கலீல் ஜிப்ரானின் 100 குட்டிக் கதைகள் - Page 3
- Details
- Category: சிறுகதைகள்
- Published Date
- Written by சுரா
- Hits: 8647
ஆடைகள்
ஒரு நாள் அழகும் அசிங்கமும் கடற்கரையில் ஒன்றோடொன்று சந்தித்துக் கொண்டன. அவை தங்களுக்குள் கூறிக்கொண்டன: ‘நாம கடல்ல குளிப்போம்.’
அணிந்திருந்த ஆடைகளை அவிழ்த்து வைத்துவிட்டு அவை இரண்டும் கடலில் இறங்கின. நீந்த ஆரம்பித்தன. சிறிது நேரத்திற்குப் பிறகு அசிங்கம் கரையில் ஏறியது. அழகின் ஆடைகளை எடுத்து அணிந்து தான் வந்த பாதையில் அது நடந்து சென்றது.
அழகும் குளித்து முடித்து கரைக்கு வந்தது. அதன் ஆடைகள் காணாமற் போயிருந்தன. அதற்கு மிகவும் வெட்கமாகி விட்டது. அசிங்கத்தின் ஆடைகளை எடுத்து அணிந்து அதுவும் தான் வந்த வழியே நடந்து சென்றது.
இப்போது பெண்களும் ஆண்களும் அழகையும் அசிங்கத்தையும் தவறாகப் புரிந்து கொண்டிருக்கிறார்கள்.
எனினும், அழகின் முகத்தைப் பார்க்கும் சிலராவது அதை அடையாளம் கண்டு கொள்ளத்தான் செய்கிறார்கள். அணிந்திருக்கும் ஆடைகள் எதுவாக இருந்தாலும், அசிங்கத்தின் முகத்தை வைத்து அதை கண்டுபிடித்து விடுகிறார்கள். ஆடைகளால் அவர்களின் பார்வையிலிருந்து அசிங்கத்தை மறைக்க முடியவில்லை.
கழுகும் வானம்பாடியும்
பாறையில் வானம்பாடியும், கழுகும் சந்தித்துக் கொண்டன.
‘நீங்கள் நல்லா இருக்கணும்’ என்று கழுகைப் பார்த்து வானம்பாடி வாழ்த்தியது. ஒருவித வெட்கத்துடன் கழுகு வானம்பாடியைப பார்த்தது. பிறகு அது வானம்பாடியைப் பார்த்து சொன்னது : ‘நீயும் நல்லா இருக்கணும்’.
வானம்பாடி தொடர்ந்து சொன்னது: ‘உங்களுடைய எல்லா விஷயங்களும் நல்லா போய்க்கொண்டு இருக்குன்னு நான் நினைக்கிறேன்.
அதற்கு கழுகு சொன்னது : ‘நீ சொன்னது உண்மைதான். எல்லாம் நல்லா நடந்து கொண்டு இருக்கிறது. நாங்கள் பறவைகளின் அரசர்கள். உனக்கு தெரியுமா? நாங்க வாய் திறக்குறதுக்கு முன்னாடியே நீ எங்க கூட பேச கூடாது!
‘நாம எல்லாம் ஒரே குடும்பம்னு நான் நினைச்சேன்’- வானம்பாடி சொன்னது.
அதற்கு கழுகு கேட்டது : ‘நீயும் நானும் ஒரே குடும்பம்னு யார் சொன்னது.’
‘ஒரு விஷயத்தை உங்களுக்கு நான் ஞாபகப்படுத்துறேன். நீங்க பறக்குற உயரத்துக்கு என்னாலும் பறக்க முடியும். பாட்டு பாடவும் பூமியில் இருக்கும் உயிர்களை மகிழ்ச்சிப் படுத்தவும் என்னால முடியும். ஆனா, உங்களால யாருக்கும் சந்தோஷமோ, ஆனந்தமோ தர முடியாது.’ - வானம்பாடி சொன்னது.
‘சந்தோஷமும் ஆனந்தமும்! ஆணவம் பிடித்த ஒரு சிறு பறவை! ஒரே கொத்துல உன்னை என்னால கொல்ல முடியும். என் கால் பாதம் அளவுதான் இருக்கே நீயே’ - கழுகு கேலியுடன் சொன்னது.
அதைக் கேட்டதும் வானம்பாடி பறந்து மேலே சென்று கழுகின் முதுகில் போய் உட்கார்ந்து கொண்டு தன்னுடைய சிறகைக் கொத்த ஆரம்பித்தது. அதை கழுகால் பார்த்துக் கொண்டிருக்க முடியவில்லை. அது படு வேகமாக உயர நோக்கி பறந்து, தன் மீது அமர்ந்திருக்கும் பறவையைக் கீழே விழச் செய்ய முயற்சித்தது. ஆனால், அந்த முயற்சியில் கழுகுக்கு தோல்விதான் கிடைத்தது. கடைசியில், அதே மலை மீது இருந்த அதே பாறையை நோக்கி திரும்பவும் கழுகு வந்தது. முன்பு எப்போதும் இருந்ததை விட, மிகவும் மன பாதிப்பிற்கு ஆளாகிவிட்டிருந்தது அது. அந்த நிமிடத்தில் விதியை அது பலமாக நொந்து கொண்டது. அப்போதும் அந்த வானம்பாடி கழுகின் முதுகின் மீதுதான் இருந்தது.
அந்த நேரத்தில் சிறிய ஒரு ஆமை அந்த வழியாக வந்தது. அந்தக் காட்சியைப் பார்த்து சிரித்து சிரித்து அது தலை கீழாக கவிழ்ந்து விட்டது. கழுகு ஆமையை கோபத்துடன் பார்த்தது. பிறகு அது சொன்னது:
‘ஊர்ந்து ஊர்ந்து நடந்து போற பிறவி! நீ எப்போ பார்த்தாலும் மண்ணுல ஒட்டிக்கொண்டே இருக்கக்கூடிய உயிர்! நீ யாரைப் பார்த்து கேலி பண்ணுற?’
ஆமை அதற்கு பதில் சொன்னது :
‘நான் இப்போ என்ன பார்த்துக் கொண்டு இருக்கேன்! நீ ஒரு குதிரையா மாறிட்டியா என்ன? ஒரு சின்ன பறவை உன் முதுகுல ஏறி சவாரி செய்துக் கொண்டு இருக்கு. அந்த சின்ன பறவை ஒரு நல்ல பறவை. அது மட்டும் உண்மை.’
அதைக் கேட்டு கழுகிற்கு கோபம் வந்துவிட்டது.
கோபத்தில் அது உரத்த குரலில் கத்தியது :
‘நீ உன் விஷயத்தைப் பாரு. இது ஒரு குடும்ப விஷயம். என் சகோதரி வானம்பாடியும் நானும் சம்பந்தப்பட்ட எங்க குடும்ப விஷயம் இது.’
நான் எல்லா கவிஞர்களையும் வெறுக்கிறேன்
கவிஞர் காதல் கவிதை எழுதினார். அருமையான காதல் கவிதை. அதன் பல பிரதிகளை தன்னுடைய நண்பர்களுக்கும் தெரிந்தவர்களுக்கும், ஆண்கள் பெண்கள் வித்தியாசம் பார்க்காமல் அவர் அனுப்பி வைத்தார். மலைகளைத் தாண்டி வசிக்கும் இளம் பெண்ணுக்கு ஒரு பிரதியை அனுப்பி வைத்திருந்தார்.
ஒன்றிரண்டு நாட்கள் கடந்திருந்தன. அந்த இளம் பெண்ணின் கடிதத்துடன் ஒரு ஆள் வந்தான். அவள் தன் கடிதத்தில் கூறியிருந்தாள் : ‘நீங்க எனக்கு எழுதியிருந்த காதல் கவிதை என்னை ரொம்பவும் கவர்ந்திடுச்சு. வாங்க இப்பவே வாங்க. என் பெற்றோர்களை வந்து பாருங்க. திருமண நிச்சயத்திற்கான ஏற்பாடுகளை நாம செய்வோம்.’
அதற்கு கவிஞர் பதில் எழுதினார்:
‘சினேகிதியே, ஒரு கவிஞன் தன் இதயத்திலிருந்து எழுதிய ஒரு காதல் கவிதை அது. அவ்வளவுதான். ஒவ்வொரு ஆணும் ஒவ்வொரு பெண்ணுக்கும் எழுதக் கூடிய காதல் கவிதை.’
அந்த இளம் பெண் மீண்டும் கவிஞருக்கு ஒரு கடிதம் எழுதினாள். அதில் அவள் எழுதினாள்:
‘அப்படியா நீ கபட நாடகம் ஆடுகிறாய்! வார்த்தைகள் மூலம் பொய் கூறக் கூடிய மனிதன் நீ. இந்த நிமிடத்திலிருந்து நான் மரணமடையும் நிமிடம் வரை எல்லா கவிஞர்களையும் நான் வெறுக்கிறேன். அதற்குக் காரணம் நீ. நீ மட்டும்.
முதலையும் கழுதைப் புலியும்
நீல நதியின் கரையில் ஒரு மாலை நேரத்தில் முதலையும் கழுதைப் புலியும் சந்தித்துக் கொண்டார்கள். பயணத்தை நிறுத்தி விட்டு, அவர்கள் இருவரும் ஒருவருக்கொருவர் வணக்கம் கூறிக் கொண்டார்கள்.
கழுதைப் புலி விசாரித்தது : ‘உங்க வாழ்க்கை எப்படி இருக்கு?’
‘ரொம்பவும் மோசமா இருக்கு, நண்பா. வேதனைகளாலும், கவலைகளாலும் நான் பல நேரங்கள்ல என்னையே மறந்து அழுதிடுறேன். அந்த மாதிரி நேரங்கள்ல மற்ற உயிர்கள் என்ன சொல்றாங்க தெரியுமா? ‘முதலைக் கண்ணீர் விடுது... முதலைக் கண்ணீர் விடுது’ன்னு சொல்வாங்க. சொல்ல முடியாத அளவுக்கு அந்த வார்த்தைகள் என்னைக் காயப்படுத்துது. வேதனைப்பட வைக்குது’ முதலை சொன்னது.
‘உங்க வேதனைகளையும் கவலைகளையும் நீங்க சொல்றீங்க. என்னைப் பற்றி ஒரு நிமிடம் நினைச்சுப் பாருங்க. இந்த உலகத்தின் அழகை கண்ணை இமைக்காமல் நான் பார்க்கிறேன். அதன் அற்புதத்தையும், வினோதங்களையும் பார்த்துக் கொண்டே இருக்கிறேன். அப்போ உண்டாகுற சந்தோஷத்துல என்னையே மறந்து நான் சிரிச்சிடுறேன். பகல் சிரிக்கிற மாதிரிதான். ஆனாகாட்டு வாழ் மனிதர்கள் என்ன சொல்கிறார்கள் தெரியுமா? ‘இது வெறும் கழுதைப் புலி சிரிப்பு. அவ்வளவுதான்’னு அலட்சியமா சொல்லுவாங்க.
கழுதைப் புலி தன் வேதனையைச் சொன்னது.