரு விஷயம்தானே?’
தொடர்ந்து சிறுவன் கேட்டான்:
‘நீங்க யாரு?’
‘எல்லாரும் என்னை தீர்க்கதரிசி ஷரியான்னு கூப்பிடுவாங்க. நீ யார்?’
‘நான் நான்தான். என் ஆயா என்னைத் தேடிக்கிட்டு இருக்காங்க. நான் எங்கே இருக்கேன்னு அவங்களுக்கு தெரியாது.’
தீர்க்கதரிசி வெறுமையாக இருந்த வானத்தை சில நிமிடங்கள் பார்த்தார். பிறகு சொன்னார்:
‘நானும் என் ஆயாக்கிட்ட இருந்து தப்பிச்சு வந்துட்டேன். சில நிமிடங்கள்ல அவள் என்னை கண்டு பிடிச்சிடுவா. அது மட்டும் உண்மை.’
‘என் ஆயா என்னையும் கண்டுபிடிச்சிடுவாங்க. எனக்கு அது நல்லா தெரியும்.’
அப்போது ஒரு பெண்ணின் குரல் கேட்டது. சிறுவனின் பெயரைச் சொல்லி அவள் அழைத்தாள். அதைக் கேட்டதும் சிறுவன் சொன்னான்:
‘பார்த்தீங்களா? நான்தான் சொன்னேனே... அவங்க என்னை எப்படியும் கண்டு பிடிச்சிடுவாங்கன்னு!’
அதே நேரத்தில் இன்னொரு குரலும் கேட்டது:
‘ஷரியா, நீ எங்கே இருக்கே?’
‘சிறுவனே... நீ பார்த்தியா? அவள் என்னையும் கண்டுபிடிச்சிட்டா...’
உயரத்தை நோக்கி தன்னுடைய முகத்தை உயர்த்திய தீர்க்கதரிசி சொன்னார்:
‘நான் இங்கே இருக்கேன்.’
அழகான வலி
சிப்பி அருகிலிருந்த சிப்பியிடம் சொன்னது:
‘எனக்குள்ளே தாங்க முடியாத ஒரு வலி இருக்கு. சுமை அதிகமானவுடன் தலையே சுத்துற மாதிரியான ஒரு வலி. நான் மிகப் பெரிய ஆபத்துல இருக்கேன்.’
அதைக் கேட்டு இரண்டாவது சிப்பி சொன்னது - ஆணவம் கலந்த மகிழ்ச்சியுடன்:
‘சொர்க்கத்திற்கு வணக்கம்! கடலுக்கு வணக்கம்! எனக்குள் எந்த வலியும் இல்ல. நான் நல்லா இருக்கேன். உள்ளும் புறமும் நான் முழுமையான நலத்துடன் இருக்கேன்.’
அப்போது அந்த வழியே கடந்து போன ஒரு நண்டு சிப்பிகள் பேசிக் கொண்டிருப்பதைக் கேட்டது. உள்ளும் புறமும் நலமாக இருக்கும் சிப்பியைப் பார்த்து அது சொன்னது:
‘நீ சொல்றது சரிதான். நீ நலமா இருக்கே. முழுமையான உடல் நலத்துடன் இருக்கே. ஆனா, உன் பக்கத்துல இருக்குறவ அனுபவிக்கிற வலி இருக்குது பாரு... அது மிக அழகான முத்தொன்றைப் பெறப் போகிற வேதனைன்றதைப் புரிஞ்சுக்கோ!
உடலும் மனமும்
சாளரம் வசந்தத்தை நோக்கி திறந்திருந்தது. அதற்கருகில் ஒரு பெண்ணும் ஆணும் நெருக்கமாக உட்கார்ந்திருந்தார்கள். பெண் சொன்னாள்:
‘நான் உங்களைக் காதலிக்கிறேன். நீ மிகவும் அழகானவர். பணக்காரர், எல்லா நேரங்களிலும் அழகாக ஆடைகள் அணிந்திருப்பவர்.’
அதற்கு அந்த ஆண் சொன்னான்:
‘நானும் உன்னைக் காதலிக்கிறேன். எப்போதும் உன்னைப் பற்றியே நான் நினைச்சிக்கிட்டு இருக்கேன். கை விட முடியாத அபூர்வ பொருள் நீ. என் கனவுகளின் இசை நீ.’
அதைக் கேட்டு அந்தப் பெண்ணுக்கு கோபம் வந்துவிட்டது. அவள் அந்த இடத்தை விட்டு தள்ளி உட்கார்ந்தாள். பிறகு அவள் சொன்னாள்: ‘நீங்க என்னைப் பற்றி என்ன சொல்றீங்க? நான் உங்களின் சிந்தனைப் பொருள் அல்ல. கனவுகளில் வரும் அபூர்வ பொருளும் அல்ல. நான் ஒரு பெண். என்னை ஒரு மனைவியாக, பிறக்க இருக்கும் குழந்தைகளின் தாயாக நீங்க பார்க்கணும், விரும்பனும். அதுதான் எனக்கு தேவை!’
அவர்கள் மேலும் தள்ளி உட்கார்ந்தார்கள். அப்போது அந்த ஆண் சொன்னான்:
‘இங்க பாரு... இன்னொரு கனவும் பனிப் படலமாக மாறிவிட்டது.’
அதற்கு அந்தப் பெண் சொன்னாள்:
‘என்னை பனிப் படலமாகவும் கனவாகவும் மாற்றிப் பார்க்கும் ஆண் என்ன ஆண்! அப்படிப்பட்ட ஒரு ஆணைப் பற்றி நான் என்ன சொல்றது!’
மண்ணில் எழுதிய வரிகள்
இரண்டு நண்பர்கள் கடற்கரையில் சந்தித்தார்கள். முதலாவது நண்பன் சொன்னான்:
‘முன்பு கடலில் அலைகள் பலமாக இருந்த நேரத்தில் என் ஊன்றுகோலின் முனையை வைத்து மணலில் நான் ஒரு வரி எழுதினேன். அதை வாசிப்பதற்காக மக்கள் சிறிது நேரம் அப்படியே நின்னுட்டு போவாங்க. அந்த வரி அழியாம இருக்கணும்னு அவங்க நினைச்சாங்க.’
இரண்டாவது நண்பன் அதற்கு சொன்னான்:
‘மணலில் நான் ஒரு வரி எழுதினேன். அது அலைகள் வந்து மோதுற இடத்துல இருந்தது. பரந்து கிடக்கும் கடலில் இருந்து வரும் அலைகள் அந்த வரியை அழித்துவிட்டன. ஆமா... நீங்க என்ன எழுதினீங்கன்னு எனக்குச் சொல்ல முடியுமா?’
‘நான் எழுதினது இதுதான்: ‘நான் அவன் ஆனேன். அவன் யாரோ அதுதான் நான். ‘சரி... நீங்க என்ன எழுதினீங்க?’
‘மிகப் பெரிய இந்த கடலில் ஒரு துளி மட்டுமே நான்.’